அருட்பெருமான்
சுத்தானந்த பாரதியார்

9. நமது தம்பியா!!

அருள்கனிந்த வள்ளலின் வாக்கை அண்ணல் அறிய ஒரு வாய்ப்புக் கிடைத்தது. அக் காலம் சபாபதி பெரிய புராண விளக்கம் செய்தார். அவருக்குக் கையேடு வாசிப்பது நெருங்கிய உறவின் முறையான ஒரு சீரிய பெண்மணி: அவள் குரல் மிக இனிமையாயிருக்கும்; தேவார திருவாசகங்களை உருக்கமாகப் பாடுவாள். அவள் அன்று வர இயலவில்லை. அவளின்றி வாசிக்க முடியாது. புராணத்தை நிறுத்தவும் முடியாது; சபாபதி மயங்கினார்; அண்ணி “இராமலிங்கம் நீ செப்பேடு படித்தால் புராணம் நடைபெறுமே; படிக்கிறாயா?” என்று கேட்டாள். “அதற்கென்ன ஆகட்டும்” என்றெழுந்தான் அருட்கனிவாயன். சபாபதிக்கு “தம்பி படிப்பானா” என்று இன்னும் சந்தேகமே.

புராணம் தொடங்கியது; கடவுள் வணக்கம் முடிந்தது. இராமலிங்கம் படிக்கத் தொடங்கினான். குழலா, குரலா, யாழா, தமிழா, முத்தும் மணியும் அள்ளித் தெளிக்கும் தேன் மாரியா- இராமலிங்கம் படிக்கும் சேக்கிழார் வாக்கு அப்படி இனித்தது! செய்யுட்களைப் பதம் பிரித்துத் தெளிவாக்கி அணி பெறத் தருகிறான் தம்பி. சொல்லுருக்கத்தை மணிக் குரல் உயிரோவியமாக்கித் தருகிறது. அண்ணன் உரைக்குத் தம்பி படிப்பே தகும் என்று சபை மகிழ்கிறது. அதற்கு இது மிஞ்சியது; இது வரம் பெற்ற வாக்கு என்கின்றனர் கேட்டோர். நமது தம்பியா இப்படிப் படிக்கிறான் என்று சபாபதி வியக்கிறார். வீடு சென்று மனைவியிடம் “கடவுள் கண்ணைத் திறந்தார்; தம்பி அறிவாளியானான்” என்று சொல்லி மகிழ்ந்தார் அண்ணல்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *