

சமய இலக்கியங்கள் குன்றக்குடி அடிகளார்
பதிப்புரை
தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள், இருபதாம் நூற்றாண்டில் தமிழினத்திற்குக் கிடைத்த அப்பரடிகள். அவர் தம் சிந்தனையும் செயலும், எழுத்தும் சொல்லும் மனித குலத்தின் வாழ்வையும் வளத்தையும் மேம்பாட்டையுமே மையமாகக் கொண்டு விளங்குவன.
இன்று தமிழ்கூர் நல்லுலகெங்கணும், தமிழறிந்தோர் வாழும் இடமெல்லாம் அரசியல் மேடையாக இருந்தாலும், அருளியல் மேடையாக இருந்தாலும், சமூக சீர்திருத்த மேடையாக இருந்தாலும், மொழியியல் மேடையாக இருந்தாலும், கருத்து வேறுபாடும் கருத்து மாறுபாடும் உடையவர்களிடையேயும் தவத்திரு அடிகளார் அவர்கள் தோன்றித் தமது புதிய சிந்தனைகளையும், எண்ணங்களையும் தெளிவாக – அழகாக — ஆணித்தரமாக எடுத்துக் கூறி, மேடைக் கலைக்குப் புத்துயிரூட்டும் சித்தராக – புத்துணர்வுகளும் புதிய எண்ணங்களும் பூத்து மலரும் சோலையாகத் திகழ்கிறார்கள்.
தவத்திரு அடிகளார் அவர்கள் கூறுகின்ற சமயம், “மனிதனை மனிதனாக வாழச் செய்வது; மனிதகுல ஒருமைப்பாட்டினை உருவாக்க உதவுவது; சமதர்ம மணம் கமழ்வது; சாதி, குலம், பிறப்பு, எல்லை இவற்றைக் கடந்தது; மனிதனுக்குப் புதிய உணர்வையும் புதிய தெம்பையும் உண்டாக்குவது.” இத்தகைய சமயத்தையே அப்பரடிகள், சேக்கிழார் பெருமான், வள்ளலார், தாயுமானார் போன்ற ஞானிகள் எல்லாம் வலியுறுத்தினார்கள் என்பதை அவர்கள் அருளிச் செய்த இலக்கியங்களிலிருந்து சான்று காட்டி நிறுவியுள்ளார்கள். இவ்வகையில், தவத்திரு அடிகளார் அவர்கள் எழுதிய நான்கு சிறந்த கட்டுரைகளின் தொகுப்புத் தான் “சமய இலக்கியம்” என்னும் இந்நூல் நமது பதிப்பகத்தின் வாயிலாக வெளிவரும் முதல் தமிழ் நூல் இதுவே. இதனை வெளியிட்டுக் கொள்ள அனுமதித்த தவத்திரு குன்றக்குடி அடி களார் அவர்களுக்கு எங்கள் உள்ளார்ந்த நன்றி யைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்நூலுக்கு ‘அணிந்துரை’ தந்துதவிய பேராசிரியர் டாக்டர் வை. இரத்தின சபாபதி அவர்கட் கும், இந்நூலை வெளியிடுவதில் எங்கட்கு உறுதுணை யாக இருந்த கவிஞர் சாமி பழனியப்பன் அவர்கட் கும் எங்கள் நன்றி !
தமிழுலகம் இந்நூலை ஏற்றிப் போற்றி இன்பமும் பயனும் எய்தி மகிழுமாக!
இந்தியா புக் ஹவுஸ்



