அண்ணா ஜோதி 
கலைஞர் மு. கருணாநிதி

அண்ணா ஜோதி
கலைஞர் மு. கருணாநிதி

உடன்பிறப்பே,

காலை வெயில் என்றாலும் கடுமையாகக் கொளுத்திக் கொண்டிருக்கிறது!

நாங்கள் செல்லும் கார், திருச்சியிலிருந்து கரூரை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது!

வழியில் சாலையில் ஒரு இளைஞன் கரூர் நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறான்!

அவன் கையில் கொழுந்து விட்டெரியும் ஒரு தீச் சுடர்!

நெருப்பு, நிமிர்ந்து நின்றுதானே எரியும் உண்மையான சுயமரியாதைக்காரனைப்போல!

அப்படித்தான் அந்தச் சுடர் பொன்னொளி வீசி எரிந்து கொண்டிருக்கிறது!

அண்ணா ஜோதி-அதன் பெயர்! அந்த இளைஞனின் பனியனில் அப்படி எழுதியிருக்கிறது!

எங்கள் காரைக் கூடத் திரும்பிப் பார்க்காமல் அந்தக் காளை, கரூர் நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறான்.

“வீராசாமி! துரைமுருகா! கண்டீர்களா; இந்தக் கழகக் கண்மணியை?” என்று கேட்கிறேன்!

“ஆமாம்! எப்படி வியர்க்க வியர்க்க ஓடிக் கொண்டிருக்கிறான்” -என்கிறார்கள்!

வியர்வை அருவியெனக் கொட்டுகிறது! அந்த அருவியை பூமிக்கு அனுப்பும் மலைத்தோள்கள் அந்த மாவீரனுக்கு!

“இவன்தான் கழகத்தின் உயிர்! இனமானத்தின் நாடித்துடிப்பு! இவனுக்கு முன்னால் நானும் நீங்களும் தூசு!” என்று உணர்ச்சி பொங்கிடக் கூறுகிறேன்.

அவர்களும் அவனையே பார்க்கிறீர்கள். நானும், காரை மெதுவாகப் போகச் சொல்லிவிட்டு அந்தத் தூய தொண்டனின் திருமுகத்தையே பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.

அவன் பாதங்கள் புண்ணாவதைப் பற்றிக் கவலைப் படாமல் ஓடுகிறான்; பதவி ஒன்றில் எப்படியாவது அமர வேண்டும் என்ற ஆசையால் அல்ல!

மண்டை பிளக்கும் வெயிலைப் பொருட்படுத்தாமல் ஓடிக் கொண்டிருக்கிறான்; மந்திரி பீடத்தில் உட்காரலாம் என்ற ஆவலுடன் அல்ல! ஒரு நகராட்சி, ஊராட்சி உறுப்பினர் பதவி என்ற நப்பாசை கூட அவனை நாடியது இல்லை!

காருக்குள்ளிருந்தவாறே கண் கலங்கக் கூறுகிறேன்; இவன்தான் கட்சியின் உயிர்! கட்சியின் ரத்த நாளம்! கட்சியின் இதயத்துடிப்பு! கட்சியின் மூச்சு! ஏன்; கட்சியே இவன்தான் என்று!

என்ன கண்டான் அவன்? சிறை கண்டான்– சித்திரவதை கண்டான்– “சிங்கிள் டீ’ க்கும் வழியில்லாமற் போன நேரத்திலும் செயலாற்றும் மன வலிமை கொண்டான்!

எம். எல். ஏ. ஆனானா? எம்.பி.ஆக ஆனானா? அமைச்சராக வேண்டுமென அணுப்பொழுதேனும் நினைத்தானா?

கட்சியினால் தனக்கு என்ன லாபம் என்று கேட்காமல்–தன்னால் கட்சிக்கு என்ன லாபம் என்று வினாடிக்கு வினாடி வினா எழுப்பி வினையாற்றும் வீரன் அவன்!

மேடையேறிப் பேசுகிறோம் நாம்! அவன் தனது அகன்ற முதுகையல்லவா வளைத்துக் கொண்டு நின்று அதன் மீதேறிப் பேசுக என்கிறான்! அவன் முதுகுதானே நாம் முழங்கும் மேடை!

கொடியேற்றச் சொல்கிறான் அவன்! கொடிக் கயிறாக அவன் நரம்புகளையல்லவா திரித்தெடுத்து நம் கைகளில் திணிக்கிறான்!

அவன் கொட்டும் கண்ணீ ரும் செந்நீரும் வியர்வை மழையும் தான் இந்தக் கழகக் கழனியில் ஆயிரங்காலத்துப் பயிரை விளைவிக்கின்றன!

இத்தனைக்கும் குறைந்தபட்சம் அவன் ஒரு அமைப்பில் செயலாளானே- தலைவனே- பொரு ளாளனோ – எந்தவொரு நிர்வாகஸ்தனாகவும் இல்லை! சாதாரண ஒரு உறுப்பினன் – ஆனால் சலியாது உழைக்கும் உடன்பிறப்பு!

இரவெல்லாம் பனியில் குளித்துக் கொண்டே தோரணம் கட்டியிருப்பான்! தெருவெல்லாம் கொடிக் கம்புகளை நட்டிருப்பான்! அதோ அந்த வரவேற்பு வளைவுகள் அவனது உறக்கமின்மையின் படைப்புகள்! அந்தப் பதாகைகள் அவன் பட்டினி கிடந்து ஆற்றிய பணிக்குக் கிடைத்த பயன்!

நானும் அவனைப்போல் தொண்டனாக இருந்து தோரணம் கட்டியிருக்கிறேன். விளம்பரச் சுவரொட்டிகளில் பசை தடவிச் சுவர்களில் ஒட்டியிருக்கிறேன். மேடை அமைத்திருக்கிறேன். அழைக்கப்பட்ட தலைவர்களின் வருகைக்காக ரயிலடியில் காத்திருந்து;

அவர்கள் வந்தால் வாழ்த்து முழக்கமிட்டு — வராவிட்டால் மனமொடிந்து குமுறி– மறக்க முடியாத அனுபவத்தைப் பெற்றிருக்கிறேன். அதனால்தான் தொண்டனின் உணர்வுகளை என்னால் என்னை அறியாமலே பிரதிபலிக்க முடிகிறது. இன்னமும் தொண்டனாகவே இருக்க முடிகிறது!

அம்மவோ; இதோ ஓடிக் கொண்டிருக்கிறானே -இவன் கையில் உள்ள “அண்ணா சுடர்” இவனது தலைவனின் கரங்களில் கரூர் மாநாட்டு மேடையில் இவனால் தரப்பட வேண்டுமாம்! அதற்காக இப்படி ஓடுகிறான்! இவனது தலைவனும் ஒரு தொண்டன் தான் என்பதை இவன் ஏன் அறியவில்லை? ஒருவேளை அந்த உண்மையை அறிந்து கொண்டிருப்பதால் தான் இப்படித் தலைதெறிக்க ஓடுகிறானா?

இவனது தூய உள்ளத்தைப் புரிந்து கொண்டால் இவனுக்குத் துரோகம் செய்ய மனம் வருமா? எத்தனை பேரைத் தூக்கி விடும் ஏணியாக இருந்திருக்கிறான்- இவன் தோளில் கால் வைத்துப் பதவிப் பொறுப்புகளில் அமர்ந்தவர்கள் எத்தனை பேர்!

அவற்றையெல்லாம் அவன் சிந்தித்துப் பார்த்துக் கைமாறு கேட்கிறானா?

“உனக்காக ரத்தம் சிந்துகிறேன்! வியர்வை வடிக்கிறேன்! உயிரைத் தரவும் முன்வருகிறேன்! ஏன்? எதற்காக? பட்டாளத்துச் சிப்பாயாக நானும் படைத்தளபதியாக நீயும் இருந்து நமது கொள்கைக் கோட்டையைப் பாதுகாத்து எதிரியின் கொட்டத்தை அடக்குவதற்காக!” இப்படி அந்தத் தொண்டனின் இதயத்து உதடுகள் உச்சரிக்கின்றன!

அவன் விடும் மூச்சுத்தான் புயலாக மாறி பகைவனின் கப்பற்படையையே கடலில் கவிழ்த்து விடுகிறது!

அவன் கந்தலாடையில் கசங்கி, கைவிரல்களில் நசுங்கி, அழுக்கேறிய நிலையில் “நிதி” யெனும் பெயர் பெற்று தரப்படுகிற ஒவ்வொரு ஒரு ரூபாய்க் கரன்சியும்தான் கழகத்தின் “அரண்மனைப் பொக்கிஷம்!’

அந்தக் கருவூலத்தின் ஒவ்வொரு காசையும் நியாயமாகச் செலவிடும் நேர்மையான நிர்வாகியைத் தான் அவன் நெஞ்சில் வைத்துப் போற்றுவான்! இல்லையேல் அவர்களை நஞ்சில் தோய்த்த பண்டமாகக் கருதி வீசி எறிவான்!

ஏனெனில் அவன் பீடி சுற்றியோ–மூட்டை தூக்கியோ – ரிக்ஷா ஓட்டியோ- வாய்க்கால் தோண்டியோ- வரப்பு வெட்டியோ- சம்பாதித்த காசு! வயிற்றைக்கட்டி, வாயைக் கட்டி, வாழையடி வாழையாக வாழ வேண்டிய தனது கட்சிக் காக அவன் செலுத்தும் காணிக்கை! அதில் சேதாரம் ஏற்பட்டால் சிந்தை குலையும் அவனுக்கு!

அவனது உழைப்பை உறிஞ்சியதால் உயர்ந்தோர், அவனை உதைத்தால்கூட அவன் கவலைப்பட மாட்டான்; அவன் கட்டிக்காக்கும் கட்சிக்குத் துரோகம் செய்துவிட்டு பதவிக்காக-பவிஷுக்காக– பணத்திற்காக- வேலி தாண்டுபவர்களை அவனால் சகித்துக் கொள்ள முடியாது! குமுறிக் குமுறி அழு வான்! பலிக்குமோ, பலிக்காதோ அதுபற்றிக் கூடக் கவலைப்படாமல் சபிப்பான்! சாபம் கொடுப்பான்!

அந்த உத்தம உடன்பிறப்பு ஓட்டத்தை நிறுத்தாமல் கரூர் மாநாட்டு மேடையில் அண்ணா சுடரை என் கையில் அளித்தான்! கரத்தைக் குலுக்கினான்!

ஆனால் இப்பொழுதும் நினைத்துப் பார்க்கிறேன்; தீபச்சுடருடன் அந்தத் தியாகசீலன் சாலையில் ஓடிக் கொண்டிருப்பதாகவே தெரிகிறது!

ஓர் இளைஞன்!
ஒரு நூறு இளைஞர்கள்!
ஒராயிரம் இளைஞர்கள்!
ஒரு லட்சம் இளைஞர்கள்!
ஒரு கோடி இளைஞர்கள்!

அனைவரின் கரங்களிலும் அண்ணா சுடர்! அணையாத அந்த தீபச்சுடர்! கழகத்தின் ஜோதி! களங்கமற்ற ஜோதி!

எங்கும் ஒளிவெள்ளம்! பொல்லா இருள்போக்கும் புத்தொளியின் வீச்சு!

இனிக் கவலையில்லை; இவர்களைப்போல் இதய சுத்தியும் இலட்சிய உறுதியும்-தன்னல மறுப்பும்- தன்மான உணர்வும் கொண்டோர் இருந்திடும் போது, நிச்சயமாகச் சொல்லுகிறேன்; இனிக் கவலையே இல்லை!

அன்புள்ள,
முக.

[13-1-1984 முரசொலி ஏட்டில் கலைஞரின் மடல்]

உடன்பிறப்பே,

“எழுச்சியுற்ற இளைஞன்தான்!
ஏறுநடைச் சிங்கம்தான்!
கொழித்து விட்ட உமிகள்தான்- இனிக்
கொடுமை செய்யும் கூட்டத்தார்”

இப்படிச் சில கவிதை வரிகளை எனது இளமைக்காலத்

கவிதைவரிகளை தில் எழுதிய நினைவின் அலைகள் இதயத்தில் இன்னமும் மோதிக் கொண்டிருக்கின்றன.

மன்னர் பின்னால் அணிவகுத்துச் சென்ற படை வீரர்களில் ஒருவனாக என் மகனும் சென்று அவரது அன்பின் பெருக்கிற்கு உரியவனாக அமைந்தான் என்ற செய்தி மட்டுமே கிடைத்துள்ளதே தவிர, அந்த மன்னர் தலைமை தாங்கி நடத்தும் போரில் இந்த மண்ணைக் காத்திட என் மகன் வீரம் விளைவித்து, விழுப்புண் ஏற்று, சாவில் வீழ்ந்து சாகாப் புகழ் பெற்றான் என்ற செய்தி இன்னும் வரவில்லையே என ஒரு தாய் ஏக்கம் கொண்டு புலம்பினாள் என்று புறநானூற்றுப் பாடல் ஒன்று தெரிவிக்கிறது!

மகனைப் பெற்ற மகிழ்ச்சியை விட, மகன் களத்தில் மார்பில் காயமுற்று மடிந்தான் என்பதிலேயே அதிக மகிழ்ச்சியுற்றனர் சங்க காலத் தமிழன்னைகள் என விளக்கும் புறநானூற்று வரிகளைப் படிக்கும் போதெல்லாம் புல்லரிக்கிறது உடல்!

வீரமிகு கவிதைகளையும் தீரமிகு வரலாறுகளையும் படித்துப் படித்து அந்தப் படைவீரர் பட்டியலில் இடம் பெற்று வாழ்வை நிறைவுபடுத்துவதன்றே- வையத்தில் நாம் பெற்றிடும் பெரும் பேறு எனத் துடித்தது இளம் உள்ளம்!

எனக்கு மட்டுமல்ல; எத்தனையோ இளைஞர் களுக்கு! அவர்களிலே பலர் இன்று நமது கழகத்தின் தூண்களாகத் திகழ்கிறார்கள்!

கூட்டங்கள் நடத்துவதில் எத்துணை ஆர்வம்! அதற்கென விளம்பரச் சுவரொட்டிகளை இரவெல்லாம் கண்விழித்து ஒட்டுவதிலும் – தெருவெல்லாம் கொடிகளைத் தோரணங்களைப் பதாகைகளைத் தொங்க விடுவதற்காக அல்லும்பகலும் அயராது பாடுபடுவதிலும் எவ்வளவு அக்கறை-உறுப்பினர் சேர்ப்பதில் எவ்வளவு உற்சாகம் – அடடா! அந்த இளமையின் துள்ளல் முழுவதும் இந்த இயக்கத்திற்காக – இலட்சிய வெற்றிக்காக – பயன்பட்டதை எண்ணி எண்ணிப் பரவச மடைந்திடும் பருவமல்லவா இது!

அந்த இளமை, திரும்பி வரப்போவதில்லை! வர வேண்டுமென்று வரம் கேட்கவும் போவதில்லை! கேட்டாலும் தரக்கூடிய வலிமை பெற்றோர் யாரும் இல்லை! ஆனால்; அதே நேரத்தில் வயதில் முதியோராயிருந்தாலும் வாய்மைப் போருக்கு என்றும் இளையராய் இருந்திடல் வேண்டுமென்ற புரட்சிக் கவிஞரின் கருத்தைப் புறந்தள்ளி விட முடியுமோ!

இளைஞர்களாய் இருந்து இயக்கம் வளர்த்து இன்று இணையற்ற கட்டுக் கோப்புடன் இலட்சியப் பாசறையாக அண்ண வழியில் கழகம் நடத்துகிற வர்கள்; இப்போது தங்களைப் பின்பற்றி இளைஞர் பட்டாளம்; ஆம்- அரும்புமீசைத் தம்பிகள்; இல்லை அந்த மீசை கூட அரும்பிடாதவர்கள்— இயக்கத்தின் சுடர் மணிகளாய் – கதிர் ஒளிகளாய்- வந்து குவிந்த வண்ணமிருப்பதைப் பார்த்துப் பூரிக்கிறோம்!

தாய்மொழி காக்க- தமிழ் நில மேன்மை காக்க- தமிழின மானம் மரியாதை காக்க- பகுத்தறிவு நெறி காக்க- பாட்டாளி வர்க்கத்தின் உரிமை காக்க – இடையறாது பணியாற்றும் இந்தக் கழகப் பாடி வீட்டில் இளைஞர் அணியினர் பெருகிட வேண்டும்; என்ற கருத்தினைக் கழகம் அறிவித்தவுடனே- இலட்சக்கணக்கில் இளைஞர்கள் இணைந்த வண்ண முள்ளனர்!

எங்கெங்கு நோக்கினும் இளைஞர் அணியடா! எனப் பொங்கிடும் உவகையால் பாடிடத் தோன்று கிறது!

உயர்வுகள் போற்றிடவும்-

ஒழுக்கம் பேணிடவும்—

கடமைகள் ஆற்றிடவும்-

கண்ணியம் நாட்டிடவும்-

கட்டுப்பாடு மிக்க இளங்காளையர் கழகத்தின் விழுதுகளாக இளைஞர் அணிகளை அமைத்து வருகின்றனர்!

கழகத்தில் மூத்தோராயிருப்போர் – அந்த இளைஞர்களை, இன்னும் ஊக்கப்படுத்து வார்களேயானால் கடல்மடை திறந்தாற்போல் அந்தச் சிறுத்தைக் கூட்டம் செயலாற்றப் புறப்படும்!

ஒரிரு இடங்களில் இளைஞர் அணியினரைச் செய லிழக்கச் செய்யும் காரியங்களும் நடைபெறுவதாகத் தகவல்! மிகச் சில இடங்கள்தான் எனினும், அதற் காக வருந்துகிறேன்! திருந்திக் கொள்ள வேண்டு கிறேன்!

இளைஞர் அணி– ஆலுக்கு விழுதே தவிர வாழைக்குக் கன்றல்ல- என்பதும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது!

பெரியோரின் அனுபவம்- இளையோரின் ஆர்வம்- இரண்டும் ஒரு இயக்கம் வளர- வலிவுபெற தேவைதானே!

செல்லுமிடமெங்கும் இளைஞர் அணியின் சின்னப் புது மலர்களை- சிங்கார அகல் விளக்குகளை- ஏராளமாகக் கண்டிட முடிகிறது!

எதிர்காலத் தமிழகத்தின் நலம்பாடக் கூடிய- அந்த நிகழ்காலப் பிறை நிலவுக்ளை வளர விடுவோம்!

முகிலைக் கிழித்து வெளிக் கிளம்பும் முழு நில வாகத் தமிழகம் தோன்றிட; என் சின்னத் தம்பிகளே! செல்லக் கட்டிகளே! சிரிப்பு தவழும் முகத்துடனே செயல் புரிய வாரீர்!

எங்கே பார்க்கலாம்; இளைஞர் அணி இல்லாத இடங்களே இருக்கக் கூடாது!

தொடர்ந்திடுக பணியை! தொடர்பு கொள்க கழக அமைப்புகளுடன்! அதில் ஏதேனும் தொல்லை யிருப்பின் தலைமைக் கழகத்திற்கு தகவல் தருக!

அன்புள்ள,
மு.க.

[9.8.81. முரசொலி ஏட்டில் கலைஞரின் மடல்]

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *