அருட்பெருமான்
சுத்தானந்த பாரதியார்

4. கல்லாக் கல்வி

உலகம் இன்ப துன்பக் காடு; மங்கல மனையில் மங்குல் படர்ந்தது. தந்தை இறந்தார்; தாய்,மக்களுடன் பொன்னேரி சென்று தனது தாயுடன் இருந்து, பிறகு சென்னையில் வசித்தாள் ; மூத்த பிள்ளை சபாபதி, காஞ்சி சபாபதிப் புலவரிடம் தமிழ் கற்றான்; தமிழாசிரியனானான்; சிவபுராணமும் பெரியபுராணமும் படித்தான்; பிழைப்பு நடந்தது ; தந்தையில்லாக் குடும்பத்தைத் தமிழ் காத்தது.

இராமலிங்கத்திற்கு அண்ணல் சபாபதி கற்பித்தார் ; புலவர் சபாபதி கற்பித்தார்; ஏறவில்லை; வித்தகனுக்குப் புத்தகப் படிப்பு புளித்தது; முற்றறிஞனுக்குக் கற்றறிவு கசந்தது. இராமலிங்கம் சத்தியவிண்ணப்பத்தில் தன் இளமை வாழ்வைக் குறித்துச் சொல்லுகிறான்: சிறுவருடன் கூடி விளையாடல், சிற்றுண்டி விரும்பல், குறும்பியற்றல், சண்டை செய்தல், அசங்கியம் பேசுதல், ஆவலித்தழுதல் முதலிய குற்றங்கள் அவனிடமில்லை. அறிவுள்ள அருட் குழந்தை உலக விருப்பற்றுத் தனித்திருப்பான். ஜபதபஞ் செய்வான், கடவுளை வணங்குவான், இறைவனைப் பாடிப் பத்தி பரவுவான் ; உயிர்களுக்கிரங்குவான்; பெருங்குணம் பற்றி நடப்பான் இராமலிங்கம். விஞ்ஞானகலரான அருட் பெருமான் உள்ளத்திலிருந்து நடராஜப்பெருமானே அருளறிவைத் தூண்டினான். ஈசனே ஆசான் ; அருளுணர்வே கல்வி; எளிதும் இனிதுமான அமுதத்தமிழே அவன் பயின்றான்; தமிழிலேயே இறைவனைத் துதித்தான்; நினைத்தான், பாடினான், கூடினான். சாதிமத சாத்திர கோத்திரப் பொய்களை விலக்கி, சுத்தசன் மார்க்கஜோதியாக விளங்கினான் இராமலிங்கம்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *