அருட்பெருமான்
சுத்தானந்த பாரதியார்

2. இல்லறச் செல்வர்

இராமைப்பிள்ளை மருதூர் கணக்குப் பிள்ளை. சிவனையும் தமிழையும் மறவாத சைவத் திருவாளர்; நல்லறம் போற்றும் இல்லறச்செல்வர். கருணீகக் குலமணி; கணக்கு எழுதுவது, தமிழ் பயிற்றுவது-இரண்டும் அவர் தொழில். அதில் வருவதைக் கொண்டே அவர் எளிய வாழ்வு வாழ்ந்தார். அவர் ஐந்து மனைவியரை இழந்து ஆறாவதாகச் சின்னம்மையை மணந்தார். சின்னம்மை கடவுள், கணவன், கற்பொழுக்கம், சிவனடியார் – இந்நான்கிடமும் அன்பு கொண்டவள். நாணுடுத்த குணமணி, உயிரிரக்கம் மிக்கவள்: இவ்விருவரும் காத்த மங்கல மனைக்கு நன்கலமாக நான்கு மக்கள் தோன்றினர் – சபாபதி, பரசுராமன், சுந்தரம்மாள், உண்ணாமுலை.

ஒரு நண்பகல் இந்த வீட்டிற்கு ஒரு சிவமுனிவர் எழுந் தருளினார். பழுத்தவுள்ளம், பஞ்சாட்சர நாக்கு, மாசற்ற சிந்தை, தேசுற்ற திருமுகங்கொண்ட பெரியார் அவர். அம் முனிவரைச் சின்னம்மையார் வணங்கி ஏற்று உபசரித்து அறுசுவை யுண்டியளித்து உபசரித்தார்.”புண்ணியவர வால் எமது சிறுகுடில் புனித முற்றது” என்று புகழ் கூறினாள். சிவமுனிவர் உள மகிழ்ந்து, திருநீறளித்து, ஆசி கூறினார்; ‘அமுதசுரபியே, அடியார் வணக்கமும், அரனடி நேயமும் மிக்க அன்பு மணியே இத்திருநீற்றை உட்கொள்; உனக்கொரு கடவுட் புதல்வன் பிறப்பான்; அவனை இராமலிங்கம் என்றழை. அவன் சுத்த சன்மார்க்கத் தந்தையாவான்; சுத்த ஜோதி சித்தனாவான், உலகெங்கும் கருணை நிலவச் சித்தாடல் புரிவான்’. இவ்வாறு வாழ்த்தி சிவயோகி மறைந்தார். இதைக் கேட்ட கணவர் மகிழ்ந்தார்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *