
அருட்பெருமான்
சுத்தானந்த பாரதியார்
27. எப்படி வாழ்ந்தார்
வள்ளலார் கருணையே வடிவானவர்.மாநிறம். சாதாரண உயரம். நிமிர்ந்த மெல்லுடல், எலும்பு தெரியும்; வீரியபலம் மிக்கவர்; நீண்ட மெல்லிய மூக்கு, ஞானக்கனல் விழிகொண்டவர். கடைசி காலம் முடியும், மீசை தாடியும் வளர்த்தார். வாயில் ரோமம் படாது மீசையைக் கத்தரித்து வைப்பார். இன்னும் மக்கள் தம்மை அறியவில்லையே, அருள் வழி செல்லவில்லையே என்னும் விசனக்குறி அவர் முகத்திற் காணும். அவர் இடுப்பில் ஓராடை, முக்காடிட்டுப் போர்த்திய மேலாடையுடன் கையைக் கட்டி மெதுவாக நடப்பார். வெள்ளாடையே அணிவார். காற்றுவெயில் படாமல் உடம்பைப் போர்த்துக் கொள்வார். அவர் கடிய நிராகார தபசி, தனித்து, விழித்து பசித்திருப்பவர். அளவாகவே உண்பார், சிலநாட்கள் பானகங் குடித்தேயிருப்பார். நெய் முழுக்கு நாளில் மௌனமாயிருப்பார். மெத்தெனத்தோல் செருப்பே காலில் அணிவார்; காலை வெயில் புறப்படு முன்பே வெளியே சென்று திரும்புவார். மெல்லிய குரலில் தம் அருட் பாடல்களைப் பாடுவார். எவ்வுயிரும் தம்முயிர் போலெண்ணிப் பசி தீர்ப்பார். திடீரெனச் சிலநாள் மறைந்துறைந்து திடீரெனத் தோன்றுவார். அவர் ஒளியுடல் புகைப்படத்தில் விழவில்லை. சென்னையிற் பிடித்த ஒரு படமே இன்றுள்ளது. பண்ணுருட்டி அன்பர் ஒருவர் திருவுருவெழுதிக் காட்டினார். “பொன்னானமேனி மண்ணாயிற்றே!” என்று அதைக் கீழே போட்டார் வள்ளலார். இப்போது வழங்கும் உருவம் அவரது இயலுருவன்று. தம் உருவை வணங்கக் கூடாதென்று வள்ளலார் ஆணை யிட்டிருக்கிறார். அவர் விழிப்பட்டவர் சன்மார்க்க வழி பட்டனர்; ஊனுணவை விட்டனர், இவருக்கும் தாயுமானாருக்கும் நடையிலும், கருத்திலும் பொருத்தமுண்டு.



