
அருட்பெருமான்
சுத்தானந்த பாரதியார்
21. சித்தாடல்
1. கருங்குழி ரெட்டியார் வீட்டில் எல்லோரும் வேலூர் சென்றனர். வள்ளலார் தனியே அருட்பா எழுதிக்கொண்டிருந்தார். இரவு; விளக்கு மினுக்கு மினுக்கென் றெரிகிறது; எண்ணெயில்லை; அணையப் போகிறது. வள்ளலார் தண்ணீரை ஊற்றினார். விளக்கு எரிந்தது; விடிய விடிய அருட்பா எழுதினார் – அதிசயம்!
2. பாலு ரெட்டியாரின் தொழு நோயைத் தீர்த்தார்; முத்து நாரண ரெட்டியாரின் கண் மறைவை போக்கினார் இவர் தமது செல்வமெல்லாம் வள்ளலாருக்கே அர்ப்பணித்தார். அதை மறுத்து ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலுக்கே எழுதிவையும் என்றார் நிராசைப் பெருமான்.
3. வடலூர் வெளியில் அன்பருடன் வள்ளல் உலாவினார்; பெருமழை பெய்தது; அனைவர் ஆடையும் நனைந்தது, பெருமான் ஆடை ஈரமாகவேயில்லை.
4. கடலூர் தேவ நாயகம் பிள்ளை வீட்டில் வள்ளலார் எழுந்தருளினார்; “இதுவே உன் தகப்பன் வியோகஸ்தானம்” என்றோர் இடத்தைப் பிரம்பினால் தட்டிக் காட்டினார். ”குருவே, குறிப்புச்சரி; முக்காடிட்ட மகான் வருவார்; இப்படிக் கேட்பார்; அவரே உன் குரு என்றார் எந்தை, என்று தேவ நாயகம் பிள்ளை சரண்புகுந்தார். இவர் இரசவாத மோகங்கொண்டு பெரும் பொருளை இழந்தார். வள்ளலார் ஓர் இரும்பைத் தங்கமாக்கிக் காட்டி “ இச்சையற்ற வனுக்கே இரசவாதம் பலிக்கும்; நீ இதில் மயங்காதே” என்றார். இருவரும் செஞ்சிமலை சென்றனர்; அங்கே தேவ நாயகத்திற்குப் பசி மிகுந்தது. வள்ளலார் இலட்டு மிட்டாயும் நன்னீரும் வரவழைத்துத் தந்தார். அன்பர் பசி தீர்ந்தது.
5. ஒரு வாழைத் தோட்டத்தில் வள்ளலார் தலையில் பாம்பு தீண்டியது; பாம்பே இறந்தது.
6. கடலூரில் வள்ளலார் சொற்பொழிவு நடந்தது; இராதாகிருஷ்ண பிள்ளை அதைக் கேட்டு இரவில் காட்டு வழியே ஊருக்குத் திரும்பினார்; இருளில் அச்சம் நடுக்கியது; காட்டில் தீப்பந்தம் தெரிந்தது; வெளிச்சம் கண்ட தும் அச்சப் பேய் விலகியது. இப்படிப் பலருக்கு அருள் ஒளி துலங்கியதுண்டு. வள்ளலார் சித்தர் சிலரையும் காண்பதுண்டு.
7. வேம்பையர் வள்ளலார் போலத் தாமும் ரசவாதம் செய்தார்; கண் அவிந்தது; என்ன வைத்தியம் செய்தும் பலிக்கவில்லை; வள்ளற்பெருமான் தண்ணீர் தடவிக் கண்களைத் திறந்து கருணை காட்டினார். இன்னொரு ரசவாதப் பித்தருக்கு மணலைப் பொன்னாக்கிக் காட்டினார்; அவர் மனையின் சங்க தோஷத்தை மாற்றினார்.
8. சிரஸ்தார் இராமச்சந்திர முதலியாருடன் வள்ளலார் மாட்டு வண்டியில் மஞ்சக்குப்பம் சென்றார். வழியில் திருடர் மறித்தனர்; முதலியார் கடுக்கனைப் பறித்தனர். ஐயாவையும் அடிக்கக் கை ஓங்கினர். ஐயா “அவசரமோ என்று திருவருள் துணையை நினைத்தார்; திருடா கை அப்படியே நின்றது: கண் பார்வை யிழந்தது. திருடர் வருந்திக் கெஞ்சி வணங்கினர். “பிச்” என்றார் ஐயா. கைபெற்று கண்பெற்று மதி பெற்று கதி பெற்றுச் சென்றனர் திருடர்.
9. குறிஞ்சிப் பாடி அன்பரை ஒரு புதர் அரவம் கடிக்கச் சீறியது “இராமலிங்கம் துணை” என்றார்; அரவு அப்படியே வாய்திறந்து நின்றது; உணவுண்ணவும் அதனால் முடியவில்லை. ஐயா அருளால் ஆணை விடுதலையானது; பாம்பும் பிழைத்தது.
10. ஒரு நாள் நடராஜ தரிசனத்தைச் சிதம்பரத்தில் உள்ளபடியே தருமசாலையிற் காட்டினார். எத்தனையோ அன்பருக்குக் குட்டம் குன்மம் போன்ற நோய்களைத் தீர்த்தார்.
11. வேட்டவலம் ஜமீந்தாருக்கு இருமனைவிகள். ஒருத்திக்கு மகோதரம்; மற்றொருத்தி பிரமமராக்ஷசு பிடித்தவள், குறி கோடாங்கி, பலி படையல்; மந்திரம்,தந்திரம், மருந்துக ளெல்லாம் பலிக்கவில்லை. முடிவில் ஜமீந்தார் அருட் பெருமானை வேண்டி வணக்கமுடன் வரவேற்றார். ஐயா வாயிலில் வந்ததுமே பிரம்ம ராக்ஷஸு “போகிறேன் போகிறேன்” என்று அலறி ஓடியது; ஐயா நீறு தந்தார் ; அந்தப் பெண் வணங்கினாள்; குணமானாள். அரண்மனைக்குள் சென்றார் ஐயா; அங்கே இரண்டு நாற்காலிகள் இருந்தன; ஜமீந்தார் நினைத்த நாற்காலியில் அமர்ந்தார் ஐயா. மரியாதையும் வணக்கமும் மிகுந்தன. ஐயா திருநீறளித்தார். மூன்று வேளையிற் குணமானது, ஜமீந்தார் அருட்பெருமானை நன்றியுடன் வணங்கிச் சரண்புகுந்தார். ஐயா கட்டளைப் படியே சிறுதெய்வங்களுக்கு உயிர்ப்பலி தருவதை நிறுத்தினார். தேள் பாம்புகளைக் கூடப் பிடித்து ஊருக்கப்பால் எடுத்து விட்டார். இவரே அருட்பெருமான் திருப்பணிகளுக்கு எண்பது காணி நிலம் உதவினார். புதுப்பேட்டை உவர்க் கிணற்றை நன்னீராக்கினார்; தீப்பற்றிய வீட்டை ஆடையால் அணைத்தார்; நோய் தீர்த்தார், பேய் தீர்த்தார், தங்கம் செய்தார், குளிகை செய்தார் என்று எத்தனையோ வியன் செயல்கள் வள்ளலார் பெயரால் வழங்குகின்றன.
அருட்பெருந் தந்தையான நடராஜ சிவனருள் பொலியும் மகானுக்கு அருளவாக்கும் அருட்செயலும் மூச்சுப்போல் இயல்பாயின. ஞானசம்பந்தர் ஏசுநாதர் போல் அவரும் சித்தாற்றினார். வள்ளலார் தற்போதமும் தற்பெருமையும் முற்றிலுந் துறந்து சிற்போதத்தில் ஊன்றி இறைவன் அருட்பெருமையை விளக்கவே வாழ்ந்தார். “சாமி, குரு” என்று யாரும் தம்மை வணங்கவிடார்; அவரை ”ஐயா’ என்றே அன்பர் அழைத்தனர் ஐயா தமது கையினால் விபூதி தந்ததில்லை; அருகிலிருந்த அன்பரை எடுத்துத் தரச் சொன்னார். உபதே சமும் செய்ததில்லை; தம்முள் அவன் பொழியும் அருள முதை உலகம் அள்ளிப் பருகட்டும் அதனால் உய்யட்டும் என்றே அடக்கமாயிருந்தார். சன்மார்க்க சங்கத்திலும் இறைவனே தலைவன். தாம் மற்றோரைப் போல் ஒரு தொண்டன் எனக் கருதினார். தங்கமேயனையார் கூடிய சுத்த சன்மார்க்கக் கோயிலில் அன்பருடன் அருட்சோதியப்பனைப் பாடியாடி அகங்குளிரவே ஆர்வமுற்றார். தந்தையைக் கண்டு சாகாவரம் பெற்றுச் சிந்தைகுளிர்ந்து உலகின் இடர் தளர்க்கும் சித்தி பெற்றதெல்லாம் தம்மையாளுடைய இறைவனருளே என்பதை ஐயா உணர்ந்துரைத்தார்.
வள்ளலார் எத்தனைச் சித்துக்கள் செய்திருந்தாலும் உடலுடன் மறைந்தாலும் வந்தாலும் வியப்பன்று. அவர் செய்த ஓர் அற்புதச் சித்து என்றும் உள்ளது அதுவே அவருக்குப் பொன்றாப் புகழும் சாகா உயிரும் அளித்தது. அது தான் திருவருட்பா.



