அருட்பெருமான்
சுத்தானந்த பாரதியார்

18. திருமணம்

கருணையை மணந்த அருட்பெருமானுக்குக் கடிமணம் கூட்டினர் உறவினர். அருட்பெருமான் எவ்வளவோ மறுத்தும் வெறுத்தும் கேட்கவில்லை; தாயும் அண்ணலும் மன்றாடினர்; “ஞானசம்பந்தரும் தாயுமானாரும், திருமணம் கொண்டனர்; நின் அழகிய மணக்கோலத்தைக் காண்போம்; கண்குளிர்வோம்” என்றனர். ஓர் யோகியைக் கொண்டு இல்லறமே நல்லறம் என வற்புறுத்தினர். இவர்கள் வற்புறுத்தலுக்கே வள்ளலார் வாயசைத்தார்; உடனே தமக்கை உண்ணாமுலையார் திருமகள் தன்கோடியம்மாளை இராமலிங்கத்திற்கு மனைவியாக்கினர். சதிபதிகளைப் பள்ளியறைக்குள் அடைத்தனர்; ஐந்தை அடக்கி அருள் வழி நின்ற ஞானி, தன்னுயிர்க் காதலனான நடராஜப் பெருமானையே உள்ளத்தில் நினைந்து நினைந்துருகினான். உருகுவதற்கு ஒரு வாசகம் திருவாசகமே: அன்றிரவெல்லாம் திரு வாசகமே படித்தான். மனைவியும் கணவன் மனப்பக்குவத்தை அறிந்து அதற்கேற்றவாறு நடந்து கொண்டாள்- மனைவியும் மனை வாழ்வின் கதையும் அத்துடன் முடிந்தன.

“மனமே பதையாதே சிதையாதே குதியாதே, நான் சிற்சபேசன்பிள்ளை உன்னை அடக்கி ஒடுக்கிடுவேன்!” என்று மனதைக் கண்டிப்பார் அருட்பெருமான், ‘புண்ணைக் கட்டிப்புடவை கட்டிய பெண்ணைக் கட்டியழும் மடப்பிள்ளைகள் கண்ணைக் கட்டி ஊர்வழிபோம் கிழக் கழுதை விற்கடையர்” என் றேசுவார். பெண்ணாசைப் பித்தேறிக் காமச் சேற்றில் விழுந்து கெடும் மாயத்தை வள்ளலார் போலக் கண்டித்தார் யாருமில்லை. ஆனால் அவர் பெண்மையை வெறுக்கவில்லை. “ஆணிற்பெண்ணும் பெண்ணில் ஆணும் உண்டு. பெண் களுக்கும் யோக சாதனம் பயிற்ற வேண்டும், பேத மற்று அபேதமாய் இருபாலருக்கும் படிப்பு முதலியவற்றைச் சொல்லிக்கொடுத்தல் வேண்டும், தத்துவசொரூப விளக்கம் செய்ய வேண்டும். பெண்களை அருள் வழியிற் பயிற்றினால் துரிய ஆசிரமத்தில் நம்முடன் ஒத்திருப்பார்கள் – ஆண் பெண் வாழ்க்கை முறையை அவர் இனிது வகுத்துக்காட்டுகிறார்’. ஆணவம் மாயை கன்மம் என்னும் அரக்கிகளை மணந்து மடமனம் புத்திசித்தம் அகங்காரம் முக்குணமாயை பொல்லா மக்களைப் பெற்று, உடலான குடியில் சோற்றுக் கூலி கொடுத்து வாதபித்த கபங்களுடன் ஜீவன் படும் குடும்பத் தொல்லைகளைக் “குடும்ப கோஷம்” என்ற நூலில் விளக்குகிறார் வள்ளலார். இருட் குடும்பத்தை வென்று அருட் குடும்பத்தையே அவர் நடத்தினார். நடராஜாவையே தன்னுயிர் நாயகனாகவும் அவனுக்குப் பாமாலை சூட்டு தலே பத்தினிக் கடனாகவுங் கொண்டார் வள்ளலார்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *