அருட்பெருமான்
சுத்தானந்த பாரதியார்

19. தில்லையப்பா!

இருபத்து நான்காவது வயதில் அருட்பெருமான் தில்லை நடராஜா தரிசனங்கண்டார். தம்பி பரசுராமன், சுந்தரம், வீராசாமி, சிதம்பர சுவாமிகள் ஆகியோரும் உடன் சென்றனர்.

அன்பின் எழுந்த அருண்மலர் மாலைகளை ஆர்வமுடன் சூட்டி அப்பனை வணங்கினார் அருட்பெருமானார்.

“கரும்பின் இனிய கருணையமுதே, பொன்மணி மன்றில் பொது நடம்புரியும் புண்ணியா, பத்தர் மனம் தித்திக்கும் இன்பமே, அணிவளர் திருச்சிற்றம்பலத் தாடும் ஆனந்த போகமே, ஒளியினுள் ஒளியே, உளத்தினிற் பழுத்த பேரின்பப் பழமே, என் மனங்குடிகொண்ட குருவே, அப்பா, ஐயா, அரசே அன்பே ஆருயிரே அறிவே அருளே அழியாப் பொருளே; கருணா நிதியே, அடியார் இத யாம் புயனே; அபயம், அபயம், உனையன்றித் துணையில் லேன், அநித்திய வுலகைப் பார்க்க மாட்டேன். உன்னையே உணர்வேன் நினைப்பேன் உரைப்பேன், நாடுவேன், கூடுவேன். கனியிற் சுவையே; கண்ணின் மணியே. நின் பொன்னடிக் காட்பட்டேன். காசு பணம் காணி, கன்னியராசை வேண்டிலேன். உனது திருவருள் நேசமே வேண்டினேன், என் உடலுயிர் நினக்கே அடைக்கலம்; இனி நிகழ்வதெலாம் நின்செயல். அகத்தானே, புறத்தோனே, அணுவோனே, மகத்தோனே, இகத்தானே, பரத்தானே, எம்மானே; சுத்த சிவசன்மார்க்கந் துலங்க என்னை ஈன்றானே, அருளானே அருட் குருவே, அருட்பெருஞ் ஜோதியே, தில்லையப்பா நீயே கதி; நீயே துணை.

அருட்பா வெள்ளமும், அன்பு நிறைவும், தெளிந்த மொழியும், தீந்தமிழ் வளமும், தேசுறுவடிவும், சிவக்கன லொளியும்- மாசறு சிந்தையும் மன்றுள்ளறிவும், எளிய நடையும்,ஏந்திய கொள்கையுங்கொண்ட அருட்பெருமானைக் கோடக நல்லூர் சுந்தரஸ்வாமிகள் போற்றினார். இருவரும் ஞான விசாரஞ்செய்தனர்; நடராஜா தரிசனம் செய்தனர்; தியானித்தனர். வள்ளலார் முன்னிலையில் அருட் காந்தம் வீசிப் பரவியதை உணர்ந்த சுந்தர சுவாமிகள் ஒதுங்கியமர்ந்தே பேசினார். எதிரிலிருந்து பேசுவோர் ஆற்றலை இழுத்துக் கொள்ளும் சிற்சக்தி மின்சாரம் வள்ளலாரிடம் இருந்ததாக சுவாமிகள் சொன்னார், பெரிய காந்தம் சிறிய காந்தத்தை இழுப்பது வழக்கம். “இது திருவருள் வாக்கு, திருவருள் வடிவம்,” என்றார் சுந்தரர். அருளும் அன்பும் போல் இருவரும் உறவு கலந்து பிரிந்தனர்; அப்போது வள்ளலார் கண்ணீர் வடித்து “அன்பு மயமான இந்தப் பெரியார் ஆறு மாதமே உயிர் வாழ்வார்” என்றார். ஆறு மாதம் சென்றதும் சுந்தரசுவாமிகள் மகா சமாதியடைந்தார். இவர் வடமொழிப் புலவர்; சூதஸம்ஹிதையிலும் ஞான வாசிஷ டத்திலும் பெரும் புலவர்; இவரே மனோன்மணியம் ஆசிரியரான சுந்தரனாரின் ஞானாசிரியராவார். வள்ளலார் சீர்காழி, வேளூர், தருமபுரம், ஆரூர், செங்காட்டங்குடி, புகலூர் முத லிய பெரும் பதிகளைத் தரிசித்தார்; ஆங்காங்கு இறைவனைப் பாடினார். அவன் பெருமையைப் பேசினார், நோய் தீர்த்தார், பேய் தீர்த்தார்.

பிறகு மருதூருக்கு அடுத்த கருங்குழியில் வந்து தங்கினார். அங்கே தம்பி பரசுராமன் இறந்தான். அவனுக்கு இறுதிக் கடன்களை முடித்துச் சென்னைக்குச் செல்ல முனைந்தார் வள்ளலார்; அப்போது வேங்கடரெட்டியார் தமது மனையில் இடங்கொடுத்து அங்கே தங்கியிருக்கும்படி வேண்டினார். இருபத்தெட்டாம் வயதில் அருட்பெருமான் கருங்குழி யிலேயே தங்கித் தமது அருட் பணிகளைத் தொடங்கினார். அடிக்கடி சுற்றூர்களுக்குச் சென்று அன்பரைப் பார்த்து அருளுபதேசம் செய்து வந்தார்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *