
குசேலர் சரிதம்
சி. கணேசையர்
17. முனிவர் தன் இல்லடைதல்
அப்பொழுது அவர் இருந்த சிற்றூரும் பெரு நகரமாயிற்று. ஊரிலுள்ளார் யாவரும் அட்டமங்கலங்களோடும் மங்கள வாத்தியங்களோடும் கையுறை ஏந்தி இவரை எதிர்கொள்ள வந்தார்கள். வந்தவர்கள் முனிவர் வடிவைக் கண்டு மகிழ்ந்து, கண்ணன் கழலடி பூண்டார்க்குப் பெறர்க்கரியது யாது என வியந்து அவர் பாதங்களை வணங்கி, சிவிகையிலேற்றி அவர் மாளிகை நோக்கிச் சுமந்து செல்வாராயினர். அப்பொழுது பல வாத்தியங்களும் ஒலித்தன. குடை நிழற்றின. சாமரைகள் இரட்டின. முனிவர்களுடைய ஆசி யொலியும் அந்தணர்தம் வேத ஒலியும் எழுந்தன. படைஞரோடு அரசர்களும் சூழ்ந்தனர். ஆயிரநாம முள்ளாற்கு அன்பராகிய முனிவரும் வீதிவழிச் சென்று, தன் மாளிகை வாயிலை அடைந்தார். அடைந்து. பண்டைச் சிற்றில் பசும்பொன் மாளிகையாயிருப்பதை நோக்கிக், கண்ணன் திருவருளையும் நோக்கினர். நோக்கி அதிசயமுற்று நின்ற னர். அப்பொழுது கண்ணன் அருளால் பண்டைமெலிவு நீங்கி, இளமைபெற்ற கன்னியாகிய சுசீலையும் பட்டாடை உடுத்துப் பல கலன் புனைந்து, தன் நாயகனை எதிர் கொண்டு வணங்கினாள். வணங்கி, ஓர் ஆசனமிட்டு, அதிலே முனிவரை நிறுத்தி, மனமகிழ்ந்து ஏவன்மகளிர் நீர் வார்ப்பப் பாதம் விளக்கிப் பூசனை செய்து நீராஞ் சனம் எடுத்து வணங்கி நிற்ப; முனிவரும் மாளிகையி னுள்ளே புகுந்தார்.
உட்புகுந்த முனிவர், தம் மாளிகையின் ஓர் அறையிலே வெள்ளிக் குவியலும், ஓர் அறையிலே மாணிக்கக் குவியலும், ஓர் அறையிலே முத்துக் குவியலும் இருப்பதைக் கண்டார். ஓர் அறையிலே தம் புதல்வர்கள் அணிதற்குரிய அணிகலப் பேழைகளையுங் கண்டார். ஓர் அறையிலே கஞ்சிக்கும் வழியில்லாமல் இருந்த தம் மகார் பலவித உணவுகளையும் உண்டு வேண்டாம் வேண்டாம் என்று செருக்குவதையும், மரவுரி விளங்கிய அரையிற் பட்டாடை விளங்க, நெற்றியில் வைரச்சுட்டி விளங்க, மார்பில் மதாணி அசைய, கையிற் கடகமும், காதிற் குழையும் ஒளிர, அரையிற் பொன்னாண் அவிர, அடி யிற் சிறு சிலம்பொலிப்ப விளங்குவதையுங் கண்டார். அட்டிலில் அரிசிக் குவியலும், உப்பு முதலியனவும், பருப்பு முதலியனவும், பலவகைக் கலங்களும் பொலி வதையுங் கண்டார்.
இங்ஙனம் முனிவர் கண்டு நிற்குஞ் சமயத்தில், அவர் மனைவியாகிய சுசீலை, அவர் முன் விரைய வந்து எண்ணெய் தேய்த்து நீராடுக என்று சொல்ல, முனிவரும் அங்ஙனமே செய்து தன் நித்தியகருமங்களை முடித்துக் கொண்டு, போசனசாலையை அடைந்தனர். அப்பொழுது அங்கே சுசீலை தலைவாழையிலைகளைப் பரப்பி, நீர் தெளித்து, அவைகளில், அன்னமும் அறுசுவைக் கறிகளும் படைத்துப் பருப்பிட்டு, நெய்யிட்டு, உபசரிப்ப, குசேலமுனிவர், அந் தணர் கூட்டத்தோடும் உண்டார். உண்டபின் கையும் வாயும் பூசி, தாம்பூலம் கொடுத்து, அந்தணரைப் போக விடுத்தார். தம்முடன் வந்த அரசர் முதலியோர்க்கும் விருந்திட்டனுப்பினார். பின் முனிவர், மனைவி மக்களோடும் மகிழ்ந்திருந்தார்.
இவ்வாறு, இல்லற மியற்றி இன்ப நுகர்ந்திருந்த முனிவர், சிலகாலம் கழிந்தபின், ஒருநாள் ஓர் அறையுட் புகுந்து, மனைவியும் மக்களும் புகாதபடி தாளிட்டுக் கொண்டு தனியே இருந்து சிந்திக்கலாயினர்.
ஒருதினத்தினி லுவளக வரைப்பினை யுற்றுக்
கருது மக்களு மனைவியு முருவகை கழிப்பி
யிருக வாடத்தை நூக்குபு தாழக்கோ லிறுக்கி
மருவொ ருத்தனா யிருந்தன னின்னன வலிப்பான்.



