
அருட்பெருமான்
சுத்தானந்த பாரதியார்
23. தருமசாலை
அருட்பாட்டுடன் அருட்பணியும் பரவினார் வள்ளற் பெருமான். அச்சம், பசி பிணி அடிமைத்தனம், சாதிமத பேதபுத்தி – இவையே மனித சமுதாயத்தைப் பிடித்த பீடைப் பேய்கள் — இவற்றை ஒழிக்கவே தூய சன்மார்க்கக் கொடியை நாட்டிப் புண்ணிய வினைதொடர்ந்தார் வள்ளலார் புண்ணியமாவது ஜீவகாருண்யமே,உயிர் இரக்கமே. இதனாலே தான் கடவுள் அருளை அடையலாம். பசி நீக்கல், கொலை புலை நீக்கல்-இவை ஜீவகாருண்யத்தின் சிறப்பாகும் காய் கனி தானியம் உண்ணல் நல்லது. இவை ஓரறிவுடையன. அவற்றிற்கு மனம் முதலிய அந்தக் கரணமில்லை. அவற்றை நாமே விதைத்து வளர்த்து விளைவேற்றுகிறோம். ஆதலால் தாவர உணவைக் கொண்டு பசியாற்றி உயிர்களுக்குதவுக. சத்துவ உணவால் உயிர்ப்பசி நீக்குக. பிறர் பசியாற்றலே புண்ணியம். சீவகாருண்யமே ஆன்ம நேயம். உயிரைக் கொன்று -புலாலுண்போன் எவ்வளவு பெரியவனா யினும் கருணையற்ற புலி நரி போல்வான். உயிர்க் கருணை கொண்டு பசி பிணி தீர்ப்பவனே உத்தமன்,
இந்தச் சீவகாருண்ய ஒழுக்கத்தை நடத்திக் காட்டவே வள்ளலார் வடலூரில் தருமசாலை அமைத்தார். எண்பது காணி நிலமும் கிடைத்தது. அதுவே வடலூர் வெளி. தமிழகத்திற்கே இது நடுநாயகமானது. தில்லை, திருவதிகை, முதுகுன்றம் பாதிரிப்புலியூர் முதலிய தலங்களும், பெண்ணை கெடிலம், வெள்ளாறு, மணிமுத்தாநதி முதலிய ஆறுகளும் சூழ்ந்தது. பார்வதிபுரம், சித்திபுரம், ஞான சபை, உத்தர ஞான சிதம்பரம் என்று அழைக்கப்படும் வடலூரே, அருட் சோதி மந்திரமானது, அருட்பாவின் வைப்புத் தலமானது, இராமலிங்க வள்ளலின் உள்ளமானது. இப்போது அவர் வயது நாற்பத்து நான்கு. எட்டாண்டுகள் அவர் வடலூரிலிருந்து அருட்பாவிற்கு ஒளியுருவளித்தார். முதலில் அங்கே ஒரு தருமசாலை கட்டிக் கிணறும் தோண்டினார் பிரபவ, வைகாசி 11-ந் தேதி வியாழன். அங்கே சாதி மத வேறுபாடில்லாமல் தினம் வந்தவருக்கெல்லாம் நல்லுணவளித்தார் வள்ளலார். முதல் மூன்று நாளில் பதினாயிரம் பேர் சாப்பிட்டார்களாம், தாது வருஷப் பஞ்சத்தால் வருந்திய அக்கால மக்களுக்கு இப்படி ஒரு வனாந்தரத்தில் அறு சுவையுணவு கிடைத்ததும் அற்புதமே. ஒருநாள் அளவாகச் சமைத்து இலைபோடும் போது கூட நூறு பேர் வந்துவிட் டனர்; “போடு இலை” என்றார் கற்பகக்கையார். தாமே பரி மாறினார் – எல்லாருக்கும் உணவு நிரம்பக் கண்டது. மற்றொரு சமயம் உக்கிராணம் காலி; அன்பர் திகைத்தனர்.
“நாளை எல்லாம் வரும்” என்றார் வள்ளலார். மறுநாள் மூன்று வண்டி அரிசி பருப்பு காய் கறிச் சாமான்கள் வந்தன. “கனவில் கட்டளை பிறந்தது” என்றனர் கொண்டு வந்தவர், அன்று ஏராளமான பேருக்குத் தாராளமான விருந்து கிடைத்தது-திருவருட் செயல் !
தருமசாலை இன்றும் நடந்துவருகிறது; ஆனால் அத்துடன் ஒரு கருமசாலையை இணைக்கவேண்டும். உழைப்பவனுக்கே பிழைப்பு; உழைக்கும் கைக்கே உணவு-இதுவே இக் கால வாழ்வு முறையன்றோ! உலகில் எந்த நாட்டிலும் பிச்சைப் பட்டாளமோ, சோம்பேறிச் சாப்பாட்டுக் காரரோ, திண்ணைத் தூங்கிகளோ இல்லையே! நமது புண்ணிய நாட் டில் இந்தப் பிச்சைப் பட்டாளம் இனி இருக்கலாமா? செல்வர்களே வாருங்கள்! சிறுசிறு யந்திரத் தொழில்களை நாட்டுங்கள், வடலூர் வெளியை வள நிலமாக்குங்கள்; பூவும் கனியும் கிழங்கும் தானியமும் குலுங்கச் செய்யுங்கள். ஏழை மக்களுக்கு உழைப்பும் பிழைப்பும் தாருங்கள்-வாருங்கள் புண் ணியமுண்டு !



