
குசேலர் சரிதம்
சி. கணேசையர்
8. முனிவர் துவாரகைக்குப் புறப்படல்
முனிவரோ முன்னே நெடுந்தூரவழி சென்றறியார். வழி உணவுங் கொண்டு சென்றிலர். பாவம்; என் செய்வார்? ஆயினும் வழிப்போக்கரை வினவிக்கொண்டு, பல காத தூரம் போனார். போகும்போது இடையிலே, பலவாகப் பிரிந்து செல்லும் வழி ஒன்றுவர, அதனைக் கண்டு துவாரகை செல்லும் வழி இது என அறியாது மயங்கி வருத்தமுற்று நின்றார். பின் தமது மதிப்பினால் இதுவே செல்லும் வழியென அறிந்து, அவ்விடத்தினின்றும் செல்வாராயினர்.
செல்லும்போது, எதிர்வந்த மலைகளையும் வெப்பமான பாலை நிலங்களையும் காடுகளையும் வயல்களையுமுடைய பற்பல நாடுகளையும் பற்பல நகரங்களையும் பற்பல நதிகளையுங் கடந்து சென்றார். நெடுந்தூரஞ் சென்றமையினாலே, கால் தளர்ச்சியுற்றது. அதனால் எஞ்சிய வழியை, இனி நாம் எப்படிச் செல்வது என்று மெல்ல மெல்லப் போனார். போகும்போது அடியை வெதுப்பி அழலச் செய்யும் முதுவேனிற்காலம் வந்தது. அதனால் நிலம் வெப்பம் அடைந்தது. நீரும் வெப்பம் அடைந்தது. காற்றும் வெப்பம் அடைந்தது. பார்ப்பவர்களுடைய கண்களும் வெப்பம் அடைந்தன. ஆகாயமும் வெப்பம் அடைந்தது. நீர் முழுவதையுஞ் சூரியன் கவர்ந்தான். அதனாற் குளங்களும் வற்றியன. நதிகளும் வற்றியன. கிணறுகளும் வற்றியன. அவற்றிலுள்ள பறவைகளும் விட்டகன்றன. மான்களெல்லாம் நீர் வேட்கையாற் கானலை நோக்கிச் சென்று வருந்தின. மக்கள் உடம்பும் வெயர்வை கொண்டன. அவ்வெயர்வையை நீக்குதற்கு மக்களும் தங்கையில் விசிறி கொண்டனர். வழிகளோ செல்பவர்களுடைய அடிகளைச் சுட்டுச் சுழலச் செய்யும் தன்மையவாயின. இவ்வாறான வேனிற் காலத்திலே, அக்கொடிய காட்டு வழியைக் கடந்து முனிவர் எவ்வாறு செல்வர். அவரோ தவத்தால் இளைத்த மெய்யுடையவர். பசியதிகமுடையவர். என் செய்வார் ! பாவம் பசியான் மெலிந்தும், பள்ளத்து நீருங் கிடையாமையினாலே நா வரண்டும் சென்றார். பொழுது பட்டபின் தமக்குப் பழக்கம் உள்ளவர்கள் இல்லாமையினாலே, ஒருவர் வீட்டுக்குஞ் செல்லாது எதிர்ப்பட்ட கோயில்களிற் படுத்துறங்கிச் சென்றார். செல்லும்போது, காட்டிலுள்ள வேன் முட்கள் காலிற் றைத்தன. அவற்றை இழுத்தற் குரிய கருவியும் அவர் கையில் இல்லை. அதனால், அவர் நடக்க முடியாமல் ஓரிடத்தில் இருந்து மனம் நொந்து முகம் வாடி இவற்றை எண்ணுவாராயினர்.
ஒருவர், தம்மனத்தில் எண்ணியபடி ஒரு காரியத் தைச் செய்வதே நன்றாகும். குரு மொழிப்படி செய்வது அதினும் மிக்கதாம். அயலார் சொற்கேட்டுச் செய்தல் பெருந்துயர் தரும். மனையாள் சொற்படி செய்தல் இறுதி பயக்கும். இவ்வியல்பை நன்கு அறிந்திருந்தும் என் மனைவி சொல்லைக் கேட்டு, யான் புறப்பட்டதனால் அல்லவா இப் பெருந் துயரத்தை அடைகின்றேன். பல காததூரம் நடந்து வந்தும் இன்னும் துவாரகையை அடைந்திலேன். இன்னும் நெடுந்தூரம் இருக்கிறது என் கிறார்கள். என் செய்வேன். காலில் முட்கள் தைத்தன. வெயிலும் வெதுப்புகின்றது. நிலத்து வெப்பமும் அடியைச் சுடுகின்றது. நடக்கவும் வலியில்லேன். ஒருவாறு இவ்வழியைக் கடப்பினும், இக் கருங்கடலை எப்படிக் கடப்பேன்? யாருடைய உதவியைப் பெறுவேன்? கடலைக் கடந்து செல்லினும் அந்நகரில் என்னை மதிப்பவர் யாவர்?
பெரிய முடிமன்னரும் வந்து காத்திருக்குங் கண்ணனது வாயிலை ஏழையேன் எப்படி அடைவேன் ; ஒருவாறு வாயிலை அடையீனும் கண்ணன் சேவை எனக்குக் கிடைக்குமோ? கிடைப்பினும் கற்பகத்தைச் சார்ந்து வெறுங்கையைக் கேட்கும் அறிவிலார் போல, யானும் அவரைச் சார்ந்து வெறுஞ் செல்வத்தைக் கேட்டல் எனக்கு அறிவாகுமா? என்று பற்பலவற்றை எல்லாம் தம் மனத்திற் சிந்தித்துப் பெருமூச்சு விட்டார். பின் இவ்வளவும் வந்த யான் இனி மீளல் புத்தியன்று. என்ன துயர் வந்தாலும் – போயே வருவனெனத் துணிந்து, எழுந்து மெல்ல மெல்ல நடந்து சென்று மேல்கடலின் கரையை அடைந்தார்.



