வள்ளலார் வகுத்த வழிகள் பாலூர் கண்ணப்ப முதலியார்

வள்ளலார் வகுத்த வழிகள்
பாலூர் கண்ணப்ப முதலியார்

வள்ளலார் என்று இங்குக் குறிப்பிடப்பட்டவர் வடலூர் இராமலிங்க சுவாமிகளே ஆவார். இவர் மக்கள் நல்வழியில் சென்று உய்யும் பொருட்டுத் திருவருட்பா என்னும் சீரிய நூலைப் பாடி அருளியதோடு நில்லாமல், பற்பல உரைநடை நூல்களையும் எழுதியுள்ளார். அவ்வுரைநடை நூல்களில் அமைந்துள்ள கருத்துக்கள் அருமையும் பெருமையும் வாய்ந்தவை. ஆனால், மக்கள் அவற்றைப் பெரிதும் படித்து அறிந்து கொள்ளவில்லை. அவர்கள் மனம் முற்றும் அருட்பாவில் தோய்ந்து கிடப்பதே இதற்குக் காரணம். அங்ஙனம் அருட்பாவில் தோய்ந்த மனத்தைச் சிறிது வள்ளலாருடைய உரைநடைகளிலும் திருப்ப வேண்டும் என்னும் எண்ணங் கொண்டே இந்தூல் வள்ளலார் வகுத்த வழிகள் என்னும் பெயருடன் வெளிவருவதாயிற்று. இத்தொகுப்பு உரைநடை நூலில் ஐந்து அரிய பெரிய கட்டுரைகள் அமைந்துள்ளன. அவை 1. திருவருளை எவ்வாறு பெறக் கூடும்? 2. வந்தனை முறை. 3. மெய்ம் மொழியும் ஒழுக்கமும். 4. நித்திய ஒழுக்கம் என்னும் உலகியல். 5.உபதேசம் என்பன. இவற்றுள் மெய்ம்மொழியும் ஒழுக்கமும் என்னும் கட்டுரை நேரே அவர் கையால் எழுதப்பட்டதன்று என்றும் அவருடைய அணுக்கத் தொண்டர் ஒருவரால் வள்ளலாரின் திருவார்த்தைகளைக் கொண்டு எழுதப்பட்டது என்றும் கருதப்படுகிறது. இதனை நம் நினைவில் வைத்தற்குரிய செய்தியாகும்.

இக்கட்டுரைகளில் பல அரிய சொற்களும், அருந் தொடர்களும், மேற்கோள் பாக்களும் காணப்படுதலின், அவை யாவற்றிற்கும் தெளி பொருள் விளக்கமாக குறிப்புரை கூடுமான வரையில் என்னால் எழுதப்பட்டுள்ளது. அதன் துணைகொண்டு கட்டுரைகளை எளிதில் அறிந்து கொள்ளலாம். அவ் விளக்கக் குறிப்புக்கள் அனைத்தும் நூலின் ஈற்றில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்நூலைத் தமிழ் உலகம் ஏற்று என்னை ஊக்குவிக்குமானால், மேலும் பல வள்ளலாருடைய உரைநடைகளை அச்சிட யான் முன்வருவேன். குற்றம் குறைகள் இருக்குமாயின், அவை பொருத்தமானவைகளாக இருப்பின், ஏற்று அடுத்த பதிப்பில் அத்திருத்தங்களுடன் பதிப்பித்து வெளிப்படுத்துவதோடு, அவர்கட்கு நன்றி செலுத் தும் கடமையுடையவனும் ஆவேன்.

இந்நூலுக்கு ஓர் அணிந்துரை எழுதி உதவிய சைவசித்தாந்த நுண்ணூல்களில் ஆராய்ச்சிப்பெரும் புலமை பெற்ற, சைவத் திருவாளர் திரு.பாரிப் பாக்கம் கண்ணப்ப முதலியார் அவர்கட்கும், இந்நூலை அழகுற அச்சிட்டு வெளிப்படுத்திய ஸி. குமாரசாமி நாயுடு அண்டு சன்ஸ் கம்பெனியாருக்கும் என்னன்றி அறிதலான வணக்கம் என்றும் உரியதாகும்.

‘அம்மையப்பர் அகம்’
77, அவதானம் பாப்பையர் தெரு,
சூளை, சென்னை, 31-1-52,

இங்ஙனம்
பா .து. .

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *