குமரிக்கோட்டம்
கா. ந. அண்ணாதுரை

III

கதிரவனைக் கண்டு கமலம் களிக்கும் என்பார்கள். காமத்துக்குப் பலியான குமரியின் முகத்திலே காலைக் கதிரவன் ஒளி பட்டபோது, இரவு நேரிட்ட சேஷ்டை யின் அடையாளங்கள், கன்னத்தில் வடுக்களாகத் தெரிந் தனவேயன்றி, முகம் மலர்ச்சியாகத் தெரியவில்லை. கண் திறந்தாள் ; புதியதோர் இடமாகத் தோன்றிற்று. திகைப்புடன் பார்த்தாள், செட்டியார் மீது சாய்ந்து கொண்டிருப்பதை. “ஐயோ” என்று அலறியபடி எழுந்திருக்கலானாள். செட்டியாரோ, “அன்பே !” என்று கூறி, அவளை மீண்டும் தம் மீது சாய்த்துக்கொண்டார் .

“பாதகா! பாவி! மோசம் போனேனே ! என்னமோ தின்னக் கொடுத்து விட்டு, என்னை இக்கதிக்கு ஆளாக்கினாயே, நீ நாசமாப் போக” என்று வசைமொழியை வீசியபடி, கைகளைப் பிசைந்து கொண்டு, கலங்கினாள் குமரி. செட்டியார் முகத்திலே அச்சமோ, கவலையோ தோன்றவில்லை. பரிபூரணத் திருப்தி தாண்டவமாடிற்று.

“குமரி ! கூச்சலிடாதே! உனக்குத்தான் தீமை அதனால், நடந்தது நடந்துவிட்டது” என்றார் அவர்.

”அட பாதகா! பதைக்காமல் துடிக்காமல் பேசுகிறாயே, ஒரு ஏழையின் வாழ்வை அழித்து விட்டு.

இதற்கா நீ பக்திமான் வேஷம் போட்டாய்? கோயில் கட்டினாய்? கதியற்ற பெண்களைக் கற்பழிக்கத்தானா, கோயில் கட்ட ஆரம்பித்தாய்? ஐயோ! நான் என்ன செய்வேன் ! நீ கொடுத்த லேகியம், என் புத்தியைக் கெடுத்து, உன் மிருகத்தனத்துக்கு என்னைப் பலியாக்கி விட்டதே” என்று பதறினாள் குமரி.

”குமரி ! நானும் இதுவரை இப்படிப்பட்ட காரியத்தில் ஈடுபட்டவனல்ல. யாரை வேண்டுமானாலும் கேட்டுப்பார் – என்னமோ விதிவசம் இப்படி நேரிட்டு விட்டது” என்றார் குழந்தைவேலர்.

“விதி! என்னைக் கெடுத்துவிட்டு, நிலை தவறச் செய்து என்னை இந்தக் கதிக்கு ஆளாக்கிவிட்டு, விதியின் மீதா பழி போடுகிறாய்! உன் மகளை, இப்படி ஒருவன் கெடுத்தால், நீ செய்து விட்ட அக்ரமத்தை ஆண்டவனும் கேட்கமாட்டாரா? பாவி! கோயிலிலே, இந்த அக்ரமத்தை நடத்தினாயே, உனக்கு நல்ல கதி கிடைக்குமா?” என்று அழுது கொண்டே கேட்டாள்

குமரி.

“ஆண்டவன் கேட்பானேன்? இதோ, நான் கேட் கிறேன் ” என்று ஒரு குரல் கேட்டு, இருவரும் திடுக் கிட்டுப் பார்க்க, அறை வாயிற்படியில் கோபமே உரு வெடுத்து வந்தது போல, சொக்கன் நின்று கொண்டிருந்தான்.

”அண்ணா ! மோசம் போனேன்” என்று அலறித் துடித்துக்கொண்டு, அவன் கால்களைப் பீடித்துக் கொண் டாள் குமரி.

‘சீ! நாயே ! குலத்தைக் கெடுத்த கழுதே” என்று கூவி, காலை உதறினான்; குமரி ஒருபக்கம் போய் வீழ்ந்தாள்.

”நடந்தது நடந்து விட்டது! ஏனய்யா செட்டியாரே ! அவ்வளவுதான் உனக்குச் சமாதானம் கூறக் தெரிந்தது? எவ்வளவு திமிர் இருந்தால், ஒரு கன்னிப் பெண்ணைக் கற்பழித்துவிட்டு, ஏதோ கைதவறிக் கீழே உருண்டு விட்டதால் செம்பிலே இருந்த பால் கீழே கொட்டி விட்டதற்குச் சமாதானம் சொல்வதுபோல, நடந்தது நடந்துவிட்டது என்று கூறத் துணிவு பிறக்கும் உனக்கு? என்னை வெளியூர் போகச் சொல்லி விட்டு, விடிவதற்குள், இவளை விபசாரியாக்கி விட்டாய். நடந்தது நடந்துவிட்டது ! நாயே ! இனி நடக்க வேண்டியதைச் சொல் ‘; என்று செட்டியார் மீது பாய்ந்தான். அவர் அவன் காலில் விழுந்து, “அப்பா ! நீ என்னை எது செய்தாலும் தகும். நான் செய்துவிட்ட அக்ரமத்துக்கு எவ்வளவு வேண்டுமானாலும் என்னைத் தண்டிக்கலாம். காமாந்தகாரத்தால் நான் இந்த அந்நியாத்தைச் செய்து விட்டேன்,” என்று புலம்பினார்.

“காமாந்தகாரம்! அதை இந்த ஏழைப் பெண்ணிடம் காட்டவா, கோயில் ! ஊரெல்லாம் உன்னை உத்தமன் என்று புகழ்கிறது : பாவி, நீ என் குடும்பத்துக்குச் சனியனாக வந்தாயே நடந்தது நடந்து விட்டது என்றாயே ! நினைத்துப் பாரடா பாதகா, நீ செய்த காரியத்தை. ஏமாளிப்பெண் ஒருத்தியை, ஏழையை. கூலி வேலை செய்ய வந்தவளைக் கற்பழித்திருக்கிறாய்,

நீ ஆயிரம் கோயில் கட்டி என்ன பிரயோஜனம்? உனக்குத் தாய், தங்கை, அக்கா, யாரும் கிடையாதா? குமரி, எல்வளவு களங்கமற்றவள், கொடியவனே ! அவளை இக்கதிக்குக் கொண்டு வந்தாயே !” என்று சொக்கன் ஆத்திரத்துடன் பேசிக்கொண்டே, செட்டியாரைத் தாக்கினான்.

“சர்வேஸ்வரா! ஐயோ அப்பா! வேண்டாமடா. சொக்கா! நான் தாளமாட்டேண்டா, உயிர் போகிறதடா, உன் காலைக் குடும்பிடுகிறேனடா! நீ என்ன செய்யச் சொல்கிறாயோ அதைச் செய்கிறேண்டா? அப்பா சொக்கா, நான் பாவிதான், என்னைக் கொல்லாதே என்று செட்டியார் கூவினார்.

“சொல்வதைச் செய்கிறாயா? ஆனால் கேள். குமரி யைப் பலரறியக் கலியாணம் செய்துகொள்” என்று காஜித்தான் சொக்கன்.

“கலியாணமா? ஐயோ: அடுக்காதே ; என்றார் செட்டியார், கீழே வீழ்ந்து கிடந்த குமரியின் கூந்தலைப் பிடித்து அவளைத் தூக்கி நிறுத்தி, “இது அடுக்குமா? இவளைக் கெடுத்து விட்டு, பிறகு யார் தலையிலாவது கட்டுவது அடுக்குமா?” என்று சொக்கன் கேட்டான். குமரியின் கண்களிலே வழியும் நீரையும் கண்டார் செட்டியார் : இங்கே புனல், சொக்கனின் கண்களிலே அனல் : “ஆண்டவனே ! நான் என்ன செய்வேன்?;, என்று அழுகுரலுடன் கூறிக்கொண்டே தலையிலே அடித்துக்கொண்டார்.

“அக்ரமக்காரா! அடிக்கடி ஆண்டவனை ஏன் கூப்பிடுகிறாய்? அனாதைப் பெண்களை ஆலயத்திலே கற்பழிக்கும் உனக்கு ஆண்டவன் பெயரைக்கூடச் சொல்லத் தோன்றுகிறதா? இனி நடக்க வேண்டியதைச் சொல்” என்று சொக்கன் சீறினான்.

“அப்பா! என் பேச்சைக் கொஞ்சம் கேள் ; நான் ஏதோ புத்தியில்லாமல் இக்காரியம் செய்து விட்டேன். நான் குமரியைக் கைவிடுவதில்லை ; கடைசிவரை காப்பாற்றுகிறேன் …………..”

“உன் கூத்தியாராகச் சொல்லுகிறாயா? என் எதிரிலே என் தங்கையை வைப்பாட்டியாக்கு என்று கேட்குமளவு உனக்குத் துணிவு பிறந்ததா?”

“வேறென்ன செய்வது, சொக்கா ! நான் வைசிய குலம். ஊருக்கெல்லாம் ஜாதியாச்சாரத்தைப்பற்றிப் பேசுபவன், வேறு ஜாதிப் பெண்ணைக் கலியாணம் செய்து கொண்டதற்காகச் சொந்த மகனையே வீட்டை விட்டுத் துரத்தியவன் …………”

“அதனால் ………..?”

“எங்கள் குலத்தவர் ஆச்சாரம் கெடக்கூடாதே ! உலகம் என்னைப் பழிக்குமே, குடும்பமே இழிவாக்கப் படுமே!”

“என் குடும்பத்திலே நீ செய்து வைத்த காரியத் துக்கு, ஊரார் எங்களுக்கு மகுடம் சூட்டுவார்களா? மடையா ! ஒரு பெண்ணின் கற்பை அழிக்கத் துணிந்து விட்டு, குலப் பெருமை, குடும்பப் பெருமைகளைக் கூறுகிறாயே, மானமின்றி, ஈவு இரக்கமின்றி!”

“நான் வைசிய குலம்………….”

“நான் உப்பிரஜாதி …………”

“உப்பிரஜாதியில் பெண் கொள்ளும் வழக்கம், வைசிய குலத்தில் கிடையாதே. பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த குடும்பம். எங்கள் குடும்பத்திலே ஜாதியைவிட்டு ஜாதியில் கலியாணம் செய்வதில்லையே.”

எங்கள் குலத்திலும் குடும்பத்திலும் காமப் பித்தம் பிடித்தவர்களுக்குப் பலியாவதற்காகப் பெண் களைப் பெற்றெடுக்கிறார்களா? என்ன திமிர் உனக்கு? உன்னிடம் அதிகம் பேசப்போவதில்லை. ஒரு வாரத் துக்குள், முடிவு சொல்லியாக வேண்டும் ; இல்லையானால், உன்னையும் இந்தக் கள்ளியையும் கொன்றுவிட்டு, நானும் சாக வேண்டியது தான். சொக்கன் சொன்னால்

சொன்னதுதான்.”

சொக்கன் குமரியை இழுத்துக்கொண்டு வெளியே சென்றான் புலி போல. செட்டியார் கவிழ்ந்து படுத்துக் கொண்டு கதறினார்.

இச்சம்பவம், ஜாடை மாடையாகக் கூலியாட்களுக்குத் தெரிந்துவிட்டது. கோபத்தால் சிவந்த கண்களுடன் சொக்கன் இருந்தது கண்டு, சகலருக்கும் பயம் பிடித்துக்கொண்டது. ஒரு வார்த்தை கேலி பேசினாலும் போதும், சொக்கன் கொன்றுவிடுவான் என்று அஞ்சினர். மீனா வேலைக்கே வரவில்லை, குமரிக்கோ காய்ச்சல். செட்டியாரோ, சாவு வரவில்லையே என்று தவித்தபடி இருந்தார். ஒன்று, இரண்டு, மூன்று என்று நாட்களை எண்ணிக்கொண்டிருந்தான் சொக்கன்.

ஐந்தாம் நாள் அதிகாலையில் சொக்கன் திடுக்கிட்டுப் போனான், குமரியைக் காணாமல் ; எங்கெங்கோ தேடிப் பார்த்தான், கிடைக்கவில்லை; செட்டியாரிடம் சென்றான், “குமரி எங்கே?” என்று கேட்டான். “தெரியாதே” என்று குளறினார்.

“கற்பழித்ததுமன்றிக் கொலையும் செய்து விட்டாயா? குமரியை எந்தக் குளத்திலே தள்ளிவிட்டாய்? சொல். உன்னை விட மாட்டேன். பழிக்குப் பழி வாங்கியே தீருவேன்” என்று ஆத்திரமாகப் பேசிச் செட்டியாரின் கழுத்தை நெரிக்கலானான் சொக்கன். செட்டியார் ”சிவனாணை யாக எனக்கொன்றும் தெரியாதே. நான் இன்று தான், அவளைக் கலியாணம் செய்து கொள்வது, ஜாதி பேதத் தைப்பற்றிக் கவலை இல்லை என்று தீர்மானித்தேன்’ என்று கூறிக் கதறினார். செட்டியாரை விட்டு விட்டு, சொக்கன் ஓடினான் வெளியே, உலகிலே எந்தக் கோடி யிலிருந்தாலும் குமரியைக் கண்டுபிடித்துவிடுவது என்ற உறுதியுடன்.

சொக்கனுடைய சுபாவம் நன்கு தெரியும் குமரிக்கு. ஆகவே, எங்காவது ஓடி விடவேண்டும், அப்போதுதான் செட்டியார் தப்புவார் என்று எண்ணிய குமரி, இரவு நடுநிசிக்குப் பிறகு, சொக்கனுக்குத் தெரியாமல் வீட்டை விட்டு ஓடிவிட்டாள். செட்டியார் தன்னைக் கலியாணம் செய்து கொள்வதென்பது முடியாத காரியம் என்பது அவள் எண்ணம். பொழுது விடிவதற்குள், இரண்டோர் கிராமங்களைத் தாண்டி விட்டாள். பாதையிலே நடந்தால் யாராவது தெரிந்தவர்கள் பார்த்துவிடுவார்கள் என்று பயந்து, வயலோரம், ஒற்றை அடிப் பாதை, கொடிவழி இவைகளாகப் பார்த்து நடந்து, மறுதினம் இரவு ஒரு பெரிய கிராமம் போய்ச் சேர்ந்தாள். பசியால் களைத்துக் கீழே வீழ்ந்தாள். அந்தப் பரிதாபக் காட்சியைக் கண்ட

கிராமத்தானொருவன், அவளுக்குக் கஞ்சி கொடுத்து, ‘யார், என்ன’ என்று விசாரித்தான். “ஓடிவந்து விட்டேன் – குடும்பச் சண்டை ” என்றாள் குமரி “தாலி இல்லையே’ என்று அவன் கேட்டான். “கட்ட வில்லை ” என்று குமரி கூறிவிட்டு அழுதாள்.

” அழாதே பெண்ணே, இந்தப் புத்தி முதலிலேயே இருக்க வேண்டும். போனது போகட்டும். என் வீட்டுக்கு வா; அங்கே ஊருக்கு உபகாரம் செய்யும் உத்தமர் ஒருவர் வந்திருக்கிறார். அவரிடம் நியாயம் கேட்போம் வா” என்று ஆறுதல் கூறிக் குமரியை அவன் அழைத்துச் சென்றான். குமரிக்கு அவன் பேச்சும் ஒரு விதமான லேகியமோ, என்று பயமாகத்தான் இருந்தது. அவன் குறிப்பாக அதை உணர்ந்து “நான் உன் தகப்பன் போல, பயப்படாமல் வா” என்று தைரியம் கூறி வீட்டுக்கு அழைத்துச் சென்றான். அவன் வீட்டுத் திண்ணையிலும், மேடையிலும் கிராமத்து மக்கள் ஐம்பது அறுபது பேருக்குக் கூடியிருந்தார்கள். அவர்களிடம் அன்புடன் பழனி பேசிக் கொண்டிருந்தான்.

“ஐயாவுக்குத்தானே சொல்வது. உலகத்திலே நடக்கிற அநீதிகளை எல்லாம் சொல்லிவர்ரிங்களே. இதோ இந்தக் கொழந்தை சொல்ற அன்யாயத்தைக் கேளுங்க . கேட்டு விட்டு ஒரு வழி சொல்லுங்க” என்று கிராமத்தான் பழனியிடம் கூறினான். பலபேர் எதிரிலே தன் கதையைக் கூற, அவள் கூச்சமடைவது தெரிந்த பழனி, கூட்டத்தைக் கலைந்து போகச் சொல்லிவிட்டு. குமரியின் சேதியைக் கேட்டுத் தெரிந்து கொண்டு திகைப்படைந்தான்.

“அம்மா, நீ எனக்குச் சிற்றன்னை” என்று பழனி சொல்லக்கேட்டு, மெய்சிலிர்த்தது குமரிக்கு . “வேடிக்கை அல்ல, அவர் என் தகப்பனார்தான்” என்றான் பழனி . “நீங்கதானே யாரோ பெண்ணுடன் …………….” என்று கேட்டாள் குமரி “ஓடிவிட்டேன். என் மனைவி சேரிப் புறம் போயிருக்கிறாள், வந்து விடுவாள். நீ கவலைப் படாதே. நான் உன் பொருட்டு என் தகப்பனாரிடம் சென்று வாதாடத் தீர்மானித்துவிட்டேன். ‘காதல்’ என்பது மகா பாதகம், ஜாதிக் கட்டுப்பாடே பெரிது என்று சொல்லிவந்தவர், தனக்கே ஒரு காலத்தில் காதல்’ ஏற்படக்கூடும் என்று எண்ணியிருக்க மாட்டார். இதமாகச் சொன்னால், எல்லாம் நன்மையாகவே முடியும். நீ சோகிக்காதே, தைரியமாக இரு’ என்று கூறினான்.

மறுதினம், பழனி தன் மனைவி நாகவல்லியுடன் குமரியையும், கிராமப் பெரியவர்கள் பத்துப்பேரையும் அழைத்துக்கொண்டு, மறையூர் சென்று, தந்தையைச் சந்தித்தான். வெட்கம், துக்கம், பயம் என்னும் பலவித உணர்ச்சிகளால் தாக்கப்பட்ட குழந்தைவேல் செட்டியாரால் பழனியிடம் பேசவும் முடியவில்லை.

“பழனி! எனக்கு, என்ன சொல்வதென்றே புரிய வில்லை. உன்னை நான் கொடுமைப் படுத்தினேன், குமரியைக் கெடுத்தேன், நான் எவ்வளவு தண்டனைக்கும் தயாராக வேண்டியவன். அவ்வளவுதான் பேச முடியும் என்னால்” என்றார். பழனி தகப்பனாரைச் சமாதானப் படுத்திவிட்டு, சொக்கனைக் கண்டுபிடித்து வருமாறு சிலரை அனுப்பிவிட்டு. தந்தையின் கலியாணத்துக்கான ஏற்பாடுகளைத் துவக்கினான். ஜாதியைப் பற்றிய பேச்சையே, செட்டியார் எடுக்கவில்லை. குமரிக்கு, ஏதோ ஒரு கனவு உலகில் இருப்பது போலத் தோன்றிற்று.

மறையூர் வைதிகர்கள் பதைபதைத்தனர். ”வைசிய குல திலகர், பக்திமான் செட்டியார், உப்பிரஜாதிப் பெண்ணைக் கலியாணம் செய்து கொள்வதா? அடுக்குமா இந்த அனாச்சாரம்? அது, நமது திவ்ய க்ஷேத்திரத்தில் நடப்பதா?” என்று கூக்குரலிட்டனர். செட்டியாரைச்

சபித்தனர். ஊரிலே இந்தக் கலியாணம் நடைபெற்றால், பெரிய கலகம் நடக்கும் என்று கூவினர். பழனி, மறை யூரிலும் சுற்றுப்பக்கத்திலும் சென்று ஜாதி குலம் என்ப தெல்லாம் வீணர்களின் கட்டுக்கதை என்பதை விளக்கிப் பேசினான், கலகம் கல்லடி இவைகளைப் பொருட்படுத்தாமல். ஆதார பூர்வமான அவனுடைய பிரசங்கத்தைக் கேட்டு, பெரும்பாலான மக்கள், அவனுக்கு ஆதரவுதர முன் வந்தனர். வைதிகர்கள் பயந்து போயினர், ஜனசக்தி, பழனிபக்கம் குவிவது கண்டு. “இதுபோன்ற இனிமையான அறிவுக்கு விருந்தான் பிரசங்கத்தை நான் இது வரை கேட்டதே இல்லை. உன்னை மகனாகப் பெற்ற நான் உண்மையிலேயே பாக்கியசாலி” என்று கூறிப் பூரித்தார், குழந்தைவேல் செட்டியார். தாழையூர் சத்சங்கத்தின் தூதர் ஒருவர், மறையூர் வந்து சேர்ந்து செட்டியாரைச் சந்தித்து, அவருடைய செயலைத் தடுக்க முயற்சித்தார்.

செட்டியாரோ, பழனி பிரசங்கத்திலே கூறின வாதங்களை வீசி, அந்த வைதிகரை விரட்டினார். வெகுண்ட வைதிகர்கள், கோயிலை இடிப்போம் என்று ஆர்ப்பரித்தனர் கூலி மக்களும், தாழ்த்தப்பட்டவர் களும், கலப்பு மணம் செய்து கொள்ளச் சம்மதித்த செட்டியாருக்குப் பட்டாளமானது கண்டு, கோபம் கொண்டு, ஓர் இரவு அவர்கள் வசித்த குடிசைகளுக்கு தீயிட்டனர். குய்யோ முறையோ என்று கூவி, மக்கள் ஓடி வந்தனர். எங்கும் தீ ! பசு, கன்று, வெந்தன. பாண் டம் பழஞ்சாமான் தீய்ந்தன. பழனியும் அவன் நண்பர் களும், தீ விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்றி வீடு வாசல் இழந்தவர்களனைவரையும், அரைகுறையாக இருந்த கோயிலுக்கு அழைத்துச் சென்று, இனி அங்கேயே இருக்கலாம் என்று கூறினர்.

கலியாணம் சிறப்பாக நடைபெற்றது. சொக்கன் சந்தோஷத்தால் மெய்மறந்தான். குமரிக்கு நடப்பது உண்மையா கனவா, என்று அடிக்கடி சந்தேகமே வந்தது. மறையூர் வைதிகர்கள் அன்று “துக்கதினம் ” கொண்டாடினர்.

நாகவல்லி குமரிக்கு ஆசிரியையானாள். குமரியின் மனம், மொட்டு மலர்வதுபோல ஆகிவிட்டது. கோயில் வேலை நின்று இருந்தது. “என்ன செய்வது இனி?” என்று பழனியைச் செட்டியார் யோசனை கேட்டார். “என்ன இருக்கிறது செய்ய?” என்று பழனி கேட்டான். “ஆலயத் திருப்பணி அறைகுரையாகவே இருக் கிறதே” என்று செட்டியார் சொன்னார். “கட்டடம் அரைகுறையாக இருக்கிறது; ஆனால் ஆண்டவன் இங்கே கோயில் கொண்டு விட்டார். ஏழைகளின் இல்லமாக இந்த இடம் ஆக்கப்பட்டபோதே இங்கு இறைவன், அபிஷேகமின்றி, ஆராதனையின்றி, வேதபாராயண மின்றி, தானாகச் சந்தோஷத்துடன் வந்து விட்டார் ” என்றான் பழனி. மகனைக் கட்டி அணைத்துக் கொண்டு, “உன் அறிவே அறிவு! இப்படிப்பட்ட உத்தமனை நான், ஊரிலே உலவும் சில வைதிக உலுத்தர் பேச்சைக் கேட்டுக்கொண்டு, இம்சித்தேன். நற்குணம் படைத்த நாகவல்லியைத் துன்புறச் செய்தேன்.” என்று உருக்கமாகச் செட்டியார் பேசினார்.

“அப்பா! தாங்கள் தீர்மானித்தபடி சொத்து முழுவதும் கோயில் காரியத்துக்கே செலவிடப்பட வேண்டி யதுதான். ஆலயம் கட்டும் வேலையும் தொடர்ந்து நடத்த வேண்டியதுதான்………….” என்று பழனி கூறிக் கொண்டே இருக்கையில், குழந்தை வேலர் குறுக்கிட்டு, “நம் சொத்தைப் பாழாக்கிக் கோயில் கட்டி, குலம் ஜாதி பேசி சமூகத்தைக் குலைத்து வரும் வைதிகர்களிடம் சொடுப்பதா?” என்று கோபத்துடன் கேட்டார். குழந்தைவேலர், சுயமரியாதை இயக்க வக்கீலானது கண்டு, பழனி களித்தான்.

“ஆலயம் கட்ட வேண்டியதுதான் அப்பா. ஆனால் அதன் அமைப்பிலே சில மாறுதல்கள் செய்துவிட வேண்டும். ஆயிரக்கால் மண்டபத்துக்கு ஆரம்ப ஏற்பாடகிவிட்டது, அது கட்டி முடிக்க இன்னும் கொஞ்சம் வேலை தான் பாக்கி. முடிந்த பிறகு, அதனை வௌவால் வாழுமிட மாக்கிவிடாமல், சிறுவர்களுக்கு அதனைப் பள்ளிக்கூடமாக்கி விடலாம். நாகா, வேறு பள்ளிக்கூடம் தேடவேண்டியதில்லை. பிராகாரம். சிறு சிறு விடுதிகளாட்டும், பட்டாளி மக்கள் குடி இருக்க, குளம் இங்கே வாழும் மக்கள் குளிக்குமிடமாகும். இங்கு அபிஷேகமும் உற்சவமும் நடப்பதற்குப் பதில் அன்பும் அறிவும் பரப்பும் பிரசார ஸ்தாபனம் அமைப் போம். அப்பா ! தாங்கள் குமாரக்கோட்டம் கட்ட ஆரம்பித்தீர்கள். அது குமரிக்கோட்டமாக மாறி விட்டது. ஜாதி பேதம் ஒழிந்த இடமாக, காதல் வாழ்க் கைக் கூடமாக, மாறுகிறது. இதுதான் இனி . இந்த மாவட்ட சுயமரியாதைச் சங்க கட்டடம் ; நமது’ பிரசார இலாக்கா” என்றான்.

“பேஷ்! பழனி ! அற்புதமான யோசனை. ஆலயம் அமைத்து அதிலே, வைதிகர்கள் ஊர்ச் சொத்தை விரயம் செய்வதற்கு வழி செய்யும் வழக்கத்தை நாம் ஒழித்து விடுவோம், முதலில், இது அறிவாலயமாக, அன்பு ஆலயமாக மாறிவிட்டது” என்று செட்டியார் சந்தோஷத் துடன் கூறினார்.

“குமரக்கோட்டம் அமைத்தால், இங்கு கொட்டு முழக்கம், குருக்களின் தர்பாரும், இருந்திருக்குமே யொழியப் பலன் ஏதும் இராது. குமரியின் அன்புதக் கட்டுப்பட்டு, ஜாதியை குலத்தைத் தள்ளிவிட்ட தாங்கள், இப்போது குமரிக்கோட்டம் அமைத்து விட்டீர். நமது குலத்தவர் இதுவரை எத்தனையோ கோட்டங்கள் அமைத்தனர். ஒருவரேனும், இதுபோன்ற குமரிக் கோட்டம் கட்டினதில்லை. அந்தப் பெருமை தங்களுக்கே கிடைத்தது ” என்றான் பழனி .

“பழனி என் கண்களைத் திறத்தவன் நீ,” என்று கனிவுடன் கூறினார் செட்டியார்.

வேறொர் புறத்திலே, நாகவல்லி குமரியின் கன்னத்தைக் கிள்ளிக்கொண்டே “பலே பேர்வழி நீ குமரி. உன் பெயரால் கோயிலே கட்டுகிறார்கள் பாரடி ‘ என்று கேலி செய்து கொண்டிருந்தாள்.

” அவர்கள் சொல்வது தவறு அம்மா! இதற்குப் பெயர் பழனி ஆண்டவர் கோயில் என்று இருக்க வேண்டும்’ என்று சாமர்த்தியமாகப் பதிலுரைத்தாள் குமரி.

” அப்படிப் பார்க்கப்போனால், அதுகூடப் பொருந் தாது. ‘லேகிய மண்டபம் : என்ற பெயர்தான் ரொம்பப் பொருத்தம்’ என்று கூறிவிட்டு ஓடினாள் நாகவல்லி. அவளைத் துரத்திக்கொண்டு குமரி ஓடினாள். தந்தையும் மகனும் அந்தக் காட்சியைக் கண்டு ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகை புரிந்தனர்!

★ ★ ★

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *