வள்ளலார் வகுத்த வழிகள்
பாலூர் கண்ணப்ப முதலியார்

சைவ சித்தாந்த நூல்களில் ஆராய்ச்சிப் பெரும் புலமைபெற்ற சைவத்திருவாளர் பாரிப்பாக்கம் கண்ணப்ப முதலியார் எழுதிய

அணிந்துரை


ஓம் திருச்சிற்றம்பலம்

தேனும் பாலும் உடன் கலந்து அட்ட தேமாஞ் செழுங்கனித் தீஞ்சுவைத் திரள்ளன இலங்கும் திருவருட்பாவினை அருளிய அருட்பிரகாசவள்ளற் பெருமான், செந்தமிழ் இயல்வளங் கொழிக்கும் உரை நடை வகையான் இயற்றியருளிய நிறைபொருள். கட்டுரைகள் பல இலங்குகின்றன. அவை தம்முட் சில, வள்ளற் பெருமான் இயற்றியருளியன வல்ல என்னும் நிலைக்குரியனவாகக் காணப்படுகின்றன. சிந்தாமணியிற் கந்தியார் பாட்டுக்கள் போன்று மல மாசின் செருக்குடைய சிலர் திருவருளில் திளைத்த ஆன்றோர் அருட் செயல்களிலும் இடைச் செருகலாகத் தாம் நினைந்தவாற்றான் சில எழுதிச் சேர்த்தல் உண்டென்பது, செந்தமிழ் மாமறையாகிய தேவாரத் திருமுறைகளின் கண்ணும் திருவருட் ரவியமாகிய திருத்தொண்டர் புராணத்தின் கண்ணும் வெள்ளிப்பாடல்கள் விரவிய செயலான் உணரப்படுகின்றது.

இங்ஙனம், அக்கட்டுரைகளில் கலந்து நிற்கும் இடைச் செருகல்களாய அவைகள், வள்ளற் பெருமான் அன்பு நலங்கனிந்து அருளொளி வீசும் அரும் பொருள் உரைநடையின் உண்மை அழகினைப் பலகால் பயின்று நன்காய்ந் துணரும் நற்புலமை உடையார்க்கு, நவமணித் தொகுதியின் இடைப் பட்ட பரல் எனப் புலப்படும் பான்மையில் இலங்குகின்றன. இச்சிறிய முன்னுரையில் அதுபற்றிய விரிவெலாம் எடுத்தியம்ப இசைந்திலம்.

வள்ளற் பெருமான் இயற்றியனவாக வழங்கும் அக்கட்டுரைகளுள் இக்காலத்தார்க்கு எளிதிற் பயன்தரக் கூடிய நிலையிலுள்ளன சிலவற்றினைத் தொகுத்து வெளியிடவிழைந்த எம்கெழுதகை நண்பர் வித்துவான் பாலூர் கண்ணப்ப முதலியார் அவர்கள் அக்கட்டுரைகளுள் காணப்படும் அருஞ்சொற் பொருள்கள் படிப்போர்க்கு எளிதின் விளங்குமாறு எழுதிச் சேர்த்த குறிப்புரை அவ்வச் சொற்களின் பொருள்களை இனிதின் உள்ளவாறுணர்த்தும் பெற்றியின் இலங்குகின்றது.

குறிப்புரை எழுதிய புலவர் அவர்கள் சமய நூற் புலமையிற் சிறந்து, சமயநெறி பிறழாது, தகவாற்றான் சமயப் பணிபுரியும் பெற்றியராத் திகழ் பவராதலின் சமய நூற்களுக்கு இவர் போன்று உரைவரைதலே தகுதியின் மிக்க பயனுடைத்தாகும்.

இந்நூலை வெளியிடும் புகழின் மிக்க அச்சகத்தார், சமய நூற்றுறைகள் பலவற்றினும் மேன் மேலும் இவரைப் பயன்படுத்தி ஊக்கம் காட்டு மாறும், நண்பர் அவர்கள் தமிழ் மொழிக்கும் சைவ நெறிக்கும் பயன் தரத்தக்க பணிகள் பலவற்றினை எடுத்து நன்கு முடித்துப் பொருளொடு புகழும் புண்ணியமும் ஒருங்கு மிகப்பெற்று நீடிய வாழ்நாள் நிரம்பப் பெற்று வாழுமாறு அம்பலவாணன் அருள் புரிவானாக என அவனது திருவடித் தாமரைகளை வழுத்துகின்றோம்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *