
அருட்பெருமான்
சுத்தானந்த பாரதியார்
11. தியாகப் பெருமானே
முருகனருள் பெற்ற அருட்பெருமான் திருவொற்றியூர் தியாகப் பெருமானுக்குப் பாமாலை சூட்டினார். அப்பர் சம்பந்தர், சுந்தரர், பட்டினத்தார் முதலிய அருட்பாவலர் பாடிப் பணிந்த திருத்தலம் ஒற்றியூர். கடலிசையும் காற்றி சையும், தமிழிசையும், வேத நாதமும் முழங்கும் ஒற்றியூர் உள்ளமைதி தருவது. அந்த அருளமைதியில் சிவக்கனல் வளர்த்து, அலையும் மனதை அதில் பழுக்கக் காய்ச்சி வைராக்கியத்தில் செப்பனிட்டு ஞான வாளாக்கி ஆசை யாணவக் கட்டறுக்கும் பாடல்களை அருட் பெருமான் ஒற்றியூரிற் பாடினார். இங்கித மாலை, எழுத்தறியும் பெருமான் மாலை, ஏராளமான முறையீடுகள், விண்ணப்பங்கள், பதிகங்கள், இரங்கற்பாக்கள், கிளவிகள், புலம்பல்கள்–எத்தனையோ குவிந்து கிடக்கின்றன. அவற்றின் நறு மணத்தை நுகர்வோம்:
ஒற்றியூர் தியாகப் பெருமானே நின்னடி தொழுது துதிக்கிறேன், அன்னை அழுதபிள்ளைக்கும் பாலுண வளிப்பாள், அழவலிவில்லா மதலைக்கும் ஊட்டுவாள்; வாயில்லாதவன் வழக்குரைப்பது போல் நின்னருளைப் பெற விரும்பினேன். வானை நோக்கி வழி நடப்பவன் போல் ஊனை நோக்கி உன் வழி நடந்தேன். வித்தின்றி விளைவேற்றுவோன் போல் பத்தியின்றிப் பரமனை நாடினேன். கலமில்லாது கடல் கடப்பதா? நின்னருளில்லாது இருள் மாயத்தைத் தாண்ட முடியுமா? வெள்ளத்தில் புதைத்த பொன் போல் உள்ளத்தை உன் பூவடியிற் சேர்த்தேன். உன் அருளில் ஆட நினைத்துக் காம நீராடுகிறேன். ஓட நினைத்து உறங்குகிறேன்; முதலின்றி ஊதியம் பெற நினைத்தேன். பதியன்பின்றிப் பதம்பெற நினைத்தேன். கட்டிக் கொண்டு பிறவிக்கடல் கடக்க மாதிற்கும் வாதிற்கும் வாழ்வை யிழக்கிறேன். மண்ணிலே மயங்கும் மனத்தினேன்; இப்பாவியைக் கூவியருளாய், இப் பொய்யடியேன் நெஞ்சின் ஓடகலச் செய்வாய். நாணமிலா வீணன் என்று என்னைக் கை விட்டால் வேறு துணை யில்லேன். வெறி பிடித்தாலும் மகனைப் பெற்றோர் கை விடார். வெறி தீரும் நெறிபிடிப்பர்.
ஹே காமப்புலையா. வஞ்சப் பாவி, கோபக் கொலைஞா, மோகமூடா ஒற்றிச் சிவனருளால் உம்மை வெட்டுவேன்- போவீர் விலகி! அந்தோ வினைட்புல வேடர் என்னை வெல்லுகின்றனர். உன்னருளின்றி உய் திறனில்லை. உன்னை மறவேன் அண்டம் வீழினும், புவி மாறினும், தாய்பிள்ளையை மறந்தாலும், உயிர் உடலை மறந்தாலும், கண் இமைப்பை மறந்தாலும், கடல் அலையை மறந்தாலும், உலகம் பசியை மறந்தாலும், செல்வன் பணத்தை மறந்தாலும் நான் உன்னை மறவேன். வாழ்வுவரினும், தாழ்வுவரினும், வறுமைவரினும், சிறுமை வரினும், காமன்வரினும், காலன்வரினும், மக்கள் வெறுத்தும், மன்னன் சீறினும் பொருட்டன்று; நின்னை மறவேன். என்னை மறுத்தாலும், வெறுத்தாலும், ஒறுத்தாலும் பொறுத்தாலும் அடித்தாலும் மடித்தாலும் – நீயே கதி நீயே எந்தை எந்தாய்; என்னை நன்னெறியிற் பழக்கிவைப்பது நின்பாரம்; இன்றேல் உனக்கும் எனக்கும் வழக்கிருக்கிறது. உன்மேல் அன்புவைத்தேன்; அதைச் சஞ்சல வாழ்வில் ஆழ்த்தாதே. குருடன் கோலைப் பறித்து வீசலாமா? நின் கருணைக் கடலில் ஒரு துளி என்மேல் தெறித்தால் உய்வேனே. நீ எனக்கு அருளாது போனால் “பிள்ளாய் சிவனையே நம்பினையே; அவன் உனக்குச் சாதித்த தென்ன?” என்று தாயும் ஏசுவாளே! மண்ணவர் வெண்ணகை செய்வரே. மனது என்வசம், நான் உன்வசமாக வேண்டும். ஊன் முகப் பார்வைவிட்டு உள் முகப்பார்வை பெற வேண்டும். அருளைத் தந்து அடிமைகொள்; நான் றான் வஞ்சன்; நீயுமா? தியாகராஜன் என்ற பெயரைக் காப்பாற்று; நம்பினவனை வெம்புறச் செய்யாதே; வெள்ளிமாமலை வள்ளலே. பொன்மலை வில்லரே, வள்ளியீரென வந்தால் வாய்திறந்து வார்த்தையாவது பேசலாகாதா? எள்ளில் எண்ணெய் போல் எங்கும் இருப்பீர், ஏழையேன் குறை தீர்க்கலாகாதா?’-
இவ்வாறு ஆயிரம் வகையாகப் பாமாலை சூட்டி இறைவனிடம் முறையிட்டார், அருட்பெருமான்.
ஒற்றியூரில் ஓர் அவதூதர் இருந்தார்; அவர் எல்லாரையும் நாய் கழுதை பன்றி என்பவர். நம் அருட்பெருமானை மட்டும், ‘அதோ போகிறான் உத்தம மனிதன்’ எனக் காட்டுவார். ஒரு நாள் அருள் பழுத்த சிவயோகி ஒருவர் இராமலிங்கத்தைக் கடைக்கண் பார்த்து, சிவஞானம் உப தேசித்து “பரமன் உவப்பது பாட்டு; அருட்பா பாடிப் பாடிப் பரமனை அன்பு செய்; எதற்கும் அஞ்சேல்” என்று மறைந்தார்.



