
அருட்பெருமான்
சுத்தானந்த பாரதியார்
அருட் பிரகாச மாலை
திருப்பொதுவில் ஞானநடம் புரிகின்ற
தெய்வசிகா மணியின் சேயை
இருட்குலத்தைப் போக்குகின்ற
மடமையிருள் மாற்றவந்த இரவி தன்னைக்
கருக்கணக் கில்லாதவனைக் காலனணு
காதகனல் மேனியானை
அருட்சமயத் தந்தையினை அன்பருக்குத்
தாயானை அடைந்து வாழ்வாம்.
தேடுகின்ற தொண்டருக்குத் தேனாகக்
கனியாகத் தீம்பாலாக்
ஓடிவந்து தண்ணருளைப் பொழிகின்ற
ஓங்கார வேத வூற்றை வாடுகின்ற
பயிரினுக்கு மழையனைய
கருணைமிகு வடலூர் வேந்தை
நீடுகின்ற சன்மார்க்கச் சோதியினை
நிலவுலகு நினைக மாதோ.
சாதிமதச் செருக்காலே சண்டையிட்டுச்
சாம்உலகை ஆன்மநேய
வேதமெனும் அருட்பாவால் விடந்தீர்த்த
வித்தகனை வேறுபாட்டால்
மோ தியலை மாந்தருக்கு
முறையான கருணைவழி மொழிந்ததெய்வச்
சோதியருட் புலவோனை நலமோங்குஞ்
சொல்லரசைத் தொழுது நிற்பாம்.
மாயவிருட் காட்டினிலே மதிமயங்கி
வழிதடவி வாடுகின்ற சேயனைய
சீவனுக்குச் சிவஞான
ஒளிகாட்டித் திருவார் அன்புத்
தாயனைய தயவுடனே யருட்பாவாம்
அருட்பாலைத் தந்து சிந்தை
மேயவனை மெய்யின்பத் தூயவனை
நேயமுற விளம்புவோ மால்.
ஒளியேநல் லுயிராகி,யுடலாகிக்
கருணை செழி யுள்ள மாகித்
தெளிவான மனமாகித் தேசாகி
மாசற்ற தியான மாகி அளியார்செந்
நாவாகி யமுதாகித் தமிழாகி யருட்பா
வாகி வெளியாகப் பரவெளியை விளக்கியநல்
விளக்கான விமலன் வாழ்க.
காயனைய மனதினையும் புளிப்பகற்றிக்
கனியாக்கிக் கருணை யாக்கித்
தூயசம ரஸம்பொழியும் பேரின்பச்
சுதையாக்கித் துரியா தீத
நேயமருள் பரமசுக நிலையாக்கிக்
கலைகடந்த நிமல மாக்கித்
தேயமெலாந் திருவோங்கச் சிவமோங்க
தவமோங்க செய்தாய் வாழ்க.
பூதவுடற் கரணமதிற் பற்றுகின்ற
பொய்ம யக்காம் புகலிலாத
சாதிமத வாதனையை மாற்றுதற்குச்
சமயசஞ் சீவி யான
நீ திமிகு சன்மார்க்க நெறிவகுத்த
குருபரனை நினைவிற் கொண்டு
சோதிவழி சென்றுலகிற் சுத்தான்ம
நேயர்களாய் ஒத்து வாழ்வோம்.
வன்பாறை யினும் வலிதாம்
ஆணவத்தை ஊணாக்கி வளமைநல்கும்
அன்பான வுயிர்நிலத்தில் அருளான
பயிராக்கி ஆன்ம வாழ்வை
இன்பான கற்பகநல் வனமாக்கி
எழிலோங்கும் துரியஜோதிப்
பொன்பாய மாற்றுவித்த யோகபரி
பூரணனைப் போற்றி வாழ்வோம்.
கருநீலப் பசுஞ்செம்பொன் வெண்கலப்புத்
திரைகளெலாங் கடந்து தூய
அருளான பரஞ்சுடரை அறிவாக
விளக்குகின்ற அறிஞரேறைத்
திருவோங்கச் சிவஞானத் தெளிவோங்கத்
தினவாழ்வை வகுத்து தெய்வ வுருவாக
மாற்றுவித்த ஒளியான
ஒண்மையனை உள்ளம் வைப்பாம்.
தேவார மூவரெனத் திருவாத
வூரரெனத் திருமூலர் போல் நாவாரத்
தாயுமானவர் போலத் தமிழ்பாடி
ஞால மெல்லாம் ஓவாத மதச்செருக்கை
யொழித்த சமரஸச் சுடரை உள்ளுணர்ந்தே
சாவாத தெய்வநிலை சார்ந்துலகில்
அமரரெனத் தழைப்போம் வாரீர்.
தேகசுதந் தரமுடனே போகசுதந்
தரமுதவித் தியான மோன
யோகசுதந் தரத்தினையும் ஒப்பற்ற
ஒருவனுக்கே யுதவி யென்றும்
ஏகசுதந் தரமாகச் சிவனருளே
யினிதுநமை இயக்க வேண்டி
வேகசுதந் தரமுடனே வியனுலகை
யழைத்தபொது வேதன் வாழ்க.
ஏமசித்தி வாமசித்தி இந்திரியம்
அமுதாகும் எழிலார் தூய காமசித்தி
சோமசித்தி யாதார கமலமெலாம் கடந்து நிற்கும்
ஓமசித்தி ஸஹஸ்ரார யோகசித்தி
தேகசித்தி யெல்லாம் திவ்ய நாமசித்தி
பெறநல்கும் அருட்சோதி நாயகனை
நாடுவோ மால்.
ஆங்கார வினையற்றுப் பேராசைத்
தினவற்றிங் கமைதியாகி நீங்காத
நேசமுடன் உள்ளத்தே
நெக்குருகி நினைந் துணர்ந்தே
தூங்காத தியானமுடன் மோனமுடன்
சுத்தசிவ சித்தி பெற்றே ஓங்கார
ஒளியுடலை யுதவுகின்ற
தேசிகனை ஓதுவோ மால்.
ஊனுருவி உயிருருவி யுள்ளுருவிப்
பாய்ந்தின்ப வூற்றெடுக்கும் தனருவி
யாகிவளர் தெய்வீகத் திருவருட்பா
செழித்த வூற்றை மானவர்க்குப்
புதுவழியும் புதுயுகமும் புதுவாழ்வும்
வழங்கி யிங்கே வானரசைக் கொணர்ந் தானைத்
துரியவள நாட்டரசை வழுத்தி நிற்பாம்.
பலமதங்கள் ஒன்றெனவே வடக்கினிலும்
மேற்கினிலும் பகருமுன்பே
தலமுயருந் தமிழ் நாட்டில் அருளான்ம
ஸமரஸத்தை நாட்டினானை
நலமுயரும் குருமணியை நவயுகத்து நபிமணியை
இன்பமோங்கி உலகுயருந் தவமணியை உண்மையறி
வொளிமணியைப் போற்றுவோமால்.
முருகென்னும் பொருள்விளங்கமுத்திளமை
யெழில்குலுங்கு முகத்தி னானைத்
தருணமழை போல் அடியார் தாகத்தைத்
தணிக்கின்ற தயைமிக்கானை
கருணைவிரி மனத்தானை எவ்வுயிருந்
தன்னுயிர்போற் கருதுவானை
குருமணியென் றுலகமெலாம்
கும்பிடத்தக் கானைமனங் குறித்து வாழ்வோம்.
எத்தனையோ தத்துவங்கள் அத்தனைக்கும்
இசைவாகி யவற்றின் மேலாய், ஒத்துலகில்
எல்லாரும் ஒரு குலமாய்
அருட்பொதுவிற் செழிப்புற் றோங்கச்
சுத்தசிவ சன்மார்க்க சங்கத்தை
முறைவகுத்த சோதி தன்னைச்
சித்தெல்லாம் வல்லவனைத் திருஞான
தேசிகனைச் சிந்தை செய்வேம்.
பித்துலகர் பிதற்றுகின்ற மதவாதச்
சூதுகளைப் பிறகிட்டோட்டிச் சுத்தான்ம
ஒருப் பாட்டின் உரிமைநெறி
முதன் முதலிற் றுலக்கி னானைச் செ
த்தாரை எழுப்புகின்ற ஞானசஞ் சீவியினை
அமர வாழ்வின் வித்தகனைத் தமிழ்வேத மகரிஷியை
விளம்பியுளம் பொங்கு வோமால்.
தினைத்துணையும் பேதமின்றிச் சீவகா
ருண்யவழி சேர்ந்து வாழ மனத்திருளை
மாற்றியறி வானந்தத் துரியமலை
வளநாடேற்றி நினைத்திடவு முடியாத
நிலைக்கு நம்மை யழைத்தானை நேரிலோர்நாள்
அனைத்துலகும் அறிவானைத் தமிழரின்னும்
அறியானை அணிந்து வாழ்வாம்.
மருட்சமயவா துகளும் மாமாலச்
சூதுகளும் மண்ணைக் கவ்வ
இருட்சாதி வேற்றுமைகள் இடர்செய்யும்
பிரிவினைகள் இரிந்து தேயப்
பொருட்செறிந்த மணிவாக்கும் பொதுநலஞ்செய்
புண்ணியமும் பூண்டெழுந்த
அருட்சோதி ராமலிங்கப் பெருமானின்
அடிமலர்கள் முடிமேல் வைப்பாம்!
சுத்தானந்த பாரதி
முற்றும்.
★ ★ ★



