
சமய இலக்கியங்கள் குன்றக்குடி அடிகளார்
அணிந்துரை
ஞானத்தமிழாகரர், டாக்டர்,
புலவர் வை. இரத்தினசபாபதி பி.ஒ. எல்., எம்.ஏ., பிஎச்.டி.
தத்துவத்துறை
சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை.
“சமய இலக்கியங்கள்’ என்பது நூலின் தலைப்பு. ‘சமயம்’ என்ற சொல்லின் நிலை இரண்டுங்கெட்டான் நிலை. ‘சமயம்’ என்ற சொல்லொலியைக் கேட்டவுடன் எழும் எண்ணக் குவியல்கள் எல்லாவற்றையும் குப்பையென நீக்கவும், குறித்த பொருள் இது என உணர்த்தவும் நின்ற முதல் நூல் இது சமயக் கணக்கர் தம் மதிவழி போகாது, உலகியல் கூறிப் பொருளிது என்ற பொய்யில் புலவரே இந்நூல் ஆசிரியர்.
ஆளுதல், ஆளப்பெறுதல் என்பன இருவேறு செயல்கள். வேறுபாடுகளை இணைக்கும் ஒருமைப்பாடு என்பது அந்நிய மன்று; வேறுபாடுகளிலேயே உள்ளார்ந்து கிடப்பது. வேறு பாடுகளில் அந்நியத் தன்மை புக இடம் கொடுத்தால் பிரிவினைப்படுத்தப் பெற்ற ஒட்டாநிலைகள் ஆதிக்கம் பெற்று விடும். இது சுதந்திரம் தந்த வரலாற்றுப் பாடம். இந்திய விடு தலை முழக்கம் அடிகளின் இளமைக் காலத் திருப்புமுனை யாதலின், நூலின் உள்நின்ற தலைப்பு நான்கனுள் (சேக்கிழார் காட்டும் சமுதாயம், சமய இலக்கியங்கள், சித்தாந்தச் செந்நெறி, சமய இலக்கியங்களில் அறநெறி) இரண்டாவது தலைப்பே – நான்கனுள் நன்றே ஆளும் நிலை பெறுகிறது.
அந்நியமிலாமை என்பது ஒருமைப்பாட்டு நியதி. அந்நிய மிலாமையின் அரன்கழல் செலும் என்பது சித்தாந்தச் செந்நெறி.
அன்றாலின் கீழிருந்து அறமுதல் நாற்பொருளை வல்லார்கள் நால்வர்க்கும் வழங்கிய பரம்பொருளே குன்றைக் குருமணியென மானிடச் சட்டை தாங்கி, நாற்பொருள் பயக்கும் ஒருநடைத் திருவளர் இந்நூலை உலகுய்ய அருளியது என இந்நூலை ஆராதிக்கலாம், ஏனெனில் ஆராதிக்கும் மரபுநெறியில் மாறாதவன் யான். ஆனால், அடிகளை ஆராத னைப் பொருளாக ஆக்குவதைவிட. விமரிசனப் பொரு ளாகவே கடந்த 27 ஆண்டுகளாக அமைத்துச் செயல்பட்டு விட்டேன். தனிவழிச் சிந்தனைக் கோட்டையைத் தகர்த்தெறிந்து கடுமையான விமரிசனத்தையே வாழ்வுப் பாதை யாக்கிக் களங்கண்டு, தனிநின்று களங்கொண்டு, பரணி கொண்ட தமிழ்மாமுனிவர். மக்களாய்ப் பிறந்தார் அனைவர்க்கும் சமயத் தலைவராய் இவர் ஒருவரைத்தான் வரலாறு படைத்துக் கொடுத்திருக்கிறது. எவ்வாறு?
‘புத்தகம் கைகளுக்கு அணிகலம்’ என்பது ஒருவாக்கியம். நாட்குறிப்பேடு இந்த இடத்தை இந்நாளிற் பெற்றது. நாட் குறிப்பேடுகள் பற்பல அமைப்புடையவை. கையேடு, ஆயுள் காப்பீட்டுக் கழகக் கையேடு அவ்வத்துறை நீதிமன்றக் செய்திகளைத் தொகுத்துத் தருவன. சமய இலக்கியங்கள் எனப்பெறும் சிவனடியவர்களை அடிப்படையாகக் கொண்ட நாட்குறிப்பேடு அமைத்து, இன்று கண்ணப்ப நாயனார் என்ற சமய இலக்கிய நாள் என்று நினைவு கொள்வது மட்டுமன்றி, அவர் மேற்கொண்ட வாழ்வை, இந்நாளில் எத்தகைய தொண்டாக அமைத்துச் செயற்படுத்தலாம் எனச் செயல் திட்டமும் இயக்க வடிவும் அமைத்து வாழ்ந்து வரும் சமயத் தலைவர், என்னறிவு சென்றளவில் யானின்று அறிந்தபடி, வேறு எந்த உலக குருவோ, சமயத் தலைவரோ இல்லை. 63 நாயன்மார்களையும் தம்மைப் போலவே தம் கோயிலில் இருப்பிடமளித்த சிவன், தனித்தனி இடமே அளித்தான். 63 சமய இலக்கியங்களையும் நடைமுறைப்படுத்திய ஒரே ஒரு நாயனார் தான் உலகத்தில் உண்டு. அவரே, சமய இலக்கியங்களாக நின்ற சிவனடியார்களைத் தம்முள்ளே இயக்கவழியில் செயல்படுத்திய தவத்திரு குன்றக்குடி அடிகளார். அதனா லேயே, சமயம் என்ற சொல்லுக்குச் சமுதாய நலம் என்பதே பொருளாயிற்று.
‘சமயம்’ என்ற சொல்லுக்கு முப்பதுக்கும் மேற்பட்ட வாழ்வியற் கோணங்களில் நின்று இயல்வரையறை செய்யப் பெற்றுள்ளது. சமயம் என்பது வாழ்க்கை முறை. மனிதனின் சராசரித் தகுதியுடைமையை வரையறுக்கும் அளவுகோல்; மனித வாழ்க்கையை உயிர்ப்புள்ள தாக்கி, முழுமையாக்கும் உணர்வின் தேவையிலேயே மலர்ந்தது சமயம் என்பது அடிகள் அமைக்கும் விளக்கம். அடிகள் சிந்தனை ஓட்டத்தை விரைந்து பற்றுதல் எளி தன்று. உலகச் சிந்தனையாளர்கள் மூவகைப்படுவர். வரலாறு தழுவிய சிந்தனையாளர்கள், பரிணாம வளர்ச்சியைத் தழுவிய சிந்தனையாளர்கள். நிகழ்காலக் கணிப்பிலிருந்து வருங்காலக் கணிப்பைக் கற்பனையில் தழுவும் சிந்தனையாளர்கள். அடிகள் இம்மூன்றையும் அறிவர்: அவர்தம் சிந்தனை இம் மூன்றையும் தழுவிய சிந்தனை போலவே தோற்றும் ஆயினும் அடிகள் சிந்தனை, இம்மூன்றனுள் அடங்காது. எவ்வளவு உயர்ந்த ஒன்றையும் சராசரி மனிதன் நிலையில் அமைத்துக் கொடுப் பதே அச்சிந்தனைச் சிறப்பு.
‘ஒரு மனிதன், சராசரித் தகுதியுடையவனாக இருப்பதற்கு அவன் இறைவழிபாடு நிகழ்த்துபவனாக இருக்க வேண்டும்.’
“சராசரி மனி தன் தன் சராசரிக் குறைகளைக் கடந்த அறிவின் முதிர்ச்சியையே ஞானம் என்கிறோம்.’
“சமய ஞானம் எக்காரணங்கொண்டும் சராசரி மனிதர்களை வேற்றுமைப்படுத்தி ஒதுக்காது.”
என்பவைகளைக் காண்க. இவ்வகையில் அடிகள் புதிய தொரு சித்தாந்தச் செந்நெறியை வகுத்தருளியுள்ளார்கள்.
உடல் வாழ்வு தன்னலம் பற்றியது; உயிர் வாழ்வு பொது நலம் பற்றியது. சராசரி மனித வாழ்க்கையை உயிர்ப்புள்ள தாக்கிமுழுமையாக்கும் உணர்வின் தேவையிலேயே தோன்றி யது சமயம். இதனை நிறுவிய அடிகள், “பொதுவில் ஆடுபவன் நீழலில் பொதுமையைக் காணாமல், தீமையை அகற்றாமல், நன்மையைச் சாதிக்காமல், துன்பத்தைத் துடைக்காமல், இன்பத்தைப் படைக்காமல், கிழடுதட்டிச் செயலிழந்து போன நமது சமய அமைப்புக்கள் குறையுடைய நடைமுறைகளே” என்று சாடுவதன் மூலம் நாம் வினா எழுப்பிச் சிந்திக்க வேண்டிய நிலையில்லாமலேயே முடிவை வெளிப்படுத்தியுள்ள நயம் சிந்தனையாளர்களால் நீள நினைதற் குரியது.
யாண்டும் வற்புறுத்தாத புதிய சிந்தனையை அடிகள் இந்நூலில் அமைத்துள்ளார்கள். தோய்ந்த சிந்தனை. ஆம். அருளில் தோய்ந்த சிந்தனை. அருளில் நின்று தன்னை இழந்த சிந்தனை – அருள்நனி பழுத்த ஆள்வினையுடைமை- அஃறிணை எனத் தம்மை நிறுத்தும் தொண்டு இவை மூன்றும் சராசரி மனிதன் சமுதாயம் தழுவிய சமய அனுபவ முதிர்ச்சியாளனாக நின்ற – உயர் குறிக்கோள் நிலைக்குரிய அடிப்படைகள்.
தருமகருத்தாக் கொள்கையை அடிகள் விளக்கும்போது அக்கொள்கையே புதிய வலிவுபெறும். இந்நூலில் ஒரு புதிய உத்தியைக் கையாண்டுள்ளார்கள்.
“இப்பொழுது நம்மிடத்தில் பொருள் இல்லை. உடன் வந்துள்ள உதவியாளரிடம் பணம் இருக்கிறது. நாம் கேட்கும் பொழுது அவர் தருகிறார். அல்லது குறிப்பறிந்து தருகிறார். இங்கே தருதல் எந்த மனநிலையில் நிகழ்கிறதோ அதே மனநிலைதான் தேவை”
சமய இலக்கியங்கள் சிவனடியார்களே – நடமாடுங் கோயில்களே எனக் கொண்டு, சமயம் என்பது வாழ்க்கை முறை என்பதைச் சராசரி மனிதநிலையில் விளக்கிடும் உலகத் தத்துவச் சிந்தனையாளர்களையும் சமயச் சிந்தனையாளர்களையும் திட்டமிட்டுச் சந்தித்த சந்திப்பே இந்நூல். பிசிறு தட்டாத சிவானுபவ விளக்கமே சமயம்.
நான் கண்ட சேக்கிழார், நான் கண்ட காந்தியடிகள் எனக் கூறும் சிந்தனையை ஒதுக்கி, அருளில் தோய்ந்த சிந்தனையில், அருள் பழுத்த ஆள் வினையுடைமையுடன், ‘பணிசெய்து கிடப்பதே’ என முழங்கிய அஃறிணை உணர்வுடன் சமயத்தை -வாழ்க்கையை அமைத்துக் கொள்க என்று கூறி, சிவம் வாழ்த்துப் பொருள் அன்று; வாழ்வுப் பொருள் என்று உலக மக்கள் அனைவருயும் ஒருமைப்பாட்டுரிமையில் இணைந்து வாழ வேண்டும் என ஆணையருளியுள்ளார்கள்.
என்றைக்கும் எந்தம் வாழ்பொரு ளாய குன்றைக் குருமணி வாழ்க வாழ்க!
சென்னை-5
27-8-1981
இங்ஙனம்,
வை. இரத்தினசபாபதி.



