அருட்பெருமான்
சுத்தானந்த பாரதியார்

22. அருட்பா வெளியானது

ஐயா கருங்குழியிலே வாழ்வுக் கற்பகத்தை நாட்டினார். அது பாமலர் குலுங்கி அருள் மணம் பரப்பிச் செழித்தது. அடிக்கடி தில்லை சென்று நடராஜப்பெருமானுக்குப் பாமாலை சூட்டிவந்தார் வள்ளலார். திருத்தணி முருகனையும் ஒற்றித் தியாகனையும் பாடிச் சென்னையை நீத்த வள்ளலார் ஆயு ளெல்லாம் அருட்ஜோதி நடராஜனையே பாடினார் அப்பாடல் களின் அருட்பெருமையும் பொருட்சுவையும் சொல்லினிமை யும் அன்பர் உள்ளத்தை உருக்கின. அன்பர் அவற்றைத் தொகுத்து அச்சிட விரும்பினர்; அடக்கமே அணிகலமான அருட்பெருமான் சம்மதிக்கவில்லை. வேலாயுத முதலியார் பாடல்களைப் பார்வையிட்டுத் திருமுறைகளாக வகுத்துச் செப்பனிட்டு அச்சிட்டார்; புதுவை வேலு சிவானந்தபுரம் செல்வராயர் இருக்கம் இரத்தினம் முதலியோரும் இப்பணி யில் ஈடுபட்டனர். முதல் நான்கு திருமுறைகள் ஒரே நூலாக வெளிவந்தன “திருவருட்பிரகாச வள்ளலார் பாடிய திருவருட்பா” வெளிவந்தது; படித்தோர் கேட்டோர் பார்த்தோர் அனைவரும் வள்ளற் பெருமான் வாக்கை வியந்து போற்றினர். ஆனால் வள்ளலார் இன்னும் பணிவையே காட்டினார்.

“ஏன் காணும் திருவருட் பிரகாச வள்ளலார் என்று உம்மை யார் போடச்சொன்னது?” என்று வேலாயுதத்தை வினாவினார். காலாயுதமான அருட்பாவை வெளியிட்ட வேலாயுதப் புலவர் திகைத்தார். பிறகு “திருவருட் பிரகாச வள்ளல் யார் (பரமசிவன் யார்) என்னும் சிதம்பரம் இராமலிங்கம் ” என்று வள்ளலார் சமாதானம் சொன்னார். அருட்சுவையறிந்தோர் அருட்பாவைப் போற்றினர். பொது ஜனங்களிடையே அது விரைவாகப் பரவியது. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை, வேதநாயகம்பிள்ளை, எனது தமிழாசிரியர் தெய்வசிகாமணிப் புலவர் முதலிய பெரியார் அருட்பாவைப் போற்றினர். ஆனால் சில பழந் தமிழ்ப் புலவர் புதிய அருள் வாக்கைத் தூற்றிக் கிளர்ச்சி செய்தனர். அவர்கள் குரல் இன்று அடங்கிப்போனது; அருட்பாவின் குரல் உள்ளந்தோறும் ஒலிக்கிறது. தம்மை உணர்ந்தோர் பாட்டெல்லாம் அருட்பா; மற்றைப் பாடல் மருட்பா; திருமுறைகளை வகுத்த நம்பியாண்டார் நம்பி அவற்றிற்கு அருட்பா என்று பெயரிடவில்லை. சமயாசாரியர் அருளியதைத் தேவாரம், திருவாசகம், திருநெறித் தமிழ், தமிழ் வேதம், திருப்பாட்டு என்றும், ஒன்பது நாயன்மார் இயற்றியதைத் திருவிசைப்பா என்றும் அருண்மொழிப்புலவர் வாக்கைப் பெரிய புராணம், திருத்தொண்டர் புராணம் என்றும் வழங்கல் மரபு” இவ்வாறு சமாதானம் சொல்லி வள்ளலார் தம் உன்னதமான அருள் நிலையிலேயே அடங்கியிருந்தார், அவர் மறைந்த பிறகும் அருட்பாவைச் சுற்றிப் புயலும் இடியும், வசையும் வம்பும் வளர்ந்தன. இவை காலத் தின் சோதனை.

வால்ட் விட்மனின் ஞானப் பாடல்களைச் சாக்கடைச் சரக்கென்று பழித்த உலகம், இன்று அவனுக்குத் திருவிழாக் கொண்டாடுகிறது. உலகம் அருட்பா வழியிற் செல்லுகிறது. சுத்த சன்மார்க்க யுகம் ஆன்மநேய வுரிமையுடன் தோன்றுகிறது! வருந்தருணப் பாடல்கள் நிறைவேறுங் காலம் வந்துவிட்டது!

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *