மாணிக்கவாசகர் மாட்சி மறைமலை அடிகள்

இது, பல்லாவரம் பொதுநிலைக் கழக ஆசிரியர் மறைமலையடிகள் இயற்றிய “மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்” என்னும் ஆராய்ச்சிப் பெருநூலின் முகவுரையினின்றும் எடுக்கப்பட்டது

வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தைநான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலேதேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்தென்ஊன்கலந்து வுயிர்கலந்து வுவட்டாமல் இனிப்பதுவே.

வருமொழிசெய் மாணிக்க வாசகநின் வாசகத்தில்ஒருமொழியே என்னையுமென் உடையனையும்ஒன்றுவித்துத் தருமொழியா மென்னில்இனிச் சாதகமேன் சஞ்சலமேன்,குருமொழியை விரும்பியயல் கூடுவதேன் கூறுதியே.

(இராமலிங்க அடிகள்)

மாணிக்கவாசகப் பெருமான் அருளிச் செய்த திருவாசகத் தென்றமிழ் மாமறையின் அளப்பரு மாட்சியினை அளந்து கூறிய இராமலிங்க அடிகளின் மேலைத் திருச் செய்யுட்களால், திருவாசகத்தை உள்ளுணர்ந்து ஓதுவா ரெவராயிருப்பினும், அவர் வேறெங்குங் காணாத ஒரு பேரின்பம் எய்தித் தம் உடம்பும் உயிருமெல்லாம் அதன் வயமாய் நிற்கப் பெறுவரென்பதூஉம், மக்களாற் காணவுங் கருதவும் இயலாத இறைவனை அவர் எளிதிலே தமதகத்துக் கண்டு அவனோடு ஒருமைப்பட்டு நின்று பேரின்ப வாழ்விற் பிரிவின்றி வாழ்வரென்பதூஉம் நன்கு தெருட்டப்பட்டமை காண்க.

இங்ஙனமாகத், தன்னை ஓதுவா ருள்ளத்தையும் உணர்வையும் உயிரையுமெல்லாம் பேரின்ப வுருவாக்குந் திறம் ஏனை எந்த நுல்களுக்கும் வாயாமல் திருவாசகத்திற்கு மட்டும் வாய்த்ததென்னையெனின்; இவ் வுலக வாழ்க்கையில் வரும் இன்ப நுகர்ச்சிகளில் எங்கும் புலனாகாத ஒரு பேரின்பம் இதனை யோதுவா ரெல்லாரிடத்தும் பிறழாது நிகழக் காண்கின்றே மாகலானும், அத்துணை விழுமிய அவ்வின்பம் ஒன்றையும் பற்றாது தனித்து நிற்பதின்றி உலகு உயிர்களிலெல்லாம் நிறைந்து நிற்கும் ஒரு முழுமுதற் பெரும் பொருளான கடவுளைப் பற்றிக் கொண்டே நிற்பதொன்றா கலானும், அத் தன்மையரான கடவுளைத் தலைக்கூடினார்க் கன்றி அது வாயாதாகலானும், இறைவனை இறுகப் பற்றிக் கொண்ட மாணிக்க வாசகப் பெருமான்றன் மன மொழி மெய்கள் எல்லாவற்றையும் அப் பேரின்ப வெள்ளமானது தேக்கி அவரது திருவாயின் வழியே திருவாசகமாய்ப் பெருக்கெடுத்துப் போந்ததாகலானும் அந் நூலுக்கு அத் திறம் உளதாயிற்றென்று அறிதல் வேண்டும். கற்கண்டின் பாகும் முப்பழச் சாறும் நறுநெய்யும் ஒருங்கு கலந்த அடிசில் தீஞ்சுவைத் தெள்ளமிழ்தமாய்த் திகழ்தல் காண்டுமன்றே; அதுபோற் சிவத்தின் எல்லையற்ற பேரின்பத்தில் முழுதுந் தோய்ந்த வாதவூராரின் மன மொழி மெய்களும் பேரின்ப வுருவாய்த் துலங்கலாயின. இளவள ஞாயிற்றொடு கூடிநிற்கும் மாசற்ற நீலவான் பரப்பெல்லாம் அதன் பேரொளியால் ஊடுருவப் பெற்று மிளிர்தல் காண்டுமன்றே: அதுபோற் சிவத்தின் எல்லையற்ற அறிவாற் கவரப்பெற்ற அடிகளின் தூய அறிவும் அளப்பிலாச் சிறப்பினதாய்ச் சுடர்வதாயிற்று. சுடர்ந்தெரி தீயின் சேர்க்கை யால் தூய ஆன்இழுது நீராளமா யுருகி யொழுகுதல் காண்டுமன்றே; அதுபோற் சிவத்தின் வரம்பிலடங்கா அருளாலும் அன்பாலும் நிறையப் பெற்ற அடிகளின் திருவுள்ளமும் அன்பாலும் அருளாலும் பொங்கித் ததும்பித் திருவாசகம் பொழிவதாயிற்று என்க.

உலகில் வேறெங்குங் காணப்படாத ஒரு தனித் தெய்வ மாட்சி மாணிக்கவாசகப் பெருமான் ஒருவரிடத்தே மட்டுங் காணப்படலான இந் நுட்பத்தை ஆழ்ந்து ஆராயுங்கால், அஃது எல்லாம் வல்ல கடவுளே வலியவந்து அவரை ஆட்கொண்ட பேரருட்டிறத்தின் பெருவிளைவாதல் புலனாகா நிற்கும். கடவுள் ஒருவர் உண்டு என அதன் இருப்பை மட்டும் உணர்வார்க்குப் பொதுவகையால் ஒரு மெய்யறிவு விளங்குமே யல்லாமல், அதனின் மேற்பட்ட ஓர் இன்பவுணர்வு தோன்றாது. கடவுளின் பேரறிவு விளக்கத்தினை அவனாற் படைக்கப் பட்ட புற்பூண்டுகள் முதல் மக்களுடம்பு ஈறாக வுள்ளவற்றிற் கண்டு கண்டு வியப்பார்க்கு அவ்வறிவுக் காட்சியில் ஒருவகை மகிழ்ச்சியுங் களிப்புந் தோன்றுமே யல்லாமல் அதனின் மேற்பட்ட மாறா இன்ப நிலை தோன்றாது. தமது சிறுமையுங் கடவுளின் பெருமையும் அறிந்து தமக்கு வேண்டுவன வெல்லாந் தந் தலைவன் பாற் கேட்க அறியாத என்பில்லாப் புழுமுதல் எல்லா உயிர்கட்குந் தானாகவே உளங்கனிந்து பல்வேறு வியத்தகு யாக்கை களையும் அவற்றின் நுகர்ச்சிக்குப் பல்வேறு வியத்தகு பண்டங்களையும் அமைத்து வைத்த முதல்வனின் அருட் பெருந்தகைமையினை ஆராய்ந்து நினையுந்தொறும் நினையுந் தொறும் அங்ஙனம் நினைவார்க்கு முன்னில்லாத ஓர் உள்ளக் கசிவும் ஓர் உள்ளக் களிப்புந் தோன்றுமேயல்லாமல், அதனின் மேற்பட்டு என்பெலாம் புரைபுரையுருக்கும் பேரின்ப நிலை தோன்றாது. இவ்வாறு நம்மனோர் தமது சிற்றறிவு முயற்சி கொண்டு எத்துணை தான் கடவுள் நிலையினை உணர்வாராயினும், அவர் அங்ஙனம் உணரும் உணர்ச்சிதான் இறைவனை அண்முதற்கு ஒரு வழியினைத் தோற்றுவிக்குமே யல்லாமல், அவன்றன் உண்மை நிலையினை வருவித்துக் காட்டமாட்டாது. மற்றுத் தமது சிற்றறிவுமுயற்சி அவிந்து சிவத்தையே களைகணாய்ப் பற்றி ஏசற்றிருப்பார்க்கே, சிவம் தானே முனைந்து தோன்றித் தன் முழுமுதல் இன்ப விளக்கத்தை அவரது உள்ளத்தில் ஏற்றிவைத்துத், தன் உண்மைநிலை முற்றும் அவர்க்கு நன்கினிது புலனாமாறு செய்யும்.

இவ்வாறு, சிவம் தானேவந்து அருள்செய்யப் பெற்றார் தம்முள் மாணிக்கவாசகப் பெருமானோ தாம் பெற்ற அப்பெறலரும் பேற்றைத் தம்மைச் சார்ந்த எம்போல்வா ரெல்லாம் எளிதிற் பெற் றின்புற்றிருக்குமாறு தாம் திருவாய் மலர்ந்த திருவாசகச் செந்தமிழ் மாமறைவழியே வழங்கிய வள்ளன்மை யுடைய ராகலின், அவர் எம்மனோர்க்குத் தலைக்கணியாய் நிற்குந் தனிமுதன்மை யுடையரென்பது நினைவிற் பதிக்கற்பாற்று. மாணிக்கவாசகரைப் போல் இறைவனைக் கண்டு அவனருளை முற்றப் பெற்றார் பலர் அவர்க்கு முன் இருந்தது உண்மையா யிருக்கலாமேனும், அவரெல்லாந் தாங் கண்ட அருட்பெருங்காட்சிகளையும், அவற்றால் தாம் பெற்ற பேரின்ப நிலைகளையும், இறைவன் தமக்குச் செய்த அருட்பேருதவிகளையும், தாம் இறைவற்கு ஆளாய் நின்று உருகின வகைகளையும் இவர்போற் செந்தமிழ்ப் பாக்களில் நிறைத்து யாமெல்லாம் பருகிக் களிக்க வழங்கியவரல்லர். மாணிக்க வாசகராற் கண்ணப்பன் ஒப்பதோர் அன்பு இன்மை கண்டபின் என்று உயர்த்துப் பாடப்பெற்ற கண்ணப்ப நாயனார்தம் ஒப்பற்ற அன்பின் நிலையினையும் பிறர் வாயிலாக அறியப்பெறுகின்றன வேயன்றி, அவர் உற்ற அவ்வன்பின் நிகழ்ச்சிகளை அவர் வாயிலாகவே அறியப் பெறுகின்றனம் இல்லையே! மற்று, மாணிக்கவாசகப் பெருமானோ தாம் இறைவனைக் கண்டடைந்த இன்ப நிகழ்ச்சிகளை யெல்லாம் நெஞ்சம் நெக்கு நெக்குருகக் கண்ணீர் ஆறாய்ப் பெருகக் குழைந்து குழைந்தலறித் தம் அருந்தமிழ்ச் செய்யுட்களில் மிழற்று கின்றார். இவரது இந் நிலையினை எளிதிலுணர விழைவார்க்கு,

ஓய்வலாதன உவமனில் இறந்தனஒண்மலர்த் தாள் தந்து,
நாயிலாகிய குலத்தினுங் கடைப்படும்என்னைநன் னெறி காட்டித்,
தாயிலாகிய இன்னருள் புரிந்தஎன்தலைவனை நனி காணேன்தீயில் வீழ்கிலன் திண்வரையுருள்கிலேன் செழுங்கடல் புகுவேனே.

என்று அவரருளிச்செய்த ஒரு திருவாசகச் செய்யுளே போதும், ஏனை எல்லா மக்கட்கும் புலனாகாத அருவ நிலையில் நிற்கும் இறைவன் தம்பொருட்டுக் கட்புலனாம் மேதகும் அருளுருவிற் றோன்றித் தமக்கு அருள்செய்து உடனே மறைந்து சென்றமையால், அவ்வருளுருவினை எந்நேரமுங் காணப்பெறாத ஆற்றாமையினை நனிகாணேன் என்னும் அருமைத் திருமொழிகளாற் புலப்படுத்தி அழுது அலறும் இச்செய்யுள், அவர் இறைவனைக்கண் டெய்திய பேரன்பின் பெருக்கினை எத்துணை வெளியாகக் காட்டிக், கல்லினும் வல்லென்ற நெஞ்சினையும் எத்துணையெளிதிற் கரைக்குந் தகையதாய் மிளிர்கின்றது!

தம்மாற் காணப்படாத ஒருவரின் குணநலங்களைக் கேட்டு அவர்பால் அன்புமீதூரப் பெற்ற மற்றொருவர் அவர் மாட்டு எத்துணைதான் அன்பு பூண்டு ஒழுகுவாராயினும், அவர்க்குள்ள அவ்வுள்ள நெகிழ்ச்சி அந் நண்பரை அவர் நேரே காணப்பெறுங்கால் அடையும் பேரின்பப் பெருக்கிற்கு ஒரு சிறிதும் ஒவ்வாது; அவரைக் காணாமுன் வைத்த அன்பு அவரைக் கண்டபின் கரைகடந்து பெருக, அதனை ஆற்றாராய் அம்மற்றவர் கண்ணீர் உகுந்துக் கதறியழுது ஆடிப்பாடித் தன்னை மறந்த தன்மையினராய்க் குழைந்து நீராயுருகும் நிலையினை நேரிற் கண்டுணர்ந்தவர்க்கே யாங் கூறும் இவ் வுண்மை தெற்றென விளங்கா நிற்கும். இங்ஙனமே, முழுமுதற் கடவுளின் அருட்பெருந் தன்மைகளை நேரே காணப்பெறாமல் உய்த்துணர்ந்தறிந்து அவ்வாற்றால் அவர்பால் அன்பு நிகழப் பெற்றார்க்குள்ள அன்பின் நிலை, அக்கடவுளைத் தம் கண்ணெதிரே கண்டு அவர் மாட்டுக் கரையிகந்து பெருகும் அன்புடையராயினார்க்கு மீதூரும் பேரின்ப நிலைக்கு ஒரு தினைத்தனையும் ஈடாகாது. மாணிக்கவாசகர் தாங் கண்ட இறைவன் திருவுருவினையும், அவ் வுருவின் நிறத்தினையும், அவ் வுருவின் அடையாளங்களையும் தாம் அருளிச் செய்த திருவாசகத்திற் பலகாலும் பலவிடத்தும் அடுத்தடுத்து ஓதுகின்றார்; அவற்றுட் சில இங்கே காட்டுதும்:-

எந்தாய் உன்றன்வண்ணந்தான் அதுகாட் வடிவுகாட்டிமலர்க்கழல்கள் அவைகாட்டி வழியற் றேனைத்திண்ணந்தான் பிறவாமற் காத்தாட்கொண்டாய்எம்பெருமான் என்சொல்லிச் சிந்திக்கேனே.
அரத்த மேனியாய் அருள்செய் அன்பரும்நீயும் அங்கெழுந்தருளி இங்கெனைஇருத்தினாய் முறையோ வென் எம்பிரான்

என்று திருச்சதகத்தும்,

கனவேயுந் தேவர்கள் காண்பரிய கனைகழலோன் புனவேயன வளைத் தோளியொடும் புகுந்தருளிநனவே எனைப்பிடித் தாட்கொண்டவா நயந்து நெஞ்சஞ்சினவேற்கண் நீர்மல்கத் தெள்ளேணங் கொட்டாமோ

என்று திருத்தெள்ளேணத்தும்,

நான் தனக்கு அன்பின்மை நானும்தானும் அறிவோம்தான் என்னை யாட்கொண்டது எல்லாருந் தாமறிவார்.
கருவாய் உலகினுக்கு அப்புறமாய் இப்புறத்தேமருவார் மலர்க்குழல் மாதினொடும் வந்தருளிஅருவாய் மறைபயில் அந்தணனாய் ஆண்டுகொண்டதிருவான தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ.
நானும் என்சிந்தையும் நாயகனுக்கு எவ்விடத்தோம்தானுந் தன்தையலுந் தாழ்சடையோன் ஆண்டிலனேல்

என்று திருக்கோத்தும்பியினும் போந்த அருமைத் திருமொழிகள் என்றும் நினைவிற் பதிக்கற்பாலனவாகும். இங்ஙனமாக, எவரானுங் காணப்படாத அரும்பெரும் பேரின்பக்கடலினை நேரேகண்டு அதன்கட் டிளைத்துப் பேரின்ப வுருவான அடிகள் அருளிச்செய்த திருவாசகம் அவர் நுகர்ந்த அப்பேரின்பத் தேறலைத் தன்னிற் பொதிந்து வைத்திருத்தலின், அதனைப் பருகுவா ரெல்லாம் அப்பேரின்ப நிலையினை எளிதில் எய்துவரென்பது சொல்லவும் வேண்டுமோ? இத்துணை விழுமிதான திருவாசகத்தை ஓதியும் உருகாத ஓருயிர் இருக்குமாயின், அதனைக் கல்லென்று கழறுதுமோ, அன்றி மண்ணென்று வகுக்குதுமோ, இரும்பென்று இயம்புதுமோ, சொன்மின்கள்!

மேலுங் கடவுளை நேரே காணாதவர்கள், காணாமையின், அதன் பேரின்பத்தை நுகர்ந்தறியாதவர்கள், பிறதுறையில் எவ்வளவுதான் சிறந்தவர்களாயினும், அவர்கள் பால் யாம் அப்பேரின்பச் செல்வத்தைப் பெறுதல்கூடுமோ? கூடாது. பெரும்பொற்றிரள் புதைந்ததோர் இடம் இக் கானகத்தின்கண் உளதென்று மட்டும் ஒருவாற்றா னறிந்து, அதன்கண் அஃதுள்ள இடம் இதுதான் என்று குறித்துணரமாட்டாது அல்லும் பகலும் அப் பொருளுக்காக ஏக்கற்று நின்று வருந்தும் ஒரு வறிஞன் மற்றையொரு வறிஞனுக்கு அதனை எடுத்துத்தர மாட்டுவனோ? இங்ஙனமே கடவுளைக் காணப்பெறாத ஆசிரியர்களைப் பின்பற்றிச் செல்வாரெல்லாருந் தாம் கருதிய பயனைப் பெறாமல் ஏமாந்து, மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கினவரோடு ஒப்பத் தம் அரும்பெறற் பிறவிப்பயனையும் இழப்பர். ஒருவன் உலகம் எல்லாம் பெற்றாலுந் தன் உயிரை இழந்து விடுவனாயின் யாது பயன்? என்று மேனாட்டு ஆசிரியரொருவர் வினாவியாங்குக், கடவுள் அல்லாத மற்றைப் பொருள்களின் உண்மையெல்லாம் ஒருவன் ஓராசிரியர்பால் உசாவித் தெளிந்தானாயினுந், தன் னுயிர்க்குயிராய் நின்று பிறவிகடோறுந் தனக்குப் பெருந் துணையாயிருந்து உதவுங் கடவுளின் உண்மைநிலையைத் தெளிந்திலனாயின், யாது பயன்? பொறுத்தற்கரிய விடாய்கொண்டு தீம்புனல்வேட்டு வருவான் ஒருவனுக்கு, அவன் வேண்டிய அந் நீரினைக் காட்டாமல், நீரின் நலங்களை மட்டும் விரித்து உரைத்துக் கொண்டிருப்பான் ஒருபேதை எதிர்ப்படின், அவன் இவன் சொல்லை ஒரு பொருட்டாகக் கருதிக் கேட்டு நிற்பனோ? நில்லானன்றே; தான் வேண்டிய குளிர்ந்த நீர்நிலையைக் காட்டும் ஏனையொருவனை நாடியேயன்றோ செல்வன். அதுவோல், நம்மைப் படைத்த நம் அப்பனைக் காணும் விழைவு மிக்கு அதனை ஆற்றாதே நிற்கும் நாமும், அவனைத் தாம் கண்டு நமக்குங் காட்டவல்ல உண்மை யாசிரியரைச் சார்ந்தன்றோ அப் பெறலரும் பேற்றைப் பெறுதல் வேண்டும்.

அத்தகைய உண்மையாசிரியன்மார் மாணிக்கவாசகரும் அவர்க்குப்பின் திருஞானசம்பந்தர் அப்பர் சுந்தரருமேயாதலை அவர்கள் அருளிச்செய்த திருவாசகந் தேவாரம் என்னும் அருட்செம் பாடல்களால் நன்கறியப் பெறுகின்றோம். கடவுளைக் கண்டவரின் நிலைகளும், அவர் கண்ட காட்சிகளும் அவர்தாமே எடுத்துரைக்க வல்லுநரன்றி, ஏனையோர் வல்லுநர் ஆகார். புதிது விரிந்த ஒரு கொழுந் தாமரை மலரின் நறுமணமும் பெருநலனும் அது தானே நமக்கு விளங்கக் காட்டி நம்மை இன்புறுத்துமல்லால், அவற்றை வாயாற் சொல்வா ரொருவர் அங்ஙனம் அவற்றைக் காட்டி நம்மை இன்புறுத்த மாட்டுவரோ? மேலும் ஓராசிரியரின் நிலைகளை எடுத்துரைக்கப் புகும் மற்றொருவர் அவர்பால் மிகுந்த பற்றுடையராயின், அவரை அளவிறப்பப் புகழ்தலோடமையாது; அவர் காணாதவைகளைக் கண்டனவாகவுஞ் செய்யாதவைகளைச் செய்தனவாகவுஞ் சொல்லி உண்மைக்கு மாறான பொய்களைப் புனைந்து கட்டிவிடுவர். அங்ஙனமே ஓராசிரியற்பாற் பகைமை கொண்டாரொருவருந் தம் பகைமையை வெளிக்காட்டாது அகத்தடக்கி அவர்தம் நிலைகளைக் கூறப் புகுவராயின், இவர் அவரைக் குறிப்பாலிகழ்தலோடமையாது, அவரிடத்தில்லாத குற்றங் குறைகளையெல்லாம் ஏற்றிப் பொய்யான பலவற்றையும் புனைந்து கட்டிவிடுவர். இவ்வாறாக, ஆசிரியரின் நிலைகளைக் கூறப் புகும் ஏனையோர் இருதிறத்தினராய் அவர்தம் உண்மை நிலைகளைப் புரட்டிவிடும் பெற்றியினராகவே பெரும்பாலுங் காணப்படுதலால், அவருரைகள் ஏற்கற்பாலன அல்ல. கடவுளைக் காண்டற்குரிய பேறு வாயாதவர்களையெல்லாம் அது வாய்த்தவர்களாகக் கட்டிவிட்டுப் பிறர் சொல்லிய கதைகட்கோர் அளவேயில்லை. ஆதலால், அத் தன்மையவாம் பொய்க்கதைகளுட் சேர்ந்தனவாகாமற், சைவசமய ஆசிரியன் மார் கடவுளை நேரே கண்டு தாம் எய்திய பேரின்ப நிலைகளும், தாம் பெற்ற அப் பேரின்ப நிலைகளை இவ் வையகமெல்லாம் பெறல் வேண்டுமெனக் கருதி அவர் செய்த செயற்கருஞ் செயல்களும் அவரருளிச் செய்த திருவாசக தேவாரச் செந்தமிழ் மாமறைகளிலிருந்தே நன்கு புலனாகிக் கமழ்தலால், அவர்தம் வரலாறுகளை ஆய்ந்துணரும் உணர்ச்சியொன்றே பிறவிக்கடலிற் கிடந்துழலும் நம்மனோரைப் பேரின்பக் கரையில் ஏற்றவல்லதா மென்பதை யாவருங் கடைப்பிடித்தல் வேண்டும்.

இனிச், சைவசமயாசிரியன்மார் நால்வருள்ளுந் திருஞான சம்பந்தப் பெருமான் மூன்றாண்டுச் சிறுகுழந்தையாயிருந்த போதே அம்மையப்பராம் இறைவன்றன் அருளுருவினை நேரே கண்டு, அருட்பால் ஊட்டப் பெற்றுப், பதினாறாயிரஞ் செந்தமிழ்த் தெய்வப்பாடல்களைப் பொழிந்து, கடவுள் இல்லையென்று பாழ்ங்கொள்கை பேசிய சமணராற் கடவுளை நம்பினார்க்கு இழைக்கப்பட்ட கொடுந் தீங்குகளை யெல்லாம் வியத்தகு கடவுளருள் நிகழ்ச்சிகளாற் சுவடறத் தொலைத்து, எல்லாம் வல்ல இறைவனருட் பேற்றிற்கு எல்லாரும் உரியராம்படி அவ் வருள் ஒளியை இத் தமிழ் நாடு யாங்கணுந் திகழச் செய்த அளப்பருந் தெய்வமாட்சியில் ஒப்பாரும் மிக்காரும் இலராயினும், அவர் திருவாய் மலர்ந்தருளிய தெய்வப் பாக்கள், மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவாசகத்தைப் போல் ஓதுவார் நெஞ்சத்தை உருக்குந் தகையஅல்ல. அஃது ஏனென்றால் திருஞானசம்பந்தர், இந் நிலவுலகின்கண் மக்கள் வாழ்க்கையில் அடுத்தடுத்துவருங் கவலை நோய் காமம் வெகுளி பொய் புரட்டுக் கொலை களவு துயர் முதலான பல்வேறு அல்லற் படுகுழிகளைக் கண்டு, அவற்றின் கட் கிடந்து துன்புறும் மக்கட் பகுப்பினர் தம் நிலைகளையெல்லாம் உணர்ந்தவர் அல்லர். இவ்வுலக வாழ்க்கையின் இடர்களை உணர்வதில்லாச் சிறு குழவிப் பருவத்திலேயே, அம்மையப்பர் அருளுருவினை நேரே கண்டு அதன்கட் டமது உணர்வு முற்றும் பதியப் பெற்றவர். உலக இயற்கைத் தோற்றங்களிலுள்ள அழகுகளும், இறைவன்றன் அருள்மாட்சிகளுமே இவர்தம் பாடல்களிற் பெரும்பாலுங் காணப்படுதற்கு இதுவே ஏதுவாகும்.

இவர் குழவிப் பருவங்கடந்து இளமைப்பருவத்தை எய்தியகாலத்தே. உலக வாழ்க்கையிலுள்ள துன்பங்கள் சில இவரது உணர்வுக்குப் புலனாகத் துவங்கினவென்பது, அப்போது அவரருளிச்செய்த சில திருப்பதிகங்களால் உய்த்துணரக் கிடப்பினுந், துன்பம் நிறைந்த இவ் வுலக வாழ்விற் பெரிதும் வெறுப்புற்று, அவர் தமது திருமணம் நிகழ்ந்த அஞ்ஞான்றே இறைவன் றிருவருளிற் கலந்திட்டா ராகலின், மக்களின் துன்ப நிலைகளையும், அவற்றினின்று திருவருளுதவியால் மீண்டு இறைவனருளைத் தலைக்கூடும் வகைகளையும் மாணிக்கவாசகரைப் போல் அத்துணை உருக்கமாக எடுத்து விரித்துப் பாடுதற்கு அவர் இடம்பெற்றிலர் மற்று, மாணிக்கவாசகரோ அவரைப் போல் தமது குழவிப் பருவத்திலேயே இறைவனைக் கண்டு, சிறிதுகாலத்தில் அவனருளிற் கலந்தவரல்லர். ஏனை மக்களுட் சிறந்த குடிப்பிறந்த மகாரைப்போல், அஞ்ஞான் றுள்ள கலைகளையெல்லாம் பல்லாண்டுகள் முயன்று கற்று அறிவு நிரம்பித், தாய்தந்தையர் சுற்றத்தவரால் மணஞ் செய்விக்கப் பெற்று, அவரிடையே செல்வவாழ்க்கையில் வாழ்ந்து, பின் பாண்டிய அரசற்கு அமைச்சராய் அமர்ந்து, உலகியலுள் விரசிக் காணப்படும் நலந் தீங்குகளையெல்லாம் மாறிமாறி நுகர்ந்து, பின்னர்ச் சடுதியிலே திருப்பெருந்துறையில் இறைவனைக் கண்ணாரக் காணப்பெற்று அவன் றிருவடிக்கு ஆளானவர்; இவ்வாறவர் உலகவாழ்வி னூடுசென்று சிவபிரான்றிரு வருளைப் பெற்ற குறிப்பு,

மாடுஞ் சுற்றமும் மற்றுள போகமும்மங்கையர் தம்மோடுங்கூடி அங்குள குணங்களால் ஏறுண்டுகுலாவியே திரிவேனைவீடு தந்துஎன்றன் வெந்தொழில் வீட்டிடமென்மலர்க் கழல் காட்டி,
ஆடுவித்துஎனது அகம்புகுந்து ஆண்டதோர்அற்புதம் அறியேனே

என்று அவர் தாமே அருளிச்செய்த திருப்பாட்டால் நன்கு விளங்கா நிற்கின்றது. இத்தகையதொரு செய்யுளைத் திருஞானசம்பந்தர் அருளிய திருப்பதிகங்களிற் காண்டல் அரிதினும் அரிது; மற்றுத், திருவாசகத்திலோ இன்னோரன்ன கருத்துக்கள் உள்ளடங்கிய செய்யுட்கள் பற்பல.

இங்ஙனம் மக்கள் வாழ்க்கையில் எங்குங் காணப்படுங் குற்றங் குறைகளை ஒருவர் நினைந்து, அத்துணைத் தீங்கு களையும் பொறுத்து எத்துணையுந் தூயனாகிய இறைவன் எத்துணையும் எளிய தம்மை ஒரு பொருட்டாக்கி ஆளும் அருட்டிறத்தையும் நினைந்து, அவை இரண்டனையும் ஒப்பிட்டு நோக்கி நெஞ்சம் நெக்கு நெக்குருகி அலறிப் பாடுவராயின் அவர் பாடும் அச் செய்யுட்களே, நமது சிறுமை யினையும் எல்லாம் வல்ல ஐயன்றன் அருட்பெரும் பெருமை யினையும் மறுதலைப் படுத்துக் காட்டி நமதுள்ளத்தை உருக்கி நம்மை இறைவன் றிருவடிக்கு ஆளாக்குவனவாகும். இவ்வாறு மக்கட்பிறவியின் இழிபினை இறைவன் முன்னிலையில் எடுத்தெடுத்து விளம்பி, அம் மக்களுள்ளத்தைக் கரைத்துத் தூய்மை செய்தற்கண் மாணிக்கவாசகர் திருவாசகத்துக்கு ஈடாவதொரு நூல் எம்மொழியினுமே இல்லை இதற்கு,

நடித்து மண்ணிடைப் பொய்யினைப் பலசெய்துநான்எனது எனும்மாயக்கடித்த வாயிலே நின்றுமுன் வினைமிகக்கழறியே திரிவேனைப்பிடித்து முன்நின்றுஅப் பெருமறை தேடியஅரும்பொருள் அடியேனைஅடித்துஅடித்துஅக் காரம்முன் தீற்றியஅற்புதம் அறியேனே

என்னும் ஆரமிர்தன்ன அடிகளின் திருபபாட்டே பின்னும் ஒரு சான்றாம்.

மேலும், அடிகள் இறைவனை முன்னிலைப்படுத்து அழுதுரைக்கும் பாக்களைப் போல்வன, ஏனை ஆசிரியன்மார் தேவாரத் திருப்பதிகங்களில் மிகுதியாயில்லை. அவர் அருளிச்செய்த திருப்பதிகங்களெல்லாம் பெரும்பாலுஞ் சிவபிரானைப் படர்க்கையிடத்துவைத்தே பரவுகின்றன. தன் தலைவன் முன்நின்று அவனை முன்னிலைப்படுத்து ஓர் அடியவன் தனக்குள்ள குற்றங் குறைகளை எடுத்து மொழிந்து அவனது அருளை வேண்டுங்கால், அவன் நெஞ்சம் நெகிழ்ந் துருகுமாறுபோல், தன் தலைவனைக் காணாவிடத்தே யிருந்து அவன் எத்துணைதான் தன் சிறுமையினையுந் தன் றலைவன்றன் அருட்பெருமையினையும் நினைந்து பார்ப்பினும் உரைப்பினும் அவன் நெஞ்சம் அத்துணை மிகுதியாய் உருகாது. இவ் வியற்கை மன நிகழ்ச்சிக்கு இசையவே, இறைவனை முன்னிலைப்படுத்துப் பாடிய அடிகளின் திருவாசகமுங் கன்னெஞ்சினையும் உருக்குந்திறம் பெறலாயிற்றென்றும். அவனைப் படர்க்கை யிடத்து வைத்துப் பாடிய ஏனையாசிரியன்மார் மூவரின் திருப்பதிகங்கள் அத்துணை யுருக்கம் பெரும்பாலும் வாயா வாயினவென்றும் அறிந்துகொள்ளல் வேண்டும். அதுவல்லாமலும், இறைவனைக் கண்ணாரக் கண்டு அவனுக்கு ஆளான காலந்தொட்டு, மாணிக்கவாசகர் தமக்கு எளியனாய் வந்த அவ் வாண்டவனுருவினைத் தமது அகக்கண் எதிரே ஓவாது கண்டு உருகுதற்கு உரியவரானார். திருப்பெருந்துறையிற் குருந்தமரநீழலில் அடியவர் குழாத்தொடும் போந்தமர்ந்து தம்மை ஆட்கொண்ட குருவடிவினையும் அதன்பிற் குதிரைகள் கொணர்ந்த வாணிகச்சாத்திற்குத் தலைவனாய் ஓரழகிய பரிமீது இவர்ந்து பாண்டியன்முன் போந்து தம்பொருட்டு அக்குதிரையின் பல்வேறு நடைகளையும் அவ்வரசன்முன் நடாத்திக்காட்டிய சேவகன் வடிவினையும், அதன்பின் மதுரைப் பிட்டுவாணிச்சி பொருட்டு மண்சுமக்குங் கொற்றாளாய்ப் போந்து பாண்டிவேந்தன் கையாற் பிரம்படியுங்கொண்டு மறைந்த ஐயனருமைத் திருவுருவினையும் மாணிக்கவாசகர் நேரே கண்டவராதலின், பொல்லாத புல்லறிவிற் கடைப்பட்ட மக்களுக்காகத், தேவர்க்கும் அரியனான சிவபிரான் அத்துணை எளியனாய் வந்து செய்த பேரருட்டிறத்தை நினைந்து நினைந்து ஆற்றா நிலையினராகி அவ் வாண்டவன்பால் வைத்த பேரன்பால் ஆவியோடு ஆக்கை புரைபுரை கனியப் பெற்றார். பலகாற் பல்லாருங் காணவந்து இறைவன் மாணிக்கவாசகர்க்கு அருள்செய்தவாறு போல் வேறெவர்க்குஞ் செய்திலன். இஃது அடிகளே,

கல்லாத புல்லறிவிற் கடைப்பட்ட நாயேனைவல்லாள னாய்வந்து வனப்பெய்தி யிருக்கும்வண்ணம் பல்லோருங் காணஎன்றன் பசுபாசம் அறுத்தானை எல்லோரும் இறைஞ்சுதில்லை யம்பலத்தே கண்டேனே

என்று அருளிச்செய்தவாற்றால் தெற்றென விளங்கா நிற்கின்றது. திருஞானசம்பந்தப்பெருமானுக்குப் புலனாய்த் தோன்றிய இறைவனுருவம் வேறெவர்க்கும் புலனாயிற்றில்லை. அப்பர்க்குத் தோன்றியதும் அப்பெற்றியதே, சுந்தரர்க்குப் பார்ப்பன முதியோனாய்த் திருமணப் பந்தலிற் றோன்றிய வடிவம் பல்லாருங் காண வந்ததொன்றே யாயினும், அது திருவெண்ணெய் நல்லூர்க்கு அவரை ஈர்த்துச் சென்று மறைந்தக்கால், அதனைக் கண்டு தெய்வமெனத் தெளிந்தவர் சுந்தரரைத் தவிர மற்றையோர் அல்லர். மற்று, மாணிக்கவாசகர் பொருட்டுக் குருவடிவிற் போந்து மறைந்த முதல்வனையோ எல்லாருங் கண்டனர்; கொற்றாளாய் வந்து பாண்டியன் கைப்பிரம்பால் அடியுண்டு மறைந்த கோலத்தினையும் அங்ஙனமே ஆண்டிருந்தாரெல்லாருங் கண்டு மெய்ம்மறந்த நிலையினரானார். அதனால், எல்லாம்வல்ல சிவபிரான் மாணிக்கவாசகர் பொருட்டு எல்லார்க்கும் எதிரே எளியனாய்த் தோன்றி மறைந்தாற்போல், வேறெவர் பொருட்டும் எங்கேனுஞ் செய்ததுண்டோ வெனின், அதற்குச் சான் றின்மையின், அவ்வாறு செய்ததில்லையென்பதே தேற்றமா மென்று முடிக்க.

இவ்வாறு, எல்லாம்வல்ல முழுமுதற்கடவுளை நேரே கண்டு அவற்கு அடிமையாகி அவன்மேற் குழைந்து குழைந்து அழுதழுது பாடிய மாணிக்கவாசகரின் திருவாசகத்தை ஓதியுருகாதார் நெஞ்சம் வேறெதனாலும் உருகா தென்பதுபற்றி யன்றோ,

திருவாசகத்தின் உருகார் மற்றொருவாசகத்தும் உருகார்

என்னும் பழமொழியும் யாண்டும் வழங்கி வருகின்றது. நெஞ்சக்கசிவு, நெஞ்சக்குழைவு இல்லாதவர்கட்கு அருளும் அன்பும் இரக்கமும் உண்டாகா; அவையில்லாதவர்கள் தம்மோடொத்த மக்களிடத்தும் ஏனைச் சிற்றுயிர்களிடத்தும் அருளும் அன்பும் இரக்கமும் உடையராகார்; இச்சிறந்த மென்குணங்கள் இல்லாதவர்கள் இம்மையிலும் இனிய வாழ்க்கையினை எய்தாராய் பெரிதுந் துன்புற்று மடிவதோடு, மறுமையிலும் இறைவனருளைப் பெறாராய் இழிந்த பிறவிகளிற் சென்று புகுந்து துன்புறாநிற்பர். தமக்கு இப் பிறவியைத் தந்த தலைவன்பால் நன்றிமிக்கு, அவனை உருகி வழுத்தாதவர்க்கு இம்மை மறுமையிரண்டிலும் இன்பமில்லையாத லாலும், தமக்குப் பேருதவி செய்த தலைவனை வணங்கி வழுத்துதல் விட்டுத் தம் தலைவனல்லாத மக்களையும் ஏனைச் சிற்றுயிர்களையுந் தம் தலைவனாகப் பிழைபடக் கொண்டு வழிபடுவார்க்கும் அங்ஙனமே இம்மை மறுமைப் பயன்கள் வாயாவாதலாலும், தந்தலைவன் இன்னவன்றான் என்றுணராருந் தமக்குத் தலைவனேயில்லையென்று மறுப்பாரு மான போலியாசிரியர்களைப் பின்பற்றி நிற்பார்க்கும் அங்ஙனமே இம்மை மறுமைப் பேறுகள் வாயாவாதல் திண்ணமாமாதலாலும், உலகுயிர்கட்கெல்லாம் ஒரே தலைவனாய்த் தாயுமிலி தந்தையிலியாத் தனிநிற்குஞ் சிவ பிரானை நேரேகண்டு அவன்பால் என்பெலாம் நெக்கு நெக்குருகப் பாடிய மாணிக்கவாசகர் தந் திருவாசகம் ஒன்றே நமக்கு இம்மை மறுமைப் பேறுகளெல்லாம் ஒருங்கே யுதவுமென்று கடைப்பிடித்தல் வேண்டும்.

இத்துணைச் சிறந்த தெய்வத் திருவாசகத்தையும் அதனை அருளிச்செய்த மாணிக்கவாசகப் பெருமானையும் இத் தென்றமிழ் நாட்டிலுள்ள நன்மக்கள் முறையே ஒப்புயர் வில்லாத் தமிழ்மறையாகவும் சமயாசிரியராகவும் வைத்து வழிபட்டுவருதல், அவர்தம் மெய்யறிவின் மாட்சியையே விளக்கிக் காட்டுகின்றது. ஏனை எந்த நாட்டவர்க்கும் வாயாத இவ் வரும்பெரும்பேறு தமக்கு வாய்த்திருத்தலை நன்குணர்ந்த தமிழ்மக்கள், திருப்பெருந்துறையில் உள்ள திருக்கோயிலில் மாணிக்க வாசகரையே சிவபிரானாக வைத்து வழிபாடு செய்துவருவது பெரிதும் போற்றற்பாலதொன்றாம். வெறு நாடகக்காப்பியம் இயற்றிய செகப்பிரியர் என்னும் ஆங்கில நல்லிசைப் புலவர் உயிர்வாழ்ந்த இல்லத்தையும் ஒரு கோயிலாக்கி, இவ் வுலகமெங்கணுமுள்ள ஆங்கில அறிஞர்கள் மெய்யன்புடன் அங்கே சென்று அங்கு அமைந்திருக்கும் அவர்தம் உருவத்தை வணங்கிச் செல்கின்றார்களென்றால், எவராலுங் காணமுடியாத கடவுளைக் கண்டு அவர்க்குந் தமக்கும் உண்டான கெழு தகைமைகளை யெல்லாம் எம்மனோர்க்குத் தெய்வத் தமிழ்ப் பாக்களால் தெளிய அறிவுறுத்திய இத்தெய்வ ஆசிரியர் மாணிக்கவாசகரை, இத்தென்றமிழ் நாட்டவரேயன்றி இவ்வுலக மெங்கணுமுள்ள அறிஞர்களெல்லாரும் வந்து வணங்கிப் பெறற்கரும் பேற்றைப் பெறுகவென்றழைத்தல் எம்மனோர்க்கு இன்றியமையாத கடமையன்றோ?

இத் தமிழ்நாடெங்கணு முள்ள மேன்மக்கள் மாணிக்க வாசகப் பெருமானை நாடோறும் வழிபட்டு அவரருளிச் செய்த திருவாசகத்தை இரவுபகல் இன்னிசையோடு ஓதி அதன் பொருளைத் தெரிந்து உருகிவருவதுடன், அவரது திரு வுருவத்திற்குத் திருவிழா எடுப்பித்தும், அவரது வரலாற்றினை எல்லாரு மறியச் சைவசமயம் நன்குணர்ந்த ஆசிரியரைக் கொண்டு சொல்வித்துந் தாம் பெறும் பேரின்பத்தை எல்லாரும் பெற்று இன்புறுமாறு செய்வது சைவசமயிகள் செய்தற்குரிய அறங்கள் எல்லாவற்றிலுஞ் சிறந்த தொன்றாகும்.

ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்துஆடும் தீர்த்தன் நற்றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும் கூத்தன் இவ்வானும் குவலயமும் எல்லோமும்காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள் ஆர்ப்பரவம் செய்ய அணி குழல்மேல் வண்டார்ப்பப் பூத்திகழும் பொய்கை குடைந்து உடையான் பொற்பாதம் ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடேலோர் எம்பாவாய்.

அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும் விண்ணோர் முடியின் மணித்தொகை வீறு அற்றாற்போல் கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத் தண்ணார் ஒளிமயங்கித் தாரகைகள் தாம் அகலப் பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர் விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்கண்ணார் அமுதமாய் நின்றான் கழல்பாடிப் பெண்ணே இப்பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்.

திருச்சிற்றம்பலம்.

★ ★ ★

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *