
ஞானரதம் – சி. சுப்பிரமணிய பாரதியார்
கடற்கரை
பறந்து பறந்து கடலுக்கருகே வந்து சேர்ந்தோம். நெருங்கி வரவே,
உள்ளுயிரிலே புகுந்து இனிய சலனங்கள் தருவதும், காரமில்லாத தழதழத்த
இயற்கையுடையதுமான மனோஹரத்தன்மை கொண்டதோர் ஸுகந்தம்
புலப்பட்டது. குமாரி சொல்லியிருந்த ஸுகந்த மாளிகை ஸமீபித்து
விட்டதென்பதை அறிந்து கொண்டேன். “இம் மாளிகைக்கு இத்தனை இனிய சுகம்
எப்படி ஏற்பட்டது?” என்று நான் கேட்க வாயெடுக்கு முன்பாகவே அவள், எனது
உள்ளக் கருத்தைத் தெரிந்து கொண்டு பின்வருமாறு கூறலாயினள்:-
“கஸ்தூரிக் கற்களாலும், தேவ சந்தன மரத்தாலும் இம்மாளிகை
ஆக்கப்பட்டிருக்கிறது. அன்றியும், இதைச் சூழ்ந்துள்ள பூங்காவனத்திலே உங்கள்
உலகத்தில் கண்டறியாத அதிக கந்தமுடைய பலவித மலர்ச்செடிகள்
இருக்கின்றன” என்றாள்.
இங்ஙனம் பேசிக்கொண்டே, சுகந்த மாளிகையின் உச்சிமேடையில்
போயிறங்கினோம். எங்களைப் போலவே இணையிணையாகப் பலர் அங்கே
வந்திருந்து கடற்காட்சியை நோக்கிக் களித்துக் கொண்டிருப்பது கண்டேன். ஓர்
ஓரத்திலே போடப்பட்டிருந்த இரண்டு ஆசனங்களில் போய் சிரம பரிகாரமாகச்
சாய்ந்து கொண்டோம். அவ்வாஸனங்கள் இலவம் பஞ்சுபோன்ற யாதோ ஒரு
பொருள் பொதிந்தனவாய், வெண்பட்டால் மறைக்கப்பட்டிருந்தன. அவற்றில்
சாய்ந்தவுடனே, தாயின் மடியிலே சாய்ந்ததுபோல உள்ளத்திற்கு ஆறுதல்
உண்டாயிற்று.
எதிரே கடல், சந்திர கிரணங்களால் ஜோதியுயிர் கொடுக்கப் பெற்ற அலைகள்.
வெள்ளை மலர்கள் புனைந்து, புஷ்பக்குன்றுகள் கிடப்பது போலத் தோன்றிய
கப்பல்கள். தூரத்திலே, அன்னங்கள் மிதப்பதுபோல மிதந்த இன்பப் படகுகள்.
மேலே, சந்திரன், வெள்ளி மேகங்கள்; இம் மேகங்களிலே சில வலைகள் பரப்பி
யிருப்பதுபோலத் தோன்றும்; சில அலைகளடிப்பது போலிருக்கும்; ஒன்று பூச்
சிதறியதுபோலத் தோன்றும்; கீழே மிதக்கும் படகுகளுக்கு வானக்கண்ணாடியிலே
தோன்றும் சாயைகள் போலச் சில மிதந்து செல்லும். இனி, நக்ஷத்திரங்கள்! வானக்
கடலிலே வெடித்தெழுந்த வயிரங்கள்! சிதறுண்ட இன்பங்கள்! வானப்
பொய்கையிலே மனமெனும் சிறிய வண்டுபோல் ஒளித் தேன் குடிப்பதற்கமைந்த
எண்ணில்லாத மலர்கள்! திசையென்ற அநந்த வஸ்துவுடன், ஈசனறிவு என்ற அநந்த
வஸ்து தாக்கியபோது பொறித்தெழுந்த சுடர்ப் பொறிகள்.
படகுகளிலே இணையிணையாக கந்தர்வ இளைஞர்களும் பெண்களும், சிலர்
பாட்டிலும், சிலர் ஆட்டத்திலும், சிலர் வாத்தியங்கள் வாசிப்பதிலும், களிப்பவராகி
அலை முழக்கமாகிய பிராகிருத பேரிகைக்கு இவர்கள் பலவிதங்களிலே
அனுமோதஞ் செய்வாராயினர். சந்திர கிரணங்களும் இவற்றிடையே மாறாப்
புதுமை கொண்ட பொன் வண்டொலியிசைத்துக் கொண்டிருந்தன. கடற்காற்றோ,
பர்வதகுமாரியின் நெற்றிமீதுள்ள குழற் சுருள்களுடன் விளையாடிக்
கொண்டிருந்தது.
ஆ! உருவம் காந்தர்வமாக மாறிவிட்ட போதிலும், எனது ஜீவன் மானிட
ஜீவனாதலால் இத்தனை இன்ப மிகுதியை என்னால் பொறுக்க முடியவில்லை.
புலன்கள் திகைத்துப் போய் விட்டன. அறிவு மயங்கிவிட்டது. இன்பமாகிய கடலின்
அலைகளிலே எனதுயிர் சிறிய நுரைபோல எற்றுண்பதாயிற்று. இன்பமாகிய
புயற்காற்றிலே எனதுயிர் சிறு துரும்புபோலச் சுழல்வதாயிற்று. என்ன சுகந்தம்!
என்ன இசை! என்ன காட்சி! பர்வதகுமாரியுடன் நான் ஏதேதோ, தொடர்பற்ற
மொழிகள் பேசுவேனாயினேன். இன்பங்கள் அறிவினை அமிழ்த்தி விடவே, நா,
கடிவாள மிழந்த காட்டுக் குதிரை போல, கண்ட கண்ட இடங்களில்
சஞ்சரிப்பதாயிற்று. இன்பம் தெவிட்டிப் போய்விட்ட தென்று நான்
சொல்லவில்லை. நான் போக்தா (அனுபவிப்பவன்) ஆக இருந்தது போய், அது
போக்தாவாகி என்னை விழுங்கித் தீர்த்து விட்டது. பேசிக் கொண்டிருந்தபடியே
கண்ணயர்ந்து விட்டேன்.
சில பொழுது கழிந்ததின் பிறகு, விழிப்படைந்தேன். சூரியோதய காலம்.
கடலும் வானும் கூடித் தழுவிய இடத்தில், அவற்றின் கூட்டத்திலே தோன்றிய
ஜோதிக் குழந்தை போலப் பரிதி வட்டம் பிறந்தது: கிழக்குத் திசையில்
வானமெங்கும் நெருப்புக் குழம்பு பறந்திருந்தது. தீப்பட்டெரியும் தீவுகள் போல
மேகங்கள் காணப்பட்டன. மேகங்களுக்கு மனித புத்தி யுண்டென்று நினைக்கிறேன்.
தமது இருளியற்கையை மாற்றித் தம்மை ஒளியுடையனவாகச் செய்யும்
சூரியனை இவைகள் அமுக்கிக் கொன்றுவிடப் போகின்றன.
“பரஸ்பரம் அன்போடு வாழுங்கள்” – “அன்பே சிவம்” – என்ற பெருந்
தர்மத்தைக் கூறி யூத ஜாதியாரை ஒளிபெறச் செய்ய வேண்டுமென்று நாடிய
கிறிஸ்து முனியை – தான் பிறந்ததால் யூத ஜாதிக்கே ஓர் புகழும் மாண்புங்
கொடுத்த கிறிஸ்து முனியை யூத ஜாதியார் பகைத்துக் கொல்லவில்லையா?
அதாவது, கொல்ல முயன்றார்கள்; அவர்களால் கொல்ல முடியவில்லை. கிறிஸ்து
முனி இன்று வரை உயிரோடிருக்கிறார். தர்மத்தின் பொருட்டாகவும், மக்கள்
மீதுள்ள அன்பின் பொருட்டாகவும், உலகத்தாரின் தூற்றுதல், உலகத்தார் செய்யும்
நிஷ்டூரம் என்ற சிலுவையில் ஏற்றுண்டு வருந்தும் ஒவ்வொரு மனிதனிடத்தேயும்
கிறிஸ்துவே விளங்குகின்றார்.
எனக்கு அந்த மேகங்களைப் பார்க்கும்போது பாரிசேயர்கள் முதலிய யூதக்
குருக்களின் நினைப்பு வந்தது. க்ஷணப்பொழுது. பின்பு அந்த ஜோதிக் கோளம்
மேலெழுவதாயிற்று. வஜ்ராயுதங்கள் போலத் தோன்றிய தனது கிரணங்களால் அம்
மேகங்களை உடைத்துச் சிதறி, எற்றி, அசைத்துக் குழப்பிப் புரட்டி ஓட்டித்
தொலைத்துவிட்டு, பால சூரியன், மிகுந்த வெற்றிக் கோலத்துடன் கிரணங்களை
உலக முழுவதிலும் பரப்பி. விடுதலை பெற்ற ஓர் பேருண்மை போல ஒளி
வீசுவானாயினன். உலகம் மகிழ்ச்சி பெற்றது. கந்தர்வ மாதர்களெல்லாம் பூபாள
ராகத்தில் காயத்ரி பாடித் துதித்தார்கள்.



