
அருட்பெருமான்
சுத்தானந்த பாரதியார்
10. தெய்வப் பிறப்பு
சபாபதி முத்தியாலுப் பேட்டையில் சனிக்கிழமை தோறும் பெரிய புராணப் பிரசங்கம் செய்து வந்தார். ஒரு சனிக்கிழமை சபாபதி போக முடியவில்லை, பித்தக் காய்ச்சல். “இராமலிங்கம், நீ சென்று இரண்டொரு பாடல் படித்து வா” என்றனுப்பினார் அண்ணல்; அண்ணியும் “நன்றாகப் படித்துவா” என்றாள்.
அன்று அருட்குரு ஞான சம்பந்தர் வரலாறு; இராமலிங்கம் அருளா வேசத்துடன் பொருளுரைத்தான். அமுத வெள்ளமாகத் தமிழ் பொழிந்தான். ஒன்பது மணிக்கு முடிய வேண்டிய புராணம் பன்னிரண்டு மணிக்கும் நடந்து கொண்டே யிருக்கிறது. சபை இமைகொட்டவில்லை. சேக்கிழார் வாக்கை அருட் கிழார் வசந்தக் குயிலோசை போல அள்ளிப் பொழிகிறார். சபையின் உள்ளம் அன்பு பழுத்து இன்பரச வெள்ளமானது. ‘இனி இராமலிங்கமே புராணம் சொல்லட்டும்’ என்று அறிஞர் சபாபதியை வேண்டினர். அண்ணலும் இசைந்தார். தாம் இன்னோரிடம் புராணம் படித்தார். “படிக்காது திரிந்த தம்பி எப்படிச் சொற் பொழிவான்?” என்று அண்ணல் இன்னும் ஐயுற்றார். ஒரு நாள் மறைந்திருந்து கேட்டார். செவியை நம்ப முடியவில்லை. இது “தம்பியா சேக்கிழாரா” என்று வியந்தான். “தணிகைக் குமரனே இராமலிங்கம், ஓதாதுணர்ந்த மூதறிஞன். அருள் வாக்கி- தெய்வப்பிறப்பு” என வியந்து வணக்கமுடன் நடந்து வந்தார். தாம் செய்த கொடுமைக்கு வருந்தினார். பதினாறாண்டில் இராமலிங்கம் அருட்கவியாகப் பழுத் தான்.



