
குசேலர் சரிதம்
சி. கணேசையர்
12. வாயிலாளர் முனிவன் பெருமை கூறல்
மதியிலிகாள்! நீவிர், இத் தபோதனரை யாரென்று நினைத்தீர்கள். இவர் பொய்ம்மையில்லார். பொறுமையுடை யவர். அடக்கமுடையவர். பல விரதங் காத்தவர். மறை நான்கும் மற்றும் ஓதினவர். கண்ணன் பாலன்றிப் பிறர் பாற் செல்லார். இவர் அழுக்கற்ற மெய்ஞ்ஞானியாவர். மெய்ஞ்ஞானிகளாவார். பொறிவழிப்போகார். மனத்தை ஒருவழிப்படுத்தி மெய்ப்பொருளையே என்றுஞ் சிந்தித் திருப்பர். மற்று எப்பொருளையும் விரும்பார். ஓட்டையும் செம்பொன்னையும் ஒக்க நோக்குவார். அரசற்கும் அஞ் சார். இயமனுக்கும் அஞ்சார். பிரளயத்துக்கும் அஞ்சார். அவர்க்கு எந்நாளும் இன்பமேயன்றித் துன்பமில்லை. அவர்க்குத் தம்மைப் புகழ்வதில் விருப்பும் இகழ்வதில் வெறுப்புமில்லை. அவர் வேர்த்தாற் குளிப்பர். பசித்தாற் புசிப்பர். துயில் வந்தாற் றுயில்வர். ஒன்றையும் நாளைக்கு வேண்டுமென விரும்பார். அட்டசித்திகளை விரும்பார். ஆடுவார் ; பாடுவார் ; சிரிப்பார்; பித்தர் போல் திரிவார். இன்றிருந்தவிடத்தில் நாளையிரார். கந்தையன்றி யுடார். அம் மெய்ஞ்ஞானிகளின் பெருமையை மதிப்பவர் யாவர்? எடுத்துச் சொல்ல வல்லவர் யாவர்? ஆயிரங்கவை நாவுடைய அரவத்தானும் முடியாது.
ஆடுவா ருன்மத்தர் போற்றிரிவார்
நகைத்திடுவா ரங்கை கொட்டிப்
பாடுவா ரின்றிருந்த வீடநாளை
யிருக்கமனம் பற்றார் சுற்றிக் கூடுவார்
தமிற்கூடார் கந்தையன்றி
வேறுடுக்கை கொள்ளா ரன்னார்
நீடுவார் புகழ்ப்பெருமை யிற்றென்று
மதிப்பவரார் நிகழ்த்து வாரார்.
இனிப் பொய்ஞ்ஞானிகளி னியல்பையுஞ் சொல் வேம்: கேளுங்கள். பொய்ஞ்ஞானிகளாவார், தலையை முண்டிதஞ் செய்து கொள்வர். சிலர் சடை முடித்துக் கொள்வர். காவி வஸ்திரங்கொண்டு உடம்பை மூடிக் கொள்வர். சிலர் தாம் பிரம மென்பர். மெய்ஞ்ஞானிகளைப் போலப் பேசுவர். சற்கருமங்களைத் தாமுஞ் செய்யார். செய்வாரையும் அடையார். சைவ வைணவக் குறிகளைப் புனைந்துங்கொள்வர். சிலர் பொய்வேடம் பூண்டு, வாய் ஞானம் பேசி, அறியாமையுள்ள சனங்களை வஞ்சித்து, அவர் கைப்பொருளைக் கவர்வர். இன்னுஞ் சிலர், காமமில்லாத சாதுக்களைப்போலத் தம்மைக் காண்பித்துப் பிறரில்லிற் புகுந்து தம்மை நம்பச்செய்து, சமயம் பார்த்து அவர் மனைவியரின் கற்பைக் கெடுப்பர். உண்மை ஞானி களோ இவ்வியல்பைப் பொருந்தார். இம்முனிவரும் இவ் வியல்பினரல்லர். மெய்ஞ்ஞானிகள் உலகத்தோடு சம்பந் தப்படினும் தாமரையிலையில் நீர் போலப் பற்றின்றி யிருப்பார்கள். இல்லாளோ டிருப்பினுஞ் சிறிதும் பற் றில்லாதவராவார்கள். அதனை அவர்கள் உடையானும் நடையாலும் அறிந்துகொள்ளலாம். மூன்றுலகத்தினும் ஒரு ஞானியே மேலானவன். ஆகையால் இம்முனிவர் இங்கு எழுந்தருளியது எம்மையாளுங் குறிப்பென்றே நினைக்கின்றேம். இவர் கற்ற காலத்திற் கண்ணபிரானோடு உடன் கற்றேனென்றதும் பொய்யன்று. இவர் நம்மரச னாகிய கண்ணபிரானைத் தரிசிக்க விரும்பி வந்தாரேயன்றி, வேறொரு விருப்பமு முடையராய் வந்தவரல்லர். முன் னாளிற் செய்த புண்ணிய விசேடமே இன்று யாம் இவ ரைத் தரிசிக்கப்பெற்றது. ஆ! ஆ! இவரைக் காணும் தோறும் உள்ளம் உருகுகின்றது. மெய்யிற் புளகம் உண்டாகின்றது. கண்களினின்றும் நீர் வருகின்றது.
நாத்துதிக்க எழுகின்றது என்றால் இவர் பெருமை எவ்வளவாம். இங்ஙனமாய் இத் தவராசர் வரவை நாம் தாமதியாது விரைந்து போய்த் தேவாதி தேவனுக்கு அறிவித் தல் வேண்டும் என்று இப்படி அவர் மேன்மையை அவ் வறிவிலிகள் உணரும் வண்ணம் எடுத்துரைத்துப் பின் அவர்கள் குசேலரை நோக்கிக் கூறுகின்றார்கள்.
என்றறி யாமையி னிகழ்ந்து கூறிய
வன் றிணி மனத்தினார் வாய டங்கிடக்
கன் றலி னுரைபல கரைந்து மாதவக்
குன்றனான் றிருமுக நோக்கிக் கூறுவார்.
வேதங்களை ஆய்ந்து, மெய்யொழுக்கம் வாய்ந்து, திருமால் சேவடி பற்றிப் பிறவிக் கடலைக் கடந்து வீடு பெற்ற முனிசிரேட்டரே! உமது வருகையால் மகிழ்ச்சி யுற்றோம். உமது கல்வி அறிவையும் தவச் செல்வத்தையும், மனத் தூய்மையையும் மயக்கமான இந்த உலகம் பகுத்தறிய வல்லதோ? இந்த அறிவீலிகள் கூறிய வார்த் தையைப் பொறுத் தருளல் வேண்டும். எந்தபோநிதியே! இமைப்பொழுது இவ்விடத்தில் நின்றருள்க. யாம் கண்ன பிரானை அடைந்து உமது வரவை அறிவித்து விரைந்து வருவேம், என்று அம்முனிவர் பாதங்களை வணங்கி அவ் விடத்தை விட்டு ஓடிச்சென்றார்கள்.



