
குசேலர் சரிதம்
சி. கணேசையர்
3. பசிக்கொடுமை
இப்படி வருநாளில், தமக்குத்தரும் உணவு போதாமை யால் பிள்ளைகளும் பசியால் வருத்தமுற்றன. அவள் ஒரு மகவுக்கு உணவு கொடுக்கும்போது ஒரு மகவு முந்திச்சென்று கைநீட்டும். மும்மகவும் கை நீட்டும் ; என் செய்வாள்? பாவம்! பசி வருத்தத்தால், ஒரு குழந்தை விம்மி விம்மி அழும். ஒரு குழந்தை நிலத்தில் விழுந்து புரண்டமும். ஒரு குழந்தை அந்தோ! என் வயிற்றில் எழுந்த பசி அடங்கவில்லை என்றழும். ஒரு குழந்தை அம்மா! நீ எனக்குக் கஞ்சி வார்க்கவில்லை என்று பொய் சொல்லி அழும். ஒன்று வாங்கிய கஞ்சியை மிக்க ஆசையோடு உண்ணப் புகும்போது, விடாது மற்றொன்று அதனைப் பற்றித் தானுண்ணும்படி எதிர் இழுக்கும். அப்பொழுது சிந்திக் கீழே ஒழுகுங் கஞ்சியை மற்றொன்று உண்ணப் புகும். இவ்வாறு பசிக்கொடுமையால் கலகம் விளைக்கும் மைந்தர்களை நோக்கி, இரங்கி, ஏங்கி, அவர் களைத் தன் கைகளால் தூக்கி மடிமீதிருத்தி, அவர்கள் கண்ணீரைத் துடைத்து முதுகு முதலியவற்றைத் தடவி முத்தமிட்டு ஆற்றுவாள்.
இங்ஙனம் தாயாற்றுதலால், அவர்கள் தம் அழுகை சிறிது தவிர்ந்து விளையாடச் செல்வார்கள். விளையாடும் போது, அடுத்த வீட்டுச் சிறுவன் உங்கள் வீட்டில் இன்றைக்குச் சமைத்த கறி என்ன என்று வினவினால் அத னைக் கேட்டு அவர்கள் ஓடிவந்து, அம்மா கறி என்றால் என்ன என்று வினவுவார்கள். அப்பொழுது தாயாகிய சுசீலை, அதனைக்குறித்து ஒன்றுஞ் சொல்லாமல், வேறு வார்த்தைகளை அவர்களுக்குக் கூறி அவ்வெண்ணத்தை மறப்பிப்பாள் வேறொரு வீட்டிலிருக்குஞ் சிறுவன் வைத்து உண்ணுஞ் சிற்றுண்டியைக் கண்டு, ஓடிவந்து அம்மா! இன்ன சிறுவன் கையில் வைத்து ஏதோ உண் ணுகின்றான். அதனை எனக்குச் செய்து தா, வாயூறுகின் றது என்று தன் உடையைப் பிடித்து இழுக்கும் சிறுவனை எடுத்துத் தன் மார்போடணைத்துச், சிந்தை நோவாள். தாயே! இன்னார் தம் பிள்ளைக்குக் குண்டலம், மோதிரம், காப்பு முதலியன செய்து இட்டிருக்கின்றார் கள். நீ எனக்கு அப்படி இடவில்லை. எனக்கு அவற் றைச் செய்து இடு என்று அழும் பிள்ளைக்கு, நாளைக்கு நாளைக்கு என்று சொல்லி மனஞ் சோர்வாள்.
சிறுவர்களுக்குச் சிதமணிப்பூணே பூண். மரவுரியே உடை. இலையே உண்கலம். முனிவர் வீட்டில் எறும்புகளுக்குத்தானும் உணவு கிடையாது. சிறுவர் அன்னப் பாலன்றி வேறு பாலைக் கண்டிருக்கவும் மாட்டார்கள். அவர்கள் ஒருபோதும் பசிதீரப் புசிப்பதில்லை. இந்நிலையைக் கண்டும் முனிவர் சிறிதும் மனங்கவன்றிலர். சுசீலை மாத்திரம் மைந்தர் நிலைகண்டு மனஞ் சிறிது கவன்றனள். செல்வமுடையாரும், தம் அன்புடைய ஒரே புதல்வனை அவன் விரும்பியவாறு நடத்த முடியாமல் இடர்ப் படுவாரே யென்றால், வறுமைக் கடலில் ஆழும் இவள் தன் பிள்ளைகளை அவர்கள் நினைத்தவாறு எப்படி நடத்து வாள். இவள் செயல் இருந்தபடி என்னே ! என்னே !! இவ்வாறு சகிக்க முடியாத வறுமைக் கடலுள் அமிழ்ந் தினாலும், இவள் தன்னாயகனாகிய குசேலரை வெறுத் துரையாள். அவர்மேல் பழிமொழிகள் கூறாள். மைந்தர் பால் மனஞ்சலியாள். மிகுந்த பொறுமையுடையவளாய் இருந்தாள். ஆயினும் கொடிய வறுமையைத் தாங்க முடியாமல் இதனை எவ்வாறு நீந்துதல் கூடும் எனத் தன் மனத்தில் ஆலோசித்தனள். அங்ஙனம் ஆலோசித்த சுசீலை, ஒருநாள் சமயம் அறிந்து மனந்துணிந்து தன்னாயகனை அடைந்து வணங்கித் தான் எண்ணியதைச் சொல்வாளாயினள்.
எனது பிராணநாயகரே! எம் புதல்வர்கள் பசிப் பிணியால் வருந்துகின்றனர். அவர்கள் இனி அதனைச் சகிக்க மாட்டார்கள். அவர்கள் படுந்துயரை நானும் சகிக்க மாட்டுகின்றிலேன். அவர்கள் பசிதீர உணவு கொடுப்பது நுங்கடனன்றோ. இப்பூமியில் வறுமையுற்றோர் பாவிகள், செல்வமுற்றோர் புண்ணியர்கள் அன்றோ? வறுமை ஒருவரைப் பற்றுமானால் அது அவர்கள் அழகை அழிக்கும். சரீரத்தை வாட்டும் ஊக்கத்தைக் கெடுக்கும். பேராசையை உண்டாக்கும். மானத்தை ஒழிக்கும். குடும்ப கலகத்தை விளைக்கும். பொய் களவு முதலிய தீமைகளைச் செய்விக்கும். முகமலர்ச்சியையும் மனமகிழ்ச்சியையும் அழிக்கும். பல எண்ணங்களைத் தோற்றுவிக்கும். என்றுந் துக்கத்தில் அமிழ்ந்தச் செய்யும். அறிவின் வளர்ச்சியைத் தடுக்கும். மதிப்பை ஒழிக்கும். ஆதலால் வறுமையிற் கொடியது பிறிதில்லை. அதுவே கொடிது கொடிது. என் அருமை நாயகரே! எமது வறுமைக் கடலைக் கடத்தற்கு ஒருவழி சொல்லுகின்றேன். கண்ண பிரானை உம்மோடு கூடக் கற்றவர் என்று சொல்லுகின் றார்கள். நீர் அவரிடம் சென்றால், அவர் உம்மைக் கண்டவுடனே வேண்டிய பொருள்களெல்லாம் தந்து தவுவார். சிறிதும் ஐயமின்று உண்மையான ஒரு நண்பனை ஒருவன் பெற்றுக்கொள்வது அவனுக்கு ஒரு பெருந் தனப்பொதி யைப் பெற்றுக் கொண்டதனோடு ஒக்குமென்று பெரியோர் கூறுவர். அஃதுண்மையே யன்றிப் பொய்யாகாது. ஆகை யால் அவரிடம் செல்லுதிர். ஒன்றுந் தாராராயினும், அவரைக் காண்டலும் ஒரு பெரும் டாக்கியமாம். முத்தியும் சித்திக்கும் என்றாள்.



