
அருட்பெருமான்
சுத்தானந்த பாரதியார்
24. ஜோதி மந்திரம்
பசி இருவகை-வயிற்றுப் பசி ஆன்மப் பசி; வயிற்றுப் பசிக்கு உணவும் ஆன்மப் பசிக்கு அருளறிவும் வேண்டும். வயிற்றுப் பசி தீர்க்க வள்ளலார் தருமசாலை யமைத்தார்; ஆன்மப் பசி தீர்ந்து எல்லாரும் அருட்சோதி யறிவைப் பெறவே ஞான சபை யமைத்தார். இது நாற்பது காணி நிலத்தில் எல்லாரும் சாதிமத பேதமின்றி வணங்கவே அமைந்தது. எட்டிதழ்த் தாமரை வடிவில் எழுந்த இந்த ஜோதிமந்திரம் வள்ளலார் உள்ளம் போல்,அவர் அருள் வல்லபத்தால் கட்டிமுடிந்தது. இதற்குக் கொடி மரம் வாங்க வள்ளலாரே சென்னையிலிருந்தார். அறிவு மன்றம் கட்டும்போது மேல் விதானத்தில் வேலை செய்த மூவர் கீழே தவறி விழுந்தனர். காயப்படாமல் எழுந்தது ஆண்டவன் அருளாலே தான். புலாலருந்தும் வேலைக்காரர் அலங்காரப் பந்தலமைத்தனர். பந்தலில் இடிவிழுந்து சாம்பலானது. பிறகு புலாலுண்ணாத தொழிலாளரைக் கொண்டு காரியத்தை நிறைவேற்றினார் ஐயா !
இந்தக் கோயில் சுத்த சன்மார்க்க யோக விளக்கமாக அமைந்தது. கண்ணாடி போன்ற இதயத் தெளிவில் அருட் சோதி பொலிகிறது. அதை ஏழு திரைகள் மறைக்கின்றன. அடி நிலை, ஆதார வெளி, நடுநிலை, இதயாம்பர வெளி, முடி நிலை, சிற்பர ரகசிய வெளி, உபயாம்பரமான பொன்னம்பலம். இவை தூல, பிராண, மனோ, விஞ்ஞான, ஆனந்த, சித்து சத்துமயமான சேதனத் திரைகளே. இவற்றை அருளொளி (கற்பூர தீப ஒளி)யால் தாண்டித்தாண்டி உள்ளே சென்றால் மஹாதுரிய நிலையில் சுத்த சக்தி ஜோதி காணலாம்; அதுவே அருட்பெருஞ்ஜோதி, அதைக் காணும் சாதனம் தனிப்பெருங்கருணை. வள்ளற்பெருமான் கருங்குழி சித்தி வளாகத்தில் பூசை செய்த கண்ணாடியும் விளக்கும் ஞான சபையில் தைப்பூசத்தன்று நாட்டப்பெற்றன. இந்த ஒளி மணிக்கோயிற் பூசைக்கு வள்ளலார் சபாபதிக் குருக்களைப் பொருத்தமாக அமர்த்தினார். இங்கே ஜோதி தரிசனத்திற்கும் வழிபாட்டிற்கும் எழுந்த வேதவாக்கே அருட்பெருஞ்ஜோதி அகவலாகும்.



