
குசேலர் சரிதம்
சி. கணேசையர்
9. தோணியேறித் துவாரகை சேறல்
மேல்கடலின் கரையை அடைந்த குசேலர், அக் கடலின் வளங்களை எல்லாம் நோக்கி, அதிசயித்து நின்று, பின் தன் மெய் குளிரும்படி நீர்த்துளிகள் துளிப்பவும், மென்கால் வருடவும் ஒரு புன்னைமர நிழலில் இருந்து இளைப்பாறினார். அப்பொழுது யான் இக்கடலை எப்படிக் கடப்பேன்? தோணிக்காரனுக்குக் கொடுக்க இம்மியளவு பொன்னும் என்னிடம் இல்லை. பொன் இல்லையேனும் அவன் மதித்து ஏற்றுதற்கேற்ற சிறப்புத்தானும் என்னிடம் இருக்கின்றதா? அதுவுமில்லை. இனி யான் கண்ணன் சேவைக்குச் செல்கின்றேன் என்று உண்மை கூறினும், என் கோலம் நோக்கி, அதனையும் கொள்ளான். இதற்கு என் செய்வேன். என்று சிந்தித்து, வருந்திப், பின் தோணிக் காரனுக்கு முகமன் கூறி, இரந்தாயினும் எறுவேனென்று துணிந்து புன்னைமர நீழலினின்றும் எழுந்து மீகாமனிடம் சென்றார். சென்று மனம் இரங்குவதற்கு ஏற்ற பல வார்த்தைகளையும் கூறி, அவனை உடன்படுத்தித் தோணி யில் ஏறினார். மீகாமனுந் தோணியைத் துவாரகை நோக்கிச் செலுத்தினான். தோணியுந் துவாரகைக் கரையை அடைந்தது. குசேலரும் கண்ணன் கழலிணையைக் கருத்தில் உன்னிக்கொண்டு, இறங்குவாரோடு தாமும் தோணியை விட்டு இறங்கினார். இறங்கிக் கண்ணன் வாழும் துவாரகையைக் கண்டார்.



