
அருட்பெருமான்
சுத்தானந்த பாரதியார்
3. இராமலிங்கம்
5-10-1823 (21-புரட்டாசி-சுபானு வருஷம் கலி 4925 தட்சிணாயனம்) ஞாயிற்றுக்கிழமை உதயாதி 292 நாழிகை மீனலக்கினம் சித்திரை நட்சத்திரம்; சின்னம்மை வயிற்றிற் கோயில் கொண்ட பொன்னம்பலக் குழந்தை பிறந்தது. இருட்சாதி நடுங்க அருட்சோதி எழுந்தது. விலை யொழுக்கமும், புலையொழுக்கமும், கொலைக் கொடுமையும், கலைக் கற்பனையும், சாத்திரக் கொடுங்கோலும், ஆத்திரச் சமயமும், கோத்திரப் பொய்களும், வேற்றுமைச் சண்டைகளும், போலியாசாரங்களும் கேலிக் கூத்தாய் முடிய, ஆன்மநேய ஒருமை பெருமைபெற்றொளிர அருட்பெருமான் வந்தான். கருணையிலா ஆட்சி ஒழிய, அருள் நிறைந்த சன்மார்க்கம் பொலிய, சமரசச் செங்கோல் ஏந்தி சுத்த சிவ சித்தர் தோன் றினார். ஈன்றபொழுதே சான்றோன் எனக்களித்தாள் அன்னை. குருவருள் கொடுத்த திருவருள் மைந்தனைக்கண்டு கண்குளிர்ந்தார், மனமகிழ்ந்தார், பெற்றோரும் பெரியாரும். எல்லாவுயிர்களும் ரமிக்க அருட்குறி காட்டி எழுந்த மைந்தனுக்கு இராமலிங்கம் என்று பெயரிட்டனர்.
இராமலிங்கத்தின் இராசிச் சக்கரத்தைக் காண்போம்:- நாலில் குரு; எட்டில் புதன் சந்திரன், ஏழில் சுக்கிரன் சூரியன் – ”இச்சாதகன் சிரஞ்சீவி, கருணைக்குரு, அருட்பெருமான், சன்மார்க்கஜோதி, உலகைத் திருத்தும் உத்தமவித்தகன், துரியவளயோகி, இவன் முப்பதாண்டில் யோகசித்தி, நாற்ப தாண்டில் ஞானசித்தி, ஐம்பதாண்டில் துரியசித்தி பெற்றுப் பொலிவான் – இயற்கை யறிஞன், சுத்தசித்தன், தெய்வப் புலவன்” என்று அறிஞர் போற்றினர். ஊர் செழித்தது, பயிர் செழித்தது, மரம் செழித்தது, அறம் செழித்தது, அருட்பெருமான் வரவால் ஆனந்தந் தழைத்தது.



