குசேலர் சரிதம்
சி. கணேசையர்

16. முனிவர் துவாரகைவிட்டுப் புறப்படல்

குசேலர் அன்றிரவு கண்ணன் உதவிய படுக்கையிலே துயின்று வைகறையிலே எழுந்து நித்திய கடன்களை முடித்துக்கொண்டு ஐம்புலன்களையும் அடக்கிய மகா ஞானியாதலால், அவனிடம் வாய்திறந்து ஒன்றுங் கேளா மல் தன் ஊர்க்குப் புறப்பட்டனர். கண்ணனும் வாயில் வரையிற் சென்று வழிவிடுத்து அன்போடு அடியில் வீழ்ந்து வணங்கி மீண்டான். கண்ணபிரான் ஒன்றுங் கொடாது முனிவரை வழிவிடுத்து மீண்டமையை நோக்கி, அந்தப்புர மாதர்கள் பலரும், தங்கள் மதி முகத்தைக் கவிழ்த்து நிற்பாரும், கீழ் உதட்டைக் கையாற் பிதுக்கி நிற்பாரும், தோழியரைக் கோபிப்பா ரும், திரும்பி நடப்பாருமாய் நம் அரசன் அந்தணனுக்கு ஒன்றுங் கொடுக்காமல், வாளா போ என்று விடுத் தானே என்று தம்முட் பேசுவாராயினர்.

மலர்வதனஞ் சாய்க்குநரு மணியதரம் பிதுக்குநருஞ்
சிலதியரைச் சினக்குநருந் திருமிநடப் பவருமாய்க்
குலவுமறை யவற்கொன்றுங் கொடுத்திலன் போ வென்றானென் றிலவவிதழ்ச் செய்யவா யியன்றன வெ லாமுரைப்பார்.

இவன் குசேலரைக் கண்டபொழுதே, தாயைக்கண்ட குழவிபோலப் பெரிதும் மன மகிழ்ந்தான் ; எதிர்கொண் டான் ; அடியில் வீழ்ந்து வணங்கினான் ; பட்டணிகளை அணிவித்தான்; என் நண்பன் என்று ஊரெல்லாம் அறிவித்தான் ; பின் ஒன்றுங் கொடாது அயலானைப்போலப் போகவிடுத்தான் ; இது நன்று! நன்று!! என்றனர் சில மகளிர். அரசர்கள் எல்லாம் வாயிலிற் காத்திருப்பப் பூசுரனை எதிர்கொண்டு கொண்டாடிப் பின் வாளா போகென்றான்; இவன் புகழுடையன் அன்றோ? என்றனர் சில மகளிர். பூசுரனைக் கண்டபொழுதே கட்டி யணைத்தான் ; தொழுதான் ; பள்ளியிலேற்றினான் ; புகழ்ந்தான் ; பின் வாளா போகென்றான் ; இது நன்று! என்றனர் சில மகளிர். அந்தணன் காடும் நாடும் கடந்து, கடலுந் தாண்டி, மிக்க அன்போடும் கண்ணனைக் காண வந்தது ஒருவேளைச் சோற்றுக்கா? தன் நிரப்பு நீக்கவன்றோ ? அங்ஙனமாக, அவனை வாளா போக விடுத்தானே! இனி இவன் புகழைப் பெரியோர் விரும்புவாரா? என்றனர் சில மகளிர். கண்ணன் என் நண்பன்; என் துயரம் தீர்ப்பான் என்று அந்தணன் வந்தான் ; இவன் கொண்டுவந்ததையும் வாரித் தின்று விட்டு வாளா விடுத்தானே? இவன் அருள் இருந்தபடி என்னை ! என்றனர் சில மகளிர். அந்தோ , அந்தணன் மனைவி, என் நாயகன் அரசன்பால் வேண்டுவன பெற்று வருவான் என்று வழி பார்த்து வாயிலிற் காத்திருப் பாளே! மைந்தரும் அப்படி இருப்பார் அல்லவா? கந்தையைக் கண்டவன் கனகந்தான் கொடுக்காவிட்டா லும், உடுக்க ஒரு துணியாதல் கொடுத்து விட்டானா? இவனும் ஒரு கொடையாளன் என்று சொல்லப்படு கின்றானே! என்றனர் சில மகளிர். எத்துணைச் செல்வம் மிகுந்தாலும், ஈத்துவக்கு மின்பம் இவன்பால் இல்லை ; அந்தணனும் இவன் நயமொழிகளால் மயங்கி, ஒன்றுங் கேளாது சென்றனன்; இவனும் மகிழ்ச்சியுடனே வழி விட்டுப் பெயர்ந்து வந்தான். இவர்கள் நண்பு இருந்த படி நன்று. இவ்வகை நண்பு இருந்தென்? இரா தொழிந்தாலென்? என் றனர் சில மகளிர். இவர்கள் எல்லாம் இங்ஙனம் இருப்ப, அவர்களுட் சிலர், முனிவன் என் நினைந்து வந்தனனோ! இவன் யாது நினைத்திருக் கின்றனனோ! கண்ணன் மாயையை உணரவல்லார் யாவர் ? வாயில் வந்தவைகளை எல்லாம் பேசன் முறை யன்றென் றனர்.

என்னினைத்து வந்தானோ வவனிவனும்
யாதுநினைத்
திருக்கின்றானோ
பன்னரிய விவன் செய்யு மாயையெவ
ராலறியப்
படும் வாய் வந்த
வின்னனவெ லாம் பேச லறிவன்று
நமக்கெனவண்
டிரங்குங் கூந்தன்
மின்னனைய நுண்ணிடைப்பே ரமர்க்கண்மட
மாதர்
சிலர் விளம்பி னாரே.

இவர்கள் இங்ஙனம் பேச, அப்பால் முனிவர் வாயிலைக் கடந்து, துவாரகைத் தெருக்கள் பலவற்றையுங் கடந்து, கருங்கடலையுங் கடந்து தன் ஊர்க்குச் செல்லும் வழியை அடைந்தார். அடைந்து செல்லும்போது கண்ணன் திருவருளினாலே, முனிவருக்குத் தவத்தால் இளைத்த தேகம் பூரிப்படைந்தது. பழங்கந்தை பட்டாடை ஆயிற்று. கழுத்திலணிந்த துளபமணி மாலையும் முத்துமணிமாலை ஆயிற்று. கைவிரலிற் பவித்திரமும் கணையாளியாய் விளங்கியது. தேக அழகும் மனித அழகிலுஞ் சிறந்தது. வழிநடந்த இளைப்பும் நீங்கியது. வெயிலுங் குளிர்ந்தது. தென்றலும் வீசியது. பாலை நிலமும் பசுநில மாயிற்று. மன்னர் மன்னர்க்குரிய பல சிறப்புகளும் தோன் றின. இவற்றை யெல்லாம் கண்ட முனிவரும் இவை யெல்லாம் எம்பெருமான் திருவருள் என்று நினைந்து அதிசயமுற்றனர். பின் அரசர் பலர் எதிர்கொள்ளவும் முனிவர்கள் வந்து தோத்திரஞ் செய்யவும் தம்மூர்ப்புறம் அடைந்தனர்.

அரச ரேமுத லாயினா ரனை வரு மடுத்துப்
பரசி யேவலர் போற்பிரி யார்பின்பு படரப்
புரசை மால்கரி பரிமுதற் படைகளும் பொலியத்
தரைசெய் பேறென விளங்கு தன் னூர்ப்புறஞ் சார்ந்தான்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *