அருட்பெருமான்
சுத்தானந்த பாரதியார்

13. பசி தீர்த்த பரமன்

திருவருள் கூடியது, திருவருள் பாடியது, திருவருள் ஆடியது. இராமலிங்கம் திருவருட் பிரகாச வள்ளலானார். அருட்பெருமான் ஆனார். இனி அவர் பொறுப்பு ஆண்டவன் பொறுப்பு. அருட்பா மலர்களால் அருச்சிப்பதே இவர் விருப்பு.

ஒருநாள் வள்ளலார் ஒற்றிப் பெருமானுக்குப் பாமாலை சூட்டி உட்குவிந்திருந்தார். பசிப்பிணி வாட்டியது. அதையும் பொறுத்துக் கொண்டு தியானவுறக்கங் கொண்டார். கோயிற் குருக்கள் அவரை எழுப்பி இன்னமுதளித்துப் பசிதீர்த்தார். சிவனருளே அவ்வாறு செய்தது, மற்றொருநாள் ஒற்றியூர் வணங்கி நள்ளிரவில் வந்தார், வீடு தாளிட்டு றங்கியது. பசியுடன் திண்ணையிற் படுத்தார் அருட்பெருமான். தமக்கையார் வடிவாக அருளன்னை வந்து உணவூட்டினாள். ‘நான் பசித்தபோது தான் பசித்தது போல் எண்ணி ஊன் பசிக்கு ஒள்ளிய தெள்ளமு தளித்த தனிப் பெருங்கருணைத் தாயே’ என்று வழுத்துகிறார் அருட்பாவலர்.

‘அற்புதம் காட்டு’ என்றாள் பட்டினத்தார் சமாதியில் தொண்டு செய்யும் முதிய அன்னை. ‘இதோ பிடி’ என்றொரு பிடிமணலை அள்ளிக்கொடுத்துச் சென்றார் அருட்சோதி வள்ளலார். அம்மையார் மூடிய கையைத் திறந்து பார்த்தார். மணல் சிறு சிறு சிவலிங்கங்களாயிருந்ததாம்! ஓரிரவு வியாசர் பாடியில் சொற்பொழிந்து வரும் வழியில், பெரிய பாம்பு சீறிவந்தது! கூட வந்தவர் ஓடினர். அருட்பெருமான் அப்படியே நின்று அதையே நோக்கினார். பாம்பு படமெடுத்தாடி அவர் காலைக் கட்டியணைத்திருந்து சாதுவாகச் சென்று விட்டது, இன்னொரு நாள் மோகினிப் பிசாசுக்குப் பயந்தனர் அன்பர், ‘பிச்’ என்றார் ஐயா, அந்தப் பிசாசு பயந்தோடியது. இன்னொரு நாள் பெரு மழை பெய்தது.

அன்பரைக் குறுக்கு வழியில் இட்டுச் சென்று கோயில் புகுந்தார் ஐயா – அவருடல் நனையவில்லை.

இவ்வாறு நிகழ்ந்த வியன் செயல்கள் பலப்பல. அருட் காந்தம் வீசியது, அன்பரை அக்காந்தம் கவர்ந்தது. சிலர் அருட் பாடலைக் கேட்டுருகுவர். சிலர் யோக சாதன முறைகளைக் கேட்பர், சிலர் அருள் நூல்களுக்கு விளக்கம் வேண்டுவர், சிலர் பழ நூல்களின் நுண்ணிய கருத்தறிவர், சிலர் புது நூல் புனைக என்பர். இப்படிப் பல அன்பர் அருட் காந்தத்தைச் சூழ்ந்து கொண்டனர். அனைவர் மனப் பசியையும் தீர்த்தார் நம் ஐயா.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *