குசேலர் சரிதம்
சி. கணேசையர்

5. உடம்பின் இழிவு

சுசீலா! இன்னும் நான் சொல்வதைக் கேள். இவ்வுடம்பு நாம் செய்த வினையால் நமக்குக் கிடைத்தது. உயிர்களுக்குத் தனு கரண புவன போகங்கள் யாவும் வினைப்படி அமையும். இப் பிறவியை மாத்திரம், யாம் எடுத்துள்ளோ மல்லேம். முன்னும் பல பிறவிகளை எடுத்துள்ளேம். அப் பிறப்புக்களி னெல்லாம் எம்மோடு பிள்ளை முறை பாராட்டினவர்கள் எத்தனை பேர். இன் னும் எத்தனை பிறவி எடுப்பேம். அப்பொழுதெல்லாம் எத்தனை பேர் பிள்ளை முறை பாராட்டுவர். அத்தன்மை யான பிள்ளைகளை நம் பிள்ளைகள் என்றல் எவ்வளவு அறியாமை. இதுவரையில் எம்மைப்பெற்ற தந்தை தாயரும் அளவிறந்தோர். நாம் பிறந்த ஊரும் அநந்தம். யாம் பெற்ற பேரும் அநந்தம். செயலும் அநந்தம். உறவும் அநந்தம். பிள்ளைகளும் அநந்தம். இப்படியே இன்னும் யாம் பெறுவதும் அநந்தமாகும். அங்கங்கெல்லாம் எம்மைக் காத்தவரும் காப்பவரும் திருமாலே. ஆதலால் இவர்களை எம் மைந்தர் என்பதும், இவர்களை யாம் காப்பாற்றுவேம் என்பதும் அறியாமையே இவர்களைக் காப்பாற்றுபவன் யானல்லன், திருமாலே.

இன்னும் இந்தத் தேகம் குடரும் இரத்தமும் என்பும் கொழுப்பும் வழுவழுப்பும் தோலும் நரம்பும் முதலியவற்றாலாகியது. மல மூத்திர பாண்டம். புழுக் கூடு. பிணிக்கு உறையுள். நாற்றத்துக்கு இருப்பிடம். உயிர் நீங்கினால் இந்த உடலை நாய்கள் நமக்கென்னும், நரிகள் நமக்கென்னும். பேய்கள் நமக்கென்னும். கழுகுகள் நமக்கென்னும். ஆகையால் இது புலாலேயன்றி உடம் பன்று. இத்தன்மையான இவ்வுடலின் இழிவை அறியாமல் இதனையே யாமென்று மதித்து, இதற்கு அணியணிந்து மகிழ்வார் எத்தனை பேர். பொன்னாடை அணிந்து மகிழ்வார் எத்தனை பேர். பால் பருப்பு நெய் முதலிய சுவையான உணவுகளைத் தேடி, பகல் இரவாக ஊட்டி வளர்ப்பவர் எத்தனை பேர். இது கிடத்தற்குக் கட்டில் தேடுபவர் எத்தனை பேர். பஞ்சணை தேடுபவர் எத்தனை பேர். இவ்வாறு இதற்குச் சுகம் செய்பவர் போலத் தாம் துக்கமே படுகின்றார். இதற்குச் சுகம் செய்யும்படி பனி மழை வெய்யில் என்று பாராமல், பொருள் தேடும்படி இராப் பகலாய்த் தாம் உழன்று வருந்துவதைத் தானும் இம்மியளவாயினும் இவர்கள் சிந்திப்பதில்லை. உருசிகரமான உணவை உண்பதற்கு ஒருநாள் முழுதும் உலைகின் றார்கள். உண்ணுகின்ற நாக்கில் ஒரு நோய் வந்தால் உருசி அறிவது எப்படி என்பதைச் சற்றே இவர்கள் சிந்திப்பார்களாயின், இவர்களுக்கு இவ்வளவு துயர் வருமா? இவ்வுடம்பில் ஒரு புண்ணுண்டாகி நாற்றம் எழுமானால், இதனை உச்சி மோந்து மார்போடணைத்து எடுத்து வளர்த்த தாயும் விரும்பாள்; கட்டியணைத்து முத்தமிட்ட மனைவியும் சீச்சீ நாறுகின்றது என்று, கிட்ட நில்லாது கைவிட்டு ஓடுவாள். இத்தன்மையான உடலை, மானம் நீங்கி வீட்டின் வாயில்கள் தோறும் சென்று நின்று இரந்து பருக்கச் செய்தாலும் அது நிலைக்கமாட்டாது. நீர்க்குமிழிபோலும் நிலையற்றதாகிய இவ்வுடம்பை ஒரு பொருளாக நினைத்துப் பரிந்து பாது காத்து மகிழ்தல், பன்றிகள் மலத்தை யுண்டு தம் உடம் பைப் பாதுகாத்துச் சுகமுற்றேம் என்று எண்ணுதல் போலும். ஆதலால், யான் இரக்கப் போகேன் என்று கூறிமுடித்தனர். அதைக்கேட்ட சுசீலை கூறுகின்றாள் :

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *