
அருட்பெருமான்
சுத்தானந்த பாரதியார்
7. முருகோபாசனை
புருவநடுவே ஆறுமுக ஒளி காணும் – யோகியருக்கு. அதுவே ஆறுமுகன் – முருகன். முருகன் சிவக்கனல், சுத்த சக்திச்சுடர், பகை யரக்கரை வீழ்த்தி வெல்ல வீறு தரும் வேல்வீரனைத் தமிழர் நீண்டகாலமாக வழிபடுகின் றனர். நம் அருட்பெருமான் முதலில் சென்னையில் கந்த கோட்டத்தில் வளரும் ஆறுமுகப் பெருமானை வழிபட்டார். அப்போது அவர் பாடிய தெய்வமணி மாலை புகழ்பெற்றது. காலை எழுதி, மாலை முருகவேள் சந்நிதியில் மனமுருகப் பாடுவார். ‘அருட்பா முழக்கத்தில்’ அந்தப் பாடல்கள் உள்ளன.
அப்பனே கந்தவேளே, நீயே என் உயிருக்கு உயிர்; நீயே என் அறிவு; எத்திக்கும் தித்திக்கும் இன்பமே, ஆனந்தபோகமே, ஒருமையுடன் உன்னை நினைக்கும் உத்தமர் உறவைத் தா ; உள்ளும் புறமும் உண்மையா யிருக்க வருள்; மதமர்ச்சர்யமில்லாமல், பெண்வலையிற் சிக்காமல் உன்னை என்றும் மறவாமல், காமம் வெகுளி கலக்க முறாமல், தீயவுறவை நாடாமல் வரந்தந்தருள். நான் யாரிடமும் இரக்காமல், இரந்தந் தவருக்கு இல்லையென்னாமல், வளம் பெறச் செய். நீயே என் எல்லாம். உனது துணை உண்டானால் எனக்கு என்ன குறை? சூரியனை இருள் சூழாது நெருப்பைப் புழு பற்றாது. புலியை எலி சிறாது. நின் அடியார்க்கு அடியாரைத் தீமை தீண்டாது. நின் அன்பரே இன்பர். நின் அன்பு வரந்தா அப்பனே.
இதுவே தெய்வமணிமாலையின் கருத்தாம். திருத்தணி முருகனைப் பற்றிய அருட்பாடல்கள் கல்நெஞ்சையும் கரைப் பனவாகும்.
“முருகா, நின் வீரக்கழலிற் பணிகின்றேன். அப்பா குமரா, குகா, பரமகுருவே, மயில்வேல் மணியே, என்னை உலகச் சேற்றினின்றும் கரையேற்றிக் காப்பாற்று. துன்பக் கடலினின்று விடுவி; கருணைக் கடலே ஊரும் உறவும் பேரும் புகழும் மடவார் போகமும் வேண்டிலேன்; நின்னருள் வழி பார்த்து இளைக்கின்றேன். வா என்பாரில்லை; நீயும் போ என்றால் எங்கே போவேன். ஜீவ சாட்சியே. கனவிலும் உன்னைக் காட்டாயோ? நான் உன்னைக் கண்டுவிட்டால் கண்ணேறுபடுமோ? பாவி மகனையும் அன்னை தள்ளுவாளோ? அழியாப் பொருளே, ஞானத் தெள்ளமுதே, சிந்தாமணியே, அருட்பெருஞ் செல்வமே, என்னைக் காப்பது நின் கடன். கருணைச் செங்கரும்பே, சைவக் கனியே, அன் பருக்கெளியனே, பத்திவலைப்படுவோனே; என் துன்பமெல் லாம் நீ அறிவாய். கரும்பை வெறுத்துக் கசப்பை உவக்கிறேன். இரும்பு நெஞ்சினேன, பாலை நடுவே கருங்கல் போன்றேன்; கயிறைப் பாம்பென மயங்கினேன். தாய்ப் பால் விடுத்து நாய்ப்பாலுண்டேன். முத்திக்கு வித்தே நின்னைச் சரண் புகுந்தேன். குகா சண்முகா ஓம் சரவண பவா” இவ்வாறு முறையிடும் அன்பனுக்கு முருகன் அருள்புரிந்தான். சிவனார் மகனார் குகனார் வந்தார்; புது வாழ்வு தந்தார். அருட்குரு என்னை ஆண்டு கொண்டார். கல்வி யெல்லாங் கற்பித்தார்; கலக்க மெல்லாந் தீர்த்தார். முருகன் உள்ளே நின் றருளினான்” என்று பாடுகிறார் திருவருட் பெருமானார்.



