
அருட்பெருமான்
சுத்தானந்த பாரதியார்
25. அருட்பெருஞ்ஜோதி
அருட்பாவின் உயிரும் உள்ளமும் அருட்பெருஞ்ஜோதி அகவலே. சாதி சாதி என்றலையும் மாந்தர் சோதி சோதி என்றுணர்ந்து ஆன்மநேயத்தில் வாழ வழி காட்டும் வள்ளலார் வாக்கமுதம் அருட்பா முழக்கமாக வரும். ஏசுநாதர் வானரசு என்றார்; புத்தர் தர்ம ராஜ்யம் என்றார்; வள்ளலார் அருளாட்சி என்கிறார்; அதற்கு ஒளி காட்டுகிறது ஆறாம் திருமுறை.
அருட்பெருஞ்ஜோதி தத்துவாதீதமாய், சச்சிதானந்தப் பரவெளியென்னும் பொன்னம்பலத்தில் விளங்கும் துரியங் கடந்த சுகபரி பூரணம், எல்லாம் வல்ல பரஞ்சுடர், யோக சித்திகளின் இருப்பு; மனமாய விருளை நீக்கி, அருளொளி நிரப்பும் சுத்த சக்தி; வித்திடை விளைவு, அருவில் உரு, உருவில் அரு, பெண்ணில் ஆண், ஆணில் பெண், உயிருக் குயிரானது அருட்பெருஞ்ஜோதி, அதுவே சக்தியளிப்பது, ஆணவமழிப்பது, எவ்வகை உயிர்க்கும் இன்புற நிற்பது. செத்த பிணம் போல் வாடி வதங்கிய மாந்தரை ஆன்மநேய வுணர்வும் ஆத்ம சக்தியும் இறவா நிலையும் தருவது அருட் பெருஞ்ஜோதி. அது தானே தான்; தானே எல்லாம்; அது சிதம்பரம்; பரம்பரம், அருளமுதம், கருணையுள்ளத்தில் மெய் விளக்கு; ஒளிநெறி அருள்நெறி; அருள் நெறியே அறநெறி; உள்ளகத்தமர்ந்து, உயிரிற்கலந்து, செவியிற் கேட்பது, கண்ணிற் காண்பது, நாவிற் சுவைப்பது, உணவை ஊட்டுவது, அச்சந்தவிர்ப்பது, அமைதியளிப்பதும், அருட்பெருஞ்ஜோதி. வழிதுறை காட்டி வாழ்வளிப்பது
உயிரினுஞ் சிறந்த அருள் துணை; துரியங்கடந்த பெரியவான் பொருள், இயற்கை விளக்கம், இயற்கையின்பம், என்றும் உள்ளது, என்னுள் உள்ளது, குறையா நிறைவு, எண்ணியதுதவும், எல்லா நன்மையுமளிக்கும் சக்தி. துன்பந் தவிர்த்து, அன்பு நிரப்பி, அறிவைத் தூண்டி ஆற்றலைப் பெருக்கும் சக்தி; தன்னாட்சி, தன்னுரிமை, தன் சித்து எனதாக்கி, என்வடிவைத் தன் அருள் வடிவாக்கிய சக்தி அருட்பெருஞ் ஜோதி. துரியமலையில தீஞ்சுவையூற்று; அருளானந்தக் கடல், கோடையில் குளிர் நிழல்; உயர்மலைத்தேன், கனிரசக் கட்டி, சுகமண மலர், யாழிசை, ஏழிசை, வேத கீதம், நாத சுரம், மனங்கனிய மதி நிறைய என்னுட் பழுத்த புத்தமு துணர்வு- அருட்பெருஞ்ஜோதி. பால்வெண்கதிர்,கருணை மழை, சோதிமெய்ச்சுடர், மெய்யருட் கனல், என் உள்ளமே சபையாயமர்ந்து அபயமளிக்கும் பயமளிக்கும் அருட்பெருஞ்ஜோதி- போற்றி போற்றி போற்றி சுத்த சக்திச்சுடர், அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங்கருணை !
இந்த அருட்ஜோதி மந்திரத்தில் வள்ளலார் சன்மார்க்கக் கொடியை உயர்த்தினார். இதற்குத் தத்துவ விளக்கம் உண்டு.
ஞானசபையென்பது அகமான ஆன்ம ஒளி நிலையம். அந்த ஒளிக்குள் ஒளி நிறைவே கடவுள். அந்த உள்ளொளி யசைவே ஆனந்த நடனம். அசைவே நடராஜவுரு, ஞானாகாச நடனக் காட்சி, அருளே அதை அடையும் வழி; எவ்வுயி ரிடமும் அன்பு வைப்பதால் அருள் விளங்கும். நமக்குள் அருள் உணர்ச்சி நிரம்பிய அமுதநாடியுள்ளது. அது நாபி முதல் புருவ நடு வரையிற் செல்லுகிறது. அந் நாடி நுனியில் (புருவ மத்தியில்) ஒரு சவ்வு தொங்கும்; அதன் அடிப் புறம் வெண்மை, மேற்புறம் மஞ்சள்; அச் சவ்வின் கீழ் ஒரு நரம்பு ஏறுவதும் இறங்குவதும் உணர்வாகும்; அதுவே கொடியாடுவதாகும் – எல்லாவுயிர்களிடமும் அன்பு வைத்துக் கருணை புரிதலே கொடியின் குறிப்பாகும் – இதுவே ஜீவகாருண்ய சன்மார்க்கக் கொடி.



