அருட்பெருமான்
சுத்தானந்த பாரதியார்

28. தீர்க்கதரிசனம்

வந்த காரியம் நிறைவேறியது – இதோ உடலிலிருந்த அருளான்மா உலகெங்கும் அருவாக நிலவுங்காலம் வந்து விட்டது. அந்தக்காலம் அவரை அறியவில்லை; பழைய சாதிப்பித்தங் கொண்டாரும், ஆணவத் தடிப்பு மிக்க புத்த கப்புலவரும் இந்த வித்தகப்புலவனைத் தூற்றினர். செத் தாரை எழுப்புவதென்றால் ‘என்புருசனை எழுப்பும்,பிள்ளையை எழுப்பும், மனைவியை எழுப்பும்’ என்று அறியா மக்கள் தொல்லை செய்தனர். பாட்டுக்காகச் சிலர், சாப்பாட்டுக்காகச் சிலர் கூடினர். ஆன்மநேய ஒருமைப்பாட்டிற்காக வந்தவர் மிக அரியரே. வள்ளலார் மனமும் சலித்துப்போனது.

“கடை விரித்தோம் கொள்வாரில்லை; என் சொற்களை நீவிர் செவிமடுத்திலீர். அந்நிய நாட்டிலிருந்து மகாத்மாக்கள் வந்து செயலாற்றுவர். கலிபுருஷன் செல்வாக்கு இன்னும் பத்தாண்டுகளில் அடங்கிவிடும், புலாற் பழக்கம் நாளாவட்டத்தில் நின்றுவிடும், சாதி குல சமய வேறு பாடுகள் ஒழிந்து இந்தியாவில் சுத்த சமரஸ சன்மார்க்கம் நிலைபெறும். அகிலமாம் அன்பே உண்மைக் கடவுள். அதுவே உலகில் பூரண சமாதானமும் சமரஸமும் நிலை நிறுத்தவல்லது. நம்முன் இலகும் கடவுட்சக்தியாம் அருட் சோதியை அன்பர் அறிந்ததுமே இயற்கைச் சக்தியை மாற்றவல்ல அற்புதவல்லமை பெறுவர். இச்சன்மார்க்க சங்கத்தில் அங்கம் வகிக்க நீங்கள் அருகரல்லீர். இச்சங் கத்தின் உண்மை அங்கத்தினர் வடக்கே வெகுதூரத்தினின்று வருகிறார்கள், காலம் நெருங்கிவிட்டது-ருஷ்யா அமெரிக்காவினின்றும் வடக்கிருந்தும் இதர நாடுகளினின்றும் அறிவாளிகள் இந்தியாவுக்கு வந்து ஒருமைப் பாட்டுரிமையைப் பிரசிங்கிப்பார்கள். அற்புதப்பணி செய்வார்கள் நான் இப்போது சொல்லும் உண்மைகளை அப்போது தெரிந்து நடப்பீர்கள்.

இந்தத் தீர்க்க தரிசனப்படியே 1875ல் பிரமஞான சங்கம் ஏற்பட்டது. இந்த ஆன்மநேய ஒருமையை அரவிந்தரும் ஒரு சிறிது நிறைவேற்றப் புதுவையில் முயன்றார்.

இதோ காலம் வந்தது. வள்ளலார் உள்ளம் நிறைவேறும். அன்பர் வருக!

இறுதி நாளில் “மறைவேன், எங்கும் நிறைவேன்; மீண்டும் வருவேன்” என்றார். 1874ல் மெளனம் வகித்தார். பிறகு தீர்க்கதரிசனம் பேசினார். ஒருநாள் சித்திவளாகச் சிறுகுடிலில் சுத்தயோக சமாதி கூடி ஆனந்தத்திருந்து “ஞானசம்பந் தவுருவாக வருவோம்; நித்தலும் பேரானந்த நித்திரை கொள்வோம்: அருட்சோதியை நம்பியிருமின். இக்கதவைக் காப்பிடுமின், திறந்தால் வெறுமையே காண்பீர் -அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை” என்று அன்பரிடம் பேசி நிட்டையில் ஆழ்ந்தார்.

கதவு மூடியது, திருக்காப்பிடப்பட்டது. சிலநாட் கழித்துத் திறந்து பார்த்தால் – ஒன்றுமில்லை. இருந்தது கண்ணுக்கே மறைந்தது- எண்ணுக்கு நிறைந்தது.

அருட் பெருமான் இங்கே இந்த உள்ளத்திலிருந்தே இதை எழுதுகிறான் “என் உள்ளத்தை உலகிற்கு விளக்கு” என்கிறான்.

வள்ளலார் உள்ளம் என்ன, அருட்பா என்ன முழங்குகிறது என்பதை அடுத்த நூலிற் பாருங்கள்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *