அருட்பெருமான்
சுத்தானந்த பாரதியார்

8. குருமார் வணக்கம்

அரு, உரு, குரு ஆகிய முப்பான்மையில் இறைவழிபாடு செய்தனர் அன்பர்; அருட்பெருமான் முருகனையும் தில்லையப்பனையும் பாமாலை சூட்டித் தியான வழிபாடு செய்தார். மாணிக்கவாசகர், ஞானசம்பந்தர், வாகீசர், சுந்தரர் ஆகிய சைவக் குருமாரையும் வழிபட்டார். அவர் திருவாசகத்தை உயிர் போல நேசித்தார் “பாரொடுவிண்ணாய்” என்ற பாசுரத்தைக் கேட்டால் சிவமோகங்கொண்டு மூர்ச்சித்தார். சாத்திரத்திற்குத் திருமந்திரம் தோத்திரத்திற்குத் திருவாசகம் என்றார் நமது பெருமான். வான்கலந்த மாணிக்கவாசகரின் பாட்டு, தேன் பால் தீங்கனிச் சுவை கலந்து ஊன் கலந்து, உயிர் கலந்து இனிக்கிற தென்கிறார் வள்ளலார். அருட்பாவில் திருவாசகத்தின் உருக்கமும், திருமூலர் ஆழமும் தாயுமானார் கருத்துமே நிரம்பக் காணும்.

அருளுடை வள்ளலான இராமலிங்கர் ஆளுடைப் பிள்ளையான திருஞானசம்பந்தருடன் தம்மை ஐக்கியப்படுத்திக் கொண்டார். “மூன்று வயதில் ஞானப்பாலுண்டு அருள் பெற்ற குருமணியே என்னுள்ளிருந்தே எனக்கருளினை, தன்மயமாகி நானற்றிருத்தலே உயிர் அனுபவம். பரநாத வெளியில் மோனமாயிருத்தலே அருளனுபவம். நான் எனது தான் என்பதின்றி, தானதுவான வெறு வெளியே சிவானுபவம் என்றுணர்த்தினை. நின் செயல் என் செயல், என்னுடைமை நின்னுடைமை. உன்னிலை என்னிலை; அன்னிய மில்லை என்றுணர்த்திய சிவயோகியே” என்று ஞானசம்பந்தரைப் போற்றி செய்கிறார் அருட்சம்பந்தர்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *