வள்ளலார் வகுத்த வழிகள்
பாலூர் கண்ணப்ப முதலியார்

5. உபதேசம்

இங்குள்ள நீங்கள் எல்லவரும் இதுவரையில் இருந்தது போல் இனியும் வீண்காலம் கழித்துக் கொண்டிராதீர்கள்.

இது முதல், சாலைக்கு ஆண்டவர் போகிற பத்துத் தினமாகிய கொஞ்சக் காலம் வரையில், நீங்களெல்லவரும் நல்ல விசாரணை யில் இருந்து கொண்டிருங்கள். அந்த விசாரணை எது என்றால், “நம் நம்முடைய நிலை யெப் படிப்பட்டது? நமக்கு மேல் நம்மை அதிட்டிக்கின்ற தெய்வத்தினுடைய நிலை யெப்படிப் பட்டது?” என்று விசாரிக்க வேண்டியது. அதற்குத் தக்கபடி, நீங்கள் ஒருமித்தாவது, அல்லது தனித்தனியாகவாவது, உங்களறிவிற்கும் ஒழுக்கத்துக்கும் ஒத்தவர்களுடன் கூடியாவது, அல்லது வேலாயுத முதலியாரைக் கேட்டால்,மனுஷ்யதரத்தில் போதுமான வரையில் சொல்லுவார். அவரிடம் அப்படிக் கேட் டாவது நல்ல விசாரணையிலிருங்கள்.

இவ்விசாரணை முகத்திலிருந்தால், நமது ஆன்ம அழிவை விளக்கமின்றி மூடிக்கொண்டிருக்கின்ற அனந்தத் திரைகளில் அழுத்தமா யிருக்கின்ற முதல் திரையாகிய பச்சைத்திரை முதலில் நீங்கிவிடும். அது நீங்கினால், மற்றத் திரைகள் அதிக விரைவில் நீங்கிப்போய்விடும். அந்தப் பசுமை வர்ணம் எப்படிப்பட்டதென் றால், கருமைக்கு முதல் வர்ணமான பசுமையாக இருக்கின்றது. இப்படிப்பட்ட அழுத்தமான திரை நீங்கவேண்டுமெனத் தோத்தரித்தும், தெய்வத்தை நினைத்தும், நமது குறையை உன்னியும், இவ்வண்ணமாக இருக்கின்றபோதும், படுக்கின்றபோதும், இடைவிடாதும் இவ்விசாரத்தோடும், ஆண்டவர் நமக்கு உண்மை தெரிவிக்கவேண்டு மென்கின்ற முயற்சியுடனிருந்தால், தெரியவேண்டியதைத் தெரிந்து கொள்ளலாம்.

அவ்விசாரம், பரம், அபரம் என்று இரண்டு வகையாயிருக்கின்றது. இவற்றில் பரம், பரலோக விசாரம்; அபரம், இகலோக விசாரம். இவ்விரண்டில் இகலோக விசாரம் விசாரமன்று. சாதாரணமாக ஒருவன் விசா ரம் செய்துகொண்டிருக்கின்றானே யென்றால், அவ்விசாரம் விசாரமாகாது. உண்மை விசாரமு மன்று. ஏனெனில், விசார மென்கின்றதற்குப் பொருள், வி + சாரம் என்பதில் வி சாதாரண உலக விசாரத்தை மறுக்க வந்தது. அது மேலும், பரலோக விசாரத்தையே குறிக்கும் பொருட்டு வந்தது. மேலும், சலத்திலிருக் கின்ற பாசியை நீக்குவது போல், நமது ஆன்மாவைத் தெரியவொட்டாமல் மூடியிருக்கின்ற பச்சைத்திரையாகிய இராகாதிகளை, விசார அதி யுஷ்ணத்தாலல்லது, அனுபவத்தில் தெரியும். அதை மனுஷ்ய தரத்தில் உண்டு பண்ணுவதற்குத் தெரியாது. அந்த விசாரத்தை விட, ஆண்டவரைத் தோத்திரம் செய்கின்றதிலும், தெய்வத்தை நினைக்கின்றதிலும், அதிக உஷ்ணம் உண்டாகும். யோகிகள், வனம்,மலை, முழை முதலியவைகளில் போய், நூறு,ஆயிரம் முதலிய வருடகாலம் தவஞ் செய்து, இவ்வுஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ளுகிறார்கள்.

இப்படித் தவஞ்செய்து உஷ்ணத்தை உண்டுபண்ணிக் கொள்ளுகிறதைப் பார்க்கிலும், தெய்வத்தைத் தோத்திரம் செய்கின்ற திலும், நினைக்கின்றதிலும், இதைவிடக் கோடிப்பங்கு, பத்துக்கோடிப் பங்கு, அதிகமாக உஷ்ணம் உண்டு பண்ணிக் கொள்ளலாம். எவ்வாறெனில், ஒரு சாமநேரம், மனத்தில் இக விசார மன்னியில் பர விசாரிப்பும், அத்துடன் ஆன்ம நெகிழ்ச்சியுடன் தெய்வத்தைச் சிந்தித்துக் கொண்டாவது, அல்லது தோத்திரம் செய்து கொண்டாவதிருந்தால், நாம் பெற வேண்டியதைப் பெற்றுக்கொள்ளலாம். ஆதலால், இவ்வுலகில் வி + சாரம் என்கின்ற உண்மை தெரியாது, விசாரமென்று வழங்கி, அதைத் துக்கமென்றே சொல்லுவார்கள். நாம் அப்படி அர்த்தம் பண்ணப்படாது. அவர்கள் பண்ணுகின்றது, துக்கமே விசார மென்பது; அது தப்பு. சாரம் என்றால் துக்கம், விசாரம்- என்றால் துக்க நிவர்த்தி. வி- உபசர்க்கம். சாரமென்கின்ற துக்கத்தை நிவர்த்தித்தது வி. ஆதலால், விசாரமென்கின்றது முன் குறித்த படி பரலோக விசாரத்தையே குறிக்கின்றது. ஆதலால், இடைவிடாது விசார வசத்தராயிருக்கவேண்டும். மேலும் விசாரம் என்பது வி = விபத்து ; சாரம் = நீக்குதல், நடத்தல். ஆதலால், இடைவிடாது நன் முயற்சியின்கண் பயிலுதல் வேண்டும். மேலும், சிலர், “இது ஆண்டவர் வருகின்ற தருணமாக இருக்கின்றதே ! இத்தருணத்தில் முயற்சி செய்வானேன்? ஆண்டவர் வந்தவுடனே பெறவேண்டியதைப் பெற்றுக் கொள்ளப்படாதோ?” என்று வினவலாம். ஆம் இஃது, தாம் வினவியது நலந்தான். ஆண்டவர் வரப்போகின்றது சத்தியந்தான். நம்மவர்களின் திரை நீங்கப்போகின்றதும் சத் தியந்தான். நீங்கள் எல்லோரும் பெறவேண்டி யதைப் பெற்றுக்கொள்ளுகின்றதும் சத்தியந் தான். ஆனால் முன் சொன்ன பச்சைத் திரை இரண்டு கூறாக இருக்கின்றது. யாவெனில், அசுத்த மாயாதிரையென்றும், சுத்த மாயாதிரை யென்றும் இரண்டு. இவை, கீழ்ப்பாகத்தில் ஒரு கூறும், மேல் பாகத்தில் ஒரு கூறும் இருக்கும். கீழ்ப்பாகத்திலுள்ளது அசுத்த மாயா திரை. மேல் பாகத்தில் உள்ளது சுத்த மாயா திரை, இவற்றில் அசுத்த மாயா திரை, லோக போகலட்சியமுடையது. சுத்த மாயா திரை பரலோக சத்தியத்தை யுடையது. இவற் றில் ஆண்டவர் வந்து சாதாரணமாக அனுக்கி ரகஞ் செய்கின்றபோது, முயற்சியில்லாத சாதாரண மனுஷ்யர்களுடைய கீழ்ப்பாகத்திலுள்ள அசுத்தமாயை யென்னும் பச்சைத் திரையை மாத்திரம் நீக்குவார். ஆதலால், கூடியவரையில் அக்காலத்தில் நாம், அத்திரை நீங்கியவுடன் சுத்தமாய்ப் புனிதர்களாக இருக்கலாமேயல்லது, பெறவேண்டியத்தைப் பெற்றுக் கொள்ளுகிறதற்குக் கூடாது. மேலும்,பஞ்ச கிர்த்திய விபவங்களும், இதர சித்தி முதலியவையும், ஆன்மானுபவத்தையும், செய்யவும் பெறவும் கூடாது. பின்னும் நன்முயற்சி செய்தே மேலேற வேண்டியது.

மேலும், இத்தருணம் இங்கு உண்டாகும் கூச்சல் முதலியவையும் அடுத்தவர்களுக்குப் பக்குவம் வருவிக்கவும், பாவிகளை விலக்கவும் உண்டாயின. ஆதலால், நாம் எல்லவரும் இத் தருணம், இப்பொழுதே, விசேட நன்முயற்சி யுடனே இருந்தால், ஆண்டவர் வருகிறபோது நம் கீழ்ப்பாகத்திலுள்ள அசுத்த மாயாதிரையோடு கூடி மேற் பாகத்திலிருக்கிற சுத்த மாயையினுடைய பச்சைத்திரையும் நீங்கிப் போய்விடும். கருமையிற் பச்சை வர்ண முடையது. அசுத்த மாயாதிரை பொன்மையிற் பச்சை வர்ண முடையது. சுத்த மாயாதிரை கருமையிற் பச்சை வர்ணமுடைய அசுத்த மாயாதிரை நீங்கின பிறகு, மற்ற எட்டுத் திரைகளும் அதிக விரைவில் நீங்கிப்போய்விடும். இத் திரை களின் விவரத்தை, ஆறாவது திருமுறை அருட் பெருஞ் சோதி அகவலில் கண்டுணர்க. மேலும், இது நீங்கினவுடனே, அவன் பஞ்சகிர்த்திய முதலானதுஞ் செய்வான். ஆதலால், முயற்சி யுடனே இருந்தால் அதற்குத் தக்க லாபத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

இதற்கு மேற்பட, நாம் நாமுங்,பார்த்தும், கேட்டும், லட்சியம் வைத்துக் கொண்டிருந்த வேதம், ஆகமம், புராணம், இதிகாசம், முதலிய கலைகள் எதனிலும் லட்சியம் வைக்கவேண்டா. ஏனென்றால், அவைகளில் ஒன்றிலாவது குழூஉக்குறி அன்னியில், தெய்வத்தை இன்ன படி என்றும், தெய்வத்தினுடைய உண்மை இன்ன தென்றும் கொஞ்சமேனும் புறங்கவியச் சொல்லாமல், பிண்ட லட்சணத்தை அண்டத்தில் காட்டினார்கள். யாவெனில், கைலாச பதி என்றும், வைகுண்டபதி என்றும், சத்திய லோகாதிபதி என்றும், பெயரிட்டு, இடம், வாக னம், ஆயுதம், வடிவம், ரூபம் முதலியவையும், ஒரு மனுஷ்யனுக்கு அமைப்பது போல் அமைத்து, உண்மையாக இருப்பதாகச்சொல்லி யிருக்கின்றார்கள். “தெய்வத்துக்குக் கை கால் முதலியன இருக்குமா?” என்று கேட்பவர்களுக்குப் பதில் சொல்லத் தெரியாமல் விழிக் கின்றார்கள். இஃது உண்மையாக இருப்பதாகவே, முன்னும் பின்னும் உள்ள பெரியவர் களென்று பெயரிட்டுக் கொண்டிருந்தவர்களும், உண்மையை யறியாது, அப்படியே கண்ணை மூடிக்கொண்டு உளறியிருக்கிறார்கள். ஆனால். ஆதியிலே இதை மறைத்தவன் ஒரு வல்லவன். அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை. அவன் பூட்டிய அந்தப் பூட்டை ஒருவரும் திறக்கவில்லை. இதுவரைக்கும் அப்படிப்பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை. அவைகளில், ஏகதேச கர்ம சித்திகளைக் கற்பனைகளாகச் சொல்லி யிருக்கின்றார்கள். அதற்காக ஒவ்வொரு சித்திக்குப் பத்து வருடம், எட்டு வருடம் பிரயாசை எடுத்துக்கொண்டால், அற்ப சித்திகளை அடையலாம். அதற்காக அவற்றில் லட்சியம் வைத்தால், ஆண்டவரிடத்தில் வைத்துக் கொண்டிருக்கிற லட்சியம் போய்விடும்.

ஆண்டவரிடத்தில் வைத்த லட்சியம் போய் விட்டால். நீங்கள் அடையப்போகிற பெரிய பிரயோசனம் போய்விடும். அல்லது எதில் முயற்சி செய்து, அவ்வளவு காலம் உழைத்து, அந்த அற்பப் பிரயோசனத்தைத் தெரிந்து கொண்டு, அதனால் ஒரு லாபத்தை ஏகதேசம் அடைந்தால், முக்கிய லாபம் போய்விடும். ஆகையால், அவைகளில் லட்சியம் வைக்காமல், ஆண்டவரிடத்திலேயே லட்சியம் வைக்க வேண்டியது. முன்சொன்ன ஏக தேச சித்தி கற்பனை யென்கின்றது, நான் செய்த வாசகப் பெரு விண்ணப்பத்தாலும்,

இயல்வேதா கமங்கள்பு ராணங்க ளிதிகாசம்
இவைமுதலா இந்திரசா லங்கடையா உரைப்பார்; மயலொருநூல் மாத்திரந்தான் சாலமென அறிந்தார்;
மகனே ! நீ நூலனைத்துஞ் சாலமென அறிக!
செயலனைத்தும் அருளொளியாற் காணவென எனக்கே
திடுவுளம்பற் றியஞான தேசிகமா மணியே!
அயலறியா அறிவுடையார் எல்லாரும் போற்ற
ஆடுகின்ற அரசே! வென் அலங்கலணிந் தருளே.

என்ற அருள் விளக்க மலைப் பாசுரத்தாலு முணர்க. மேலும், அதிற்கண்ட குறிப்பைத் தெரிந்துகொள்ளுங்கள்.

இதுபோல், வியாகரணம், தொல்காப்பியம், பாணிநீயம், முதலியவைகளில் சொல்லி யிருக்கின்ற இலக்கணங்கள் முழுவதும் குற்றமே. அவைகளில் குற்றமே சொல்லியிருக் கின்றார்கள். எவ்வாறெனில், தொண்ணூறு, தொள்ளாயிரம் என்கிற கணிதத்தின் உண்மை, நான் சொன்ன பிறகு தெரிந்து கொண்டீர்களல்லவா? இப்படியே ஒன் று, இரண்டு முதல், நூறு முதலான இலக்கங்களுக்கும் உகர இறுதி வருவானேன்? ஒருவாறு சித்தர்கள் காரணப் பெயராக இட்டிருக்கிறார்கள். தொல் + நூறு தொண்ணூறென்றும், தொல் + ஆயிரம் தொள்ளாயிரமென்றும் வழங்குகின்றன. தொல் என்பது ஒன்று குறையத் தொக்கியது. தொன்மை தொல் லெனப் பிரிந்தது. வழக்கத்தில் தொள்ளாயிரம் தொண்ணூறு என மருவியது. இதற்குப் பத்திடத்திற்கு ஓரிடம் குறைந்த முன் ஆயிர மென்றும், ஒன்று குறைந்த பத்தென்றும் ஒருவாறு கொள்க. இப்படி நான் சொன்னதுபோல் சொன்னால், சிறு குழந்தைகள் கூட அறிந்து கொள்ளும்.

இதுபோல் சைவம், வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம், சித்தாந்தம் முதலிய மதங்களிலும், லட்சியம் வைக்க வேண் டா. அவற்றில் தெய்வத்தைப் பற்றிக் குழுவுக் குறியாகக் குறித்திருக்கிறதேயன்றிப் புறங் கவியச் சொல்லவில்லை. அவ்வாறு பயிலுவோ மேயானால் நமக்குக் காலமில்லை.

ஆதலால், அவற்றில் லட்சியம் வைக்கவேண்டா. ஏனெனில், அவைகளில், அவ்வச்சமய மதங்களிலும் அற்பப் பிரயோசனம் பெற்றுக்கொள்ளக் கூடுமேயல்லது, ஒப்பற்ற பெரிய வாழ்வாகிய இயற்கையுண்மை என்னும் ஆன்மானுபவத்தைப் பெற்றுக் கொள்ளுகின்றதற்கு முடியாது. ஏனெனில், நமக்குக் காலமில்லை. மேலும், இவைகளுக் கெல்லாம் சாட்சி, நானேயிருக்கின்றேன். நான் முதலில் சைவ சமயத்தில் லட்சியம் வைத்துக்கொண்டிருந்தது இவ்வளவென்று, அளவு சொல்ல முடியாது. அது பட்டினத்துச் சுவாமிகளுக்கும், வேலாயுத முதலியாருக்கும் இன்னும் சிலர்க்கும் தெரியும். அந்த லட்சியம் இப்போது எப்படிப் போய்விட்டது? பார்த்தீர்களா? அப்படி லட்சியம் வைத்ததற்குச் சாட்சி வேறே வேண்டியதில்லை. நான் பாடியிருக்கிற திருவருட்பாவில் அடங்கியிருக்கின்ற பாடலையும், மற்றவர்கள் பாடலையும், சபைக்குக் கொண்டு வந்தால், அவைகளே சாட்சி சொல்லி விடும். ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போதிருந்ததென்றால், அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது.

இப்போது ஆண்டவர் என்னை ஏறத நிலைமையிலேற்றி யிருக்கின்றார். இப்போது எல்லாவற்றையும் விட்டுவிட்டதினால் வந்த லாபம் இது. ஆதலால், நீங்களும் விட்டுவிட்டீர்களானால், என்னைப் போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள். இதுவரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டிருந்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களா? பெற்றுக்கொள்ளவில்லை. நான் அப்படி அந்தச் சமயத்தில் வைத்திருந்த லட்சியமே என்னை இந்த நிலையில் தூக்கிவிட்ட தென்றாலோ, அந்த லட்சியம் தூக்கிவிடவில்லை. என்னை இந்த இடத்திற்குத் தூக்கிவிட்டது

யாதெனில், அக்காலத்திலேயே எனக்குத் தெரிவிக்க வேண்டியதைத் தெரிவித்தாரென்று வாசகப் பெரு விண்ணப்பத்திலும் “எத்தேவரை யும்நின் சாயையாய்ப் பார்த்ததே யன்றித் தலைவ வேறெண்ணிய துண்டோ” எனவும் “தேடிய துண்டு கினதுருவுண்மை” என்னும் தொடக்கமுடைய பதிகத்திலும் விண்ணப்பித் திருக்கின்றேன். மேலும், அவர்தெரிவித்த உண்மைப் பெருநெறி ஒழுக்கம் யாதெனில்: “கருணையும் சிவமே பொருளெனக் காணும் காட்சியும் பெறுக” என்றதுதான். என்னை ஏறாநிலைமிசை யேற்றி விட்டது யாதெனில்,தயவு. தயவு என்னும் கருணைதான் என்னைத் தூக்கிவிட்டது.

அந்தத் தயவுக்கு ஒருமை வரவேண்டும் அந்த ஒருமை இருந்தால்தான் தயவு வரும். தயவு வந்தால்தான் பெரிய நிலைமேல் ஏறலாம். இப்போது என்னுடைய அறிவு அண்டாண்டங் களுக்கு அப்பாலும் கடந்திருக்கிறது. அது அந்த ஒருமையினாலேதான் வந்தது. நீங்களும் என்னைப்போல் ஒருமையுடனிருங்கள். என்னிடத்தில் ஒருவன் வசப்படாத முரட்டுத் தனமாக எப்படியிருந்தாலும், அவனுக்கு நல்ல வார்த்தை சொல்லுவேன்; மிரட்டிச் சொல்லுவேன்; தெண்டன் விழுந்து சொல்லுவேன்; அல்லது பொருளைக் கொடுத்து வசப்படுத்துவேன்; அல்லது ஆண்டவரை நினைத்துப் பிரார்த்தனை செய்வேன். இப்படி யெந்த விதத் திலேயாவது நல் வழிக்கு வரச் செய்துவிடுவேன். நீங்கள் எல்லவரும் இப்படியே செய்தல் வேண் டும். இராத்திரி கூட “நான் இல்லாமல் இந்த சனங்கள் க்ஷணநேரம் இருக்கமாட்டார்கள் ” என்று ஆண்டவரிடத்தில் விண்ணப்பித்துக் கொண்டேன். அது இங்கே இருக்கிற சனங்கள் மட்டில் மாத்திரமல்லர். உலகத்திலிருக்கிற எல்லாச் சனங்களையும் குறித்தே விண்ணப்பித்துக் கொண்டேன். ஏனெனில், எல்லவரும் சகோதரர்களாதலாலும், இயற்கை யுண்மை யேகதேசங்களாதலாலும், ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமை வைத்துக் கொண்டிருக்கிறேன்.

இப்போது நீங்கள் இதுவரைக்கும் ஒழுக்கத்துக்கு வராமல் எவ்வளவு தாழ்ந்த மனுஷ்யர்களா யிருந்தாலும், சாலைக்குப் போகக் கொஞ்ச தினமிருக்கின்றது. அதற்குள்ளாக நீங்கள் நீங்களும் நல்லொழுக்கத்திற்கு வருவதோடு மற்றவர்களையும் நமது ஒழுக்கத்திற்கு வரும்படி எவ்விதத் தந்திரமாவது செய்து, நம்மவர்களாக்கிக் கொள்ளவேண்டியது. நீங்கள் கொஞ்ச தினத்துக்கு அப்படிச் செய்து கொண்டிருங்கள். நானும் ஆண்டவரிடத்தில் இவ் வுலகத்திலுள்ள எல்லாச் சீவர்களும் நன்மை யடையப் பிரார்த்தித்தும், ஆண்டவரிடத்தில் கேட்டுக் கொண்டும் வருகின்றேன். ஆதலால், நீங்கள் அப்படிச் செய்துகொண்டிருங்கள்.

சமயந்தவிர மதங்களில் உள்ள வேதாந்தி, சித்தாந்தியென்று பெயரிட்டுக் கொண்ட பெரியவர்களும் உண்மையறியாது, சமயவாதிகளைப் போலவே ஒன்றுகிடக்க ஒன்றை உளறுகிறார்கள். ஆனதினால், நீங்கள் அஃது ஒன்றையும் நம்பவேண்டா. எவைகளிலும் தெய்வத்தைப் புறமுகமாகப் புலப்படச் சொல்லவில்லை. “தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாது, இவ்வுலகத்தார் என்னைத் தெய்வமெனச் சுற்றுகின்றார்கள். ஐயோ ! நம் சகோதரர்கள் தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாததினாலே யல்லவா நம்மைச் சுற்றுகிறார்கள்!” என்று நான் உள்ளும் புறமும் பரிதாபப் பட்டுக்கொண்டே இருந்தேன்; இருக்கின்றேன்; இருப்பேன். தெய்வத்தை ஏன் தெரிந்துகொள்ளவில்லை யென்றால், ஒரு பதார்த்தத்தை அனுபவித்தா லல்லது, அந்தப் பதார்த்தத்தினுடைய ருசி தெரியாது. ருசி தெரியாத பதார்த்தத்தின் மேல் இச்சை போகாது. அதுபோல், தெய்வத்தை உள்ளபடி அனுபவித்தா லல்லது, தெய்வத்தினிடத்தில் பிரியம் வராது. ஆதலால், தெய்வத்தைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்கிற முக்கிய லட்சியத்தில் இருந்துகொண்டு விசாரஞ் செய்து கொண்டிருங்கள்.

அந்த விசாரம் செய்வது எப்படி யென் றால், அண்டத்தில் சூரியன் சந்திரன் நட்சித் திரங்கள், இவைகள் எப்படிப்பட்டன? இவை களினுடைய சொரூப ரூப சுபாவம் என்ன? இவை முதலான அண்ட விசாரமும்; பிண்டத் தில் நாம் யார்? இத்தேகத்தின்கண் புருவம் கைம்மூலம், இவைகளிலும், இவை போன்ற மற்ற இடங்களிலும் உரோமம் உண்டாவா னேன்? நெற்றி முதலான இடங்களில் அது தோன்றா திருப்பதென்ன? கால் கைகளிலுள்ள விரல்களில் நகம் முளைத்தலும், அந் நகம் வளர்தலும், இவைபோன்ற மற்றத் தத்துவங்களினது சொரூப ரூப சுபாவங்களும் விசாரமுஞ் செய்துகொண்டிருங்கள். இப்படி இடை விடாது விசாரஞ் செய்துகொண்டிருந்தால், இவ்வுலகத்தின் கண் உள்ள சனங்கள் அதைக் குறித்து ஏளனமாகச் சொல்லுவார்கள். அப்படிச் சொல்லுவது அவர்களுக்குச் சுபாவம். ஏனெனில், அவர்களுக்கு உண்மை தெரியாது. ஆதலால், நீங்கள் அதை லட்சியம் செய்யக் கூடாது.

இப்படியே “காதில் இரண்டு பெரிய பொத்தல் செய்துவர விடுத்தவர், ஆணுக்குக் கடுக்கனிடுதலும், பெண்ணுக்கு மூக்குத்தி முதலியவை போடுதலும், தமக்குச் சம்மதமானால் காதிலும் மூக்கிலும் அதற்கு வேண்டிய பொத்தல்களிட்டு வரவிட்டிருக்க மாட்டாரா?” என்று விசாரித்துத் தெரிந்துகொள்ளுகிற பட்சத்தில், காதில் கடுக்கனிடவும், மூக்கு முதலியவற்றில் நகையிடவும் சம்மதம் வருமா? இப்படி விசரித்துப் பிரபஞ்ச போகத்தின்கண் அலட்சியம் தோன்றினால், நிராசை உண்டாம். ஆதலால், சரியை முதலிய சாதகம் நான்கில், நான்காவது ஞானத்தில், சரியை, கிரியை, யோகம், ஞானம், என்கின்ற நான்கில், மூன்றாவது படியாகிய ஞானத்தில் யோகம் செய்கின்ற பலனாகிய நிராசை யென்னும் படி உண்டாகின்றது. ஆகையினாலே, இந்த விசாரத்திலிருந்து கொண்டிருங்கள்.

இவ்விசாரஞ் செய்துகொண்டிருந்தால், ஆண்டவர் வந்தவுடனே, கண்டமாக உங்களுக்குத் தெரிவிக்க வேண்டியதைத் தெரிவிப்பார். மறுபடியும் உங்களுக்கு உரிமை வந்தவுடனே அகண்டமாகத் தெரிவிப்பார். ஆதலால், நீங்கள் இந்த முயற்சியிலிருங்கள். இரண்டரை வருட மாக நான் சொல்லிக்கொண்டு வந்தேன். இனிச் சொல்பவர்கள் சிலநாள் தடைபட்டிருப் பார்கள். இனி நீங்கள் இதுவரைக்கும் இருந்ததுபோல் இராதீர்கள்,

இது கடைசி வார்த்தை

இதுமுதல், கொஞ்சகாலம்; சாலைக்குப் போகின்ற வரைக்கும், சாக்கிரதையாக மேற்சொன்ன பிரகாரம் விசாரஞ் செய்துகொண்டிருங்கள்,

மேலும், சமயமதங்களில் தெய்வத்தினது உண்மையைக் குழூஉக் குறியால் குறித்து, அக் குறிப்பையும் வெளிப்படையாகக் காட்டாது, சிவாயநம என்றும், நமசிவாய என் னும், இதுபோன்ற அனந்த வர்ணங்களைச் சேர்த்து, ஒன்று, இரண்டு, மூன்று, ஐந்து, ஆறு, எட்டு, பத்து, பதின்மூன்று, பதினைந்து பதினாறு, இருபத்து நான்கு முதலிய சங்கையில் மந்திரங்களாய் அமைத்து வழங்கி வருவிக்கவிட்டு நடந்து வருகின்றது, அவ்வம் மந்திரங்களின் அர்த்தம் பலவாக விரியும். ஆதலால், நாம் அடையவேண்டுவது முடிவான ஆன்ம லாபமாகிய சிவானுபவமே யன்றி வேறில்லை. இங்குள்ள எல்லவர்க்கும் சுவர்க்க நரக விசாரமில்லை. சுவர்க்க நரக விசாரமுள் ளவர்கள் தங்கள் கருத்தின்படி பலவகைச் சாத னங்களைச் செய்து அற்பப் பிரயோசனத்தைப் பெற்று, முடிவில் தடைபட்டுத் திருவருட்டுணை பால் கருணை நன்முயற்சி யெடுத்துக்கொண்டு, ஏன், முடிவான சித்தி இன்பத்தைப் பெறுவார் கள். அஃது அருமை.

இத்தருணம் ஆண்டவர் எல்லாவற்றையும் நீக்கி, எல்லோரும் இன்பத்தை அடை யும் பொருட்டு, முடிவான இன்பானுபவத்திற்குச் சாதக சகாயமான திருவருள் மகா வாக்கியத் திருமந்திரத்தை (தமது உண்மையை வெளிப்படக் காட்டும் மகாமந்திர வாக்கியத்தை) எனக்கு வெளியிட்ட அவ்வண்ணம், எனது மெய் யறிவின்கண் அனுபவித் தெழுந்த உண்மையறிவனுபவானந்த இன்பத்தை நீங்கள் எல்லவரும் என்போல் ஐயம் திரிபு மயக்கம் இன்றி அடைய, என்னுள்ளே எழுந்து பொங்கிய ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமையைப் பற்றிக் குறிப்பித்தேன்; குறிப்பிக்கின்றேன்; குறிப்பேன். நமது ஆண்டவர் கட்டளையிட்டது யாதெனில், நமக்கு முன்,சாதனம் கருணை யானதினாலே, ஆண்டவர் முதற் சாதனமாக,

அருட்பெருஞ் சோதி அருட்பெருஞ் சோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் சோதி என்னும் திருமந்திரத்தை, வெளிப்படையாக எடுத்துக்கொண்டார்.

தயவு,கருணை,அருள், என்பவை ஒரு பொருளையே குறிக்கும். ஆதலால், பெரிய தயவுடைய அறிவே பூரண இன்பமாகும். அது ஒப்பற்ற பெருந் தயவுடைய பேரறிவேயாம். இஃது வாச்சியார்த்தம். இவ் வண்ணம் சாதனம் முதிர்ந்தால், முடிவான இன் பானுபவம் பெறுவதற்குத் தடையில்லை. “சந்த தமும் வேதமொழி யாதொன்று பற்றின் அது தான் வந்து முற்றும்” என்னும் பிரமாணத் தால் உணர்க.

மேலும், இதுகாறும் தெய்வத்தின் உண்மையைத் தெரியவொட்டாது, அசுத்தமாயா காரிகளாய சித்தர்கள் மறைத்து விட்டார்கள். சுத்தமாயா காரியாகிய தெரிந்த பெரியோரும் இல்லை. சன்மார்க்கமும் இல்லை. சன்மார்க்கம் இருந்தால், அனுபவித்தறியாத அனுபவமும், கேட்டறியாத கேள்வியும், நாம் கேட்டிருப் போம். மேலும் இறந்தவர்கள் மீளவும் எழுந்து வந்திருப்பார்கள். ஆதலால், கேட்டறியாத கேள்விகளைக் கேட்கும்படி ஆண்டவர் செய்தது இத்தருணமே. ஆதலால், இத்தருணம் இக்காலமே சன்மார்க்கக் காலம். இதற்குச் சாட்சியாக இப்போதுதான் சன்மார்க்கக் கொடி கட்டிக்கொண்டது. அக்கொடி இப் போதுதான் கட்டிக்கொண்டது அக் கொடி உண்மையில் யாதெனில், நமது நாபி முதல் புருவமத்தி ஈறாக ஒரு நாடி இருக்கின்றது.

அந்த நாடிநுனியில் புருவமத்தியின் உட்புறத்தில் ஒரு சவ்வு தொங்குகின்றது; அதன் அடிப்புறம் வெள்ளை வர்ணம்; மேற்புறம் மஞ்சள் வர்ணம்; அச் சவ்வின் கீழ் ஓர் நரம்பு ஏறவும் இறங்கவும் இருக்கின்றது. இக்கொடி நம் அனுபவத்தின் கண்விளங்கும். இவ் அடையாளக் குறிப்பாகவே இன்றைய தினம் வெளிமுகத்தில் அடையாள வர்ணமான கொடிகட்டியது. இனி எல்லவர்க்கும் நல்ல அனுபவம் அறிவின்கண் தோன்றும்.

உண்மை சொல்ல வந்தனனே என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்து கொள்வாரில்லை. கொடி கட்டிக்கொண்ட படியால், இனி எல்லோரும் உண்மையை அறிந்துகொள்வார்கள். முன் உள்ளவர்கள் உண்மையைத் தெரியவொட்டாது மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள். இத்தருணம் ஆண்டவரும் தெரிவித்தார்; தெரிவிக்கின்றார் ; தெரிவிப்பார். நீங்கள் எல்லவரும் உண்மையைத் தெரிந்துகொள்ளுங்கள். இப்போது நான் சொல்லிவந்த பிரகாரம் சாக்கிரதையுடன் உண்மை யறிவாய் விசாரம் செய்து கொண்டிருங்கள். அவசியம் இதற்குக் காரணமான தயவிருக்க வேண்டியது. அத்தயவு வருவதற்கு ஏதுவான பொது உரிமையும் கூட இருக்க வேண்டும். இப்படி இருந்து கொண்டிருந்தால், ஆண்டவர் வந்தவுடனே எல்லா நன்மையையும் பெற்றுக் கொள்வீர்கள். எல்லோருக்கும், தாய், தந்தை, அண்ணன், தம்பி முதலான ஆப்தர்கள் செய்யப்பட்ட உதவி எவ்வளவோ, அதற்குக் கோடி கோடிப்பங்கு அதிகமாக உதவி கொடுக்கும்படியான இடம் இந்த இடம். இது சத்தியம்; சத்தியம்; இஃது ஆண்டவர் கட்டளை

அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை!

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *