குசேலர் சரிதம்
சி. கணேசையர்

10. குசேலமுனிவர் துவாரகையை அடைதல்

கண்டபொழுதே கண்ணனைக் கண்டதுபோல மகிழ்ச்சியுற்றார். வழிவந்த வருத்தமுந் தீர்ந்தார். கண்ணன் பாற் கனநிதி பெற்றவரை ஒத்தார். அப்பொழுதே அவ்விடத்தில் நில்லாது தாவி விரைவாக நடக்கத் தொடங்கினார்.

இன்ன மாநகர் காண்டலு மேர்முகில்
அன்ன மேனியற் காண்டலொப் பாமகிழ்ந்
தின்ன றீர்தர வெட்டி விசைகொளீ இ
நன்னர் நெஞ்ச னடக்கத் தொடங்கினான்.

நடக்கும்போது தமக்கு எதிரே வருகின்ற அரசர்க ளுடைய குதிரைகளுக்கு விலகியும், யானைகளுக்கு விலகியும், பெண்களுக்கு விலகியும், தேர்களுக்கு விலகியும் சென்றார். செல்லும்போது வழிதப்பாது முன்னிடத்தை யும் பார்ப்பார். பிற்பக்கத்தே – எழும் ஒலிகேட்டு இஃ தென்ன ஒலி என்று பின்னிடத்தையும் பார்ப்பார்.

இப்படிப் பார்த்துச் செல்லுகின்ற முனிவர், யானைக் கூட்டங்களும், குதிரைப் பந்திகளும், வாட்போர் பயிலிடங்களும், தேர்க் கொட்டில்களும் மிகுந்திருக்கின்ற புடைநகரைக் கடந்து சென்றார். அப்பால், ஆடவர்களும், பெண்களும் சிவிறியும் பந்தும் முதலியன கொண்டு, நீர் விளையாட் டியற்றும் தடாகங்கள் நிறைந்ததும் பல வளங்கள் மிக்குள்ளதுமாகிய இடைநகரையுங் கடந்து அக நகருட் புக்க பின் முதல் வாயிலை அடைந்தார். அடைந்து, கண்ணனைக் காணச்செல்லும் அரசர்களுடைய படைகளாலும், கண்டு வரும் அரசர்களுடைய படைகளாலும் நெருக்கமுற்ற அவ்வாயிலின் வழியால் ஒருபுறமாக ஒதுங்கிக் கைகளை உயர்த்திக்கொண்டு வீதியிற் போனார். போய்த் தமக்கு எதிர்வரும் வீரர்களுக்கும், வண்டிகளுக்கும், யானைகளுக் கும், குதிரைகளுக்கும் விலகிச் சென்று பரத்தையர் வீதியை அடைந்தார். அதனையுங் கடந்து வேளாளர் வீதி, வணிகர் வீதி, பார்ப்பனர் வீதி என்னும் இவற்றையுங் கடந்து அரச வீதியை அடைந்தார். அடைந்து, அங்குள்ள சிறப்புக்களை நோக்கி நோக்கிச் சென்று கண்ணபிரா னுடைய கோயிலின் தலைவாயிலை அடைந்தார்.

ஐந்து துந் துபியின் முழக்கமு மன்ன
ரவிர்கழ லொலியும்வாம் பரியின்
நந்தலி லார்ப்புங் கந்தடு களிற்றி
னரலலுந் தேரர வமுஞ்சேர்ந்
தந்தினின் றெழுந்து விண் முக டுடைக்க
வளவில்பல் வளத்தவாய்ப் பொலியுஞ்
சந்தமார் கண்ண பிரான் றிருக் கோயிற்
றனித்தலை வாயிலைச் சார்ந்தான்.

அடைந்த குசேலர் தலைவாயிலின் சிறப்புக்களை நோக்கினார். நோக்கி மனந் திகைத்தார். அளவில்லாத அதிசயமடைந்தார். அங்கே நெருங்கி நிற்கும் சனங்களை நோக்கி இவ்வாறு சிந்திக்கலாயினார்.

இங்கே எள்ளிடுதற்கும் இடமின்றிச் சனங்கள் நெருங்கி நிற்கின்றனர். இச் சனநெருக்கம் ஒருபோதும் ஒழிகின்றிலது. யான் ஒரு கற்பகாலம் காத்திருந்தாலும் இந்நெருக்கம் குறையமாட்டாது. நான் உள்ளே போவது எப்படி? நான் வந்து பல நாழிகையாயிற்று. இனித் தாமதித்திருப்பதாற் பயனின்று. துணிந்து இந்நெருக்கிற் புகுவேன். வந்தது வருக என்று சிந்தித்து எழுந்து வாயிலை நோக்கிச் சென்றார். செல்லும்போது, உட்புகுமாறு வாயிலிற் புக்க ஒரு அரசனைக் கஞ்சுகிமாக்கள் பற்பலர் ஏந்திய வாளோடு துரப்பக்கண்டு அஞ்சித் தூரமான ஓரிடத்திற்கு ஓடிப்போனார். போன குசேலர் மீளவுந் துணிந்து ஒரு பக்கமாக மெல்ல மெல்லச் சென்றார். சென்ற இடம், வேற்றரசர் கொண்டு வந்து திறை குவிக்குமிட மாதலின், அங்கே வரக்கூடாதென்று காவலாளர் உறையினின்றும் கழற்றி வாளைக் காண்பித்து அச்சுறுத்தினார்கள். முனிவர் என் செய்வார்? பாவம்; நடுங்கி ஓட்டம் பிடித் தார். பின் தூரத்தில் நின்றுகொண்டு யான் இனிப் போவது எப்படி என்று சிந்திக்கும்பொழுது கண்ணன் திருவருள் வந்தது போல அரசன் ஒருவன் சேனை சூழ வந்ததைக் கண்டார். கண்டு சேனையுட் புகுந்து அதன் நெருக்காலாய வருத்தத்தை யெல்லாம் சகித்துக்கொண்டு மெல்ல அதனோடு கூடத் தாமுஞ் சென்றார். செல்லும் போது நெருக்கம் அதிகப்படலால், உடல் தேய்ந்தும், நெடுந்தூரம் கால் நிலத்திற்படாமல் தூக்குண்டு சென்றும், கைகளை உயர்த்தியபடியே சென்றும், கைகளால் இடிப்புண்டு சென்றும், கூனியபடியே சென்றும், மிக்க வெயர்வையில் அமிழ்ந்தியபடியே சென்றும், வாயிற் காவலாளர் நிற்கின்ற இடத்தை ஒருவாறு அடைந்தார். அடையும் போது, இது நமக்கு இரண்டாம் பிறவி என்று சிந்தித்துக் கொண்டே அடைந்தார். அடைந்து, அங்கே திருமாலின் அடியார் இவர் என்று சொல்லும்படி அவர்க்குரிய அடையாளங்களை எல்லாம் அழகுற அணிந்து நிற்கும் வாயிலாளரைக் கண்டு மகிழ்ந்து, வைதிக சிகாமணிகளாகிய இவர்க்கு ஒப்பவர், பரமபதத்தின் கீழ்வாயிலைக் காக்கின்ற செயவீரர்களே அன்றிப் பிறர் இலர் என்று சிந்தித்துக்கொண்டு அவர்களுக்குச் சமீபமாகச் சென்றார். முகத்திலே நீண்ட ரோமங்களை உடையவரும், எள்ளு முடிதற்கும் இடமில்லாமற் பற்பல துளைகளைக் கொண்ட தும் எவருஞ் சிரிக்கத்தக்கதுமாகிய கந்தையை உடையாகக் கொண்டவரும், மதிக்கப்படாத என்புந் தோலும் ஓட்டிய உடம்பை உடையவருமாகிய அக்குசேலர், வாயிற் காவலாளர் முன் சென்று, அவர்களை நோக்கி, மதிக்கப்படும் குணங்களை யுடையீர்; யான் சொல்வதைச் சிறிது கேட்டருள்வீரென்று சொல்லத் தொடங்கினார் :

முகத்திடை நீண்ட வுரோமமிக் கவனெண்
முடிதற்கு மிடமற யாரு
நகத்தகு பற்ப றுளையுடைக் கந்தை
நயந்து கொண் டவன்மதிப் பிலாமை
மிகத்தரும் யாக்கை யுடையவன் றுவார
மேவுமப் பாலர்முன் குறுகி
இகத்தலில் குணத்தீர் கேட்டருள் வீரென்
றியம்புறத் தொடங்கின னன்றே.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *