
குசேலர் சரிதம்
சி. கணேசையர்
11. குசேலர் கண்ணனுக்குத் தன் வரவை அறிவிக்குமாறு வேண்டலும் வாயிலாளர் கூற்றும்
மக்களுள் சிரேட்டர்களே ! நீலவண்ணனாகிய திருமாலுக்கு அடியவர்களே! மிக்க புண்ணியத்தையுடையவர் களே ! தவத்தவர்களும் பிரமனும் பெறற்கரும் புகழைப் பெற்றவர்களே! எவ்வகைப்பட்ட சாத்திரங்களிலும் வல்லவர்களே! உங்களை ஆசீர்வதிக்கிறேன். அதனை ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களைப் பார்க்குந்தோறும் கண் ணனைப் பார்த்தாற்போல மகிழ்ச்சி உண்டாகின்றது. அங்ஙனம் உண்டாவது அவனுடைய சேவைகளைச் செய்து, நீங்கள் பரிசுத்தராய் விளங்குதலினால் அல்லவா? எளியேன் பிராமண குலத்தேன். என் பெயர் குசேலன். நான் இளமையிலே, திருமாலின் அவதாரமாய் விளங்கும் கண்ணபிரானோடு உடன் கற்றுள்ளேன். கடலை மீகாமனுடைய உதவி கொண்டு கரையேறுபவர்போல, சனங்கள் நெருங்கிய இவ்வாயிலையும், உங்கள் உதவியாற் கடந்து, கண்ணபிரானைக் காண நினைந்தேன். ஆகையால், கண்ண பிரானிடம் போய் என் வரவை அறிவித்து என்னை அங்கே சேர்த்தல் நுங்கடமை என்று குசேலர் சொன்னார்.
அப்பொழுது, அவ்வாயிலாளர்களுள்ளே அறிவிலார் சிலர், குசேலரை நோக்கிக் கூறுகின்றார்கள் : ஏ! ஏழைப் பார்ப்பானே! யாஞ் சொல்வதைக் கேள். உனக்கு வயது முதிர்ந்தும் அறிவு முதிரவில்லையே. கண்ணன் எங்கே! நீ எங்கே! இதனைப் பகுத்துப் பார்த்திலை போலும். உனக்குப் பகுத்தறிவு என்பது சிறிதும் இல்லையோ? கண்ணனுக்கும் உனக்கும் உள்ள ஏற்றத் தாழ்வை நோக்கின், ஞாயிற்றிற்கும் மின்மினிக்கும் உள்ள ஏற்றத் தாழ்வை ஒக்கும். அன்றியும் மேருவுக்கும் அணுவுக்கும் உள்ள ஏற்றத் தாழ்வையும் ஒக்கும். யானைக்கும் முயலுக்கும் உள்ள ஏற்றத் தாழ்வையும் ஒக்கும். அப்படிப் பட்ட நீ கண்ணன் திருவோலக்கத்தைக் காண்பேன் என்று எப்படி நினைத்து வந்தாய். கண்ணன் திருவோலக்கம் பெரிய முடிமன்னராலும் காண்டற்கரியது அன்றோ? ஏ! பார்ப்பானே! அரச சபைக்குச் செல்வோர், எப்படிப்பட்டவரா யிருக்கவேண்டும் என்று அறிந்திலை போலும். அதனையும் சொல்லுகின்றேம் கேள்.
பெருஞ் செல்வமுடையான் என்று உலகத்தாராற் பேசப்படுபவனாய் இருத்தல் வேண்டும். கையிற் கடகம் வேண்டும். காதிற் குண்டலங்கள் வேண்டும். கைவிரலிற் கணையாழி வேண்டும். மார்பிற் பதக்கம் வேண்டும். கழுத்தில் முத்துமாலை வேண்டும். அரையிற் பட்டு வேண் டும். செல்லுதற்குச் சிவிகை வேண்டும். பிடித்தற்குக் கவிகையும் வேண்டும். செழுஞ்சுடர் கொண்ட தீவர்த்தி யும் வேண்டும். ஏவியன செய்தற்கு ஏவலரும் வேண்டும். செலவு செய்தற்குத் திரவியமும் வேண்டும். அரசனுக்குக் கொடுக்க அழகிய கையுறையும் வேண்டும்.
பொருணனி யுளனென் றியாரும்
புகலுமோர் வார்த்தை வேண்டும்
இருகையுங் கடகம் வேண்டும்
இலங்குகுண் டலங்கள் வேண்டும்
வருவிர லாழி வேண்டும்
மார்பிடை மதாணி வேண்டும்
உருவமுத் தாரம் வேண்டும்
உயர்ந்தபட் டாடை வேண்டும்
சிவிகைமுன் னூர்தி வேண்டுஞ்
செழும்பொருட் செலவு வேண்டுங்
குவிகையே வலரும் வேண்டும்
கோலமார்ந் திருக்க வேண்டுங்
கவிகைதாங் குனரும் வேண்டும்
கையுறை சிறப்ப வேண்டும்
அவிகையில் விளக்கம் வேண்டு
மரசவை குறுகு வார்க்கே .
இப்படிச் செல்பவரையே அரச அவையிலுள்ளோர் மதித்து வருக என்பர். அல்லாரை மதியார். பிடர் பிடித்து உந்தச் செய்வர். அவனும் நானும் கலைபயிலு நாளில் நட்புடையன் என்கின்றாய். நேற்று உண்ட உணவு இன்ன வென்று இன்று நினைவில் வைத்திருப்பாரில்லை. அங்ஙனமாக, அந்நட்பைக் கண்ணன் இந்நாள் வரையும் நினைத்திருப்பானா? நினைத்திருப்பானாயிற் சென்ற இத்தனை ஆண்டுகளுள் ஒன்று இரண்டு முடங்கலாயினும் உனக்குப் போக்கியிருக்க மாட்டானா? அன்றி, ஒன்று இரண்டு தூதாகுதல் அனுப்பி உன்னை அழைத்திருக்க மாட்டானா? அங்ஙனமின்றாகவும், நீ முன்னாளில் நண்பை நினைந்து அவனைக் காணச்செல்வதால் யாதும் பயனின் றாம். அன்றியும், அந்த நாளில் உள்ள தகுதிக்கு ஏற்ப உன்னோடு நட்புக்கொண்டிருக்கலாம். இந்த நாளில் உள்ள தகுதியை நோக்கில், கண்ணபிரானை இந்திரனாலும் அடை தல் கூடாதாகும். அங்ஙனமாக, ஏழைப் பார்ப்பானாகிய நீ எங்ஙனம் அடைதல் கூடும்? அரசர்கள் எந்நாளிலும் யாவர்க்கும் நண்பரல்லர். முன்னாளில் நண்பை நினைந்து நீ இப்போது கண்ணனிடம் சமயம் நோக்காது செல்லின் அவமானம் வருதல் நிச்சயம். தன் வீட்டில் விளக்கு என்று விளக்கினொளியை முத்தமிட்டால், அது சுடாது விடுமா?
உன் குலத்தொழிலைச் செய்து துன்பமின்றி உண்டும் உடுத்தும் இராமல், பேராசைகொண்டு புறப்பட்டு வழிநடந்து இளைத்தாய்; சரீரமும் வாடினாய். உன் செயல் சந்திரனைப் பற்ற விரும்பிய மகவின் செயல்போன்றது. கண்ணனைச் சேவிக்க விரும்பி வந்து உள்ளே போக முடியாமல் இவ் வாயிலிற் காலம் பார்த்துக் காத்து நிற்கின்ற அரசர்களை நீ காணவில்லையா?
மாத்திருந் தளகை வேந்தும் வானர சளிக்கும் வேந்தும்
பாத்திருந் தியசீர் கேட்டுப் பரிவுறப் போகந் துய்க்கும்
ஏத்திருந் தியவில் வல்லான் சேவைக்கு வந்திவ் வாயில்
காத்திருக் கின்ற மன்னர்க் கண்டிலை போலு மாலோ.
பார் ; இந்திரனைப்போன்று இங்கே நிற்கின்ற அரசன் மகதநாட்டு அரசன். அங்கே யானையைப்போன்று குதிரைக்கு அருகே நிற்கின்ற அரசன் கொங்கண நாட்டு அரசன். உங்கே வாளைக் கையிற்றாங்கி நிற்கின்ற அரசன் கர்க்கசநாட்டு அரசன். அவனுக்கு அருகே மலைபோன்ற புயத்தில் வலயம் ஒலிசெய்ய நிற்கின்ற அரசன் அங்க நாட்டு அரசன். அவன் பக்கத்தே மன்மதனைப்போல வெண்குடை நிழற்ற நிற்கின்ற அரசன் காம்போச நாட்டு அரசன். அவன் சமீபத்தே வேலை வலக்கையிற்றங்கிச் சிங்கேறுபோல நிற்கின்ற அரசன் துளுவநாட்டு அரசன். அவன் பக்கத்தே வீரர் சூழக் கிரீடம் ஒளிவீச நிற்கின்ற அரசன் பல்லவநாட்டு அரசன். அவனுக்கு அணித்தாக வயிரக்குழையும் பதக்கமும் ஒளிவீச நிற்கின்றோன் கலிங்க நாட்டு அரசன். அவன் அருகே கையுறை ஏந்தி நிற்பவன் மழைவளங் குன்றாத காந்தாரதேசத்து அரசன். இந்த அரசர்களுள் நீ எந்த அரசனை ஒப்பாய். கண்ணன் சேவை எளிதிற் கிடைக்குமா? ஏ! பார்ப்பானே! இத்தலைவாயிலில் நிற்கின்ற அரசர்களுக்கெல்லாம் பெருநிதி உண்டு. அன்றியும் ஏவலாட்களும் உண்டு. ஆகையால் அவர்கள் எத்தனை நாட் காத்து நிற்பினும், அவர்களுக்கு வரும் குறைவு ஒன்றும் இல்லை, வறுமையாற் பொத் துண்ட உனக்கு இது தகாததாகும். நீ கண்ணனக் காண இச்சை வைத்தது, முடவன் கொப்பாந் தேனுக்கு இச்சை வைத்ததனோடு ஒக்கும். ஆகையால் நீ வந்தவழி மீள்வதே புத்தி என்று கூறினார்கள்.
இவற்றையெல்லாம் கேட்ட முனிவர், துக்கம் மிகுந்த மனத்தோடும் இவற்றைச் சிந்திப்பாராயினர். அந்தோ! அரச சபை செல்பவர்களுக்குப் பதக்கம் வேண்டுமாம். முத்தாரம் வேண்டுமாம். கடகம் வேண்டுமாம். கணையாழி வேண்டுமாம். பட்டு வேண்டுமாம். வாகனம் வேண்டுமாம். என் பாட்டன் நாளையிலும் இதனை யான் கேட்டதில்லை. இவற்றையெல்லாம் யான் இப்போது யாரிடம் பெறுவேன். என் செயல் நன்று நன்று. இயலாத காரியத்தில் முயலுதல் என்றுந் தீமையே. கண்ணனுக்குக் கொடுக்கும் படி கந்தையில் முடிந்து வைத்திருக்கும் கையுறையைக் கண்டால், அரச சபையிலுள்ளோர் எள்ளி நகையாடு வார்களன்றோ! என்று சிந்தித்து மனதிலே சோர்வு கொண்டு, அவ்விடத்திற் சிறிது நின்று வருந்தும்பொழுது அக் காவலருள் அறிவான் மிக்க சிலர், அவ்வறிவிலிகளை நோக்கிக் கழறிச் சில சொல்வார்களாயினர்.
கந்தையிற் பொதிந்த நந்தங் கையுறை கண்டா ராகில்
நந்தலி லிகழ்ச்சி பொங்க நகைப்பரே யெனவுட் சாம்பி
அந்தினின் றுயங்குங் காலவ் வடர்மட மையரை நோக்கிச்
சுந்தர வறிவின் மாண்ட துவாரபா லகர்சொல் வாரால்.



