குசேலர் சரிதம்
சி. கணேசையர்

2. இல்வாழ்க்கையும் வறுமையும்

இங்ஙனம் மாண்புற்று விளங்கிய குசேலர், தாம் செய்யுந் தவத்திற்கு உதவி செய்தற்பொருட்டும், புத்திரப் பேற்றின் பொருட்டும், சுசீலை என்னும் பெயருடைய ஒரு கன்னிகையை மணஞ் செய்தனர். அக் கன்னிகை குற்றமில்லாத குலத்துப் பிறந்தவள் ; தங்கண் வந்த விருந்தினரை அன்போடு உபசரித்து அன்னம் ஊட்டு பவள்; நாயகன் குறிப்பறிந்து ஒழுகுபவள் ; நாயகனையே தெய்வமாகக்கொண்டு வழிபடுபவள்; வருவாய்க்குத்தக வாழ்பவள்; பெற்றதையே பெரிதெனக்கொண்டு மகிழ் பவள். இத்தகைய சுசீலையோடு குசேலர் வாழ்ந்திருக் குங்கால் அவள் கர்ப்பமுற்றனள். அப்பொழுது மேனியி லுள்ள நரம்புகள் பசந்தன; கண்கள் குழிந்தன; முகம் வெளுத்தது. நாப் பலசுவைப் பொருள்களிலும் விருப்பங் கொண்டது. இவ்வாறாய கருப்பக் குறிகள் தோன்றப் பெற்ற சுசீல பத்துமா தமும் நிரம்பப்பெற்று ஒரு புத்திரனைப் பெற்றாள். இப்படியே ஒவ்வொரு மைந்தராக இருபத்தேழு மைந்தரைச் சுசீலை பெற்றாள். அப்பொழுது பல புத்திரர்களைப் பெற்றமையால் அவர்களுக்கு வறுமை மிக்கது. அதனால் முனிவர் மனஞ்சலித்திலர். வறுமை காரணமாக ஒருவரிடத்திலேபோய்ப் பற்களைத் தெரியக் காட்டித் தாம் படுந் துன்பங்களை யெல்லாம் சொல்லித் தமது இரு கரங்களையும் விரித்து நின்று, உடம்பு ஒடுங்க, மனம் நாண, அபிமானம் இன்றி, இரப்பதுபோல ஒருவர்க்கு இழிவு வேறு உண்டோ ? ஆதலால் யாம் இரக்கப் புகுவதில்லை என்று சிந்தித்தார். சிந்தித்த முனிவர், ஒவ் வொரு நாளும் காட்டிற்போய், அங்கே உதிர்ந்துகிடக்கும் புற்றானியங்களை யெல்லாம், நகங்களாற் கிள்ளிக் கிள்ளி எடுத்துச் சேர்த்துக் கொண்டுவந்து, தமது மனைவி கையிற் கொடுப்பார். அதனைச் சுசீலை குற்றிப் பாகஞ் செய்து இலைக் கறியோடு அதிதியர்க்கிட்டும் புதல்வர்க்கும் நாயகனுக்கும் கொடுத்தும், மிகுந்ததைத் தானுண்டும் வந்தாள். மிகுதியுணவு போதாமையால் சுசீலை உடல் மெலிவாளாயினாள். ஆயினும், அவள் முனிவர்பால் வெறுப்படைந்திலள். கற்புடை மகளிரியல்பு அதுவன்றோ ?

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *