

குறிஞ்சிக் கிழவன்
கி. வா. ஜகந்நாதன்
முகவுரை
அருணகிரிநாதர் முருகன் அருளில் மூழ்கித் திளைத்தவர். அதுமாத்திரம் அன்று. சிறந்த புலமை உடையவர். அவருடைய திருவாக்கைக் கூர்ந்து ஆராய்ந்தால் தென்மொழியிலும் வட மொழியிலும் ஒருங்கே புலமை பெற்றவர் என்பதை உணரலாம். பழங்காலத்தில் அராகம், வண்ணம், வகுப்பு, முடுகு என்ற பெயரோடு அங்கங்கே சந்த அமைப்பையுடைய கவிகள் இருந்தாலும் முழுவதும் சந்தம் அமைந்த திருப்புகழைப் போலச் சந்தக் கவி பாடியவர்கள் மிக அரியர். அதுவும் ஒரு பாட்டா, இரண்டு பாட்டா? பதினாயிரம் திருப்புகழ்களையல்லவா மேகம் போலப் பொழிந்து தள்ளியிருக்கிறார்? தமிழர்களுடைய இழவூழால் அவற்றில் பெரும்பாலன மறைந்தன. சற்றேறக்குறைய 1300 பாடல்களே இப்போது கிடைத்திருக்கின்றன.
பிரபுடதேவராயன் காலத்தில் வாழ்ந்தவர் அருணகிரிநாதர். அம்மன்னன் 16-ஆவது நூற்றாண்டில் வாழ்ந்தவன் என்று தெரிய வருகிறது. அக்காலத்தில் கருநாடக அரசர்கள் இப்பக்கத்தில் ஆண்டதனால் கன்னடத்துக்கு அதிகச் சலுகை இருந்து வந்தது. அப்போது தமிழில் வில்லிபுத்தூரார் சிறந்த கவிஞராகத் திகழ்ந்தார். அவருடைய வாக்கில் முடுகு நடை விரவிய கவிகள் பல உண்டு. அருணகிரிநாதர் வெள்ளம் போலச் சந்தக் கவியைப் பாடிய காலமாதலின் வில்லிபுத்துரரும் சந்த விருத்தங்களைப் பாடினர் போலும்!
புதிய வகையில் சந்தக் கவி பாடியது மாத்திரமன்று; முருகனைப் பற்றியே அவ்வளவு பாடல்களையும் பாடினார். அதற்குமுன் முருகனைத் துதித்த பாடல்கள் தமிழில் இருந்தாலும் ஒரே புலவர் இத்துணைப் பாடல்களைப் பாடவில்லை. அதற்கு முன் முருகனைப் பற்றிப் பாடிய கவிகளைத் தொகுத்துப் பார்த்தால் அத்தனைக் கவிகளுக்கும் அதிகமாகவே அருணகிரியார் பாடினார் என்பது தெரியவரும். அருண்கிரியார் பாடலில் இது இரண்டாவது சிறப்பு.
மூன்றாவது அவருடைய சமரச இயல்பு. தேவாரம், திவ்யப் பிரபந்தமாகிய அருள் நூல்களிற் கூட ஏனைய சமயத்தார் உள்ளம் புண்படும் இடங்கள் இருக்கலாம். ஆனால் அருணகிரிநாதர் பாடல்களில் எல்லாத் தெய்வங்களும் போற்றப் பெறுகின்றனர். சாதன வகைகளாகிய சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கைப் பற்றிய செய்திகளையும் அவற்றில் காணலாம். வடமொழி தென்மொழி இணைப்பு, பழமை புதுமை இணைப்பு, இசை இயல் இணைப்பு, சைவ வைணவ இணைப்பு, யோக ஞான இணைப்பு, உலகியல் பதியியல் இணைப்பு முதலிய பல இணைப்புகள் அருணகிரியார் திருவாக்கில் ஒளிவிடும். காழ்ப்பின்றி யாவரையும் தழுவிக் கொண்டு சமரச நெறியிலே வாழ்வதை விரும்பும் இக்காலத்துச் சான்றோர்க்கு உவப்பைத் தருவது அவர் பாடல்.
இந்தப் பண்புகள் அனைத்தும் கந்தர் அலங்காரத்தில் விரவியிருத்தலைக் காணலாம். இதில் உள்ள பாடல்கள் கட்டளைக் கலித்துறை என்னும் கலிப்பா இனத்தைச் சேர்ந்தவை. ஆயினும் பல பாடல்களில் சந்த அமைதி இருக்கிறது.
“சேராநிட் டூரனைச் சூரனைக் காருடற் சோரிகக்கக்
கூரகட் டாரியிட் டோரிமைப் போதினிற் கொன்றவனே”
என்ற பாட்டினில் தானனத் தானனத் தானனத் தானனத் என்ற சந்தம் அமைந்திருக்கிறது. வேறு சில பாடல்களும் உண்டு.
சிவபுராணச் செய்திகளும் கந்த புராண வரலாறுகளும் பாரத ராமாயணத்தில் வரும் நிகழ்ச்சிகளும் திருப்புகழிலும் உண்டு; மற்ற நூல்களிலும் உண்டு.
இந்தப் புத்தகத்தில் நான்கு பாடல்களுக்குரிய விளக்கங்கள் இருக்கின்றன. ஐந்து பகைவர், குறிஞ்சிக் கிழவன், தனிப்பரமானந்தம், பேய் விளையாட்டு என்ற தலைப்பில் அவ்விளக்கங்கள் இதில் உள்ளன. பாட்டின் பொருளை மாத்திரம் பதவுரையாகவோ பொழிப்புரையாகவோ எழுதிவிடுவது மிக எளிது. இந்த நான்கும் சொற்பொழிவாகச் செய்த விளக்கம்.
ஆதலால், சொல்லுக்குப் பொருள் உரைப்பதோடு நில்லாமல் அங்கங்கே உள்ள பொருள்களை வேறு செய்திகளோடு சார்த்தி விளக்கும் முறையில் இச்சொற்பொழிவுகள் அமைந்திருக்கின்றன. கந்த புராணத்திலுள்ள வரலாறுகள் வருமிடங்களில் அவற்றின் உள்ளுறையை என் அறிவுக்குப் புலனாகிய அளவுக்கு விளக்கியிருக்கிறேன். நம் நாட்டில் வழங்கும் புராணங்களில் வரும் கதைகள் நம்பத்தகாதன, குருட்டு நம்பிக்கையினால் எழுந்தன என்று சிலர் சொல்லுவார்கள். மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட நிகழ்ச்சிகளை வைத்துப் புனைந்த கற்பனைக் கதைகள் பல உண்டு; அத்தகைய அபூத கற்பனைகளில் வரும் நிகழ்ச்சிகள் முன்பு நடந்தவை அல்ல; இனியும் நடக்கப் போவன அல்ல. ஆனாலும் அவற்றைப் படித்து இன்புறுகிறார்கள் இக் காலத்து மக்கள். கதைகளில் பாத்திரங்களின் இயல்புகளும் அடிப்படையான உண்மைகளும் உள்ளுறையாக அமைந்திருப்பதால் அவற்றைத் தெரிந்து மகிழ்ச்சியடைகிறார்கள். அதே தெளிவு புராணக் கதைகளிலும் காணலாம். அவற்றிலுள்ள வரலாறுகள் அனைத்தும் அப்படியே நிகழ்ந்தன என்று கொள்ள வேண்டியது இன்றியமையாததன்று. அவற்றினூடே உள்ள கருத்துக்களை, அக்கதைகள் எந்த உண்மையை வெளிப்படுத்த அமைந்தனவோ அந்தக் குறிப்புக்களை, உணர்ந்தால் இப்போது தோன்றும் அபூத கற்பனைகளைச் சுவைப்பது போலவே புராணக் கதைகளையும் சுவைக்கலாம்.
புராணத்தில் வரும் கதைகள் இந்த நாட்டுக்கு மாத்திரமே உரியன என்பதற்கும் இல்லை. எல்லா நாடுகளிலும் எல்லாச் சமயங்களிலும் எல்லா மொழிகளிலும் இத்தகைய கதைகள் உண்டு. இந்தக் கதைகளை எண்ணித் தங்கள் சமய நெறிகளை இழிவாகக் கருதுபவர் யாரும் இல்லை. மற்ற நாட்டுக் கதைகளினூடே உள்ளுறை இருக்கிறதோ இல்லையோ, திட்டமாகச் சொல்ல இயலாது. இந்த நாட்டுக் கதைகளுக்கு நிச்சயமாகத் தத்துவார்த்தம் உண்டு. மூர்த்திகளின் உருவ வேறுபாடுகளுக்குத் தனித்தனியே உள்ளுறை உண்டு, கோயிலின் அமைப்புக்கும், வழிபாட்டு முறைக்கும், விழாக்களுக்கும், கடவுளின் பல்வேறு திருஉருவங்களுக்கும், திருவிளையாடல்களுக்கும் உள்ளே நுட்பமாக அமைந்த கருத்துக்கள் உண்டு. அக்கருத்துக்களை கருவாகக் கொண்டு உருவெடுத்தவை அவை. பொதுவாக இந்திய நாட்டின் கலைகள் யாவுமே உள்ளுறையுடன் அமைந்த குறிப்புக் கலைகளே (Suggestive Art). ஆதலின் புராணக் கதைகளின் சிறப்பை அறிய வேண்டுமானால் மேலெழுந்த வாரியாகப் பார்த்து, “இது என்ன பைத்தியக்காரக் கதை” என்று புறக்கணிக்கக் கூடாது. “இதன் கருத்து யாது?” என்று கூர்ந்து ஆராய வேண்டும். நம்முடைய சமய உண்மைகளை நிலைக்களமாக வைத்துக் கொண்டு ஒப்பு நோக்க வேண்டும். அப்போது உள்ளுறை விளங்கும். நுண்பொருளைப் பருப்பொருளாகக் காட்டியிருக்கும் கலைத்திறத்தைப் பாராட்டிப் போற்றும் நிலைக்கு வந்துவிடுவோம்.
இப்புத்தகத்தில் சில இடங்களில் புராண வரலாறுகளின் உள்ளுறையை ஒரளவுக்கு விளக்கியிருக்கிறேன். சொற்பொழிவுகளினிடை விளக்கியவையே அவை.
இலக்கிய சம்பந்தமான செய்திகளையும் அங்கங்கே விளக்கியிருக்கிறேன். ஐந்திணையைப் பற்றிய செய்திகள், முருகனைக் குறிஞ்சித் தெய்வமாக வைத்துப் போற்றும் மரபு, விழுப்புண், கள வேள்வி முதலியவற்றை இலக்கிய இலக்கண நூல்களிற் கண்ட பொருள்களோடு வைத்துக் காட்டி விளக்க முயன்றிருக்கிறேன்.
நான் எழுதியுள்ள திருமுறை மலர்கள் என்ற வெளியீடுகளிலும், வேறு சில நூல்களிலும் காணும் கருத்துக்கள் சில இதில் அங்கங்கே வந்திருக்கலாம். ஒரு கருத்தைப் பல இடங்களில் விளக்க வேண்டி வரும்போது இது மாற்ற முடியாதது என்பது அன்பர்களுக்குத் தெரியும்.
சமய சம்பந்தமான கருத்துக்கள் நுட்பமானவை. அவற்றை விளக்குவது எளிதன்று. பெரியோர்களின் திருவாக்குகளை மேற்கோள் காட்டினால் மாத்திரம் போதாது. ஆதலின், வாழ்க்கையில் நாம் நேரே அறியும் நிகழ்ச்சிகளை உவமையாக வைத்துப் பல கருத்துக்களை விளக்கியிருக்கிறேன். பழம் புலவர்கள் கூறுவனவற்றைப் புதிய முறையில் அமைத்துக் காட்டும் இடங்களும், முழுதும் புதியனவாகவே உவமை கூறி விளக்கும் இடங்களும் இதில் உண்டு.
இவை சொற்பொழிவுகளானமையால் ஒரு பொருளைப் பல வகையில் விளக்கிச் சொல்ல வேண்டியது அவசியமாயிற்று. உவமைகளும், உதாரணங்களும் மேற்கொள்ளும் கருத்துக்களை விளக்க உதவி புரிகின்றன. வாழ்க்கை நிகழ்ச்சிகளிலிருந்து எடுத்துக் காட்டும் உவமைகளால் பொருள் விளங்குவதைப் போல, மற்ற எதனாலும் அவ்வளவு தெளிவாக விளங்குவதிலை. அதனால் பல பல உவமைகளைப் பேச்சினிடையே பயன்படுத்துவது என் வழக்கமாகிவிட்டது.
எழுதும் கட்டுரையில் உள்ள செறிவு இதில் இல்லாமல் இருக்கலாம்; ஆனால் விளங்காத பகுதி ஒன்றும் இதில் இராதென்றே எண்ணுகிறேன். பேச்சைக் கேட்கும்போது உண்டாகும் அநுபவம் வேறு. பேச்சில் தொனி வேறுபாடுகளும், பேசுபவனுக்கு நேரே கேட்பவர்கள் இருந்து ஒரு முகமாகக் கவனிக்கும் வாய்ப்பும் உண்டு. அதனால் பேச்சில் ஓரளவு சுவை பிறக்கிறது. அந்த வாய்ப்புக் கட்டுரைகளுக்கு இல்லை. ஆனாலும் பன்முறை படித்துப் படித்து இன்புற இயலும்.
இதற்கு முன் வெளியிட்ட “அலங்காரம்” என்னும் புத்தகத்தில் உள்ள சொற்பொழிவுகளைச் சுருக்கெழுத்தில் எடுத்துத்தந்த என் அன்பர் திரு. அனந்தன் அவர்களே இந்தப் புத்தகத்தில் உள்ளவற்றையும் எடுத்தார். அவருடைய அன்பை அளவிட்டுச் சொல்வது இயலாத காரியம். ஒன்றரை மணி நேரம் விடாமல் சுருக்கெழுத்து எழுதிப் பிறகு அதைத் தட்டெழுத்தில் வார்த்துத் தர வெறும் ஆற்றல் மாத்திரம் இருந்தால் போதாது; தனியான அன்பு இருப்பதனால்தான் இது அவருக்குச் சாத்தியமாகிறது. அந்த அன்பும் அவர் ஆற்றலும் அவர் நலங்களும் முருகன் திருவருளால் மேன்மேலும் வளர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
தேனாம்பேட்டையில் உள்ள பாலசுப்பிரமணியர் திருக்கோயிலில் வாரந்தோறும் வியாழக்கிழமையன்று இரவு ஏழு மணி முதல் எட்டரை மணி வரையில் இந்தச் சொற்பொழிவுகளை நிகழ்த்தி வருகிறேன். ஒன்றரை மணி நேரம் பொறுமையோடு இருந்து கேட்கும் அன்பர்கள் என் உள்ளத்தே ஊக்கம் உண்டாகும்படி செய்கிறார்கள். அவ்வப்போது அவர்கள் காட்டும் களிப்புக் குறிப்பு அவ்வூக்கத்துக்கு உரமூட்டுகிறது. வழக்கம்போல் ஒவ்வொரு வாரமும் என்னை அன்புடன் வரவேற்றுச் சொற்பொழிவு இனிது நிகழும்படி வேண்டியவற்றைச் செய்யும் தர்மகர்த்தர்களாகிய ஸ்ரீ சந்திரசேகரன், ஸ்ரீ நரசிம்மன், ஸ்ரீ நாயகர் ஆகியவர்களுடைய பேரன்பை நான் பாராட்டக் கடமைப்பட்டவன். அவர்களுக்கு என் நன்றியறிவைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் புத்தகத்தில் விளக்கப் பெற்ற பாடல்கள் நான்கே. ஆனால் விரிக்கப் பெற்ற பொருள்கள் பல என்பதை அன்பர்கள் உணர்வார்கள் என்று நம்புகிறேன். உள்ளுறையைப் பார்த்தால் இது விளங்கும்.
முருகன் திருவருள் யாண்டும் மலிவதாகுக.
கி.வா. ஜகந்நாதன்



