
அருட்பெருமான்
சுத்தானந்த பாரதியார்
26. சன்மார்க்கம்
அருட்பா பாராயணத்திற்காகவும் பிரசாரத்திற்காகவும் வள்ளலார் சன்மார்க்க சங்கம் கண்டார். திருவரு டைவே சன்மார்க்கக் குறிப்பு. இறைவன் அருட்பெருஞ் ஜோதியன், சுத்தன், சக்திமயப்பொருள், ஓங்காரன், தனிப் பெருங்கருணையன். கருணையே அவனை அடையும் வழி. கடவுள் தூயவுள்ளக் குகையில் விளங்கும் சுத்த சக்தி ஜோதி. உயிர் இரக்கம், ஆன்மநேயவுரிமை, ஒருமை- இவையே சன்மார்க்கம்.
1867-ம் ஆண்டு தொடங்கி ஆறாண்டுகள் சன்மார்க்க சங்கம் தீவிரமாக வேலை செய்தது. உலகெல்லாம சாதிமத சாத்திர கோத்திரச் சண்டையினறி ஆன்மநேய ஒருமைப் பாட்டுரிமை பேணி ஒரே அருட்குலமாக வாழலே சன்மார்க் கம் (Spiritual Communion) ஆகும். சுத்தாத்ம உண்மை யுணர்ந்து அதையே யாங்கும் கண்டு தன்போலப் பிறரை எண்ணிக் கருணை செய்து அருள்வழி நடத்தலே சுத்தசன்மார்க்கமாகும். சாகாப் பொருளான சுத்தாத்ம சக்தி சேதனத்தில் வாழ்வதே சாகாக்கலை, இறவாநிலையாகும்! சாகும் உடலுக்கே, இந்திரிய சுகங்கருதி வாழுதலே சாகும் வாழ்வு. பிணி மூப்பு சாக்காடெல்லாம் உடலுக்கே; அதன் சிற்றின்பத்தில் ஆழ்ந்து நித்தியப்பொருளை மறத்தலே சாதலாகும்.
அழியாப்பொருளான அருட்பெருஞ் ஜோதியில் வாழ்வதே நித்திய வாழ்வாகும். விருப்பு வெறுப்பான பச்சைத்திரையும் ஆணவமான கறுந்திரையும் விலகவேண்டும். எச்சாதி சமயத்திலும் பற்றுவைக்காமல் அருட்ஜோதி ஆண்டவனிடமே முற்றிலும் பற்றுவைத்தல் வேண்டும். கருணையும் சிவமும் அருளும் ஒருமையும் பொருளென மதிக்க வேண்டும். யாரையும் எதையும் வணங்காது சுத்த சக்தி ஜோதி யிறைவனையே வணங்கி வழுத்தி நினைத்தல் வேண்டும். அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை என்பதே ஆண்டவன் அளித்த மந்திரம். அதைச் சுத்த சக்திதரும் அருள் நெறிபற்றிச் சாதனம் செய்க.
இதுவே சுத்தசன்மார்க்கமாகும். இதன் விரிவு சன் மார்க்க தீபத்தில் வரும்.



