
அரும்பு
கலைஞர் மு. கருணாநிதி
அரும்பு
“திருக்குவளைக் கிராமத்திற்கே இந்தக் கல்யாணம் மிகப் மிகப் புதிது ! பழமையிலே ஊரிப்போனவர்கள் ஏராளம் இங்கே ! அறிவுப் பாதையிலே நடைபோட வேண்டுமென்ற ஆசை ஒருபக்கம் இழுத்தாலும் இறந்த காலக் கொள்கைகளை விடாப்பிடியாகப் பிடித்துக்கொண் டிருப்பவர்கள் அதிகம் நிறைந்த அழகான சிற்றூர் !’ அடிக்கடி ஒலித்துக் கொண்டிருக்கும் ஆலயத்துமணி வான் முட்டும் கோபுரம்-எதிரே சிங்காரத்திருக்குளம்-கரையிலே தென்னைகளும், திண்ணையுள்ள வீடுகளும் தென்றலுக்கு ஏற்றவகையில் தெற்கு நோக்கியமைந்த ‘அக்கிரகாரம்!” இப்படியெல்லாம் கலை அழகோடு ஆரியக் களையும் நிறைந்திருக்கும் ஊரிலேதான் இந்தப் புதுமையான திருமணத்தை நான் செய்து கொள்ளப்போகிறேன் நண்பா! சென்னையிலேயிருந்து இந்த ஊர் அதிக தூரம்தான்! ஆயினும் நாமிருவரும் மிக நெருங்கிய வர்களாயிற்றே! எப்படியும் அலுவலகத்தில் ‘லீவு’ பெற்றுக்கொண்டு நீ வந்தே தீரவேண்டும்-இது அன்பின் ஆணை!” என்று கடிதத்தை முடித்திருந்தான் ரத்தினம்.
கோகுலுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. நாலைந்து வருடங்களாக அவன் எந்தத் திருமண விழாக்களுக்கும் போனதே கிடையாது.
மகிழ்ச்சி பொங்கிடும் அந்த விழாக்களிலே, தான் போய் சோகத்தின் உருவமாக உட்கார்ந்திருக்க அவனுக்கு விருப்பமில்லை. திருமண இதழ்களைக் கண்டே ‘திக்பிரமை’ கொண்டவன்போல் உட்கார்ந்திருக்கும் அவனுக்கு-திருமணத்தையும் நேரில் பார்த்துவிட்டால் எப்படியிருக்கும் ? அவனுக்கு நடைபெற்ற திருமணம் அப்போது முழங்கிய மேள ஒலி !
மேள ஒலி ! மண மேடையில் இருந்தவாறே மனைவியிடம் காட்டிய குரும்பு! அவள் அதை ரசித்து மகிழ்ந்த மென்மை! தொடர்ந்து துவங்கிய இன்பபுரிப் பயணம். பின்னர் வந்த அன்புச்சின்னம்! தேனுக்கும் கற்கண்டுக்குமிடையே அவன் ! திடீரென வாழ்விலே வீசிவிட்ட புயல் ! நீங்காத நித்திரைக்கு ஆளாகிவிட்ட அவன் துணைவி ! அம்மாவை இழந்த அருமை மகன் ! இந்த நிகழ்ச்சிகளும், காட்சிகளும் அவன் மனக் கண்முன்னே படையெடுத்துவரும். அதற்காகவே திருமணங்களுக்குப் போகிற வேலையை நிறுத்திக் கொண்டான். இப்போதோ தட்டமுடியாத அழைப்பு வந்துவிட்டது. ரத்தினமும் அவனும் இணைபிரியாத நண்பர்கள். அவன் மணத்திற்குப் போகவில்லை யென்றால்- கோகுலுக்கு அதை நினைக்கவும் இயலவில்லை. இரண்டொரு நாட்கள் குழப்பத்திற்குப் பிறகு, ரத்தினத்தின் கலியாணத்திற்குப் போவது என்று முடிவு செய்தான்.
ரத்தினத்தின் திருமணம் புதுமை முறையிலே நடைபெற்றது. அந்த வட்டாரத்திலேயே மிகப் புதிய கல்யாணம் என்று அவன் கோகுலுக்கு எழுதியிருந்தது உண்மைதான்! ஊர் மக்கள் எல்லாம்- அழைப்பில்லாதவர்கள் கூட அந்த அதிசயக் கல்யாணத்தைப் பார்க்கக் கூடியிருந்தார்கள்.
புரோகிதர்-ஓமகுண்டம்- அம்மி -அரசாணி எதற்கும் வேலையில்லாமல் வந்திருப்போரின் அன்பை சாட்சியாக வைத்து அறிவு முறையிலே திருமணம் நடைபெற்றது. கோகுல், மாப்பிள்ளைக் கோலத்திலே தன் நண்பனைக் கண்டான். அடக்கி வைத்திருந்த துக்கம் அணையுடைத்துக் கிளம்ப முயன்றது. சமாளித்துக் கொண்டான். நண்பனது வாழ்க்கை ஒப்பந்த விழா ! அதிலே தான் இப்படி நடந்து கொள்வது சரியல்லஎன்று அவனுக்குத் தெரியாமலில்லை ! தலைவரின் முன்னுரைக்குப் பிறகு அனைவரின் வாழ்த்துரைகளோடு, மணமகனும், மணமகளும் மாலை சூட்டிக் கொண்டார்கள். கோகுலின் திருமணம் இப்படி நடக்கவில்லை.
அக்கினி அருந்ததி சாட்சியாக நடைபெற்றது. அந்தத் தெய்வீகத் திருமணத்தையும் தன் மனைவியின் உயிரைப் பிடித்துக் கொள்ளத் திராணியற்ற அந்தத் தெய்வங்களையும் நினைத்துக் கொண்டான். அவனாகவே சிரித்துக்கொண்டான். திருமணம் முடிந்து, விருந்து முதலிய நிகழ்ச்சிகளும் நல்ல முறையில் நடந்தேறின. கோகுல் நண்பனிடம் விடை பெற்றுக்கொண்டு சென்னைக்குத் திரும்ப ஆயத்தமானான்! விடையளித்து வழி யனுப்பும்போது ரத்தினம் அவனைப் பார்த்து-‘கோகுல்! எத்தனை நாளைக்கு இப்படியே இருந்துவிட எண்ணுகிறாய் சென்றதை மறந்துவிட்டு, இன்னொரு திருமணத்தை ஏற்பாடு செய்! நீ என்ன இப்போது கிழவனாகவா ஆகிவிட்டாய்!” என்று உபதேசம் செய்ய ஆரம்பித் தான் !
“கிழவனாகவும் ஆகிவிடவில்லை. கல்யாணமே இனி வேண்டாமெனும் ஞானியாகவும் மாறிவிடவில்லை. ஆனால்… குழந்தை குமார் இருக்கிறான்…வரப்போகும் புதிய தாயார் அவனுக்கு ஒரு கிரகணமாகிவிட்டால் என்னப்பா செய்வது ?” என்றபடி கண்ணீர் வடித்தான் கோகுல்.
நீண்டநேரம் உரையாடலுக்குப் பிறகு எந்த முடிவுமில்லாமலே இருவரும் பிரிந்தனர்.
திருக்குவளைக்கு அருகே ஆறு மைலுக்கு அப்பால் அம்மனூர் சென்றால் புகைவண்டியில் செல்ல வசதியாயிருக்கும் என்று கூறி, கோகுலை ஒரு இரட்டைமாட்டு வண்டியிலேற்றி விட்டிருந்தான் ரத்தினம். ரயில் வருவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பாகவே ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தான் கோகுல். வந்த வண்டிக்காரனும் திரும்பிப்போய் விட்டான்.அந்தச் சிறிய ரயிலடியில் பேச்சுத் துணைக்குக்கூட அவனுக்கு ஆள் கிடைக்கவில்லை. அங்குமிங்கும் உலாவிக்கொண்டேயிருந்தான். தனிமையின் தோழனாக சிகரெட்டையாவது தேடுவோமென்று பக்கத்திலே விசாரித்தான். அதோ என்று கை காட்டிவிட்டுப் போனார்கள் ஊர்க்காரர்கள்.
இருட்டிலே மினுக் மினுக்கென்று வெளிச்சம் காட்டிக்கொண்டிருக்கும் அந்தச் சிறிய கடையை நோக்கி அவன் போனான். கடையிருந்தது ஆனால் வியாபாரம் செய்யும் ஆள் யாரையுங் காணோம். ஒரு சிறிய வீட்டுத் திண்ணையிலே அந்தக் கடையிருந்த காரணத்தால் கடைக்காரர் உள்ளே யிருப்பார் என்று நினைத்து “யார் கடையிலே ?” என்று கூப்பிட்டுப் பார்த்தான்.
“யாரது…என்ன வேணும் ?” என்று கேட்டபடி ஒரு அழகான யுவதி வெளியே வந்தாள். மங்கலான வெளிச்சத்திலும் அவள் முகத்தை அவனால் பார்க்க முடிந்தது. அப்படிப் பார்ப்பது முறையல்ல என்ற திடீர் உபதேசம் அவன் உள்ளத்திலே கிளம்பவே, ‘சிகரெட் வேணும்! என்று தயங்கிய குரலில் கேட்டான். அவள் சிகரெட்டைத் தேட ஆரம்பித்தாள்.
தேடுவதற்காக அவள் எடுத்துக்கொண்ட முயற்சி யின்போது, அவளது தேகத்திலே ஏற்பட்ட லாவகமான வளைவுகளை அவனால் பார்க்காமல் இருக்க முடியவில்லை. பட்டணத்துப் பெண்கள் நட்டுவனார் வைத்துப் பாடம் கேட்டும் கற்றுக்கொள்ளாத அபியே அசைவுகளை அவள் இயற்கையாகவே பெற்றிருந்தாள். அதைக் காணும் கோகுலுக்கு அதிசயமாகவே இருந்தது. மங்கை, சிகரெட்டைத் தேடி எடுத்தாகவில்லை. அதற்குள் உள்ளே பயங்கரமான இருமல் சத்தம் கேட்டது. அவள் சிறிது தயங்கி உள்ளே திரும்பினாள். மீண்டும் இருமல் பலமாகக் கேட்டது. சிகரெட்டைத் தேட அவளால் இயலவில்லை. கோகுலைப் பார்த்து “தயவு செய்து நீங்களே சிகரெட்டைத் தேடி எடுத்துக்கொண்டு, காசைப் பெட்டியிலே போட்டுவிடுங்கள்!” என்று கூறிவிட்டு அவன் பதிலுக்கும் காத்திராமல் உள்ளே ஓடிவிட்டாள். கோகுல் ஆச்சரியத்தால் மரம்போல் நின்றுவிட்டான்.
மேல்நாடுகளிலே இதுபோன்ற முறையைக் கேள்விப் பட்டிருக்கிறான் அவன். தினசரிப் பத்திரிகையும் ஒரு காசுக் கிண்ணமும் சாலை யோரத்திலே வைக்கப்பட்டிருக்குமாம். தேவையானவர்கள் காசைப் போட்டுவிட்டு
பத்திரிகையை எடுத்துப் போவார்களாம். இங்கே நம் நாட்டில், பூட்டப்பட்டுப் புதைக்கப்பட்ட சாமி உண்டியல்களையே பெயர்க்காமல் இருந்தால் போதாதா? பட்டண வாசிகளும் கற்றுக்கொள்ளாத நாகரீகத்தை இந்தப் பட்டிக்காட்டு மங்கை எப்படித்தான் ஆசிரியரின்றிக் கற்றுக்கொண்டாளோ, தெரியவில்லை. என்று சிந்தித்தபடி நின்றான் கோகுல். கையிலிருந்த ஒரு ரூபாய் நாணயத்தைப் பெட்டியிலே போட்டுவிட்டு, ஒரு ஒடிந்து போன சிகரெட்டைக் தேடி எடுத்து அதை அந்தச் சிறு விளக்கிலே பற்றவைத்தபடி திரும்பினான் ரயிலடிநோக்கி! அவன் ஒரு அடிகூட எடுத்து வைத்திருக்கமாட்டான் அதற்குள் அந்தக் குடிசைக்குள்ளிருந்து “அய்யோ ! அப்பா! அப்பா! என்ற சப்தம் வந்தது. சப்தம் போட்டது அவளாகத்தானிருக்க வேண்டும். அவள் குரல்தான் அது! கோகுல் தன்னை மறந்தவனாய் உள்ளே ஓடினான்.
வயதான கிழவர்; படுக்கையிலே பிரக்ஞையற்றுக் கிடக்கிறார். அவர் மார்பிலே தலையைச் சாய்த்துக் கொண்டு அந்தப் பெண் அலறுகிறாள். “ஓகோ செத்து விட்டார் போலும்!” என நினைத்துக் கோகுல் அருகே போனான். அவளோ, “அய்யோ அப்பா! அப்பா! என அலறிக்கொண்டே யிருந்தாள். கோகுல் கிழவரின் முகத்திலே கையை வைத்துப் பார்த்தான். அவர் சாகவில்லை என்பதைப் புரிந்து கொண்டான். உடனே அவளைப் பார்த்து, பயப்படாதே யம்மா! உன் அப்பா சாகவில்லை மயக்கம்தான்!” என்று ஆறுதல் கூறினான். அவளுக்குச் சிறிது நம்பிக்கை ஏற்பட்டது. தந்தையைத் தொட்டுப்பார்த்தாள். அவன் கூறியது உண்மைதான்.
“அய்யா! கொஞ்சநேரம் அப்பாவைப் பார்த்துக் கொள்ளுங்கள். நான் ஒரே ஓட்டமாக ஓடி, வைத்தியரை அழைத்து வந்து விடுகிறேன்.” என்று கெஞ்சினாள் அவள். கோகுல் முடியாது என்று சொல்ல முடியுமா? மிக மிக நெருக்கடியான சூழ்நிலை!… ரயில் நிலையத்திலே ரயில் வரப்போகிறது என அறிவிக்கும் மணி ஒலிப்பது அவன் காதிலே விழுந்தது. இருந்தாலும் அவளுடைய வேண்டுகோளை அவனால் மறுக்க முடியவில்லை. சரியென்று தலை யசைத்தான். அவள் ஓடினாள் சிறிது நேரத்துக்கெல்லாம் அவள் வைத்தியருடன் ஓடிவந்தாள். வைத்தியர் கிழவருக்கு ஏதேதோ சிகிச்சைகள் செய்து, மயக்கத்தைத் தெளிவித்தார். கிழவரும் மெதுவாகக் கண் விழித்து, “கோமதி!” என அழைத்தார். அவளும் ‘அப்பா’ எனத் தாவினாள் கிழவரின் படுக்கை யிடம். “கோமதி!’ “கோமதி!” கோகுலின் உதடுகள் அந்தப் பெயரை உச்சரித்துப் பார்த்துக் கொண்டன. வைத்தியர் போய்விட்டார். கோமதி நன்றியொழுகும் கண்களால் கோகுலைப் பார்த்தாள். கோகுல் அந்த ஏழைக் குடும்பத்தின் இளஞ்சிட்டை இருதய பூர்வமாக வாழ்த்தி விட்டு “நான் வருகிறேனம்மா!” என்றான். படுக்கையிலிருந்த தந்தை, “யார் கோமதி அது?” என்று ஈனசரத்தில் கேட்டார். “யாரோ வழிப்போக்கு அப்பா! ரொம்ப நல்லவர்! நான் வைத்தியரை அழைத்து வரும்வரையில் அவர்தான் உங்களுக்குக் காவல் இருந்தார்!” என்று கூறிக்கொண்டே கோமதி, கோகுலுக்கு மீண்டும் பார்வை யினால் நன்றி செலுத்தினாள். விசாரித்துவிட்ட பிறகு கிழவரிடம் பேசாமல் போகக்கூடாதே யென்ற நினைவில் கோகுல் அவரிடம் “என்ன பெரியவரே! எப்படியிருக்கிறது உடம்பு?”” என்று கேட்டான். எப்படியிருக்கு? இப்பவா கொஞ்ச நாழியான்னுதான் இருக்கு!”
“பயப்படாதிங்க; சரியாய்ப் போய்விடும். ரயிலுக்கு நேரமாவுது-நான் வர்ரேன்!”
இதைக் கூறிவிட்டு, கோமதியையும் பார்த்தபடி அவன் வெளியே வந்தான். ரயிலை எப்படியும் பிடித்து விடவேண்டு மென்று, ரயில் நிலையத்தை அங்கிருந்த படியே நோக்கினான். அப்போது தான் ரயில் நிலையத்தை விட்டுப் புறப்பட்டுக்கொண் டிருந்தது. இனி ரயிலைப் பிடிக்க முடியாது என்ற ஏமாற்றத்தோடு திகைத்து நின்றான். கடை யோரத்தில் அவள் நின்று கொண்டு, “எங்களால் தான் உங்களுக்கு இப்படியாகிவிட்டது!” என்று அனுதாபம் தெரிவித்தாள். கோகுலுக்கு, ரயில் தவறியதுகூட மறந்து விட்டது. அந்த அனுதாபச் சொற்கள் அவன் இருதயத்தை ஊடுருவிப் பாய்ந்தன.
“பரவாயில்லை, அதனால் என்ன… வருகிறேன்!” என்று கூறிவிட்டு பதிலை எதிர்பார்த்தான்.
“ஏன் இங்கு திண்ணையிலேயே படுங்களேன். காலையிலே தானே ரயில்!” என்றாள் அவள்.
“காலை ரயிலில் போயும் பிரயோசனமில்லை.
மாயவரத்திலே மதறாஸ் மெயிலைப் பிடிக்க வேண்டுமானால்- நாளை இரவு ரயிலில் தான் போயாக வேண்டும்.
காலையில் போனால் எங்காவது காத்திருக்க வேண்டியது தான்!” என்றபடி கோகுல் திண்ணையில் வந்து உட்கார்ந்தான்.
உள்ளேயிருந்து இருமல் ஒலி கேட்கவே, கோமதி ஓடினாள். கோகுலும் பின்னால் சென்று கவனித்தான். கிழவர், கோகுலைப் பார்த்து, “நீ போகவில்லையா தம்பீ?” என்று பரிவோடு கேட்டார். “அவருக்கு நம்மாலே ரயில் தவறிவிட்டதப்பா! இனிமேல் நாளை ரயில் தான் பாவம்!” என்றாள் கோமதி! ‘அப்படியா? அய்யோ பாவம்-” என்று அருகே உட்காரச் சொன்னார் அவனை.
கோகுலுக்கும் தூக்கம் வரவில்லை. கிழவர் இருமிக் கொண்டே, அவனைப்பற்றிய விபரங்களை அறிந்து கொண்டார். கோமதியை நினைத்தால்தான் தனக்குப் பயமாக இருக்கிறதென்றும், ஓநாய்களுக்கிடையே மான் குட்டியை வைத்துக் காப்பாற்றுவதுபோல அவளைக் காப்பாற்ற வேண்டியதிருக்கிற தென்றும் சொல்லி அழுதார். “தாயை இழந்த கோமதியை இத்தனை நாள் பாதுகாப்பாக வளர்த்து விட்டேன். அவளை ஒரு நல்ல பையன் கையிலே பிடித்துக் கொடுக்காமல் போறேனே; அதுதான் எனக்குக் கவலை!” என்று கண்ணிர் வடித்தார்.
வெகு நேரத்துக்குப் பிறகு கோகுல் திண்ணையிலே போய்ப் படுத்துக் கொண்டான். தூக்கமே வரவில்லை அவனுக்கு! ஏதேதோ எண்ணச் சுழற்சிகள்! குழந்தை குமார் – கோமதி.. இருவரும் அவன் கண் முன்னே மாறி மாறி வரவேண்டிய காரணம் என்ன? விடியற்காலையில் தான் தூக்கம் அவன் கண்களைத் தழுவ ஆரம்பித்தது. ஆனால் திடீரென்று கேட்ட கோமதியின் அலறல் அவனைத் திடுக்கிட்டு எழச் செய்தது. கதவைத் தட்டினான். கதவைத் திறந்துவிட்டு, “அப்பா! அப்பா!” எனக் கதறினாள். கோகுல் கிழவரிடம் ஓடிப் பார்த்தான். உடல் ஜில்லிட்டுப் போயிற்று. கிழவர் போய்விட்டார். எதிர்பாராத ஒரு சுமை கோகுலுக்கு! நல்லவேளை ரயில் மாலையில்தானே! கிழவரை அடக்கம் செய்யவேண்டிய காரியங்களைக் கவனித்தான். அவனது பேருதவியுடன் கோமதியின் தந்தை அடக்கம் செய்யப்பட்டார். ஊர் மக்கள் சிலர் வந்து கோமதிக்கு நேராக ஒப்பாரி வைத்து விட்டுப் போய்விட்டனர். தந்தையின் பிரிவால் கோமதி, தணற் புழுவாகத் துடித்துக் கொண்டிருந்தாள். அவ ளுக்கு இருந்த ஒரே துணை – அதுவும் போய்விட்டது.
இரவு வந்தது! திண்ணையிலேயே பொழுதெல்லாம் உட்கார்ந்திருந்த கோகுல், எழுந்து உள்ளே வந்தான். கோமதி அழுதுகொண் டிருப்பதைப் பார்த்தான். “கோமதி!” என்றான் குரல் கம்மிய நிலையில்!
அப்போதுதான் அவளுக்குக் கோகுலைப் பற்றிய நினைவு வந்தது. “அய்யோ, யாரோ ஒரு பரோபகாரி, இவ்வளவு உதவிகள் செய்திருக்கிறார். அவருக்கு ஒரு வேளை சாப்பாடுகூடப் போடவில்லை! சாப்பிடுகிறீர்களா என்று கேட்கவில்லையே என அவள் மனச் சாட்சி பேசிற்று. எழுந்து நின்றாள், கண்ணீர் வடித்தபடி! “நான் வரட்டுமா கோமதி?” கோகுல் முடிக்கவில்லை; அதற்குள் அவன் கால்களிலே விழுந்துவிட்டாள் அவள். இன்னும் இரண்டு நாளைக்கு இருங்கள்- எனக்கு சிறு ஆறுதலாகவாவது இருக்கும் !”
கோகுல் மௌனமாகிவிட்டான். அசைவற்றுப் போனான். திருக்குவளை நண்பன் ரத்தினம் நூறுதடவை சொன்னான், இரண்டு நாள் இருந்துவிட்டுப் போ என்று! அதைக் கேட்க வில்லை ; மறுத்துவிட்டான். இப்போது அசைவற்று நிற்கிறான். அவன் யார்? எங்கிருந்து வந்தான்! கொதிக்கும் நெருப்புக் குண்டத் தின் ஓரத்திலே தூக்கி எறியப்பட்டான் அவன்….அதே நெருப்புச் ஜூவலைக்கருகில், கருகிக்கொண்டிருக்கும் மலராகக் கோமதியிருந்தாள். சந்தர்ப்பம்- இப்படி ஒரு சூழ்நிலையைப் படைப்பித்து கைதட்டி ஆரவாரம் செய்தது. அவன் கண் எதிரே குழந்தை குமார் வந்து வந்து போனான்.
“ஏன் பேசாமலிருக்கிறீர்கள்.. நீங்கள் நேற்றுஇரவு முதல் செய்த உதவிகள் பெரிதல்ல … அனாதையாகப் போய்விட்ட எனக்கு.. எனக்கு எனக்கு…”
கோமதி விக்கி விக்கி அழுதாளே தவிர பேச்சை முடிக்கவில்லை. சாகப்போகும் நேரத்தில் தன் அருமை மகளைப்பற்றி அந்தக் கிழவர் கூறிய வார்த்தைகள் அவன் நெஞ்சைக் குடைந்து கொண்டேயிருந்தன.
“அழாதே கோமதி ! நான் இரண்டு நாட்கள் இருக்கிறேன். என்று அவளைத் தூக்கி நிறுத்தினான். வழிந்துகொண்டேயிருந்த கண்ணீரைக் துடைத்தான். அப்போது அவன் கைகள் நடுங்கின.. கண் எதிரே குமார் வந்து நின்று, “அப்பா! என்று கூப்பிடுவது போல் இருந்தது…
சென்னையிலே கோகுல் வீட்டு மெத்தையிலே குமார் தூங்கிக் கொண்டிருக்கிறான்…. கனவு! குழந்தையின் கனவு எதுவாக இருக்கும்? எந்த அப்பாவியை அடித்து, யாரை மோசம்செய்து. லட்சாதிபதியாகலாம் என்று கனவு காணப் போகிறதா? அல்லது பதவி தேடுவதற்காக எப்படி யெப்படிக்
கொள்கைகளைக் காற்றிலே பறக்கவிடலாம், யார் யாரைக் ‘காக்கா’ பிடிக்கலாம் என்று கனவு காணப் போகிறதா? குழந்தையின் கனவுகள் முள்ளிலேயிருக்கும் ரோஜா வைப் பறிப்பது போலிருக்குமே தவிர, தேன் பூச்சிகளை அழித்துவிட்டு, தேனடையை எடுத்துக் கசக்கிப் பிழி வதைப் போலிருக்காது!
அதுவும் தாயை இழந்த ஒரு குழந்தையின் கனவு எப்படியிருக்கும்? மிக மிக மென்மையான கனவு! ரோஜாவைப் பறிப்பதுபோலக்கூட இல்லாமல் ரோஜா மலரே, குழந்தையின் கன்னத்தில் வந்து விழுந்து விடுவது போன்ற கனவு ! ஆம் குமாரின் தாயார் அவனைத் தூக்கி முத்தமிட்டு மார்போடணைத்துக் கொஞ்சுகிறாள்… ‘ஆராரோ’ பாடுகிறாள்… அவனோ தூங்க மறுக்கிறான்… காலை நேரம்… தலைவாரி உடையலங்காரம் செய்து அவனைப் பள்ளிக்கூடம் அனுப்புகிறாள். அவன் போகும் போது பின்னழகைப் பார்த்தபடி வாயிற்படியிலே நிற்கிறாள்…பள்ளியிலிருந்து திரும்பி வருகிறான்… எதிர் கொண்டழைத்து உச்சி முகந்து முத்தமிட்டு விளையாட அழைத்துச் செல்கிறாள் …
குமார் விழித்துக்கொள்ளுகிறான். கனவு! தாயாரைக்காணவில்லை ! ரோஜா மறைந்து விட்டது. படுக்கை முழுவதும் முள்ளாகக் குத்துகிறது! பிஞ்சு மனம்! அரும்பு உள்ளம்! ‘அம்மா! அம்மா!’ என அலறுகிறது.
சுவற்றிலே தாயின் படம்! ஆம் படமாகிவிட்டாள் அவன் தாயார். அந்தப் படத்தை எடுத்து மார்போடு அணைத்துக் கொள்ளுகிறான். கண்ணீர்! பசுந்தரை யிலிருந்து ஊற்றெடுத்துக் கிளம்பிவரும் அருவி! படத்தை அணைத்தபடி படுக்கையில் சாய்கிறான். மறுபடியும் அம்மா கனவிலே வரமாட்டாளா என்ற ஆசையோடு கண்ணை மூடிக்கொள்ளுகிறான். தூங்கி விடுகிறான். விடிந்து விடுகிறது. வேலைக்காரனும் வேலைக்காரியும் இந்தக் காட்சியைப் பார்த்துவிட்டார்கள்.
பிள்ளை, அம்மாவை நினைத்து நினைத்து ஏங்கி விடும் போலிருக் கிறதேயென்று தூங்கும் அரும்பின் கையிலேயிருந்த அம்மா படத்தை மெதுவாக எடுத்து ஒளித்துவிட்டார்கள். குமார் எழுந்தான். கையிலேயிருந்த அம்மா எங்கே? விழித்தான்! யார் தூக்கிக் கொண்டு போயி ருப்பார்கள்? ஒரு வேளை கனவு உலகத்திலே போட்டு விட்டு வந்துவிட்டோமா? இப்படி நினைத்தான் ! பரவாயில்லை – இன்றிரவு, கனவு லோகத்துக்குப் போகும் போது எடுத்துக் கொள்ளலாம் – இப்படி ஆறுதல் அந் தக் குழந்தைக்கு!
அம்மனூரில் இரண்டொரு நாட்கள் கழிந்து விட் டன, கோகுலுக்கு! கோமதியும் தந்தையின் பிரிவை கோகுலின் உறவால் ஒருவாறு ஆற்றிக் கொண்டாள். எதையோ எண்ணி ஏங்கியவாறு கடையிலே அமர்ந்து வியாபாரத்தைக் கவனிக்கும் கோமதியின் முகத்திலே அவன் கற்பனை செய்ய முடியாத அழகையும், அந்த அழகிலே மறைந்து கிடக்கும் அமைதியையும், அந்த அமைதியோடு குழைந்து நிற்கும் அன்பையும் அவன் ரசித்துக் கொண்டேயிருந்தான். கடைக்குத் தின்பண்டங்கள் வாங்க வருகிற குழந்தைகளுக்கு அவள் காட்டுகிற அன்பை அவன் உன்னிப்பாகக் கவனித்தான். வரண்ட தலையோடு வரும் குழந்தைகளுக்கு எண்ணெய் தடவி சீவி விடுவாள்; நன்றாகப் படிக்கவேண்டுமென்று உபதேசம் செய்து அனுப்புவாள். இதெல்லாம் கோமதியின் பால் கோகுலுக்கு புதிய அபிட்ராயத்தை வளர்த்தது. அதோடு கோமதி தனியாக இருந்தால், அந்த ஊரில் திரிகிற ரௌடிக்கும்பல் அவளைச் சும்மா விடாது என்பதையும் புரிந்து கொண்டான்.
வாலிபன்! அதனால்! காதல் பொங்குகிறது.
தகப்பன்! அதனால்! குழந்தை குமார் எதிரே நிற்கிறான்.
நல்ல மனிதன் ! அதனால்! ஓர் அபலையைக் காப்பாற்ற வேண்டுமென்ற கடமையுணர்ச்சி எழுகிறது.
கடைசியில் கடமை யுணர்ச்சியின் பெயரால் காதல் வென்று விடுகிறது! அவனுக்கு ஒரே நம்பிக்கை, குமாரின் தராசு சாய்ந்துவிடாது என்பதுதான் ! காதலின் வெற்றிக்கு அந்த நம்பிக்கையும் ஒருகாரணமே! கடைக்கு வரும் குழந்தைகளிடம் கோமதி காட்டிய பாசம் குமாரைப்பற்றிய பயத்திரையை கோகுலுக்கு விலக்கிவிட்டது.
கிழவர் செத்துவிட்ட துக்கம் விசாரிக்க, அயலூரிலிருந்து ஒரு பாட்டி வந்திருந்தாள். கோமதிக்கு அவள் தூரத்து உறவு. அவள் கேட்டாள் “இந்தப் பிள்ளை யாண்டான் யார்?” என்று கோகுலைக் காட்டி !
“தூறத்து உறவு பாட்டி! அண்ணன் முறை!” என்று சொல்லிவிடலாமோ என எண்ணினாள் கோமதி! ஏனோ அப்படிச் சொல்ல அவள் மனம் இடந்தரவில்லை.
“பட்டணத்திலிருந்து வந்திருக்கிறார். எங்க அத்தை மகன்” என்று கோமதி, பாட்டியிடம் சொல்லியதை, திண்ணையிலிருந்தபடியே கோகுல் கேட்டு, தனக்குத்தானே மகிழ்ந்து கொண்டான். பாட்டி ஊருக்குப் போய்விட் டாள். “அத்தை மகன்” கோகுலுக்கு அந்த வார்த்தைகள் எத்தனையோ இன்பக் கதைகளைச் சொல்லத் துவங்கின. கோமதியும் கோகுலும் சேர்ந்து சென்னைக்குப் புறப்படுகிற வரையிலே அந்தக் கதைகள் நீண்டன. கோகுல், அவளுக்கு அத்தை மகனாகவே ஆகிவிடத் தீர் மானித்துவிட்டான். தனியாக வந்த கோகுல் கோமதி யுடன் சென்னைப் பயணத்தைத் துவங்கினான். இரு வரின் வாழ்க்கைப் பயணமும் ஆரம்பமாயிற்று!
இருவரும் வண்டியிலிருந்து இரங்குவதை வேலைக்
காரனும் வேலைக்காரியும் பார்த்துவீட்டு ஒருவர் முகத்தை ஒருவர் வியந்து நோக்கிக் கொண்டனர். கோமதியை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தான் கோகுல் ! அவர்களுக்கு உள்ளூர மகிழ்ச்சிதான். “குமார் எங்கே?”” என்று கேட்டபடி கோகுல் உள்ளே நுழைந்தான்.
“இப்பத்தான் பள்ளிக்கூடம் போச்சு !” என்றாள் வேலைக் காரி…சுவற்றிலே மாட்டப்பட்டிருக்கும் தன் மூத்தமனைவி யின் படத்தை அண்ணாந்து பார்த்தான் கோகுல் ! அங்கே படமில்லை ! தூக்கி வாரிப்போட்டது அவனுக்கு!
“படம் என்ன ஆயிற்று?”
வேலைக்காரன் சொன்னான், “குழந்தை படத்தைப் பார்த்து அழுவது அதிகமாயிடுச்சுங்க! அதனால் அதை மறைச்சு விட்டேங்க!” என்று.
கோகுலின் கண்களில் நீர் ததும்பிற்று! “என்ன படம்” என்று கேட்டாள் கோமதி. “உங்க அக்கா படம்” என்றான் அவன். வேலைக்காரனிடம் கேட்டு அந்தப் படத்தை வாங்கிப் பார்த்தாள் கோமதி. அவள் கண்களும் கலங்கின. “பூவோடும் பொட்டோடும் மஞ்சளோடும் மாங்கல்யத்தோடும் போய்ட்டாங்க எங்க அம்மணி!” என்று அழுதாள் வேலைக்காரி!
“நீங்க வந்திருக்கீங்க தாயே! நீங்களும் மகாலட்சுமி மாதிரி இருக்கீங்க… எங்க சின்ன எஜமானை…அய்யாவோட செல்லக் குழந்தையை…எங்க அம்மணியோட வயிற்றில் வந்த வைரத்தை…ஒரு குறையும் இல்லாம காப்பாத்துங்க அம்மா !”-
என்று கோகுல்கூற வேண்டியதை வேலைக்காரனே கூறிமுடித்தான். கோமதியிடம் விடைபெற்றுக்கொண்டு, கோகுல், பத்திரிகை அலுவலகத்திற்குப் புறப்பட்டான்.
அன்றைய தினம் ஆசிரியர் கோகுல் எழுதிய கட்டுரைகள் அத்தனையும் சுவைமிகுந்தவை! தலையங்கம்
புதுமுறுக்கோடு காணப்பட்டது! நண்பர்கள் காரணம் விசாரிக்க ஆரம்பித்தனர். காரணத்தைக் கேட்டு அனைவருமே மகிழ்ந்தனர். ஆசிரியர் அறைக்கு ஏறிச் செல்ல வேண்டிய ஐம்பது மாடிப்படிகளையும் அன்றைய தினம் அவன் அனாயசமாகக் கடந்தான். வாழ்க்கையின் முதல் படியிலே வழுக்கி விழுந்து, விழுந்த இடத்திலே குமார் என்னும் கோமேதகக் கல்லை எடுத்த பிறகு இத்தனை நாள் கழித்து இப்போதுதானே அடுத்த படியில் கால் வைக்கத் துணிந்திருக்கிறான். முதல் தாரத்துக்குக் குழந்தை இருக்கும்போது இரண்டாந்தாரமாக ஒருத்தியைக் கல்பாணம் செய்து கொள்வது சரியா தவறா என்ற கேள்வியைத் தன் நண்பர்களிடமெல்லாம் கேட் டான். அவரவர்களின் அனுபவங்களை எல்லாம் பொறுக் கிச் சேர்த்தான். அதில் அவனுக்குச் சாதகமான பதிலும் கிடைத்தது பாதகமான பதிலும் கிடைத்தது.
பள்ளிக்கூடத்திலே குழந்தை குமார் ஒரு மூலையிலே உட்கார்ந்துகொண்டு எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தான். எதைச் சிந்திக்கப் போகிறான்; அவன் தகப்பனைப்போல அகில உலக யுத்தத்தைப்பற்றி என்ன தலையங்கம் எழுதலாமென்றா? அல்லது அவனது பள்ளி ஆசிரியரைப்போல சம்பள உயர்வுக் கிளர்ச்சி வெற்றி பெறுமா என்றா? அவன் சிந்தனை முழுதும் தாயாரைப்பற்றியதுதான்!
விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்கள் அவனைப் பார்த்துக் கேலி புரிந்தார்கள்.
“பாருடா, கெளதம புத்தர் – சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறார்” என்று அன்றைக்குப் படித்த பாடத்தை ஒப்புவித்தான் ஒரு குரும்புக்கார இளைஞன். கௌதம புத்தர் என்றாலே என்னவென்று தெரியாத பிஞ்சு குமார் ! அவன் படிக்கும் வகுப்பே வேறு!
பள்ளி முடிந்து, பசலைகள் அனைவரும் கூட்டம் கூட்டமாக கும்மாளம் அடித்தபடி வீடு நோக்கி ஓடுகிறார்கள். குமார் மட்டும் தன்னந்தனியாக வந்து கொண்டிருக்கிறான். வீட்டுக்குத் திரும்பும் குழந்தைகளை அவர்களது தாய்கள் வாயிலில் நின்று எதிர் கொண்டழைத்துத் தூக்கி முத்தமிடுகிறார்கள். குமார் அவைகளைக் கவனிக்கிறான். அந்த அரும்பின் நடையிலே ஒரு தளர்ச்சி! கண்களிலே கலக்கம் ! இருதயத்திலே புயல்! தாங்குமா அந்த இளந்தங்கம் அந்தக் கொடு நெருப்பை! உரு ஓடிற்று! “தனக்கு ஒரு அம்மா இருந்தால் தன்னையும் இப்படித்தூக்கி முத்தமிட்டு எதிர்கொண்டு அழைப்பார் களே !” இப்படித்தான் விம்மியது போலும், அந்தப் பிறை நிலவு !
எல்லாப் பிள்ளைகளும் அவரவர்கள் வீட்டுக்குப் போய்விட்டார்கள். குமார் மட்டும் வீடு நோக்கி வந்து கொண்டிருக்கிறான். அதோ, அவன் வீடு ! வீட்டு வாயிலிலே யார் அந்தப் புது உருவம்? ஒரு வேளை; அம்மாவா?… வாயிற்படியிலே அடியெடுத்து வைத்த அவனை வாரி யெடுத்துத் தூக்கினாள் கோமதி ! எதிர்பாராத ஒரு உணர்ச்சி குமாரின் உள்ளத்தை உள்ளத்தை உலுக்கிவிட்டது போலும்? அவன் கண்கள் தாரை தாரையாக நீரைப் பொழிந்தன. கோமதிக்கு நடுக்கம் பிறந்தது. தன்னைக் குமார் ஏற்றுக் கொள்ளவில்லையெனக் கருதினாள்.அவள் உள்ளம் போர்க்களமாயிற்று! அரும்பு பொதியவிழாச் செடி இந்தக் குடும்பம்! அதன் வேரிலே ஊற்றப்படும் வெண்ணீராகத்தான் ஆகிவிட்டோமோ எனப் பயந்தாள். சிறிது நேரத்துக்கெல்லாம் குமாரின் உடல் கொதிக்க ஆரம்பித்தது. கோமதி அழுதே விட்டாள். அலுவலகத்திலிருந்து குழந்தைக்குத் தின்பண்டங்கள் வாங்கி வந்த கோகுல், இந்தக் காட்சியைப் பார்த்துக் கலங்கினான். “அம்மா பாருடா கண்ணா!” என்று கோமதியைக் காட்டினான்.
“எனக்குப் பொய் அம்மா வேணாம்! நிஜ அம்மா தான் வேணும்!” என்று புலம்பினான் குமார். அந்த வார்த்தைகள் வெடிமருந்துச் சாலையில் கிளம்பும் தீப்பொறிகள்போல இருந்தன கோமதிக்கு! குமாரின் காய்ச்சல் அதிகமாயிற்று. கோமதிக்கு குழந்தையுடன் இணைபிரியாதிருக்க ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டது. அந்த சந்தர்ப்பம், குழந்தைக்கும் அவளுக்கும் தணியாத பாசத்தைத் தோற்றுவிக்க உதவிற்று. ஆபத்து நேரங்களில் தான் நட்பு, காதல், பாசம் இவைகளின் ‘மீட்டரே’ அதிகமாகிறது-ஏன்; சில இடங்களில் ஆரம்பமாகிறது என்று கூடச் சொல்லலாம் அதற்கு உதாரணந்தானே; கோகுல்,. கோமதி இருவரின் காதல்! குமார் சிறிது சிறிதாக உடல் நலம் பெற்றான். அவன் உடல் நலம் பெற்று எழும்போது கோமதியை அம்மா என்று வாயார அழைக்கும் புதிய குமாராக இருந்தான். கோமதிக்குக் கொண்டாட்டம் தாங்கவில்லை. கோகுல்கூட சலித்துக் கொள்ளுகிற அளவுக்கு அவள் குழந்தையைப் பராமரிக்க ஆரம்பித்துவிட்டாள். குமாருக்கு ஒரு அம்மா கிடைத்துவிட்டாள் ! பள்ளிக்கூடம் அனுப்ப, பள்ளிக்
கூடத்திலிருந்து எதிர்கொண்டழைக்க, ஒரு அருமையான அம்மா கிடைத்துவிட்டாள் ! இப்போது, குமார் பள்ளிக் கூடத்தில் பால புத்தரைப்போல் உட்கார்ந்திருப்பதில்லை …வீர நெப்போலியனைப்போல் விஷமங்கள் செய்கிறான்.
வீடு திரும்பும்போது, சிறுவர்களை அவர்கள் தாயார் உபசரித்து வரவேற்பதை இப்போதெல்லாம் குமார், வெகு அலட்சியத்தோடு பார்த்துவிட்டு கம்பீரமாக நடக்கிறான்.
முன்பெல்லாம் குமார் ஒரு இலை; ஒரு மொட்டு- இப்போது இரு இலை; ஒரு மொட்டாக ஆகிவிட்டான்.
இரவு வெகுநேரம் வரையில் கோமதியின் வருகைக்காக கோகுல் விழித்திருக்க வேண்டியிருந்தது, படுக்கை யறையில்! காரணம், குமாரையும் கதை சொல்லி- பாட்டுப்பாடி தூங்க வைத்துவிட்டுத்தான் அவள் கோகுலிடம் வருவாள்– கோகுலுக்கு அதில் கொஞ்சம் வருத்தம்கூட! ஆனாலும் வீட்டிலே குமாருடன் விளையாடுவதற்கு ஒரு பாப்பா வரப்போவதாக வேலைக்காரனும் வேலைக்காரியும் குமாரிடம் அடிக்கடி அறிவித்து வந்தார்கள்.
அந்தப் பாப்பா எங்கிருந்துவரும்? எப்படி வரும் ? அது எப்படியிருக்கும் ? என்கிற ஆராய்ச்சியில் ஈடுபட்டு, அதன் வரவை ஆவலோடு எதிர்பார்த்திருந்தான் குமார்.
ஒரு நாள், கோகுல் அலுவலகத்திற்கு லீவு போட்டு விட்டு வீட்டிலேயே தங்கிவிட்டான். கோமதிக்கு அன்று பிரசவ வேதனை அதிகமாகிவிட்டது. குமாருக்கு ஒன்றும்
புரியவில்லை. “அம்மா ஏன் இப்படிக் கத்துகிறது?” அப்பாவைக் கேட்டான். வேலைக்காரர்களைக் கேட்டான். பெரிய சாக்ரடீசாக இருந்தால் தானென்ன; குழந்தையின் தர்க்கவாதக் கேள்விகளுக்குப் பதில் சொல்லிவிட முடியுமா என்ன? குமாருக்கு செயல் மூலம் பதில் சொல்லி, கோமதி ஒரு பெண் குழந்தைக்குத் தாயாகி விட்டாள். குமார் எதிர்பார்த்த பாப்பா வந்துவிட்டது.
“அம்மா, அம்மா! பாப்பாவை என்னோட பள்ளிக்கூடம் அழைச்சுகிட்டு போகலாமா?”
குமாரை முத்தமிட்டுக்கொண்டே கோமதி, “இப்போது வேண்டாண்டா ராஜா!” என்று தழுவிக் கொண்டாள். அந்த அன்பு ஸ்பரிசத்திலே அந்த அரும்பு மெய்மறந்து போயிற்று.
ஒருவருக்கொருவர் சமமாக பலமும், வளமும் இருக்கும்போதே பொறாமை உணர்ச்சி தலை காட்டுகிற இந்த உலகில். குமாரைவிடத் தன் குழந்தை பலஹீனமாகவும், வளமற்றும் இருப்பதைக் காணும் கோமதிக்கு அது போன்ற பொறாமைக் கனல் அவளையுமறியாமல் மூண்டதில் ஆச்சரியமில்லைதான்.
பாப்பா பிறந்தது முதல் அதற்கு நீங்காத நோய் தான்! அதைக் கவனிப்பதிலேயே அவளுக்கு நேரம் முழுவதும் செலவாயிற்று! தன் குழந்தையின் நோய் நீங்க கோகுல் நல்ல டாக்டரிடம் காட்டவில்லை என்ற வருத்தம் வேறு அவளுக்கு!
“என் குழந்தைன்னா உங்களுக்குத் தள்ளுபடி !” என்று ஒரு நாள் அவள் கோபமாகப் பேசிவிட்டாள் கணவனிடம் ! ‘”என் குழந்தை” இந்த வேறுபாடான வார்த்தை கோகுல் உள்ளத்திலே சம்மட்டி அடிபோல் விழிந்தது; பெண்கள் தனக்கொரு குழந்தை பிறக்கும் வரையில்தான் மற்ற குழந்தைகளிடம் அன்பாக இருக்கிறார்கள். அப்படி அன்பாக இருந்தால் தான் தனக்குக் குழந்தை பிறக்கும் என்ற பழைய நம்பிக்கைதான் அதற்குக்கூடக் காரணம் போலும்! எல்லாக் குழந்தைகளிடமும் எப்போதும் அன்பாயிருக்கவேண்டும். என்ற புதிய எண்ணம் பெண்கள் உள்ளத்திலே வளராதா ?
இப்படிப் பெண்கள் சமுதாயத்தைப் பற்றியே மொத்தமாக ஒரு கணக்குப் போட்டுக்கொண்டு சிந்தனை யிலாழ்ந்தான் கோகுல் ! என் குழந்தை-உன் குழந்தை எனப் பிரித்துப் பேசுகிற அளவுக்கு வந்துவிடுவாள் கோமதி என அவன் – நினைக்கத்தானில்லை ! அம்மனூர் கோமதி எங்கேயோ போய்விட்டாளே ; அம்மா-ஸ்தானத்தில் வைத்துக் குமார் மகிழ்ந்த அந்தக் கோமதி ஏன் மறைந்துவிட்டாள் ?-கோகுல் குமுறும் கடலானான்! பாப்பா வந்துவிட்டதால், குமாரிடம் கோமதி காட்டுகிற அன்பு குறைந்திருக்கத் தேவையில்லைதான்! ஆனாலும் பாப்பாவின் உடல் நிலை கோமதியை அந்த நிலமைக்குக் கொண்டுவந்து விட்டது.
ஒரு நாள் படுத்திருந்த பாப்பாவை, குமார் மிகவும் சிரமப்பட்டுத் தூக்கிக்கொண்டு தெருப்பக்கம் போனான். அதைப் பார்த்த கோமதிக்குக் கோபம் வந்து விட்டது— “டே மூதேவி–ஏண்டா குழந்தையைத் தூக்கிட்டுப் போயி கொல்லப்போறே?” என்று அலறியபடி குழந்தையைப் பிடுங்கிக்கொண்டு உள்ளே வந்ததைப் பலகணி வழியே பார்த்தான். ‘ஏதோ தப்புச் செய்து விட்டோம் போலிருக்கிறது, அதுதான் அம்மா திட்டுகிறார்கள்!’. . என்று குமார் நினைத்துக்கொண்டு, இளம் வாய் சிரிப்பைக் காட்ட, இருவிழியும் நீரைக்கொட்ட அப்படியே நின்றுவிட்டான். ‘மூதேவி’ என்பதற்குப் பொருள் அந்த மொட்டுக்கு என்ன தெரியும்?
கோமதிக்குத் தன் குழந்தையைப் பற்றிய ஏக்கம் அதிகமாகி விட்டது. நாளுக்கு நாள் அது உடல் மெலிவதை அவளால் சகிக்க முடியவில்லை. ஒருநாள் குழந்தைக்குக் கடுமையான காய்ச்சல் கண்டது.
மனங்கொதித்த கோமதி. நல்ல டாக்டர் யாரை யாவது அழைத்து வரக்கூடாதா என்று கணவனைக் கடிந்துகொண் டிருக்கிறாள். அப்போது எதிரே ஒரு டாக்டர் வந்து நிற்கிறார். “யார் சார் உங்களைக் கூப்பிட்டு வந்தது ?” என்று வியப்போடு கேட்கிறான் கோகுல்.
“இதோ இவன்தான்!’ என்று குமாரைக் காட்டுகிறார் டாக்டர்.
உடனே கோகுல் மகனை அள்ளி எடுத்து அணைத்து முத்தமாரி பொழிகிறான்.
ஆனால் குமார் எதிர்பார்த்தபடி அவன் அம்மாவிடமிருந்து ஒரு முத்தத் துளிகூடக் கிடைக்கவில்லை ! காரணம் என்ன? குமார் யோசித்தான் இளம் நெஞ்சம் இது போன்ற பெரிய யோசனையில் ஈடுபடலாமா ? ”எனக்கு நிஜ அம்மா இல்லே ! இது போலி அம்மா — பொம்மை அம்மா !” இப்படி ஒரு முடிவுதான் அவன் மனத்தில் உதயமாகியிருக்க வேண்டும்! புத்தகங்களை எடுத்துக்கொண்டு பள்ளிக்கூடம் போய்விட்டான். வேலைக்காரி
அவனை வழி அனுப்பி வைத்தாள். குழந்தையைப் பரிசோதித்த டாக்டர், மருந்து கொடுத்துவிட்டு, “கொஞ்சம் ஆபத்தான நோய்,தான் ; பனிக்காற்றுப் படாமல் கவனித்துக் கொள்ளுங்கள்; பார்ப்போம் பிறகு !” என்று சொல்லிவிட்டுப் போய் விட்டார். கோமதியின் துயரம் பன்மடங்காயிற்று!
“இதுவரையில் சரியாகக் கவனிக்காததால் இப்படியாகிவிட்டது என் குழந்தை!” என்று கணவனிடம் சீறினாள். அவன் குழம்பியிருந்தான். தாழை மடலை மேலேயிருந்து தடவினால் முள் குத்தாது எதிர்ப்புறமிருந்து தடவினால் முள் குத்திக் கை ரணமாகிவிடும்! கோகுல், கோமதியிடம் எதிர்நீச்சல் போட்டு, இருதயத்தை இன்னும் ரணமாக்கிக் கொள்ள விரும்பவில்லை! ஒருசாதாரணப் பெண்ணுக்குரிய மனக்குமுறல் அது. அதைத் தனது அமைதியினாலேயே அடக்கி விட முடியுமென நம்பியிருந்தான் அவன்.
பள்ளிக்கூடம் முடிந்து குமார் வீடு திரும்பினான். கொஞ்ச நாட்களாக வேலைக்காரிதான் அவனை எதிர் வந்து அழைத்துப் போகிறாள். இரவு உணவுக்குப் பிறகு அனைவரும் படுக்கைக்குப் போயினர். கோமதியும் குழந்தையும் ஒரு படுக்கையில் ! கோகுல் நாற்காலியில் படுத்தபடித் தூங்கினான். தூங்காமல் புரண்டுகொண்டிருந்த குமார், மெதுவாக எழுந்தான். அறையின் மூலைகளை யெல்லாம் தேடினான். என்ன தேடுகிறான், இந்த இருட்டில் ? அறையில் அவன் தேடியது கிடைக்கவில்லை. வீட்டின் கீழ்ப்பக்கம் போனான் மெதுவாக ! அங்கும் தேடினான். உயரமான பீரோ ; அதன்மீது ஒரு நாற்காலியைப் போட்டு ஏறினான். ஆ! அதோ அவன் தேடியது கிடைத்துவிட்டது! அவனது அம்மா படம்!
அதை எடுத்து மார்போடு அணைத்துக்கொண்டான். படுக்கைக்கு வந்தான் படத்தோடு ! அம்மா படத்தின் பக்கத்திலே படுத்துக் கொண்டான். ‘அந்தக் கட்டிலிலே பாப்பாவும் அதன் அம்மாவும்! இங்கே, இந்தக் கட்டிலிலே அம்மாவும் நானும், அய்யோ !’ இப்படி ஒரு வித்தியாச விஷத்தை அந்த அரும்பின் உள்ளத்திலே தெளிப்பதற்குக் காரணமாயிருந்தவள் கோமதிதான் !
இல்லை ! இல்லை ! நோய் வடிவான அவள் பிள்ளைதான் !
கோமதியின் அருகே கிடந்த பாப்பா அழுதது ; கோமதி நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தாள். பலநாள் கண் விழித்த களைப்பு அவளுக்கு ! குமார் எழுந்து பார்த்தான். சன்னல்கள் எல்லாம் மூடிக் கிடந்தன.
‘பாப்பாவுக்குக் காற்றில்லை : அதனால் அழுகிறது !’ – இது அவன் எண்ணம். சன்னல் கதவுகளை நன்றாகத் திறந்துவிட்டான். சிலுசிலுவெனப் பனிக்காற்று வீச ஆரம்பித்தது. பாப்பாவும் அந்தக் குளிர்காற்று பட்டதும் மௌனமாகிவிட்டது. குமாரும், தான் நினைத்தது சரிதான் என்ற மகிழ்ச்சியில் பாப்பாவைத் தட்டிக் கொடுத்துவிட்டுத் தன் படுக்கைக்குப் போனான். குழந்தைக்குப் பனி கூடாது என டாக்டர் எச்சரித்தது அவனுக்கு என்ன தெரியும் ? தூங்கிவிட்டான். அளைவரும் ஆழ்ந்து தூங்கினர். விடியற்காலை ! கோமதி விழித்துப் பார்த்தாள், சன்னல் திறந்திருந்தது.
“அய்யோ ! யார் சன்னலைத் திறந்தது ?” என்று கத்தினாள். கோகுல் திடுக்கிட்டெழுந்தான்.
“நான்தானம்மா, பாப்பாவுக்குக் காற்று வேணும்னு திறந்தேன்!” என்று கூறியபடி எழுந்தோடி வந்தான் குமார்.
கோமதி, குழந்தையைத் தொட்டுப் பார்த்தாள். குழந்தை விறைத்துக் கிடந்தது. அது இறந்து அதிக நேரமாகிறது! முதலில் ஒரு முறை அழுததே, அப்போதே அது போய்விட்டது! ஆனால் பழி…குமாரின் தலையிலே விழுந்தது! அங்கிருந்த ஒரு கூஜாவை எடுத்துக் குமாரின் தலையிலே ஓங்கி வீசி எறிந்தாள் கோமதி ! அய்யோ ! அம்மா!’ என அலறினான் குமார்! கூஜா குறி தவறி அவன் படுக்கையில் இருந்த அம்மா படத்தின்மீது விழுந்து, தூள் தூளாகப் போயிற்று. குமார் படத்தை எடுத்து முகத்தில் ஒற்றிக்கொண்டு அழுதான். உடைந்த கண்ணாடித் துண்டுகள் அவன் அழகு முகமெங்கும் கீறி, இரத்தம் கசிந்தது! கோகுலுக்கு எதை நினைத்து அழுவது என்று புரியவில்லை.
குமார் இரண்டு மூன்று நாட்களாகச் சரியாகச் சாப்பிடவே இல்லை. பாப்பாவைக் குழியிலே வைத்துப் புதைத்ததற்கு அவனல்லவா காரணமாம் ? அய்யோ, அப்பா பாப்பாவை நினைத்து அழுதுகொண்டே யிருக்கிறாரே ! அதற்கும் அவன்தானே காரணம்! கோகுல் எவ்வளவோ முயன்றும் அவனைச் சமாதானப்படுத்த முடியவில்லை.
”குழந்தை போய்விட்டது – அழுவதால் வரப்போகிறதா கோமதி ? குமாரைச் சமாதானப்படுத்து! அவன் அப்படியே ஏங்கிவிட்டான் !” என்று தழுதழுத்த குரலிலே கோகுல் அவளிடம் வேண்டிக்கொண்டான். பயனில்லை. கோகுல் மனப்புயலைத் தணிக்கும் மார்க்கம் தெரியாமல் தத்தளித்தான். குமாரைக் கூப்பிட்டுச் சாப்பிட வற்புறுத்தினான். அவன் மறுத்தான். மனைவியின் மீதுள்ள ஆத்திரத்தைக் குழந்தை மீது காட்டவேண்டுமென்ற முறைப்படி, குமாரின் கன்னத்திலே கோகுல் ஓங்கி ஓர் அறை கொடுத்துவிட்டு, விர்ரெனப் பறந்துவிட்டான் அலுவலகத்திற்கு!
‘அப்பா! ஏன் என்னை அடிக்க வேண்டும் ?’ விடை காண முடியவில்லை அந்தப் பச்சைப் பாலகனால்! பேசாமல் எழுந்து பள்ளிக்கூடம் போய்விட்டான்.
மாலை பத்திரிகை ஆபீசில் கோகுலுக்கு வேலை ஓடவில்லை. ஆறுமணி ஆகியும் நினைத்த கட்டுரையை எழுதி முடிக்க இயலவில்லை. மன நிம்மதியல்லவா எழுத்தாளனுக்கு முக்கிய மூல தளம் ? தொட்டுத் தொட்டு வளர்த்த தன் அருமைச் செல்வத்தை அறைந்து விட்டதை நினைத்து நினைத்து அவன் வெம்பினான். அவன் முதல் மனைவி, அவனெதிரே வந்து காலைப் பிடித்துக் கொண்டு அழுது, ‘இனிமேலாவது நம் செல்வத்தை இப்படி அடிக்காதீர்கள்!’ என்று கெஞ்சுவது போலிருந்தது ! போனில் மணி அடித்தது; பேசினான்.
“குமார், பள்ளிக்கூடத்திற்குப் போனவன் திரும்பவேயில்லை!” பள்ளிக்கூடத்திலும் இல்லை!” என்று வேலைக்காரன் தகவல் கொடுத்தான். கோகுலுக்குத் தலை சுழன்றது. அறையைவிட்டு வெளியே ஓடிவந்தான். ‘”குமார்!” என்று கத்தியபடி மாடிப்படியிலே கால் வைத்தான். உலகமே இருண்டுவிட்டது போன்ற உணர்ச்சி ! கண்களிலே பயங்கரமான சுழற்சி! கோகுல் கால் தவறியது ! கடகடவெனப் படிகளிலே உருண்டான். மாடிப்படி. முழுவதும் இரத்த வெள்ளம் !
ஆஸ்பத்திரியிலே, கவலைக்கிடமான நிலைமையிலே கோகுல் ! இதைக் கேட்ட கோமதி அலறித் துடித்துக்கொண்டு ஓடிவந்தாள். அவளை யாரும் உள்ளே அனுமதிக்கவில்லை. வெளியிலேயே உட்கார வைத்து விட்டார்கள். பிரக்ஞையே வரவில்லை. இன்னும் பத்து நிமிடத்தில் பிரக்ஞை வந்தால்தான் பிழைப்பான் – இல்லா விட்டால் பிழைக்கமாட்டான். இப்படித் தகவல் தரப்பட்டது அவளுக்கு! தன்னாலேயே – தன்னுடைய போக்கினாலேயே தன் கணவனுக்கு ஆபத்து வந்து விட்டது என்பதை உணர்ந்தாள்.
அவளையறியாமல், கணவன் மீது அவளுக்குள்ள அன்பு புதுப் பிக்கப்பட்டது !
அவள் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகேயுள்ள மரத்திலே யிருந்து தழைகள் உதிர்ந்தன. அவற்றைக் கண்டு அலறினாள். அந்த மரக்கிளையில் அமர்ந்திருந்த இரு புறாக்களில் ஒரு புறா எழுந்து பறந்தது !- அதைப் பார்த்து ஓவெனச் சப்தமிட்டாள் ! அந்த நேரத்திலே, தன்னை அடித்ததற்குக் காரணம் கேட்க அப்பா வின் ஆபீசுக்குப் போய், அங்கே பியூன் உதவியோடு ஆஸ்பத்திரிக்கு வந்த குமார். அம்மா அழுதுகொண்டிருப்பதைப் பார்த்து அவளிடம் ஓடிவந்தான்.
‘குமார் ! அப்பா ஏமாற்றிவிடுவார் போலிருக்கடா !”என்று அவனை அணைத்துக்கொண்டு வீரிட்டுக் கதறினாள் கோமதி !
“அழாதேம்மா !” என்று அவள் கண்களைத் தன் கொழுந்துக்க கைகளால் துடைத்தான் அந்த அரும்பு !
“யாரடா ராஜா இனிமேல் நமக்கு ஆதரவு ?” என்று விம்மினாள். அவள் மனக்கண் முன்னே, அம்மனூர் குடிசையில் கோகுலின் காலைப் பிடித்துக்கொண்டு ஆதரவு கோரிய அந்தக் காட்சி தோன்றி மறைந்தது.
“பயப்படாதேம்மா !.. நான் பெரியவனா ஆகி, உன்னைக் காப்பாத்துவேன்-பயப்படாதேம்மா !” என்று அவளது மோவாய்க் கட்டையைப் பிடித்துக்கொண்டு குமார் தேம்பி அழுதான்.
அந்தப் பசலையின் ஆதரவு மொழி, அவள் குறுகிப்போன இருதயத்தை விசாலமாக்கிவிட்டது ! தாய்மை உணர்ச்சி, பிள்ளையைப் பெற்றால்தான் வரவேண்டுமா ? அல்லது தன் வயிற்றில் பிறந்த பிள்ளையிடம்தான் காட்டப்பட லேண்டுமா? தாய்மை உணர்ச்சி, பெண் குலத்தின் சொத்தாயிற்றே ! அந்த உணர்ச்சி கோமதியின் உள்ளத்திலேயிருந்து பீரிட்டுக் கிளம்பிக் குமாரைத், தழுவிக்கொண்டது !
இருவரும் கன்னத்தோடு கன்னம் ஒட்டிக்கொண்டனர்.அம்மாவின் படத்திலேயுள்ள கண்ணாடித் துண்டுகள் கிழித்த கீறலின் தழும்புகளைக் கோமதியின் கண்ணீர் கழுவிக்கொண்டிருந்தது!
நர்ஸ் ஓடிவந்தாள் ! கோமதி, திடுக்கிட்டாள் !
கோகுல் பிழைத்துவிட்டான் என்ற இன்பச் சேதி கிடைத்தது. குமாரும், கோமதியும் உள்ளே ஓடினார்கள் ! கோகுல்,கோமதியின் இடுப்பிலேயுள்ள குமாரைக் கண்டான். உண்மையாகவே- இப்போது அவன் பிழைத்துவிட்டான்.
அரும்பைப் பாதுகாக்கும் இரு இலைகளும் உதிர்ந்து விடுமோ என்ற நிலை இருந்தது – இப்போது, மீண்டும் இரு இலை, ஒரு மொட்டு – ஆகிவிட்டது ! இந்தப் புதிய ஆரம்பம், இனி இரு இலை, இரு மொட்டு என்று ஆவதற்கான இன்ப ஆரம்பமாகவும் இருந்தது !



