குசேலர் சரிதம்
சி. கணேசையர்

14. கண்ணன் பழமை பாராட்டல்

இப்படி இவர் இருக்க, இவர் வரவை முற்ற உணர்ந்த கண்ணன் அவரை நோக்கி யுரைக்கலுற்றனன். மாதவனே! உன் நட்பை யான் என்றும் மறந்திலேன். அங்கு நின்றும் இங்கு வருபவரிடம் நேற்றுவரையும் உன் சுகங்களை யெல்லாம் விசாரித்துக்கொண்டே இருந்தேன். இன்றைக்கு இருவரும் கூடப்பெற்றேம். எனக்கு அதனால் உண்டான இன்பத்திற்கோ அளவில்லை. ‘பிரிந்தவர் கூடினாற் பேசவும் வேண்டுமோ? தூர இருந்தாலும் பிரியாதார் நட்பு என்றும் பிரியாது. பொன்னின் குடமுடைந்தாற் பின்னும் பொருந்துமன்றோ? தூர இருந்தும் என் மனம் உன்னையே நோக்கியிருந்தது. அது நிற்க, உன் மனையாள் இல்லறத்திற்கேற்ற மாண்புடையாளா? எவ்வளவு வறுமையுற்றலும் வெளியில் எடுத்துரையாதவளா? நாயகன்மேற் பழி தூற்றுதவளா? சொற்காத்த லிற் சோர்வில்லாதவளா? தன்னுயிராக உன்னுயிரைப் போற்றுகின்றவளா? வருவாய்க்குத் தக வாழ்பவளா? சொன்ன சொற்படி ஒழுகுபவளா? உனக்கு மைந்தர்கள் எத்தனை பேர் பிறந்துள்ளார்கள்? அவர்களுக் கெல்லாம் உபநயனஞ் செய்தாயிற்றா? வேதம் ஓதுகின்றார்களா? அவர்களைக் குறைவின்றி நடத்தி வருகின்றாயா? நீராடல், சந்தி, தபம் முதலிய நியதிகள் நன்கு நடந்துவருகின் றனவா? இவற்றையெல்லாம் நடத்தற்கு உன் உடல் வலிமையுற் றிருக்கின்றதா? ஈதிகளாற் கேடின்றிப் பைங்கூழ் விளைகின்றதா? குடிகள் துன்பமின்றி இனிது வாழ்கின்றனரா? என்று இங்ஙனம் முனிவரிடம் யோக சேமங்களை வினாவிப் பின் தமக்கு முன்னிருந்த நட்பின் மிகுதியை எடுத்துக் கூறுவானாயினன்.

கண்ணன் பழமை பாராட்டல் என் அரிய நண்பிற் சிறந்த தவசிரேட்டனே! நாம் இளமையிற் சாந்திப முனிவரிடம் ஓதுநாளில், யாம் ஒரு வரோ டொருவர் பேசிக்கொண்டிருந்த பேச்செல்லாம் நினைப்பாயிருக்கின்றதா?

இருவேமு முன்னாளி லிலங்குசாந் தீபமுனி
வருகாம ரடிவணங்கி மாமறைகற் றுணர்ந்திடுநாட்
பெருகார்வத் தொடும் பேசிக் கொண்டிருந்த பேச்செல்லாந் திருகாரா வுளத்து நினைத் திருக்கின்றா யோசிறப்ப.

எங்கள் குருபத்தினிக்கு விறகு முரிக்கக் காட்டிற் போயபோது, அங்கே பெருமழை பெய்ய, விறகுடன் நாங்கள் நனைந்ததும், அப்பொழுது நாங்கள் கொன்றை மரத் தடியிலும், குருந்தமரத்தடியிலும், புளியமரத்தடியிலும் திகைத்து நின்றதும், பின்னும் விடாமல் மழை பெய்தமையினாலே பரடளவாய்க், காலளவாய், அரையளவாய் வெள்ள மிக்கதும், அது கண்டு நாங்கள் இடர்ப்படுகை யில், ஒரு குளிர்காற்று வந்து சுழன்று வீசியதும், வீசவே அச் சமயத்திற் பறவைகளெல்லாம், தத்தம் குடம்பை புக்கொளிப்ப, விலங்குகள் மரவடியிற் புக் கொதுங்கச் சூரியன் அஸ்தமித்ததும், பின் காரிருள் செறியக்கண்டு, நாம் ஒருவர் கரத்தை ஒருவர் பற்றிக் கொண்டு, வெள்ளம் பரவி மேடுபள்ளந் தெரியாமையால், வீழ்ந்தும் எழுந்தும் காலால் வழிதடவிச் சென்று, மேடான ஓரிடத் தடைந்து, விடியும் அளவும் அவ்விடத் திருந்ததும், கதிரவன் குணபால் எழுந்தவளவில் எமது குருநாதரான சாந்தீபமுனிவர், எம்மைத் தேடிக்கொண்டு காட்டில் வர, அவரைக் கண்டு நாம் பணிந்ததும், பணிந்து நின்ற நம்மைக் கண்டு ஆசிரியர், ஐயோ! மக்காள்! என்பொருட்டு இராமுழுவதும் மழையில் நனைந்தீர்களே! நித்திரை யின்றி இருந்தீர்களே! அவற்றால் வருத்தமுற்றீர்களே! நம் ஏவலைச் செய்யும் மாணாக்கருள் உம்மைப் போன்ற சிறந்தவருண்டோ ? கற்ற கடனை இன்றே இறுத்துவிட்டீர்கள். ஆதலால் உங்களுக்குக் கல்வியும் செல்வமும் பெருகுக. நன் மனைவியரும், நற் புத்திரரும், சுற்றமும் ஆயுளும் விருத்தியாகுக’ என்று ஆசிகூறி, எம்மை அழைத்துக்கொண்டு சென்றதும் உனக்கு நினைப்பாயிருக்கின்றதா? என்று தமது நட்பின் மிகுதியை யெல்லாம் எடுத்துக்கூறி, மேலும் முனிவரைப் பார்த்து முனி சிரேட்டனே! என்னிடம் பலநாட்கழித்து வந்தாய்? எனக்கு யாது கொண்டுவந்தாய்? அதனை இப்பொழுது தந்தாயாயின், தின்று சுவை பார்ப்பேன். இனிய பட்சணங்களிலேதான் எனக்கு விருப்பம். யாதா யினும் சிற்றுண்டி கொண்டன்றி வந்திருக்கமாட்டாய். உன் மனைவியும் யாதும் கையுறை தந்தன்றி உன்னை வெறுங்கையாய் விடமாட்டாள். இங்கே அதனைத் தா என்று கைகளை விரித்து நீட்டினான்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *