

அருட்பெருமான்
சுத்தானந்த பாரதியார்
[அருட்ஜோதி இராமலிங்க வள்ளலார் வரலாறு]
1. அருட் குழந்தை
சிதம்பரம் நடராஜா சந்நிதி; உள்ளம் சிலிர்க்கும் காட்சி; சுத்த நடம்புரிகின்ற சித்த சிகாமணியின் தூக்கிய திருவடியும், அபயக்கரமும், புன்னகையமுதும், அருட்பார்வையும், கருணை முகமும் அன்பருக்குப் பேரின்பமளிக்கின்றன. அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருமூலர், சேக்கிழார், பட்டினத்தார், தாயுமானார் முதலிய அடியார் பாடிப்பரவிய திருச்சந்நிதி அதுவே; வாழையடி வாழையாய் வந்த அத்திருக்கூட்ட மரபில் ஒருவர் இன்று அங்கே தோன்றியிருக்கிறார் – ‘சிற்சபேசா, சிவசிதம்பரம்’ என்று அடியார் ஆர்க்கும் அச்சந்நிதியில் ஒரு மெய்யன்பர் உள்ளுருகி நிற்கிறார்! அவரே மருதூர் இராமையபிள்ளை. அவர் கையில் ஓர் அமுதக்கனி பொலிகிறது; அருட்சோதிக்கனி; இரக்கமே வடிவான கருணைக்கனி; தளிர்மேனி; பிஞ்சிளமை. கொஞ்சும் திருமுகம்; காந்தக் கண்கள்; எழிலார் புன்னகை; இந்த ஜோதிக்கனியே உலகுய்ய வந்த இராமலிங்கம். அப்பைய தீட்சிதர் கற்பூர ஒளி காட்டுகிறார்: அன்பர் ‘ஹரஹர மகாதேவா, சோதியே சுடரே’ என்று ஆர்க்கின்றனர். இராமலிங்கம் ஆனந்த நடனசிகாமணியை அள்ளிப்பருகுவது போலப் பார்க்கிறான். கற்பூர தீபங் கண்டு கண்டு களி நகை பொங்குகிறான். ஆன்மத் தந்தையைக் கண்டு சிந்தை குளிருகிறான். உயிரப்பனுடன் உள்ளுறவு பேணுகிறான்- மோனச்சுடருடன் ஞான சம்பந்தங்கொள்ளுகிறான். தீட்சிதர் பார்க்கிறார். ‘இது அம்பலவாணரின் அருட் குழந்தை’ என்று போற்றுகிறார். இராமைய பிள்ளையைக் குடும்பத்துடன் தம் வீட்டிற்கு அழைத்து, உபசரித்து அன்பு கூறியனுப்புகிறார் குருக்கள்.



