
அருட்பெருமான்
சுத்தானந்த பாரதியார்
20. உருவழிபாடு
திருப்பாதிரிப் புலியூரில் பிரமசமாஜிகள் உருவழிபாட்டை இழிவு செய்தனர். வள்ளலார் அவருடன் வாதாடி வென்றார். “பிரம்மம் அருவே: அதை ஆத்ம ஞானத்தால் உணரலாம்; அறிவால் அறியும் அறிவே பிரமம்; அது வாய்மன மெட்டாதது. நீங்கள் அதைத் தோத்திரத்தாலும் நினைத்தாலுங் கூட அடைய முடியாது. மன ஒருமைக்கு உரு உறுதுணையாகும். விக்கிரகம் என்பது விசேஷ இடம்; மனோ நிக்கிரத்திற்குச் சாதனமானது, ஆன்மா அமரும் வீடு என்பது பொருளாகும்.
உருவழி பாட்டால் பலர் அருளும் ஆற்றலும் பெற்றிருக்கின்றனர். அருவழி பாட்டிற்கு உரு வழிபாடு துணையாகும். எல்லாம் அவனே; உருவிலும் அவனே. உருவை வெறுப்பாரும் ஒரு குணங்குறியால் இறைவனை வணங்குவர், கதிர்பிறை, தீ, வளி, வெளி, ஒலி நூல், ஆகிய வடிவில் பெரும்பாலார் உருவணக்கம் செய்கின்றனர். அருவணக்கம் அரிது; உரு எளிது. அரு உருகுரு. வடிவில் சைவம் இறை வழிபாடு செய்யும். நடராஜ உருவில் எல்லார் வழிபாடும் அடங்கும். உருவினால் உட்குவியும்; உள்ளத்தில் துள்ளும் சின்மயநடனம் உணர்வாகும். அபர பக்தி பரபக்திக்கு வழிகாட்டும். வள்ளலார் உள்ளத்தில் அருட்சோதி நடராஜனையே தியானித்தார்: அவனே அகவடிவும் சகவடிவும் அருள்வடிவுமாகி தானாகி நானாகி சுகவடிவ மளித்துச் சுடர்வடிவாகிச் சுத்த நடம்புரிந்து சித்தியெலாந் தந்து சாகாக்கலையும் அருளினான். அவரது சித்தாடல்களிற் சிலவற்றைக் காண்பாம்.



