
குசேலர் சரிதம்
சி. கணேசையர்
7. குசேலர் கண்ணன் பாலேக ஒருப்படல்
அப்பொழுது குசேலர் நிலையான கற்பினையுடைய தம் மனைவியின் வார்த்தையை மறுக்க முடியாதவராய், கண்ண பிரானைக் கண்டால் யான் கருதிய முத்தியும் விரைவிலடையும்; புதல்வர் காரணமாக வருந்தும் மனைவியின் எண்ணமும் முற்றும் என்று சிந்தித்துப், பின் சுசீலையின் முகம் நோக்கிச் சொல்வாராயினர். சுசீலா !
தெய்வம், குரு, அரசன் என்னும் இவர் முன் செல்வோர், அவர்களுடைய அருளை விரும்பித் தம்மால் இயன்றது ஒன்றைக் கொண்டுபோய்க் கொடுத்துக் காண்பது வழக்கம். ஆகையால் கண்ணபிரான் முன் செல்லும்போது யானும் கையுறை கொண்டுபோதல் வேண்டும். மிகுந்த வறுமையுள்ளோர் செல்வர்முன் போனால் மதிக்கமாட்டார்கள். குற்றஞ் சுமத்தி அவ மானஞ் செய்வார்கள். மானமுள்ளோர் அவ்வவமானத் தால் உயிர்விடவும் நினைப்பர். ஆகையால் செல்வர்பால் வறியார் போவது நன்றென்று நினையாதே. வறியாரைப் பூமியில் எவரும் இகழ்வர் என்று பெரியோர் கூறுவது உண்மை வறியாரை மனைவியும் வெறுப்பாள், தாய் தந்தையரும் வெறுப்பர், சுற்றமும் வெறுக்கும் என்றால் பிறர் வெறுப்பர் என்பது சொல்லவும் வேண்டுமா? இவ்வாறு இவன் சொல்வது என்னை என்று மனத்தில் எண்ணாதே. மனுஷர் தன்மை இது என்று சொன்னே னன்றிப் பரம்பொருளும் வேதத் தலைவருமாகிய கண்ண பிரான்பாற் போவது தகுதி அன்றென்று மறுத்தேன் அல்லேன். கண்ணபிரான் பாற் கையுறை இல்லாமல் யான் எப்படிப் போவேன். கடவுளுக்கு யான் மலைத் துணையாகக் கொடுக்கவேண்டியதில்லை. பெண்கள் சந்திரனுக்குத் தாம் உடுத்த வஸ்திரத்தில் ஓரிழையைப் பறித்து இட்டு வணங்கி, வேண்டியதைப் பெறுதல் போல, நானும் கண்ணபிரானாகிய கடவுளுக்குக் கொடுக்கும்படி யாதாயினும் ஒரு கையுறை கொண்டுபோதல் வேண்டுமென்றார்.
இப்படிச் சொல்லிய நாயகனுடைய வார்த்தையைக் கேட்டு மகிழ்ந்து சுசீலையானவள், அன்று முதல் தான் உண்ணாமல் இருந்துகொண்டு, நாயகன் அரிதாகத் தேடித் தரும் தானியத்தில் தனக்குரிய பாகத்தை வேறாக எடுத்துச் சேர்த்துவைத்து வந்தனள். பின் போதிய தானியஞ் சேர்ந்தவுடன், அவற்றை எடுத்து நீரில் நனைய வைத்து வறுத்துக் குற்றி, அவலாக்கி முனிவருடைய கந்தைத் துணி ஒன்றில் முடிந்து, முனிவர் முன்னிலையிற் கொண்டுபோய் வைத்து வணங்கி, என் அருமை நாயகரே! இனிக் கண்ணபிரான்பாற் போய் வருக என்றாள். முனிவரும் வழி விசாரித்துக் கண்ணபிரான் பாற் செல்வாராயினர்.



