

ஆனந்தத் தேன்
கி. வா. ஜகந்நாதன்
முகவுரை
தமிழ்நாட்டில் கடவுளை நினைப்பதற்கு வாய்ப்பாகப் பல அமைப்புக்களும், பொருள்களும் வழக்கங்களும் இருக்கின்றன. கோயில்கள், புராணங்கள், நூல்கள் ஆகியவை கடவுளின் நினைவை எப்போதும் பசுமையாக இருக்கும்படி செய்கின்றன. மக்களுக்கு இடும் பெயர்களும், பண்டிகைகளும் நினைவுக்கு உரமூட்டுகின்றன. கடவுள் ஒருவனே என்ற அடிப்படையான உண்மையை நாம் மறப்பதில்லை. ஆனாலும் அன்பர்களின் விருப்பத்தை நிறைவேற்ற அவன் வெவ்வேறு திருவுருவம் கொள்கிறான் என்று நூல்கள் கூறுகின்றன. அவ்வப்போது திருவவதாரம் செய்த மூர்த்திகளும், அன்பர்களின் வேண்டு கோளுக்கு இணங்க எழுந்தருளிய மூர்த்திகளும் பல பல. திருமால் பத்து அவதாரங்கள் எடுத்தார். ஆனால் அவருடைய திருக்கோலங்கள் பத்தோடு நிற்பவை அல்ல. அவற்றையல்லாமல் வேறு வடிவங்களும் உண்டு. அந்தப் பத்திலும் ஒவ்வொன்றிலும் பல நிலைகள் இருக்கின்றன. ராமன் ஓர் அவதார மூர்த்தி, ஆனாலும் அவனுடைய கோலங்கள் எத்தனை விதமான அன்பர்களுடைய உள்ளத்தே காட்சியளிக்கின்றன. கோசலையின் கைக்குழந்தைகளாகிய கௌசல்யா ராமன் ஒரு மூர்த்தி. தளர்நடை பழகும் ராமன் ஒரு மூர்த்தி. வசிஷ்டரிடம் மாணாக்கனாக இருக்கும் ராமன் ஒரு மூர்த்தி. இப்படியே தசரத ராமன், ஆரண்ய ராமன், சீதா ராமன், கோதண்ட ராமன், பட்டாபிராமன் என்று ராமனுடைய கோலங்களும், நிலைகளும் பலவாக இருக்கின்றன. சிற்பத்திலும் ஒவியத்திலும் வடித்துக் காணும் திருவுருவக் கோலங்களின் வகை இவை.
இவற்றையன்றிக் குணநலங்களை நினைக்கும் நுட்பக் கோலங்கள் பல. இவற்றைக் குறிக்கும் பெயர்கள் அனந்தம். வழிபாட்டு முறைகள், மந்திரங்கள், அர்ச்சனைகள், புராணங்கள், துதி நூல்கள் என்று ராமனைக் காட்டும் கருவிகள் பல. இப்படியே கண்ணனைப் பற்றியும் சொல்லலாம். பாகவதக் கதைகளை வைத்துப் பார்த்தால் கண்ணன் ஆயிரமாயிரம் வேறுபட்ட கோலங் கொண்டு விளங்குவது தெரியும்.
சிவபெருமானைப் பற்றிய எண்ணங்களின் விரிவு கரை காண முடியாதது. தமிழ்நாட்டில் அவை மிக மிக அதிகம். மகா புராணங்களில் காணப்பெறும் மூர்த்தங்கள் பல. அந்த அந்தத் தலங்களின் இறைவன் இயற்றிய திருவிளையாடல்களோடு தொடர்புடைய கோலங்கள் அளவிறந்தன. மதுரைத் திருவிளையாடல் அறுபத்து நான்கு. அவற்றோடு தொடர்புடைய கோலங்கள் அறுபத்து நான்குக்கும் மேற்பட்டவை. திருவாரூர்த் தியாகராச லீலை முந்நூற்றறுபது. ஒவ்வொரு லீலைக்கும் ஒரு கோலத்தை வைத்துக் கொண்டாலும் முந்நூற்றறுபது திருக்கோலங்களை நினைக்கலாம்.
முருகனுக்கும் புராணங்கள் கூறும் கோலங்கள் பல. தியான சுலோகங்களில் காட்டும் உருவங்கள் பல. அருணகிரியார் உள்ளக்கிழியில் உருவெழுதிக் கண்டவை கணக்குக்கு அடங்காதவை. அவருடைய உலகமே தனியானது. அது விரிந்து விரிந்து செல்கிறது. இப்போது கிடைக்கும் 1300 திருப்புகழைப் பார்த்தாலே அருணகிரியாரின் அன்பு விரிவையும் உள்ள விரிவையும் உணர்ந்து பிரமிக்கிறோம். அவர் இயற்றிய பதினாயிரம் திருப்புகழ்ப் பாடல்களும் கிடைத்திருந்தால்…?
தெய்வங்களின் திருவிளையாடற் சிறப்பையும் திருக்கோல அழகையும் தமிழர் உணர்ந்து நுகரும் அளவுக்கு மற்றவர்கள் நுகர இயலாதென்றே தோன்றுகிறது. கல்லிலும், சொல்லிலும் தெய்வங்கள் உருக் கொண்டிருப்பதைக் கொண்டே இதைத் தெரிந்து கொள்ளலாம்.
தமிழில் முருகனைப் பற்றிய செய்திகள் பழங்கால முதற் கொண்டே வழங்கி வருகின்றன. சங்க நூல்களில் திருமுரு காற்றுப்படையும் பரிபாடலும் அவனைப் பாராட்டுகின்றன. அவனுடைய திருக்கோயில்களைப் பற்றிச் சொல்கின்றன. அவனை மக்கள் வெவ்வேறு வகையில் வழிபடுவதையும் காட்டுகின்றன. பின்பும் பல பெரியோர்கள் முருகனைப் பாடினார்கள். ஆனால் அருணகிரிநாதரைப் போல விரிவாகப் பாடினவர்கள் வேறு யாரும் இல்லை. அவருடைய கற்பனையும் சந்த அமைப்பும் வியக்கத் தக்கவை.
அவர் இயற்றிய நூல்கள் எல்லாவற்றிலுமே சில பொதுப் பண்புகளைக் காணலாம். விரிந்த பாட்டாக உள்ள திருப்புகழிலும் கட்டளைக் கலித்துறையாக அமைந்த கந்தர் அலங்காரத்திலும் கலி விருத்தத்தாலாகிய கந்தர் அநுபூதியிலும் அருணகிரிநாதர் பாணி இருக்கும்.
முருகனுடைய திருவுருவ வருணனையை ஓரிடத்தில் அமைப்பார். அவன் திருநாமங்களைப் பிறிதோரிடத்தில் அடுக்குவார். அவன் குழவிப் பருவ விளையாடல்களைச் சொல்வார். வீரச் செயல்களை விரித்துரைப்பார். வள்ளியம்மைபால் காதல் பூண்ட கருணையைப் பாராட்டுவார். இவை கந்தவேளின் திருவிளையாடல்கள். தமக்கு அவனருளால் கிடைத்த இன்பத்தைச் சில இடங்களில் எடுத்துச் சொல்லி உருகுவார். தகுதியில்லாத தம்மையும் ஆண்டுகொண்ட கருணையை எண்ணி வியப்பார். அவன் திருவருளால் தமக்குக் கிடைத்த அநுபவத்தைச் சொல்ல முடியாமல் திணறுவார்.
தாம் தவறு செய்வது போலவும் குற்றம் மிக உடையவர் போலவும் கூறி இரங்குவார். தமக்கு அருள் செய்ய வேண்டுமென்று பணிந்து வேண்டுவார்.
உலகில் மக்கள் இறைவன் அருளைப் பெறாமல் வீணாகப் பிறந்திறந்து அல்லற்படுவதை எண்ணி வாடுவார். இறைவனைப் பணியுங்கள், பாடுங்கள் என்று பணிப்பார். அறம் செய்யுங்கள் என்று அறிவுரை கூறுவார். பாவச் செயல்களைச் செய்து வீணாகிறீர்களே; இவ்வாறு நடவுங்கள் என்று வழிகாட்டுவார்.
உயர்ந்த ஞானநெறியைச் சொல்வார். சரியை, கிரியை யோகங்ளையும் சொல்வார்.
முருகனைப் பாராட்டுவதோடு அவனிடம் உள்ள பொருள்களையும் போற்றுவார். அவற்றின் இயல்பை விரித்துரைப்பார். இத்தகைய முறைகளைக் கந்தர் அலங்காரத்திலும் காணலாம்.
கந்தர் அலங்காரத்தில் ஒரு கருத்தை அழகுபடச் சொல்வதற்குப் பலபல முறைகளை ஆளுகிறார் அருணகிரியார். அவர் அருட்புலவர். அருளநுபவமும் புலமையும் ஒருங்கே வாய்த்தவர். அருளநுபவத்தை உணர்ச்சி வசப்பட்டு, “நான் எவ்வாறு சொல்வேன்!” என்று வியப்புக்குறி போடும்போது காணலாம். புலமையை அவர் கருத்தை அமைக்கும் முறையிலிருந்து தெரிந்து கொள்ளலாம். உருவகம், உவமை, உயர்வு நவிற்சி முதலிய அலங்காரங்கள் கந்தர் அலங்காரத்தில் அழகாக அமைந்துள்ளன.
கந்த புராணத்தில் முருகனுடைய திருவவதாரம் முதல், வள்ளியம்மை திருமணம் வரையில் பல வரலாறுகள் இருக்கின்றன. அதிற் கண்ட வரலாறுகளோடன்றி முருகனைப் பற்றிய வரலாறுகள் வெவ்வேறாகப் பழங்கால முதல் வழங்கி வருகின்றன. இராமாயணம், பாரதம், வடமொழிக் கந்த புராணம், குமார சம்பவம் என்னும் வடநூல்களில் முருகனைப் பற்றிய வரலாறுகள் வருகின்றன. அவை யாவும் ஒரே மாதிரி அமைந்தவை என்று சொல்ல இயலாது. பல வேறுபாடுகள் இருக்கும். ஒன்றில் காணப்பெறாத புதிய செய்திகள் வேறு ஒன்றில் இருக்கும். அப்படியே திருமுருகாற்றுப் படை, பரிபாடல் முதலிய பழந்தமிழ் நூல்களிலும் கந்த புராணத்தில் இல்லாத கதைகள் இருக்கும்.
அருணகிரிநாதர் வாக்கிலும் பல புதிய வரலாறுகளைக் காணலாம். முருகனையும் அவனைச் சார்ந்துள்ள பொருள்களையும் பற்றிய தத்துவங்களை அவர் பல இடங்களில் விளக்குகிறார். அவனுடைய ஆறுமுகக் கோலம் அநாதியானது என்றும் அவன் மயில் ஓங்கார உருவமுடையதென்றும் அவனைச் சிவபெருமான் வணங்கினார் என்றும் வள்ளியெம்பெருமாட்டியை வணங்கிப் பாதம் வருடினார் என்றும் அவர் கூறும் செய்திகள் புராணத்தில் காணப்படுவதில்லை. ஆனாலும் முருக்ன் அருளில் ஊறிய அவர் கூறுவன ஏற்றுக் கொள்வதற்கு உரியனவே. அப்படியெல்லாம் நடந்தனவா என்று கேட்பதற்கு நாம் யார்? “இல்லை, இல்லை; அப்படி நடக்கவில்லை” என்று சாட்சி கூறும் தகுதிதான் யாருக்கு இருக்கிறது? புலமை மிக்க கவிஞர்கள் தம்முடைய கற்பனையால் உலக நிகழ்ச்சிகளையே வேறு வகையாகக் காட்டும் உரிமை படைத்திருக்கிறார்கள். அவற்றைக் கவி ஸமயம் என்றும் புலவர் மரபு என்றும் கூறுவர். அவ்வாறே இறைவனிடம் முறுகிய பக்தி கொண்டு அவனுடைய திருவருளால் அநுபவ எல்லையிலே சஞ்சரிக்கும் பெரியார்களுக்குத் தம் உள்ளத்தில் விஞ்சியிருக்கும் உணர்ச்சியால் எழும் கற்பனைகளைச் சொல்ல உரிமை உண்டு. புலவர்களுடைய கற்பனைகளைப் பரிவும் கவியுணர்ச்சியும் கொண்டு பார்த்தால் அவற்றின் சுவையை உணரலாம். அருணகிரிநாதரைப் போன்ற அருட் புலவர்களின் வாக்குகளை நுகர்வதற்குப் பரிவு, கவியுணர்ச்சி என்ற இரண்டோடு பக்தியும் வேண்டும். அப்போதுதான் நன்றாக உணர்ந்து அநுபவிக்க முடியும்.
இந்தப் புத்தகத்தில் கந்தர் அலங்காரத்தில் உள்ள ஆறு பாட்டுக்களுக்குரிய விளக்கம் இருக்கிறது. முதல் மூன்று பாடல்களும் அருணகிரியார் தாம் பெற்ற அநுபவத்தை எண்ணி எண்ணி வியக்கும் நிலையிலே பாடியவை. இவை மூன்றிலும் அருணகிரியாரை அருட்கடலில் மூழ்கிக் களிக்கும் அநுபவியாகவே பார்க்கிறோம். “ஆனந்தத் தேனை, வெறும் பாழைத் தெளிய விளம்பியவா!” என்றும், “உபதேசித்தது ஒன்று உண்டு, கூறவற்றோ?” என்றும் “சும்மா இருக்கும் எல்லையுட் செல்ல எனை விட்டவா!” என்றும் அவர் சொல்லும்போது தாம் உண்ட இனிய விருந்தின் இனிமையைச் சொல்ல முடியாமல் ஏப்பம் விட்டுக் காட்டுபவரைப் போலத் தோற்றுகிறார். வியந்து நிற்பதும், சொல்ல இயலாதென்று சொல்வதும் அவருடைய உணர்ச்சிச் சிறப்பைப் புலப்படுத்துகின்றன.
“ஒளியில் விளைந்த உயர்ஞான பூதரத்து உச்சியின்மேல், அளியில் விளைந்ததோர் ஆனந்தத் தேனை” என்னும்போது புலமை நிலையில் நின்று உருவகம் செய்து காட்டுகிறார். உடனே, “அநாதியிலே வெளியில் விளைந்த வெறும் வெறுந்தனியை” என்னும்போது உபநிஷத எல்லையில் நின்று பேசுகிறார். “தெளிய விளம்பியவா!” என்னும்போது அநுபவத்தை நினைந்து வேசாறும் நிலையில் இருக்கிறார்.
“சொல்லுகைக் கில்லையென்று எல்லாம் இழந்து சும்மா இருக்கும் எல்லையுட் செல்ல எனை விட்டவா” என்று தொடங்கும் போதே வியப்புணர்ச்சியில் மூழ்கிவிடுகிறார். அடுத்தபடி வள்ளி நாயகியினிடம் இறைவன் காட்டிய காதலை நினைந்து, “இகல்வேலன், நல்ல கொல்லியைச் சேர்க்கின்ற சொல்லியைக் கல்வரைக் கொவ்வைச் செவ்வாய், வல்லியைப் புல்கின்ற மால்வரைத் தோள் அண்ணல் வல்லபமே!” என்று பாடுகிறார்.
மூன்றாவது பாட்டை வள்ளிநாயகியை முதலில் நினைத்து, “தேனென்று பாகென்று உவமிக் கொணா மொழித் தெய்வவள்ளி, கோன்” என்று ஆரம்பிக்கிறார். பிறகு தமக்கு உபதேசித்ததைச் சொல்ல இயலாதே என்று வேசாறுகிறார். “எனக்கு உபதேசித்த தொன்று உண்டு, கூறவற்றோ?” என்கிறார். பிறகு சொல்ல முயல்வாரைப்போல முயன்று, முடியாதென்பதையே புலப்படுத்துகிறார்: “வாணன்று காலன்று தீயன்று நீரன்று மண்ணுமன்று, தானன்று, நானன்று, அசரீரியன்று சரியன்றே” என்று சொல்வதில் அக்கருத்தையே காண்கிறோம்.
பின் மூன்று பாட்டிலும் அருணகிரியார் புலமைத் திறனாலும் பக்தி உரிமையாலும் செய்யும் கற்பனை விரிகிறது. மயில் நடக்கும்பொழுது விளையும் விளைவுகளை ஒரு பாட்டிலும், சேவல் சிறகடிக்கும்பொழுது விளைவதை ஒரு பாட்டிலும், திருவரைக் கிங்கிணி ஓசையினால் விளைவதை ஒரு பாட்டிலும் கூறுகிறார். இந்தக் கற்பனைக் காட்சிகள் வேறு ஒருவர் கூறியன அன்று. அருணகிரியாரே மனக் கண்ணிலே உருவாக்கிக் கண்டு கூறுபவை. கந்தபுராணத்திலோ முருகன் வரலாற்றைக் கூறும் வேறு நூலிலோ இந்த நிகழ்ச்சிகள் உள்ளனவா என்று தேடிப் பார்த்துக் காண இயலாது.
கற்பனையானாலும் அவற்றினூடே ஒரு கருத்தும் இருக்கும். சமய நூல்களில் இப்படி ஒரு குறிப்பு இருப்பதைப் பழைய உரையாசிரியர்களின் உரைகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இந்த உள்ளுறையை இந்தச் சொற்பொழிவுகளில் ஓரளவுக்கு விரிக்க முயன்றிருக்கிறேன். இன்னும் சிறப்பான உள்ளுறை வேறு அறிஞர்களுக்குத் தோன்றலாம். இதுதான் வரையறையான உள்ளுறை என்று சொல்ல மாட்டேன். ஆயினும் இவை ஓரளவு பொருந்தும் என்றே எண்ணுகிறேன். கூர்ந்து உணர்ந்து பொருத்தத்தை ஆராயும்படி அன்பர்களை வேண்டுகிறேன்.
அலங்கார மாலையில் மூன்றாவது புத்தகம் இது. முன் இரண்டும் எப்படி உருவாயினவோ அதே முறையில்தான் இதுவும் உருவாயிற்று. சுருக்கெழுத்தால் உருவாக்கித் தரும் அன்பர் திரு.அனந்தன் மேலும் மேலும் தம் அன்பை வழங்கி உபசரிக்கிறார். தேனாம்பேட்டை ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் அறக்காப்பாளர் மூவரும் தம் ஆர்வத்தை என்பால் வளர்த்து வருகின்றார்கள். இவர்களுடைய அன்பை எனக்குக் காணியாக்கித் தந்த முருகன் திருவருளை எண்ணி வாழ்த்துவதையன்றி வேறு என் செய்யவல்லேன்!
கி.வா. ஜகந்நாதன்



