
ஆபுத்திரன் அல்லது புண்ணியராஜன்
ஆ. கார்மேகக் கோனார்
பண்டைக்காலத்தில் வாரணாசி என்ற சிறப்புப் பெயர் பெற்ற காசிமா நகரத்தில் ‘அபஞ்சிகன்’ என்னும் அந்தணன் ஒருவன் இருந்தான். அவன் இளம் பருவத்திலேயே நல்லாசிரியரை அடைந்து, வேதங்களையெல்லாம் வழுவறக்கற்று வேதபாரங்கதனாய், ‘ஆரண உபாத்தியாயன்’ என்னும் பட்டமும் பெற்றான். பின்பு அவன் ஆசிரியர் அநுமதியால் நல்லறமாகிய இல்லறம் நடத்தக்கருதி, வாழ்க்கைத் துணையாகச் சாலினி என்னும் ஒரு பார்ப்பனியை மணந்து வாழ்ந்துவந்தான்.
அங்ஙனம் வாழுநாளில், அவன் மனைவியாகிய சாலினி, மகளிர்க்கு இன்றியமையாத கற்பொழுக்கத்தினின்று வழுவிக் கணவனுக்குப் பெருந்தீங்கிழைத்தவளானாள். அது பற்றி அவள் அச்சமும், நாணமும், துக்கமும் கொண்டு, அப்பாவத்தைத் தீர்த்துக் கொள்ளக்கருதி, குற்றம்செய்த குலமகளிர் அக்குற்றத்றைப் போக்குதற்குக் குமரித் தீர்த்தம் ஆடச்செல்லும் அக்கால வழக்கப்படி தான் கன்னியாகுமரியில் நீராடவேண்டுமெனத் துணிந்தாள். துணிந்தபடியே தான் கர்ப்பிணியாயிருந்தும் அதனையுங் கருதாது, ஒருவரும் அறியாவண்ணம் அவள் அகத்தைவிட்டு வெளியேறிப் பிரயாணமானாள். அங்ஙனம் புறப்பட்ட பார்ப்பனி, பல ஊர்களையுங் கடந்து வருகின்றவள் பாண்டியநாட்டுக் கொற்கை நகரத்துக்கருகிலுள்ள ஆயர் சேரிக்கு அருகில் வரும்பொழுது ஓர் ஆண் குழந்தையைப் பெற்றாள். பெற்ற அவள்,
“கடந்த ஞானியும் கடப்பரோ மக்கள்மேற் காதல்“
எனப் பெரியோர் கூறியிருக்கவும், தாய்க்குப் பிள்ளைகள் மீது உண்டாகும் இயற்கை அன்பும், இரக்கமும் ஒரு சிறிதும் இல்லாது, அக் குழந்தையை ஒரு தோட்டத்தில் போட்டு விட்டுக் குமரித் துறையை நாடி நீங்கினள். நீங்கவே அக்குழவி உணவு பெறாமையால் பசிமிகுந்து வருந்தி அழுதது. அச்சமயம் அத்தோட்டத்தின் பக்கத்தில் பசும்புல் மேய்ந்து நின்ற ஒரு பசுவானது, அக்குழந்தையின் அழுகை யொலியைக்கேட்டு, அருகில் வந்து, அதன் வருத்தம் தீர நாவால் நக்கித் தன் பால் மடியைக் குழந்தையின் வாயிலிட்டுப் பாலூட்டி, ஏழு நாள் வரையும் அப்புறம் இப்புறம் செல்லாது, அன்போடு பாதுகாத்துக் கொண்டிருந்தது.
அவ்விதமிருக்கையில், வயனங்கோடு என்னும் ஊரிலிருந்து தன் மனைவியோடு வழிவருகின்ற ‘பூதி’ என்னும் அந்தணன் ஒருவன் அக்குழந்தையின் அழுகை ஒலியைக் கேட்டுச்சென்று, யாருமின்றித் தனியே கிடக்கும் அதைக் கண்டு மிக்க துன்பத்தோடு கண்ணீர் உகுத்து, ‘இவன் பசுமகன் அல்லன்; என்மகனே’ என்று சொல்லி, வறியோர் புதையற்பொருள் பெற்றதுபோல் பெருமகிழ்வுபூண்டான்; பின்பு புத்திரசெல்வத்தை வழியிடையே கொடுத்து உதவிய இறைவன் திருவருளைச் சிந்தித்துத் தொழுது, அக்குழந்தையை எடுத்துத் தோள்மீது அணைத்து, உவகையோடு விரைந்து தன்னூர் சென்று, வீடு சேர்ந்தான். சேர்ந்த அவன், அப்பிள்ளைக்கு ‘ஆபுத்திரன்’ என நாமம் சூட்டி, அதனை மிகுந்த ஆசையுடன் ‘வறியன் ஒரு செய்வாளன் அச்செய்விளையக் காக்கும் அதுபோலப் போற்றிப்புனைந்து வளர்த்துவந்தான், குழந்தை இளம்பிறை போல் வளர்ந்து, ஐந்தாண்டு நிரம்பியது. பூதியும் புதல்வனை உபநயனம் செய்வதற்கு முன்னரே எல்லாக் கலைகளையும் வேதங்களையும் நன்கு பயில்வித்தான். ஆபுத்திரனும் அவற்றையெல்லாம் ஐயம் திரிபு முதலிய குற்றமறக்கற்று, அன்பு, அருள், வாய்மை, அடக்கம் முதலிய நற்குணங்களையே பொற்கலனாகப் பூண்டு ஒழுகுவானாயினான்.
இங்ஙனம் அவன் ஒழுகிவருநாளிலே அவ்வூரிலுள்ள ஓர் அந்தணன் வேள்வி செய்யக்கருதி, ஒரு பசுவைக் கொண்டு வந்து தன் வீட்டினுள் கட்டிவைத்திருந்தான். இதனையறிந்த ஆபுத்திரன் அப்பசுவை அம்மரண வேதனையினின்றும் விடுவிக்கக் கருதி, அவ்வந்தணன் அகத்தினுள் புகுந்தான். புகுந்த அவன், யாக சாலைக்கருகில் மாலை சுற்றிய கொம்புகளையுடையதாய்த் தனக்கு நேரவிருக்கும் மரண துன்பத்தைக் கருதி, அஞ்சிக் கதறி, வேடர் வலையில் அகப்பட்ட மான் பிணைபோல் வருந்திக்கொண்டிருந்த அப் பசுவைக் கண்டான், கண்டவுடன் ‘அந்தோ! என்னே ! இந்த அந்தணர் தம் செந்தண்மை’ என மனம் இரங்கி, ‘இப் பசுவை மரணவேதனையினின்றும் நீக்குமாறு களவால் நடு இரவில் கவர்ந்து செல்வேன்’ எனத் தனக்குள் நினைத்தான். அங்ஙனமே அவ்வந்தணன் வீட்டில் ஒரு பக்கத்தில் தங்கியிருந்து, அன்றிரவில் பசுவைக் கைப்பற்றிப் பருக்கைக் கற்கள் நிரம்பிய காட்டு வழியாக ஊருக்குப் புறத்தே சிறிதுதூரம் கொண்டுபோய் விட்டான். பின்பு அந்தணர் கள், யாகப் பசுவைக் காணாது துணுக்குற்று, நாற்புறத்தும் தேடி அலைந்து, ஓரிடத்தில் அப்பசுபாலகனேப் பசுவோடு அகப்படுத்திக்கொண்டார்கள், பின்னர் அவர்கள், ஆபுத்திரன் கருத்தை அறியாமல், அவனே நோக்கிப், “புலைச்சிறுவா! இப்பசுவை இரவில் எதற்காகக் கவர்ந்து கொண்டு வந்தாய்?” நீ செய்த இத்தொழில் தீயதொழில் அல்லவா?’ எனப் பலவாறு வெறுத்துரைத்துக் கோலால் அடித்துத் துன்புறுத்தத் தொடங்கினர்கள். அப்பொழுது ஆபுத்திரனே அதிகமாக அடித்து வருத்தும் ஒர் அந்தண உபாத்தியாயனைப் பசு, தன் கொம்பால் குத்திக் குடரை வெளிப்படுத்திவிட்டுக் காட்டிற்குள் பாய்ந்து விரைந்தோடிவிட்டது.
பின்னும் அதிகமாக வருத்திய அவர்களை நோக்கி, ஆபுத்திரன், “வருத்தாதீர்கள்: யான் சொல்வகைக் கேளுங்கள்; நீங்கள் இப்பசுவை வருத்தத் துணிந்தீர்களே ! இது உங்களுக்கு யாது குற்றஞ் செய்தது? மேய்ச்சல் புலங்களில் தானாக வளர்ந்த புல்லைத்தின்று, உலகத்து மாந்தர்கட்கெல்லாம் தான் பிறந்த நாள் முதலாகச் சிறந்த தன் தீம்பாலை இளகிய மனத்தோடு சுரந்தளித்து உண்பிக்கும் இப்புண்ணிய ஜெந்துவாகிய பசுவுடன் உங்களுக்கு உண்டான பகை என்ன? பசுக்களைக் கொன்று ஆயிரம் வேள்வி செய்து அடையும் பயனை ஓர் உயிரையும் கொல்லாமையாகிய தருமத்தால் அடையலாமே! இச்செயலை நீங்கள் கடைப்பிடியீராயின் உங்களுக்கு அந்தணர் என்னும் பெயர் எவ்வாறு பொருந்தும்?” எனப் பலவிதமான நீதிகளைக் கூறி, அவர்களை அருள்வழியில் ஒழுகுமாறு செய்ய முயன்றான்.
அந்தணர்களோ, அவனது சொற்களுள் ஒன்றையுங் கேளாது, அவனே நோக்கி, “நீ வேதங்களைக் கற்றுணர்ந்தும் வேத வேள்வியை நிந்தனை செய்யும் பேதையாய் இருக்கின்றாய். ஆதலால், நீ பசுமகன் என்பதற்குச் சாலவும் பொருத்த முள்ளவனாகக் காணப்படுகின்றாய்” என்று இகழ்ந்து கூறினார்கள். அவ்விதம் கூறலும் ஆபுத்திரன், “பசுவின் மகன் அசலமுனிவன், மானின் மகன் சிருங்கி முனிவன், நரியின் மகன் கேசகம்பள முனிவன்; இவர்களை நீங்கள் உங்கள் குலத்து முனிசிரேஷ்டர்களென்று சிறப்பித்துக் கூறவில்லையா? பசுவின் வயிற்றில் பிறந்ததால் வந்த இழிவு யாது? ‘கள்ளி வயிற்றில் அகில் பிறக்கும்’ என்ற மூதுரையை நீங்கள் அறிவீர்களோ? என்று கூறித் தன்னை இகழ்ந்த அவர்கள் வாயை அடக்கினான்.
அப்போது அங்குள்ள அந்தணர்களுள் ஒருவன், “ஒ! இவன் பிறப்பின் வரலாற்று முறையை நான் அறிவேன்; முன்னொரு நாள் குமரித் தீர்த்தத்தில் விதிப்படி மூழ்கிக் குமரித்தெய்வத்தை வணங்கிவிட்டு, வருத்தமிகுந்து, வரும் சாலி என்னும் ஒரு பார்ப்பனியைக் கண்டு, ‘உன் ஊர் யாது ? நீ எதற்காக இங்கு வந்தாய்? வாட்டத்திற்குக் காரணம் என்ன?’ என்று நான் கேட்டதற்கு அவள், ‘யான் வாரணாசி என்னும் ஊரிலுள்ள ஆரண உபாத்தியாயன் அபஞ்சிகன் என்னும் அந்தணனது மனைவி; யானொழுகிய தீய ஒழுக்கத்தால் கணவனைப் பிரிந்து, கன்னியாகுமரிக்கு நீராடச்சென்றேன்; செல்லுகையில் பாண்டியரது கொற்கை நகரத்துக்கு அப்பால் ஒருகாத தூரத்திலுள்ள ஆயர்பாடியிலே ஆண் மகவு ஒன்றைப்பெற்று, இரக்கமின்றி அதனை ஆங்குள்ள ஒரு தோட்டத்தில் இட்டுச்சென்றேன்; இப்படிப் பட்ட தீவினையாட்டியாகிய எனக்கு நற்கதியும் உண்டோ?’ என்று மிகத் துன்பமுற்று அழுதாள்; அவள் பெற்ற அந்த மகனே இவன்; இதில் சிறிதும் ஐயம் இல்லை; இதைவெளிப் படுத்தலால் யாது பயன்’ எனக்கருதி, இதுகாறும் உங்களுக்குச் சொல்லாதிருந்தேன்; அசுத்தனாதலால் இவனைத் தீண்டாது நீங்குங்கள்” என்று சொன்னான்.
ஆபுத்திரன் அதுகேட்டு, ”முனி சிரேஷ்டர்களாகிய அகஸ்தியரும் வசிஷ்டரும் தேவகணிகையாகிய திலோத்தமையின் புத்திரர்கள் என்பதனை அறியீர்களோ ? சாலிக்குத் தவறுகூறத் துணிந்தீர்களே’ என்றுகூறி, அவர்களை நோக்கி நகைத்தான்.
வளர்த்த பூதி அந்தணனும் அவனைப் புலைமகளென்று தன் அகத்துக்கு வரவொட்டாது தடுத்துவிட்டான். பின்னர் ஆபுத்திரன், ஆதரிப்பார் ஒருவருமின்றி, இரந்துண்டு காலங்கழிக்கக்கருதி, பிச்சைப் பாத்திரத்தைக் கையிலேந்தி, வீடுகள் தோறுஞ் சென்றான். அவனே அந்தணர்கள் ‘பசுவைத் திருடின கள்வன்’ என்று இகழ்ந்து, தங்கள் ஊர்களில் எல்லாம் அன்னம் இடாமல் பிச்சைப் பாத்திரத்தில் கல்லைப்போடத் தொடங்கினர்கள். அதனல், அவன் வேறு புகலின்றிப் பாண்டியரது இராஜதானியாகிய மதுரையம்பதியை அடைந்து, ஆங்குள்ள சிந்தாதேவியின் (சரஸ்வதி) கோயிலாகிய கலைநியமத்தின் எதிரேயுள்ள அம்பலப் பீடிகையைச் (பொதுநிலையம்) சேர்ந்து, அதனையே தனக்கு உறைவிடமாகக்கொண்டு, கையிற் பிச்சைப்பாத்திரமேந்தி, இல்லங்கள் தோறும் சென்று சென்று, வாங்கி வந்த உணவை, அவ்வம்பலத்தில் அமர்ந்து “எ! அந்தகர்களே! முடவர்களே! அகதிகளே! நோயாளிகளே யாவரும் வம்மின், வம்மின்” என இரக்கத்துடன் கூவி அழைத்து, அவர்களை அன்புடன் உண்பித்து, எஞ்சிய மிச்சத்தையே தானுண்டு, பிச்சைப் பாத்திரத்தைத் தலையணையாக வைத் துக்கொண்டு, இரவில் அவ்வம்பலத்திலேயே நித்திரை செய்து காலங்கழித்து வந்தான்.
அங்ஙனம் அவன் காலங்கழித்து வருநாளிலே ஒரு நாள் மழை பெய்துகொண்டிருக்கும் நள்ளிரவில் சிலர் வந்து, ஆபுத்திரனிடம் “எங்களைப் பசி வருத்துகின்றது” என்று வருந்திக்கூறினர்கள். யாசக உணவல்லாமல் வேறு உணவு இல்லோனாகிய ஆபுத்திரன், அவரது பசியாற்றும் ஆற்றல் இல்லாதவனாய் மிகவருத்தமுற்றான். அச்சமயத்தில் கலை நியமத்தில் கோயில்கொண்டிருக்கும் சிந்தாதேவி, எழுங்தருளி வந்து ”எட! வருந்தாதே; இதனைக் கொள்வாயாக; காடெல்லாம் மழைவளங்குன்றிப் பஞ்சம் உற்றாலும் இந்த ஓடுவறுமையை அடையாது; கொடுக்கக் கொடுக்க உணவு வளர்ந்துகொண்டே வரும்” என்று சொல்லித் தன்கையிலுள்ள அக்ஷயபாத்திரம் என்னும் ஓர் பாத்திரத்தை அவன் கையிற் கொடுத்தாள். உடனே அவன் அதைப்பணிவுடன் வாங்கி எல்லையில்லா மகிழ்ச்சியடைந்து,
“சிந்தா தேவி செழுங்கல நியமத்து
நந்தா விளக்கே! நாமிசைப் பாவாய்!
வானேர் தலைவி! மண்ணுேர் முதல்வி
ஏனேர் உற்ற இடர் களைவாய்!”
என்று துதித்து, அத்தேவியைத் தொழுது, பசியால் வருந்தித் தன்னிடம் வந்த அவர்களே உண்பித்து, அந்நாள் தொட்டு, முட்டின்றி எல்லா உயிர்க்கும் உணவளிப்பானாயினான். உண்பதற்காக மனிதர்கள் பலர் அவனைச் சூழ்ந்து கொண்டார்கள். பறவைகளும், விலங்குகளும் அவனே விட்டகலாது அன்புடன் சுற்றிக்கொண்டன. இவன் உணவூட்டும் ஒசை இடையின்றி ஒலித்துக்கொண்டேயிருந்தது;
அதனால் அவன் பட்சிசாலம் பயன் கொள்ளப் பழுத்த ஆலமரம்போல் விளங்குவானாயினான்.
இங்ஙனம் இவன் இடைவிடாது புரிந்த வரும் புண்ணியச் செயலை இந்திரன் தனது பாண்டு கம்பள [பாண்டு கம்பளம்-வெள்ளைக் கம்பளம்; இந்திரன் தனது பாண்டு கம்பளம் அசைந்தால் உலகில் நிகழும் விசேட நிகழ்ச்சியை அறிந்துகொள்வானென்று கூறுதல் பெளத்தரது வழக்கம்.] நடுக்கத்தால் அறிந்தான். அதனால் அவன் மகிழ்ந்து, இவனுக்கு வேண்டும் வரங்கொடுப்பதற்கு எண்ணி, வளைந்த உடம்புடன் தண்டூன்றி, ஒரு கிழப்பிராமணன் வடிவங்கொண்டு வந்து, ஆபுத்திரனுக்கு முன்நின்று, “நான் இந்திரன்; உனக்கு வரங்கொடுத்தற்கு வந்தேன்; நீ விரும்புவது யாது? உன்னுடைய பெரிய புண்ணியத்தின் பயனேப் பெற்றுக் கொள்வாயாக” என்று சொன்னான். அதற்கு ஆபுத்திரன், விலாக் குலுங்கும்படியாக நகைத்துப் பரிகசித்து, “ஈவாரும் ஏற்பாரும் இல்லாமையால் ஈந்த உவக்கும் இன்பமும், தவச்செய்கையும் இல்லாத தேவர்நாட்டுத் தலைவனே! வாடியமுகத்துடன் வருந்தி வந்தவர்களது கடும்பசியைத் தீர்த்து, அவர்களது இனிய முகத்தை யான்காணும்படி செய்து, மிகுந்த இன்பம் அளிக்கின்ற எனது இத்தெய்வப் பாத்திரம் ஒன்றுமே போதும். நான் தருமத்தை விலக்கு விற்கும் வியாபாரியல்லன்; உன்னிடம் நான் பெறவேண்டுவது ஒன்றுமில்லை” என்று மிடுக்காய் மதியாது கூறினான்.
கூறவே இந்திரன் கோபித்து, “இவனது அஷயபாத்திரம் ஏமாந்திருக்க உலகத்தில் பசியால் வருத்துவோர் இல்லையாகும்படி செய்வேன்” என்று தன்னுள் நினைந்து, நாடு முழுவதும் வளத்தால் மலியும்படி மேகங்களை ஏவி, மழை பெய்வித்து மிக்க செல்வத்தை உண்டாக்கினான். அதனால் பன்னிரண்டு வருடம் பஞ்சத்தால் வருந்திய பாண்டிய நாடு, மழைவள மிகுந்து மாநிலஞ்செழித்தது. ஆகவே பசித்துவருவோர் இல்லாமல் அம்பலம் ஊனுண்னும் ஒலி அடங்கி, துஷ்டரும் கெட்ட ஒழுக்கமுடையவர்களும் விகட புத்தியுள்ளவர்களும் பிரயாணிகளும் கூடி, வட்டும், சூதும், வம்பும் ஆடுதற்குரிய இடமாய்விட்டது. அதுகண்டு, ஆபுத்திரன் அம்பலத்தை விட்டு நீங்கி, ஊர்தோறுஞ் சென்று சென்று, “உண்போர் யாரேனும் உண்டோ?” என்று வினாவத் தொடங்கினான். அதுதெரிந்து, செல்வக்களிப்பால் இறுமாப்புற்றோர் யாவரும் இவன்யார் பித்தன்?’ என்று இகழத்தொடங்கினார்கள். அதனால் ஆபுத்திரன், பெருஞ் செல்வத்தைக் கடலில் கவிழ்த்தவன்போல வருந்தித் தனியே செல்லுகையில், மரக்கலத்திலிருந்து இறங்கிவந்த பிரயாணிகள் சிலர், வழியிடையில் அவனைக்கண்டு, வணங்கி, “சாவகநாடு மழையின்றி மிக்க வறுமையுற்று உயிர்கள் பசியால் வருந்தி மடிகின்றன. நீ அங்கு செல்லுதல் நலம்” என்று கூறினார்கள். அதுகேட்டு, அவன், நீரில் வீழ்ந்து ஆழுவோரை எடுக்கப்போவார்போல் விரைந்து சென்று, தேச சஞ்சாரிகளோடு சாவகத்தீவுக்குச் செல்லும் மாக்கலத்தில் ஏறினான், கலமும் பாய்விரித்துப் புறப்பட்டுச் சென்றது. சிலகாத துாரம் சென்றதும் கடலானது காற்றினல் கொந்தளிப்பாயிருந்தமையால் சென்ற கப்பல், பாய் இறக்கி, மணி பல்லவம் என்னும் தீவினருகில் ஒருநாள் தங்கியது.
ஆபுத்திரன் அத்தீவின் காட்சியைக் கண்ணுற்றுக் களிக்க இறங்கினன்; இறங்கின அவன், ஏறிவிட்டான் என்று மாலுமி எண்ணிக் கப்பலே இருட்காலத்தில் செலுத்திக்கொண்டு போய்விட்டான். அது தெரிந்த ஆபுத்திரன்
“அந்தோ! நான் எண்ணியபடி சாவகாடு செல்லுதற்கு இயலாது போய்விட்டதே என்செய்வேன்” எனப் பலவாறு கவன்று, “இவ்வமுத சுரபியை அடைவதற்கு முற்பிறப்பில் நல்வினை செய்த நான் சிறிது தீவினையும் செய்தேன்போலும்; அதனாலேதான் தனித்துத் துயருழக்கின்றேன்” என வருந்திக்கூறிப் பின்னரும் “பல உயிரைப் பாதுகாத்தற்குரிய இப்பாத்திரத்தை, வானேர் பாற்கடல் தந்த அமுதைத் தாங்களே உண்டு, ஒழிந்த மிச்சத்தை யொளித்து வைத்ததுபோல் வைத்துக்கொண்டு, என்னுயிரை மாத்திரம் பாதுகாத்து, ஒருவருமில்லாத இத்தீவத்தில் நான் இரேன்” என்று சொல்லி, அப்பாத்திரத்தைத் தொழுது, “வருடத்திற்கு ஒரு முறை நீ வெளித் தோன்றுவாயாக” என்று கூறி, அத்தீவிலுள்ள கோமுகி என்னும் பொய்கையுள்ளே விடுபவன், அதனை நோக்கி, “தயாதர்ம முடையோராய்ப் பல உயிர்களையும் பாதுகாக்கும் ஈற்குணமுடையவர் எவரேனும்வரின் அவர் கையிற் புகுவாயாக” என்று சொல்லி, அப்பொய்கையில் விட்டான். அமிழ்த சுரபியும் அமிழ்ந்தியது. ஆபுத்திரன், உண்ணா நோன்பு பூண்டு மணிபல்லவத்திலே சில நாளிருந்து, அங்குவந்த அறவணவடிகள் என்னும் பெளத்தமத ஆசிரியரைத் தரிசித்து, நிகழ்ந்தவற்றைக் கூறிவிட்டு, உயிர்துறந்து குடதிசைச் சூரியன்போல் மறைந்தான்.
முன்பு ஆபுத்திரனுக்கு ஏழுநாள் வரையும் பாலூட்டி வளர்த்த நற்பசுவானது அப்புண்ணியப் பயனால், சாவக நாட்டில் தவள மலையில் தவஞ்செய்து கொண்டிருக்கும் மண்முகமுனிவனிடத்தில் பொன்மயமான கொம்புகளையும் குளம்புகளையும் உடையதாய்ச் சென்று, கன்றீனு முன்னமே பால் சுரந்து, எல்லா உயிர்களையும் ஊட்டிக்கொண் டிருந்தது. அதனைக்கண்டு, முக்கால நிகழ்ச்சிகளையும் அறியவல்ல அம்முனிவரன், இப்பசு வயிற்றில் உலகத்தில் மழைவளஞ் சுரக்கவும், மன்னுயிரைக் காக்கவும் ஒரு விசேட புருடன், குடலின் சம்பந்தமின்றிப் பொன்மயமான முட்டையில் தோன்றுவான்” என்று கூறினன்.
இஃது இங்ஙனமாக; முன் மணிபல்லவத்தில் உயிர் விட்ட ஆபுத்திரன், சாவகநாடு சென்று தருமஞ்செய்ய வேண்டுமென்ற சிந்தனையோடு, தன்னைக் குழந்தைப் பருவத்தில் பாலூட்டிக் காத்த பசுவை நினைந்து கொண்டே உயிர் துறந்தானாதலின்; மண்முகமுனிவன் கூறியவாறே சாவகநாட்டில் அவ்விசேட பசுவின் திருவயிற்றில் உலகுய்யத்தோன்றி, உதய சூரியன்போல் உதித்தனன. அவன் உதித்தகாலம் புத்தன் திருவவதார காலமாகிய வைகாசி மாதத்துச் சுத்த பூர்ணமைத் திதியாகும். அவன் உதிக்க அம்முகூர்த்தத்தில், சூரியனும் சந்திரனும் தீமையுருமல் ஒளிமிகுந்து விளங்கின; நக்ஷத்திரங்கள் நன்னெறியிலே இயங்கின; வானம் பொய்யாது மழை பெய்தது: நிலமுழுதும் செழித்து விளங்கின; உயிர்களெல்லாம் துன்பமின்றி வாழ்ந்தன; காற்று வலஞ்சுற்றி வீசிற்று; திசைகள் எல்லாம் சிறந்து தோன்றின: கடல் வளமிகுந்தன; புலியும் பசுவும் ஒரு துறையில் நீர் பருகின; கிளியும் பருந்தும் ஒரு கூண்டில் உறைந்தன; கூன், குருடு, செவிடு முதலிய அங்க ஈனர்கள் பூமியில் பிறவாதிருந்தனர்; பசுக்கள் கன்றுகளே ஊட்டிக் கலங்கள் ததும்பப் பாலைச்சொரிந்தன; பறவைகள் அயல்நாடு செல்லாது தத்தம் இருப்பிடங்களிலேயே இரையுண்டு உறைந்தன. இந்நல் நிமித்தங்கள் அனைத்தும் உலக முழுவதும் நிகழ்ந்தன. சக்கரவாளக்கோட்டம் முதலான இடங்களிலுள்ள முனிவர்கள், “இந்நிமித்த நிகழ்ச்சிக்குக் காரணமான ஒர் உத்தமபுருஷன் உலகினில் அவதரித்திருக்க வேண்டுமே; அவன் யாரோ தெரியவில்லையே” எனத் தங்களுள் ஆலோசித்து, வருங்காரியத்தை உரைக்கவல்ல கந்திற்பாவை (தூணில் கிற்கும்பாவை)யிடம் சென்று வினவினர்கள். அது, “மணிபல்லவத்தில் இறந்த ஒரு புண்ணிய புருஷன், உயிர்களைப் பாதுகாப்பதற்குச் சாவககாட்டிலுதித்தான்; அதனாலேதான் இந்த நன்னிமித்தங்கள் உண்டாயின. அவன் வரலாற்றை அறவனவடிகளிடம் கேட்டறியுங்கள்” என்று சொல்லியது. அவர்களும் அவ்வாறே கேட்டு வியந்திருந்தார்கள்.
இங்ஙனம் விநோதமாக அவதரித்திருந்த குழந்தையைச் சாவககாட்டு நாகபுரத்தரசன் பூமிசந்திரன் என்பான் அறிந்து, தனக்குப் பிள்ளைப்பேறு இல்லாததினுல் மணமுக முனிவரை அடைந்து வணங்கி இரந்து, அக்குழந்தையைப் பெற்றுக்கொண்டுபோய், புண்ணியராஜன் எனப் பெயரிட்டு வளர்த்தான். புண்ணியராஜனும் அரசர்க்குரிய கலைகள் பலவற்றையும் கற்றுப் பின்பு அரசுரிமை பெற்றுப் பூமியை ஆளத்தொடங்கினன். அது முதல் மழை பொய்யாத பெய்தது. மண்னும் மரமும் வளம்பல தந்தன. உயிர்கள் நோயின்றிச் சுகமுற்றன.
இவ்வாறு ஆபுத்திரன், புண்ணிய ராஜன் என்னும் பெயருடன் சாவக நாட்டில் அரசு செலுத்திக்கொண்டிருக்கும் நாளில், சோழவள நாட்டிலே காவேரி ஆறு கடலோடு கலக்கும் சங்கமுகத்துறையிலேயுள்ள சோழரது ராஜதானியாகிய காவிரிப்பூம்பட்டினத்திலே கோவலன் என்னும் வணிகர் குலதிலகனுக்கு, மாதவி யென்னும் நாடகக் கணிகை வயிற்றிற் பிறந்த ‘மணிமேகலை’ என்னும் கன்னிகை, தன் தந்தையாகிய கோவலன் மதுரையில் பாண்-டியராஜனல் கொலையுண்டிறந்த செய்திகேட்டு, மிக வருந்தினாள். அவ்வருத்தத்தை ஒரு வகையாக மாற்ற நினைத்த அவள் தாய் மாதவி, மணிமேகலையை நோக்கி, “நீ தொடுக்கும் பூங்கண்ணி கண்ணிர்பட்டமையான் கடவுள் பூஜைக்கு ஆகாது; ஆகையால் சோலைக்குச் சென்று புதுமலர் கொணர்ந்து வேறு மாலை தொடுப்பாயாக” என்று கூறினுள். கூறவும் அங்ஙனமே மணிமேகலை சுதமதி யென்னும் தோழியோடு மலர் பறிப்பதற்கு உபவனம் என்னும் சோலைக்குச் சென்றாள். முன்னரே மணிமேகலையை விரும்பியிருந்த அந்நகர்த்தரசன் கிள்ளிவளவன் புத்திரன் உதயகுமாரன் என்பான் இவள் சோலைக்குச் செல்வதை அறிந்து, அவளைச் சோலையினின்று வலிதிற் கவர்ந்துவர இதுவே தக்க சமயம், எனக் கருதித் தேரேறி வந்தான். அங்ஙனம் அவன் வருவதையுணர்ந்த சுதமதி என்னும் தோழி, மணிமேகலையைப் பாதுகாப்பதற்கு அச்சோலையிலுள்ள ஒரு பளிங்கறையுள் புகச்செய்து, உதயகுமாரனுக்குப் பல நீதி மொழிகளைக் கூறி, மணிமேகலையைக் கவரவிடாது தடுத்தாள். அவன், “இவளை நான் இவள் பாட்டி சித்திராபதியால் அடையவுங்கூடும்” எனக் கூறிப் போய்விட்டான்.
பின்பு பளிங்கறையிலிருந்து வெளிவந்த மணிமேகலை, சுதமதியிடம் “உதயகுமாரன்மீது எனக்கு உண்டாகும் அன்புக்குக் காரணம் என்ன?’ எனக் கேட்டுக்கொண்டிருந்தாள். அப்போது கோவலனது பழைய குலதெய்வமாகிய மணிமேகலாதெய்வம், தன்னிடத்தில் பக்திபூண்டிருந்தவனகிய கோவலன் மகள் மணிமேகலைக்கு உதயகுமாரன் மீது செல்லும் மனத்தைத் தடுத்து, அவளைப் பெளத்த சமயவழியிற் செலுத்தி, நற்கதிபெறச் செய்யக் கருதி, அவர்கள் அறிந்த ஒரு மடந்தை வேடங்கொண்டு அங்கு வந்தது. வந்து, அவர்களை நோக்கி “நீங்கள் இங்கிருந்தால் மீளவும் உதயகுமாரனால் உங்களுக்குத் துன்பம் உண்டாகும்; ஆகையால் முனிவர்கள் வசிக்கும் சக்கரவாளக் கோட்டத்திற்குச் செல்லுங்கள்’’ என்று கூறி, அவர்களை அடுத்துள்ள சக்கரவாளக் கோட்டம் என்னும் இடத்திற்குச் செல்லும்படி செய்தது. அன்றிரவில் சுதமதியும் மணிமேகலையும் அங்கு தூங்கும்போது மணிமேகலா தெய்வம், மணிமேகலையை மாத்திரம் மயக்கித் தழுவி எடுத்துக் கொண்டு, ஆகாயவழியே முப்பது யோசனை தூரம் தெற்கே சென்று, கடல்சூழ்ந்த மணிபல்லவம் என்னும் தீவில் வைத்துவிட்டுச் சக்கரவாளக் கோட்டத்துக்குத் திரும்பி வந்து, சுதமதியைத் துயிலெழுப்பித் தான் மணிமேகலையைத் தூக்கிச் சென்றதையும், அவள் பூர்வஜென்ம உணர்ச்சிபெற்று இன்றைக்கு ஏழாவது நாளிலே வருவாள் என்பதையும் சொல்லிப்போனது.
அப்பால் சுதமதி நித்திரை தெளிந்து, மணிமேகலையைக் காணாது வருந்திப் புலம்பிப் பொழுது புலர்ந்தபின் வருத்தத்தோடு நகரம் புகுந்து, மாதவியை அடைந்து நிகழ்ந்தவற்றைக்கூறி, இருவரும் மணியிழந்த நாகம்போல் துன்பத்துள் மூழ்கியிருந்தார்கள்,
இவர்கள் இங்ஙனம் வருந்திக்கொண்டிருக்க, மணி பல்லவத்தில் கடலருகே மணலில் துயின்ற மணிமேகலை, கண்விழித்துச் சுதமதியைக் காணப்பெறாது, இடமும் தோற்றங்களும் வேறாயிருப்பதை அறிந்து திகைத்தாள். சுதமதியை அத்தீவத்துப் பலவிடங்களிலும் தேடினாள்; தேடியும் அவளை அடையப்பெறாமையால், பல சொல்லிப் பிரலாபிக்கின்றவள், மதுரையில் கொலையுண்டிறந்த தன் தங்தை கோவலனை நினைந்து, புலம்பிக்கொண்டிருந்தாள். அங்ஙனம் புலம்பிக்கொண்டிருப்பவள் முன்னர், இந்திரனால் இடப்பெற்றதும் பழம்பிறப்பை உணர்த்துவதுமான புத்தபீடிகை அவள் கண்ணுக்குத் தோன்றியது. தோன்றவும் மணிமேகலை ஆச்சரியங்கொண்டு பரவசமாகிக் கரங்கள் தலைமேற்குவிய, ஆநந்தக்கண்ணிர் சொரிந்து, பீடிகையை மும்முறை வலம்வந்து தொழுது, தன் பழம் பிறப்பு நிகழ்ச்சிகளையும் தெய்வம் தன்னை அங்கு தூக்கிக் கொண்டு வந்ததையும் உணர்ந்து, அத்தெய்வத்தின் வருகையை எதிர்பார்த்துக்கொண்டிருந்தாள். அப்பொது மணிமேகலா தெய்வம், மணிமேகலையின் பக்குவத்தை அறிந்து, ஆகாயத்தினின்றும் இறங்கிவந்து, அவளுக்கு முற்பிறப்பில் கண்வனாயிருந்த இராகுலன் வரலாற்றையும் அவனே இப்போது உதயகுமாரனாய்ப் பிறந்திருக்கிறான் என்பதையும் கூறிப் பின்பு ஆகாயவழியே சஞ்சரிக்கச் செய்வதும், உணவின்றி யிருக்கச்செய்வதும், வேற்று வடிவம் அளிப்பதுமாகிய மந்திரங்கள் மூன்றை அவளுக்கு உபதேசித்து விட்டுச் சென்றது.
அப்பால் மணிமேகலை அத்தீவிலுள்ள மணற்குன்றுகளையும், பொய்கைகளையும், பூஞ்சோலைகளையும் பார்த்துக்கொண்டே உலாவிவருகையில் பெண் ஒருத்தி எதிர்ப்பட்டாள். எதிர்ப்பட்டவள், மணிமேகலையை நோக்கி, “மிக்க துயரத்தோடு தனியே திரியும் நீ யார்”? என்று கேட்டாள். அதற்கு மணிமேகலை தன்னுடைய சென்ற பிறப்பின் செய்திகளையும், இப்பிறப்பின் வரலாற்றையும் கூறி, ‘உன் வரலாறு யாது’ எனக்கேட்டாள். அவள் “இத்தீவிற்கு அயலிலுள்ள இரத்தின தீவத்திலே மிகவுயர்ந்து விளங்கும் சமந்தகூட மலையின் உச்சியிலேயுள்ள புத்ததேவரது பாதபங்கயங்களைத் தரிசித்துவிட்டு இத்தீ-விற்கு முன்னுெரு காலத்தில் வந்தேன்; அதுமுதல் இந்திரன் கட்டளையால் இத்தரும பீடிகையைக் காத்துக்கொண்டு இங்கிருக்கின்றேன்; என் பெயர் தீவதிலகை” என்று தன் வரலாறுகூறிப் புத்தபீடிகையின் மகத்துவத்தையும் அதனைத் தரிசித்து மணிமேகலை பழம்பிறப்புணர்ந்ததையும் புகழ்ந்துகூறினாள்.
கூறியவள், பின்பு ஆபுத்திரன் கோமுகிப் பொய்கையில் முன்விட்ட அக்ஷயயபாத்திரத்தை மணிமேகலையின் கையில் சேர்க்க எண்ணி, “இப்பீடிகைக்கு முன்னே மாமலர்க் குவளையும் நெய்தல் பூக்களும் மிகுந்து, கோமுகி என்னும் பொய்கை ஒன்றுள்ளது; அப்பொய்கையுள் ஒரு அமுதசுரபி யென்னும் அக்ஷயபாத்திரம் அமிழ்ந்திக் கிடக்கின்றது; அது ஒவ்வொரு வருடத்திலும் புத்ததேவர் அவதார காலமாகிய வைகாசசுத்த பூர்ணமை நாள்தோறும் மேலே வந்து தோன்றாநிற்கும்; அந்தநாள் இந்நாளேயாம்; அது தோன்றும் வேளையும் இதுவே; இப்போது அப்பாத்திரம் அருள்.அறம் பூண்ட உனது கரத்தில் வருமென்று கருதுகின்றேன்; அதில் எடுக்கும் அன்னம் எடுக்க எடுக்க மேன்மேலும் வளர்ந்து கொண்டே வரும்; அதன் வரலாற்றைப் பின்பு புகார் நகரத்த அறவணவடிகளிடம் கேட்டுணர்வாயாக” என்று மணிமேகலைக்குச் சொன்னாள்.
இவற்றைக்கேட்ட மணிமேகலை அதனே விரைந்து பெறுவதற்கு விரும்பிப் புத்தபீடிகையை வணங்கிக் கோமுகிப் பொய்கையை அடைந்து, வலமாக வந்து நின்றாள்; அவ்வளவில், அப்பாத்திரம் மணிமேகலை கையை அடைந்தது. உடனே அவள் அளவுகடந்த மகிழ்ச்சியடைந்து, புத்ததேவாது திருவடிகளைப் பலவாறு புகழ்ந்து, துதித்து நின்றாள். இங்ஙனம் நின்ற மணிமேகலைக்குத் தீவதிலகை, உயிர்களுடைய பசித்துன்பத்தையும், அதனை நீக்குவோருடைய பெருமையையும் சொல்லப் புகுந்து, “பசியென்னும் பாவி, மக்களுடைய குடிப்பிறப்பின் பெருமையை அழிக்கும்; பலவிதச் சிறப்புக்களையும் நீக்கும்; ஆதாரமாகக் கொண்ட கல்வியாகிய தெப்பத்தையும் கை விடச்செய்யும்; நாணத்தைக் களையும்; அழகைக் கெடுக்கும்; மனைவி மக்களோடு அந்நியன் வீட்டுவாசலில் கொண்டு போய்நிறுத்தும். இப்படிப்பட்ட கொடிய பசியைத் தீர்ப் போரது புகழை அளவிட்டுச் சொல்ல முடியாது. செல்வ முடையோர்க்கு ஒருவர் ஒரு பொருளைக் கொடுத்து உதவுவது, அவர்களிடமிருந்து மற்றொரு உதவியை எதிர்பார்ப்பதாக முடியுமாதலின், அது தருமத்தை விலைக்கு விற்பதாகும். ஏழைகளுடைய பசியை நீக்கிக் காக்கின்றவர்களே நல்ல வாழ்க்கை யுடையவர்களாவார்; பசித்தவர்களுக்கு உணவளிப்பவர்களை, அவர்களுக்கு உயிரைக் கொடுப்பவர்களென்றே சொல்லலாம்; ஆதலால், பசியைத் தீர்த்து, உயிரைக் கொடுப்பதாகிய அறத்தைச் செய்வாய்” என்று கூறினாள்.
இதனைக் கேட்ட மணிமேகலை, “குழந்தையின் முகத்தைக்கண்டு பால்சுரந்தளிக்கும் தாய்போல், ஏழைகளது முகத்தைக்கண்டு இரங்கி இப்பாத்திரம், மேன்மேலும் அவர்களுக்கு அமுதசுரங்களிக்கும் அற்புதத்தைக் கானும் விருப்புடையேன்” என்றுகூறித் தீவதிலகை யோடு சிறிது நேரம் அளவளாவியிருக்து, அவளைப் பணிந்து விடைபெற்று, புத்த பீடிகையைத் துதித்து ஆகாயகமன மந்திரத்தை ஜெபித்து, மேலெழுந்து ஆகாய வழியாகப் போய்ப் புகார் நகரத்தை அடைந்து தன் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மாதவி சுதமதிகளைக் கண்டாள். அவர்கள் வியப்படையும் வண்ணம் அவர்களுக்கு, முற்பிறப்பைத் தான் அறிந்தபடியே உணர்த்தி, “இது ஆபுத்திரனது திருக்கரத்திலிருந்த அமுதசுரபி, இதனைத் தொழுமின்” என்று அக்ஷய பாத்திரத்தைச் சுட்டிக் காட்டித் தொழும்படி செய்தாள். பின்னர் அறவணவடிகளை அடைந்து தவவழியைப் பெறும்பொருட்டு மாதவி சுதமதிளை அழைத்துக்கொண்டு அவரிருக்குமிடத்தை விசாரித்தறிந்து சென்று அவரைத் தரிசித்துப் பணிந்தாள். பின்பு, தான் உவவனஞ் சென்றது முதல், மணிமேகலா தெய்வத்தால் மணிபல்லவஞ் சென்று புத்த பீடிகையைத் தரிசித்துப் பழம் பிறப்புணர்ந்து அமுதசுரபியைப் பெற்றது வரையுமுள்ள நிழ்ச்சிகளைக் கூறித், தனக்குத் தரும உபதேசம் செய்து ஆபுத்திரன் வரலாற்றையும் தெரிவிக்கும்படி வணங்கிக் கேட்டாள். அதற்கு அம்முனிவன் மகிழ்ந்து, “சிலநாள் சென்று உனக்குத் தருமோபதேசம் செய்வேன்; நீ உயிர் மருந்து போன்றதாகிய இவ்வமுதசுரபியைக் கொண்டு பசிப்பிணியை உலகில் ஒழிப்பாயாக” என்று கூறிப் பின்பு மணிமேகலை விருப்பப்படி ஆபுத்திரனது வரலாற்றைக் கூறத்தொடங்கி, அவன் பிறந்ததும், வளர்ந்ததும், அமுதசுரபி பெற்றதும், மணிபல்லவத்தில் இறந்ததும், பின் சாவககாட்டில் புண்ணியராஜனாய் அரசு செய்வதுமாகிய வரலாறு முழுதையும் மகிழ்வுடன் அவளுக்கு விரித்துக் கூறினார்.
பின்னரும் அறவணவடிகள் மணிமேகலையைப் பார்த்து, “காவேரி நதி மாறாது நீர் பெருகி நாட்டை வளமுண்டாகச் செய்தும் யாது காரணத்தாலோ உயிர்கள் வறுமையால் வருந்துகின்றன. இந்த அமுதசுரபியை, நீ இனிச்சும்மா வைத்திருத்தல் தகுதியன்று” என்று சொன்னார். உடனே மணிமேகலை பிக்குணிக் (சந்நியாசினி) கோலம் பூண்டு, பிச்சைப் பாத்திரத்தைக் கையிலேந்திக்கொண்டு, கண்டோர் யாவரும், ஆச்சரியமும், துக்கமும் கொள்ளும்படி வீதியை அடைந்தாள்.
அடைந்த மணிமேகலை, “முதல் முதல் கற்புடைய மாதர் இடும் பிச்சையையே ஏற்றுக்கொள்ளுதல் தகுதி” என்று கருதி, அந்நிய நாட்டுக்குச் சென்றிருந்த தன் கணவன், ‘இறந்து போனான்’ என்று பிறர் தவறாகக்கூறிய செய்தியைக் கேட்ட அளவிலே, தீக்குழியில் பாய்ந்த தீயால் சுடப்படாதவளாய் எழுந்த ஆதிரை என்பவள் வீட்டில் புகுந்து பிச்சையிடப்பெற்றாள். பிச்சைப் பாத்திரத்தில் சோறு எடுக்க எடுக்கக் குறையாது வளர்ந்து, வந்தோரது பசியைப் போக்கி விளங்கிற்று. விருச்சிகன் என்னும் முனிவர் உண்ணுதற்கு வைத்திருந்த காவல் கனியை மிதித்துக் கெடுத்த குற்றத்திற்காக அவரால் சபிக்கப்பட்டுத் தீராப் பசியாகிய யானைத்தீ என்னும் நோயை அடைந்த காயசண்டிகையென்னும் வித்தியாதர மங்கையும் இப்பாத்திரத்திலிருந்து ஒரு பிடி அன்னம் வாங்கி உண்ட அளவில் நோய் நீங்கிச் சுகமுற்றாள். பின்னும் மணிமேகலை இப்பாத்திரத்தைக்கொண்டு பல விசேட நிகழ்ச்சிகளைக் காவிரிப்பூம்பட்டினத்தில் நிகழ்த்திவிட்டு, அமுதசுரபிக்குரியவனாகிய ஆபுத்திரனைக் கண்டு, புத்த பீடிகையைத் தரிசிக்கச்செய்து, அவனுக்கு அவனது பழம்பிறப்பை உணர்த்தி, நல்வழிப் படுத்தக் கருதினாள். அதனால் அவள், அறவணவடிகள், மாதவி, சுதமதி இவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு, ஆகாயவழியே சென்று, சாவக நாட்டில் புண்ணியராஜனது நகர்ப்புறத்தில் ஒரு சோலையை அடைந்து, அங்குள்ள ஒரு முனிவனை வணங்கி, “இந்நகரின் பெயர் யாது? இதனை ஆளும் மன்னவன் யார்”? என்று வினவினாள். அம்முனிவன், “இந்நகரின் நாமம் நாகபுரம் என்பது. இதனை ஆள்பவன் பூமிசந்திரன் மகனாகிய புண்ணியராஜன். இவன் பிறந்த நாள்தொட்டு இந்நாட்டில் மழைவளம் குறைந்ததில்லை. பூமியும் மரமும் பலபலன்களைச் சுரந்தளிக்கின்றன. உயிர்கள் நோயின்றிச் சுகமாய் வாழ்கின்றன” என்று அவ்வரசன் பெருமை முதலியவற்றை அவளுக்கு விளங்க விரித்துக் கூறினான்.
இச்சமயத்தில் புண்ணியராஜன், தன் பட்டத்துத் தேவியோடு அச்சோலைக்கு வந்து, ஆங்குள்ள தருமசாவகன் என்னும் முனிபுங்கவரை வணங்கித் தருமோபதேசங் கேட்டு, அங்கிருந்தான், அவன், முனிவர் அருகிலிருக்கும் மணிமேகலையை நோக்கி, “ஒப்பற்ற பேரழகினள், கையிற் பிச்சைப்பாத்திர முடையவளாய் அறவுரை கேட்கின்றாள்; இவள் யார்?” என்று வினவினான். அதற்கு அருகே நின்ற சட்டையிட்ட பிரதானி, அரசனை வணங்கி, “இந் நாவலந் தீவில் இங்நங்கையை ஒப்பார் யாருமில்லை; முன்னொரு காலத்தில் கிள்ளிவளவனுேடு நட்புச்செய்யக் கருதிக் காவிரிப்பூம்பட்டினத்துக்கு நான் தூது சென்றிருந்த காலத்தில் அங்கேயுள்ள அறவணவடிகள் என்பார், இவள் வரலாற்றை விளங்கக் கூறினர், என்று முன்னமே உரைத்திருந்தேனல்லவா? அவளே இவள்” என்று கூறினன். கூறலும் மணிமேகலை அரசனே நோக்கி, “அரசே! உன் கையிலிருந்த பிச்சைப் பாத்திரமே இது, இப்போது என்கையிற் புகுந்தது; செல்வக்களிப்பால் தெரியாது மயங்கினைபோலும், சென்ற பிறப்பையும், இப்பிறப்பையும் நீ அறிந்திலை; என் செய்தனை! மணிபல்லவஞ் சென்று புத்த பீடிகையை வலங்கொண்டு தொழுதாலன்றி, உனது, பழம்பிறப்பின் செய்தியை நீ அறியாய்; ஆதலால், அரசே! அங்கே விரைந்து வருவாயாக’’ என்று சொல்லிவிட்டுத் தான் எழுந்து ஆகாயவழியேசென்று, சூரியன் அஸ்தமிக்கு முன்னரே மணிபல்லவத்தில் இறங்கிப் புத்த பீடிகையைத் தொழுதாள். அது வழக்கம்போல் அவளது பழம்பிறப்பை அறிவித்தது. அதனைவியந்து அங்கே தங்கியிருந்தனள்.
புண்ணியராஜன், மணிமேகலை கூறிய செய்தியைக் கேட்ட அளவில் மிகுந்த ஆச்சரியமடைந்தான். இப்பிறப்பின் வரலாற்றையும் சென்ற பிறப்பின் வரலாற்றையும் அறிய வேண்டுமென்ற ஆசை தூண்டுதலால், அவன் அச்சோலையினின்றும் உடனே புறப்பட்டு நகரையடைந்து, தன்னை வளர்த்ததாயாகிய அமரசுந்தரியைக் கண்டு, தனது பிறப்பு வரலாற்றை உரைக்கும்படி கேட்டான். அவள் , அவன் வரலாறு முழுவதையும் கூறினாள். அதனைக் கேட்டு அவன் வருத்தமுற்று, அரசாட்சியில் வெறுப்புக்கொண்டு, தான் துறவியாய் மணிபல்லவம் செல்வதற்குத் துணிந்து, தன் கருத்தை வெளியிட்டான். அதனேக்கேட்ட சனமித்திரன் என்னும் மந்திரி, புண்ணியராஜனை வணங்கி, “அரசே! வாழ்க; என் சொற்களைக் கேட்டருள வேண்டும்; உன்னை நமது அரசன் பெறுவதற்கு முன்னர் இந்நாட்டில் பன்னிரண்டு வருடம் மழை பெய்யாமல் அதனால் வறுமை மிகுந்தது; உயிர்களெல்லாம் பசியால் வருந்தின; அப்போது நீ கோடைமழை தோன்றினாற்போல் தோன்றினை. அங்ஙணம் நீ தோன்றியபின் இந்நாட்டில் எல்லா வளங்களும் நிரம்பின; உயிர்கள் பசித்துன்ப முதலான துன்பங்களில்லாமல் வாழ்வனவாயின; நீ இச்சமயம் இந்நாட்டை விட்டு நீங்குவையாயின் எல்லா உயிர்களும் தாயைப்பிரிந்த குழந்தைகள்போல் கூவி அழாநிற்கும். இத்தன்மையுடைய இவ்வுலகத்தை, நீ காவாமல் உனது நலத்தையே கருதிச் செல்லுதல் தகுதியன்று; எந்த நன்மையையும் தன்னுயிர்க் கென்று நினையாது பிற உயிர்களுக்கேயென்று கருதி உழைக்கும் புத்ததேவனது அறம் இஃதல்லவே” என்று கூறினான். அரசன் கேட்டு, “மணிபல்லவத்தை வலங்கொண்டு வணங்கவேண்டுமென்று என்னுள்ளத்தில் எழுந்த வரம்பு கடந்த ஆசையைத் தணித்தல் அரிது; ஆதலால் நான் அங்கு சென்று வருவேன்; யான் வருவதற்குப் பிடிக்கும் ஒருமாத காலம் வரை, இந்நரைப் பாதுகாப்பது உனது கடமையாகும்” என்று மந்திரியை நோக்கிக் கூறி விட்டுப் புறப்பட்டு, வழிக்கொண்டு கடற்கரையை அடைந்து, கப்பலேறி, மணிபல்லவத்தை அடைந்தான்.
மணிமேகலை புண்ணியராசன் கப்பல் வருவதை அறிந்து எதிர்வந்து அழைத்துச் சென்று, அவைேடு அத்தீவை வலமாகச் சுற்றிப் புத்தபீடிகையருகில் வந்து, பழம் பிறப்பை அறிவிக்கும் தருமபீடிகை இது என்று காட்டினாள்; அவ்வளவில் அரசன், அதனைத் தரிசித்து, அன்போடு வலம் வந்து துதித்தான். துதிக்கவே அப்பீடிகை, முன்பு அவனுக்கு அவன் ஆபுத்திறனாய்ப் பிறந்திருந்த செய்திமுழுவதையும் நன்றாகத் தெரிவித்தது. அவன் அதனைத் தெரிந்து வியப்படைந்து, தனக்கு முற்பிறப்பில் ஒருநாள் இரவில் அமுதசுரபியென்னும் அக்ஷயபாத்திரத்தை அளித்த சிந்தாதேவியைச் சிந்தித்து, ‘அக்ஷயபாத்திரத்தை என் கையில் கொடுத்து எனக்குப் பெரும்புண்ணியத்தை அளித்த தேவியே! உனது திருவடிகளை நான் பிறக்கும் பிறவிகள் தோறும் மறவாது துதித்து வணங்குவேன்’ என்று ஏத்தித் துதித்தான். பின்னர் அவன், மணிமேகலையுடன் எழுந்து தென் மேற்குத் திசையிற் சென்று, கோமுகிப் பொய்கைக் கரையில் ஒரு புன்னைமரத்து நிழலிலே இருந்தான். இருக்குங்கால், அவர்கள் வருகையை அறிந்த அத்தீவின் காவல் தெய்வமாகிய தீவதிலகை, அங்குவந்து அவர்களைக் கண்டு, ஆபுத்திரனை நோக்கிச் சில சொல்லத்தொடங்கி, “அக்காலத்தில் இத்தீவில் உன்னை மறந்து தனியே விட்டுவிட்டுக் கப்பலேறிச் சென்ற ஒன்பது செட்டிகள், பின்பு உன்னைக் காணாது வருந்தி இத்தீவிற்கு மீண்டுவந்து, உன்னைத்தேடி, நீ இறந்துபோன வரலாற்றைத் தெரிந்து தாங்களும் உடனே உண்ணா விரதம்பூண்டு உயிர் துறந்தார்கள்; அவர்களுடைய, உடல் எலும்புகள் இவை; காண்பாயாக. அச்செட்டிகளது உபகாரத்தைப் பெற்று உடன்வந்தோர் சிலர் அவர்கள் இறந்தது தெரிந்து, பிரிவாற்றாது தாங்களும் உயிர் துறந்தனர்; அவர்களுடைய உடல் எலும்புகள் இவை, பார். உனக்கு அரச பதவியை அளித்த அன்புமயமான உனது பழைய உடம்பின் எலும்பு, இப்புன்னை மரத்து நிழலில் அலைகள் குவித்த மணலால் மூடப்பட்டிருப்பதையும் பார்ப்பாயாக, இங்ஙனம் தன்னுயிரையும், தனக்கிரங்கிய பிற உயிர்களையும் கொன்ற கொலைஞனுகிய நீயன்றோ, இப்போது சாவகநாட்டுப் புண்ணியராசனாய் விளங்குகின்றாய்; இஃது என்ன விந்தை”? என்று ஆபுத்திரனைப் பழிப்பவள்போல் புகழ்ந்து கூறினாள். ஆபுத்திரன், மணலைத் தோண்டித் தன்னுடைய பழைய உடம்பின் எலும்புகளைக் கண்டு ஆச்சரியமும், துக்கமும்கொண்டு மயங்கி நின்றான். ஆபுத்திரனை நோக்கி இச்செய்திகளை உரைத்த தீவதிலகை, பின்பு மணிமேகலையை நோக்கிக் கூறத் தொடங்கினாள்:- “மணிமேகலாய்! உனது பிறப்பிடமாகிய காவிரிப்பூம்பட்டினத்தைக் கடல் கொண்டது; அதற்குக் காரணத்-தைக் கேட்பாயாக. சில நாட்களுக்கு முன்னர் காவிரிப் பூம்பட்டினத்து அரசன் கிள்ளிவளவன், ஒருநாள் சோலையில், நாக நாட்டரசனாகிய வளைவனன் மகள் பீலிவளை என்பாளை எதிர்ப்பட்டுக் காதலித்துக் காந்தருவ மணம் செய்து, அவளுடன் அச்சோலையில் ஒரு மாதம் வரை வாழ்ந்திருந்தனன்; பீலிவளை, ஒருநாள் அரசனிடம் சொல்லாது தன்னிருப்பிடம் சென்று விட்டாள். அரசன் வருந்தி, அவளை எங்கும் தேடியும் காணாமல், முக்காலம் உணர்ந்த ஒரு சாரணரைக் கண்டு வினவினான். சாரணர், அவளே இப்போது நான் கண்டிலேனாயினும் அவளை இன்னாளென்று முன்னரே அறிவேன்; அவள் இனி உன்னிடம் வரமாட்டாள்; உனக்கு அவள் வயிற்றிற் பிறக்கும் மகனே உன்னிடம் வருவான்; நீ இதுபற்றி வருத்தாதே; இவ் வருத்த மிகுதியால் இந்நகரத்தில் தொன்று தொட்டு நடத்திவரும் இந்திர விழாவை நடத்துதற்கு மறந்து விடாதே; இந்திர விழாச் செய்யாது தவறுமாயின் மணிமேகலா தெய்வத்தின் சாபத்தால் உன் நகரத்தைக் கடல் வந்தழிப்பது தப்பாது எனச் சொல்லிப் போயினர்; அந்நாள் முதல் காவிரிப்பூம்பட்டினத்து மாந்தர்கள், எந்நாளில் இந்நகருக்கு அழிவு வருமோ என்று கலக்கமுற்றிருந்தார்கள். இஃது இங்ஙனமாக; அரசனைவிட்டுப் பிரிந்த பீலிவளை, ஒரு ஆண் குழந்தையைப் பெற்று, அக்குழந்தையோடு சில நாளைக்குமுன் இத்தீவிற்கு வந்து, புத்தபீடிகையை வலம் வந்து தொழுதுகொண்டிருக்கும்போது, கம்பளச் செட்டி யென்னும் வணிகனது கப்பலொன்று இத்தீவின் துறையில் தங்கியது; பீலிவளை உடனே அவனிடம் சென்று ‘இவன் சோழன் மகன்; இவனை அரசனிடம் சேர்ப்பது உன் கடன்; என்று குழந்தையைச் செட்டிகையிற் கொடுத்தாள்; அவனும் மகிழ்ச்சியுடன் குழந்தையை தாங்கிக்கொண்டு, கப்பலைச் செலுத்தி வருங்கால், இடை வழியில் கப்பல் உடைந்து போயிற்று; பலர் மாண்டனர்; தப்பிப்பிழைத்தோர் சிலர், காவிரிப்பூம்பட்டினம் வந்து, குழந்தையைப் பீலிவளை, செட்டியிடம் ஒப்புவித்ததும், கப்பல் உடைந்ததுமான செய்தியைச் சொல்லினர் அரசன் மிக்க வருத்தமுற்றுக் கடற்கரை ஓரமெல்லாம் ஓடித் தேடித்திரிந்தான்; இங்ஙனம் தேடித்திரிந்தமையால், இந்திரவிழாச் செய்யவேண்டிய நாளில் செய்யப்படாமல் போயிற்று; போகவே மணிமேகலா தெய்வம் சபித்தமையால், கடல் பொங்கிவந்து புகார் நகரமாகிய நிலப்பரப்பை நீர்ப்பரப்பாக்கிவிட்டது; அரசன் முதலானவர்கள் வேறிடம் சென்றனர்; அறவணவடிகளோடு உனது தாய் மாதவியும், சுதமதியும் யாதொரு வருத்தமுமின்றிச் சேரனது நகரமாகிய வஞ்சிமாநகரம் புகுத்தனர்; இனி நீயும் வஞ்சி மாநகரம் செல்வாயாக’ என் சொல்லிப் போய்விட்டாள்.
இவற்றையெல்லாம் கேட்டு வஞ்சிமாநகரம் செல்லக் கருதிய மணிமேகலை, பழைய உடம்பின் எலும்பைக் கண்டு மயங்கிய ஆபுத்திரனுக்குச் சிறந்த அறநெறியை உபதேசித்துத் தேற்றி, அவனை அவனது நகரத்துக்குச் செல்லும்படி சொல்லிவிட்டுத் தான் ஆகாய கமனமந்திரத்தை ஜெபித்துக்கொண்டு மேலெழுத்து சென்றாள். சென்றவள், வஞ்சிமாநகரத்தின் பக்கத்தில் இறங்கித் தன் பெரிய தாயாகிய கண்ணகிதேவியின் பத்தினிக் கோயிலை அடைந்து,வணங்கித் தொழுது வஞ்சிமாநகருள் புகுந்தாள். அங்கு பல மதவாதிகளோடு பல மதங்களைப்பற்றி விசாரித்தறிந்து கொண்டு, தன் தாய் மாதவியும்,சுதமதியும் அறவணவடிகளும் காஞ்சிமா நகரம் சென்றிருப்பதைத் தெரிந்து, அங்கு சென்று, அந்நகரத்தின் பஞ்சத்தை அக்ஷயபாத்திரத்தால் நீக்கிவிட்டு அறவணவடிகளைக் கண்டாள். அவர் அவளுக்கு பெளத்த தருமத்தை உபதேசித்தார்.
அவள் அவ்வுபதேசங்களைக் கேட்டுப் “பிறவித்துன்பம் ஒழிவதாக” என்று அந்நகரிலேயே தவம் செய்து கொண்டிருந்தாள். புண்ணியராசனாகிய ஆபுத்திரன் மணிபல்லவத்தினின்றும் மரக்கலம் ஏறிப் புறப்பட்டுச் சாவகநாடு (Java Island) சேர்ந்து, தன் நகரம் புகுந்து, சிலநாள் செங்கோல் செலுத்திக் கொண்டிருந்து, பழம்பிறப்பின் நிகழ்ச்சிகளை எண்ணி எண்ணி, மணிமேகலையின் உபதேசப்படி துறவற புகுந்த, பின்னர் நிருவாணம் (முத்தி) அடைந்தான்.
ஆபுத்திரனா யவதரித்த அன்பினன்பின்
கோபுத் திரனாய்க் குலவியதும் – ஆபத்தில்
புண்ணியத்தின் நற்பயனுற் போந்ததே மாநிலத்தீர்
எண்ணுமின் செய்மினற மே.
★ ★ ★



