
குசேலர் சரிதம்
சி. கணேசையர்
4. ஊழும் பொருளும்
சுசீலையின் வார்த்தையைக் கேட்ட முனிவர் அவளை நோக்கிச் சொல்லுகின்றனர். சுசீலா! யான் சொல்லுவ தைக் கேள் : உன் புதல்வர்க்கு உணவில்லையென்று வருந் தல் வேண்டாம். எல்லாவுயிர்களுக்கும் உணவு அளிப் பவர் கடவுள் ஒருவரே. கல்லுள் இருக்கும் தேரைக்கு உணவு அளிப்பவரும் அவரே. கருப்பைக்குள் இருக்கும் முட்டைக்கும் உணவு அளிப்பவரும் அவரே. ஆதலால் உன் புதல்வர்க்கும் உணவை அவரே அளிப்பர். நிறைந்த உணவும் குறைந்த உணவும் பெறுவது அவரவர் விதிவழி யேயாம். ஆதலால் உன் புதல்வர்க்கும் ஆயுளுள்ளவரை யும் விதியின் வழியே உணவு கிடைக்கும். இது உண்மை .
எது வந்தாலும் ஊழே என நினைத்திருத்தல் வேண்டும். உண்மை நூல்களைக் கற்றுணராதவர், பெரிய செல்வத்தை யாமடைந்தோம் என்றும், அழகிய மேல் மாளிகை கட்டினோமென்றும், பிள்ளைப்பாக்கியம் பெற்றோ மென்றும், நல்ல அனுபவங்களை யெல்லாம் அடைந்தோ மென்றும், இளமைச் செல்வியைப் பெற்றோமென்றும், எவர்க்குமில்லாத அழகைக் கொண்டோமென்றும், தம் பெருமைகளைக் குறித்து மகிழ்வர். இவைகளெல்லாம் ஊழான் அமைவனவே.
பொருளை ஆக்க விரும்பிய மாந்தர்கள், பொருளின் பொருட்டு உயிர்க்கொலை செய்வார்கள். பொய்ச்சாட்சி சொல்வார்கள் வீடுகளிற் சென்று கன்னக்கோலிடுவார் கள். ஆலயங்களிற் சென்று அங்குள்ள பொருள்களையும் திருடுவார்கள். தந்தை தாயர்களையும் வஞ்சிப்பார்கள். மனைவி மக்களையும் வஞ்சிப்பார்கள். பொருளின் நிலையாமையை நோக்கார்கள். பொருளைப் பெற்றாற் புதைத்து வைத்துக் காத்து மகிழ்ச்சியடைவார்கள். பணப்பேய் என்று பெயரும் பெறுவார்கள். தமக்கு இறப்புவரினும் ஊழும் பொருளும் பொருளைத் தீண்டார்கள். ஒரு சிறு தருமமேனுஞ் செய்யார்கள். இரப்பவர்கள் வந்து கற்பகதருப்போன்ற கரத் தாய் எனினும் அதனைக் கேளார். அப்பொழுது செவிடருங் குருடருமாவர். தம்மை அதிகம் அணுகில் இரக்கமின்றித் தடியெடுத்துத் தலைவாயிலுக்கு அப்பால் துரத்தி மீள்வர். நாள் முழுதும் பட்டினி கிடந்தாலும் தன் சுற்றத்துக்கு ஒன்றுமீயார். இவர்கள் பொருளைப் பெற்று வைத்தும் பெற்ற பயன் யாது? இவர்களைப்பெற்ற பொருளும் சிரிக்கும் ; அருளுஞ் சிரிக்கும் என்பர் ஆன்றோர்.
பொருளுடையோர்கள் அரசனுக்கும் அஞ்சுவார்கள். கள்வனுக்கும் அஞ்சுவார்கள். தாயத்தார்க்கும் அஞ்சு வார்கள். தீக்கும் அஞ்சுவார்கள். பிணிக்கும் அஞ்சு வார்கள். பசிக்கும் அஞ்சுவார்கள். இவர்களை அச்சம் ஒருபோதும் விட்டு நீங்காது. இவர்கள் அச்சத்தைச் சம்பாதித்தவர்களே யன்றிப் பொருளைச் சம்பாதித்தவர்கள் அல்லர். தம் பொருளில் இம்மியளவு போகினும் இவர் களுக்குத் தம் உயிர் போவது போலாகும்.
மேலும் பொருள் தானடைந்தோரை, ஒழுக்கமில ரெனினும் ஒழுக்கமுடையாரென்று சொல்லச் செய்யும். தீயாரெனினும் நல்லாரென்று சொல்லச் செய்யும். மூடரெனினும் அறிஞரென்று சொல்லச் செய்யும். கீழோ ரெனினும் மேலோர் என்று சொல்லச் செய்யும். பெண்களின் கற்பைக் கெடுக்கச் செய்யும். பெரியோரை இகழச் செய்யும். வறியோரை வருத்தச் செய்யும். அன்றியும் அவர்களுடைய தெய்வ சிந்தையை அழிக்கும். அருளைக் கெடுக்கும். அறத்தை மறப்பிக்கும். நித்திரையை ஒழிக்கும். ஆகையால் நாம் பொருட் செல்வத்தைப் பெற முயல்வதிலும், கண்ணன் பாதங்களை வணங்கி, அருட் செல்வத்தைப் பெற முயல்வதே நன்றாம்.



