அருட்பெருமான்
சுத்தானந்த பாரதியார்

17. தனிப்பெருங்கருணை

அருட்பெருஞ்ஜோதி – இது வள்ளலார் உள்ளம்; தனிப்பெருங் கருணை – இதுவே உயிர் வாழ்க்கை, ஆறாந் திருமுறையிலுள்ள பிள்ளைச் சிறு விண்ணப்பமும், பிள்ளைப் பெரு விண்ணப்பமும் அருட்பெருமான் உள்ளமும் உயிர்த் துடிப்பும், வாழ்வின் விளக்கமும் ஆகும்- எல்லாம் கருணை மயமே.

“அம்மையப்பனே, பிள்ளையின் குணங்களைப்பெற்றவர் அறிவார், உன்னிடம் யான், ஊண், உடை, பொருள், உலக போக சுகங்களை, வானின்பங் கூட, விரும்பவில்லை. என்னை யணைந்து என்னுடன் விளையாடு – அதுவே என் வேண்டுகோள்; என்னை அடித்தது போதும்; அணைத்து ஆறுதல் அளி; அறிவு வந்தது முதல் நீ பணித்த பணியே பணியானேன். இந்திர போகமும், இக போகமும் எந்த போகமும் வேண்டேன். இன்சுவை யுணவும் நின்சுவை யுணவே. நான் புணர்ந்த பெண்ணின்பமும் நின்னின்பமே. உடலாசையில்லை; ஊணாசையில்லை; உடம்பு தடிக்க நினையேன்; பணத்தாசையில்லை. பிறர் தந்த பணத்தையும் அவர் மேல் எறிவேன்; குளம் கிணற்றில் எறிவேன்; இறக்கவோ பிறக்கவோ துறக்கவோ புகழ் சிறக்கவோ ஆசையில்லேன். சிற்சபைக்குரிய சீலர் உறவும், எல்லாவுயிர்க்கும் அன்பு செய்தலும்,எங்கும் நின் அருளாடல் காண்பதும் வேண்டினேன். உன்னையே நாடி உன்னையே பாடி உன்னையே கூடி ஊழிதோறூழி உன்னைப் பிரியா ஒருமையுற வேண்டினேன்; தங்கமே யனையார் கூடிய சுத்த சனமார்க்க சங்கம் கண்டு, சன்மார்க்கக் கோயில் கண்டு என் அங்கம் குளிர அன்பருடன் ஆடிப் பாடி மகிழ வேண்டினேன்; எல்லா உயிர்களும் என்னுயிர் எனக்கருதி இனிது செய்ய வேண்டினேன் – என் விண்ணப் பத்தை ஏற்றருள்.

கருணையமுதே, என்னுயிர்க்குயிரே, சிற்றம் பலக் கனியே, என் உற்றார், உறவார், உலகுயிர்கள் முகமிளைத்துப் பசிப்பிணியால் வருந்தக் கண்டு வருந்தி வெதும்பினேன்: மண்பர் குறை கேட்டு நலிந்தேன். பிறர் பிணி கண்டு தளர்ந்தேன். மக்கள் இறப்பதைக் கேட்டு மயங்கினேன். அழுகுரல் கேட்டு நடுங்கினேன். தாய் தந்தை சுற்றம் நேயர் பிரிவால் நெஞ்சுடைந்தேன்; நல்லோர் பிரிய நலிந்தேன்; பிணப்பறை கேட்டுப் பதறினேன்; கொலையாளரைக் கண்டு கொதித்தேன்; உயிர்க்கொலை செய்து புலாலுண்போரைக் கண்டு எலும்பிளைத்தேன். உலகாளுவோர் வாட்போர் புரிவதை வழுத்தினும் பதறினேன். சிறு தெய்வங்களுக்குப் பலியிடுவதைக் கண்டு குடல் கலங்கினேன். கருணை வடிவாகிப் பிறவுயிர்க்குற்ற அச்சந்தவிர்த்துப் புலை கொலையற்ற நெறியில் உலகை உய்விக்க வேண்டும். மண்ணுலகில் உயிர் வருத்தத்தைக் கண்டும் கேட்டும் ஒரு சிறுதும் நான் சகிக்கமாட்டேன்.

பசித்தவர் பட்டினி எனில் பரிந்தேன். களவெனக் கேட் டும் கலங்கினேன்; சென்னையிலிருந்தால் சிறு குறு மென்று நாட்டுப்புறம் வயல் வரப்பு கல் புல் காடு வனங்களில் திரிந்தேன். புட்கள் வருந்திக் கூவிடப் பயந்தேன், நச்சுயிர்களைக் கண்டு நடுங்கினேன்! எளியரை வலியர் நலிப்பதை நொந்தேன். களவெனக் கேட்டுக் கலங்கினேன். ஐயோ என்று வெதும்புவோர்க் கிரங்கினேன். கண்ணீர் கண்டு கண்ணீர் விட்டேன்! துன்பங்கண்டு துடிதுடித்தேன், ஐயம் புகுந்தும் பசியால் வருந்துவோரைக் கண்டு மெலிந்தேன்.

கெடுநிலையாளர் கேட்டை அஞ்சினேன், தீ மொழிகேட்டுத் தீ யென நொந்தேன். வாடிய பயிர் கண்டு வாடித் தவித்தேன்.

உரத்துப்பாடவும் பேசவும் கூசினேன். அதிர் நடை கண்டு அஞ்சினேன். கை வீசி நடக்கவும், கால் மேற் கால் போட்டுக் கட்டிலில் உட்காரவும் நாணினேன். கைகட்டியே நடந்தேன். சரிகை வேட்டி போடக் கூசினேன். வெள்ளாடையால் உடலை முடினேன். பிறர் கோலமும் நடையும் ஊன்றிப் பார்த்ததேயில்லை. என்களைகணே என் சுதந்தரம் என்னிடமில்லை. எல்லாம் உனக்கே தெரியும். பொய்யுலகாசை யில்லேன்; சிறு பருவத்தே நின் சார்புற்றேன். பிறிதெல்லாம் விடுத்தேன். பித்தனேன் எனினும் நான் உன் பிள்ளை, நான் வாடுதல் அழகோ – இனிப்பிறவேன், இறவேன்; உன்னை மறவேன் ஆன்ம நேய உறவே! கருணையே வாழ்க்கை. என் னுயிர்த் துணை நீயே; உன்னையே நினைத்து உளங்குழைந் தேன். உன் கட்டளையை மீறியதில்லை. நீ :வெறுப்ப நடந் திலேன். திருவாசகம் திருமந்திரம் என்னுள் நீயுணர்த்திய ஞானம் – இவற்றையே பயின்று நடந்தேன். எந்தையே நின் காதல் கடலினும் பெரிது. நின்னையே பார்ப்பறப் பார்த் திருக்கிறேன். அச்சம் மயக்கம் மாயை தவிர்த்துன் மெய்யருள் தந்து காவாய். ஐயந்தீர்த்து உய்யவை,உயிர்க் கருணை பற்றிக் கதறுகிறேன்; இரக்கமே என்னுயிர், பிறர்துயர் தீர்க்கும் ஆற்றலுந் தந்தருள், இன்றேல் உயிர் விடுவேன். இரக்கமும் உயிரும் ஒன்றே-என் விண்ணப்பத்தை ஏற்றருள்புரிவாய் – இறைவா…….

விண்ணப்பக் கலிவெண்பா, நெஞ்சறிவுறுத்தல், மஹாதேவமாலை குடும்பகோஷம் முதலிய அரிய பாடங்கள் வள்ளலார் உள்ளத்தைப் படம் பிடித்துக் காட்டும். பாழ்வாழ்வொழி: பதி வாழ்வு வாழ்; காமப் பேய் பின் நாய் போல் அலையாதே, வீண் மயக்மொழி; நீ யார் என்று அறி அன்பே வடிவாய், அருளே உயிராய், பேரின்பமே உணர்வான நல்லோர் கூட்டமே நாடு, இறைவனை நம்பு. அடித்தாலும் அணைத்தாலும் அவனே கதி, உலக நிலை உயிர் நிலை மெஞ்ஞான நிலை மோன நிலை சச்சிதானந்த பரம நிலை, எல்லாம் அவனே – சமயங்களெல்லாம் கலக்கும் எல்லையற்ற அருட் கடல் அவனே, அருள் வெளியில் ஆனந்த நடமாடும் பெருமானே, என் மருள் மனப்பேயை அடக்கி இருட்கடலை விட்டேற வழிகாட்டு, ஒளிநாட்டு-அருட்ஜோதிஐயனே சரணம்”

இதுதான் அருட்பெருமான் வாழ்க்கை யருவியின் உள்ளொலி இந்த விண்ணப்பத்தை நிறைவேற்றவே இறைவன் அவரை வழி நடத்தினான்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *