அருட்பெருமான்
சுத்தானந்த பாரதியார்

6. அண்ணியின் கண்ணீர்

தந்தையார் திவசம் சிறப்பாக நடந்தது; உற்றார் உறவினர் விருந்துண்டனர். “தம்பி உடனுண்பதற்கில்லையே” என்று அண்ணல் குறைப்பட்டார். அவர் உண்ட மயக்கத்தில் கண்ணயர்ந்தார்; அப்போது புறவழியே மெல்லப் புகுந்தான் இராமலிங்கம். “வாடா கண்ணே” அண்ணியார் ஆவலாக வரவேற்று இலைபோட்டுச் சோறிட் டாள். எல்லாரும் உண்ட மிச்சம் பதனழிந்திருந்தது. அதையும் பசிக்கு வாரியடைத்தான் ஞானி: அண்ணி கண்ணீர் விட்டு விம்மினாள்: “அண்ணியம்மா அலமற லேன்?” என்று மீண்டும் மீண்டும் பிள்ளை கேட்டான். அண்ணி கண்ணைத் துடைத்துக் கொண்டு கருணை ததும்ப “தம்பி,எத்தனை நாள் இப்படிக் காணாது வந்து சாப்பிடுவாய்; அண்ணார் சொன்னபடி படித்தால் அவர் மகிழ்வாரே. பிறகு எங்களுடனிருந் துண்ணலாமே. தம்பி எனக்காகவாவது நீ படிக்க வேண்டும்” என்று மன்றாடினாள். “அப்படியே படிக்கிறேன்; அண்ணியம்மா. மாடியில் எனக்கொரு தனியறை அலகிட்டுத் தாரும்” என்றான் ஞானி. அண்ணி மகிழ்ச்சியுடனே தந்தாள். ஆனால் உள்ளே இராமலிங்கம் ஒரு கண்ணாடி வைத்து அதன்முன் விளக்கு வைத்து கண்ணாடிப் பார்த்து உள்ளத் தானாகிய குகமுருகனை உபாசித்தான்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *